எனது பதிநான்கு நூல்கள்

திங்கள், 28 ஜூன், 2021

ராமேஸ்வரம் சோகியும், மருந்துரைக்கும் கல்லும், சீசாக்களும்

இராமேஸ்வரம் சென்று வருபவர்கள் முன்னே இந்தச் சோகிகள், சங்குகளையும் வாங்கி வந்துள்ளார்கள். காரைக்குடிப் பக்கம் நல்லதுக்கு எல்லாம் சங்கு ஊதுவது வழக்கம். ( வேவு எடுத்தல், பொங்கல், பிள்ளையார் நோன்பு என்று ) அந்தச் சங்குகளை வெள்ளி பிடித்து வைத்திருப்பார்கள். வலம்புரிச் சங்கு என்றால் ரொம்பவே விசேஷமாக வெள்ளி பிடித்து வைத்து வணங்கி வருவார்கள். 

இந்தச் சோகிகள் எல்லாம் திருமணத்தில் வைத்தது. இராமேஸ்வரம் என்று ஆங்கிலத்திலும் தமிழிலும் எப்படித்தான் எழுதினார்களோ தெரியவில்லை. முழுதுமே ஓவியம் போல் இருக்கிறது. ராமர், லெக்ஷ்மணர், சீதை, அனுமன், வானரப் படைகள் என்று எனாமல் பெயிண்டிங் போல் வரையப்பட்டிருக்கு. 


சோகியின் கீழ்ப்புறம். சங்கு போலவே இருக்கும். 


இராமேஸ்வரம் இராமநாத ஸ்வாமிக்கு அபிஷேகம் செய்து வணங்கும் ராம லெக்ஷ்மணன், சீதை, அனுமன். 

முட்டைக் க்ளாஸ் விளக்குப் போல் இருக்கும் இதுதான் ஸ்லேட்டு விளக்கில் பொருத்தப்படும் க்ளாஸ். 
செட்டிநாட்டின் திருமண நடைமுறைகளில் மாப்பிள்ளை அழைக்கும் போதும், பெண்ணழைக்கும் போதும் வேவு எடுக்கும் போதும் கோலமிடப்பட்ட நடையில் இந்த ஸ்லேட்டு விளக்கை ஏற்றி வைத்துத்தான் ஆலாத்தி எடுத்து விபூதி பூசி வேவு எடுப்பார்கள். 

கல் விளக்கு. 

மருந்துரைக்கும் கல் இதுதான்.குழந்தைகளுக்கு ஆயுர்வேத மருந்துகளையும் நாட்டு மருந்துகளையும் இதில் உரைத்துத் தேன் கலந்து கொடுப்பார்கள்.

இவைதான் சீசாக்கள். அறுபட்டை சீசாக்கள். இவை பொதுவாக தினப்படி உபயோகத்துக்குப் பயன்படுவதில்லை. சோகி, பாசி போல் ஏதேனும் பொருட்களைக் கொட்டிவைக்கப் பயன்படுத்துவார்கள்.

இதுதான் ஹார்லிக்ஸ் அடிக்கிற போணி. ஹார்லிக்ஸ் மிக்ஸர் என்று பெயர். 

இதில் ஹார்லிக்ஸ் இரண்டு ஸ்பூன் போட்டு, சீனியும் போட்டுக் கொதிக்கிற வெந்நீரை ஊற்றி மேலே கைப்பிடியுடன் இருக்கும் ஸ்டாண்டை வைத்து அடிப்பார்கள். 

எட்டுப் பத்து முறை நன்கு அடித்ததும் சீனி கரைந்து நுரைத்துப் பொங்கும் ஹார்லிக்ஸை இதிலிருந்து டம்ளருக்கு மாற்றி அருந்தக் கொடுப்பார்கள். வெகு சுவை. 

இதைக் குழந்தைகளுக்குப் பால் பவுடர் அடிக்கவும்பயன்படுத்துவார்கள். நீல ஜாடி கொஞ்சம் ஸ்பெஷல். சதுர மூடி போட்ட சதுரக் கண்ணாடி சீசாக்களும் ரொம்பவே ஸ்பெஷல். 

இவற்றை தினப்படி உபயோகத்துக்குப் பயன்படுத்துவதில்லை. அதிகமும் இவை அலங்காரப் பொருட்கள்தான். ஊசி, பாசியோ அல்லது ஊறுகாய்களோ அல்லது இனிப்புகளோ வைக்கப் பயன்படுத்துவதுண்டு. கழுவும்போது வழுக்கி உடையக் கூடிய அபாயம் இருப்பதால் இதில் ஒட்டாத பொருட்களை மட்டுமே கொட்டி வைப்பார்கள். 


குளுதாடி. ஊறுகாய் வைக்க மோர்மான் ஜாடிகள் பயன்பாட்டில் உள்ளன. இந்தக் குளுதாடியில் உப்பு, புளி போன்றவற்றையும் சிலர் தண்ணீரையும் ஊற்றிப் பயன்படுத்துவார்கள். மண்ணால் வனையப்பட்டது. 


இவை அனைத்தும் சீசாக்கள். தினப்படி உபயோகத்துக்கும் பயன்படுத்துவார்கள். மஞ்சள்தூள், பருப்பு வகைகள், காஃபித்தூள், டீத்தூள்  போன்றவற்றைக் கொட்டி வைப்பார்கள். மூடி திருகு மூடி டைப்பில் படு டைட்டாக இருப்பதால் காற்றுக் குடிக்காது. எனவே பிஸ்கட்டுகள் , கடலை மிட்டாய், மிக்ஸர் போன்றவற்றையும் போட்டு வைப்பார்கள். 

இரண்டு பாட்டில்கள் மலேயாவிலிருந்து ஹார்லிக்ஸ் கொண்டு வந்த  பாட்டில்கள்.சாஸர்கள், கண்ணாடிக் கப்புகள், பீங்கான், மங்குத்தட்டுகள். செவ்வக வடிவில் உள்ளவை மங்குத்தட்டுகள். இவை ஊறுகாய் போடும்போது காய் நறுக்கிப் போட உதவும். சில சமயம் ஊறுகாய், வற்றல் போன்றவற்றை இதில் போட்டு வெய்யிலில் காயவைக்கவும் பயன்படுத்துவார்கள். 
கப் & சாஸரும், கண்ணாடிக் கப்புகளும், சோகி சீசாக்களும். 

பல்லாங்குழி, ஒற்றையா இரட்டையா , பரமபதம், தாயம் , ஆடு புலி ஆட்டம் போன்றவை ஆடும்போது பயன்படுத்தும் சோகிகள், சங்குகள், சிப்பிப் பொருட்கள்,, கூம்பு வடிவ விளையாட்டுப் பொருட்கள் இதில் உள்ளன. 

சின்னமாக வெள்ளையாக இருப்பது போர்சிலின் கப்புகள். வெள்ளைக் களிமண்ணில் செய்யப்பட்டவை. மைக்ரோ வேவில் கூட வைக்கலாம். 

இரண்டு கண்ணாடி பௌல்களும் உள்ளன. இவற்றுக்குக் குமிழ் வைத்த மூடிகளும் உள்ளன. 

குட்டியாய் கறுப்பு அலுமினிய மூடி போட்ட சீசாக்கள் கிராம்பு ஏலக்காய், ஃபுட் கலர் , சோடாப்பூ  வைக்கப் பயன்படுத்துபவை. 

மொத்தத்தில் என் கல்யாணத்தில் வைத்த சீர் பொருட்களில் மிஞ்சிய கண்ணாடிப் பொருட்களையும் சீசாக்களையும், மங்குச் சாமான்களையும், க்ளாஸ்களையும், கப்புகளையும்  இங்கே காட்சிப் படுத்தி உள்ளேன்.  

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...