எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

ஞாயிறு, 27 ஜூன், 2021

இசையுரையரசி, இறைப் பாடகி நித்யா அருணாசலம் அவர்களுடன் ஒரு பேட்டி.

 இசையுரையரசிஇறைப் பாடகி நித்ய அருணாசலம்அவர்களிடம் நமது செட்டிநாடு இதழுக்காக ஒரு பேட்டி.

 


1.    உங்கள் குடும்பம் பற்றிக் கூறுங்கள்

 

பிறந்தது  பட்டமங்கலம் (சுப.இராம.நா. வீடு), புகுந்தது   காரைக்குடி (சி.மெ. வீடு) பெற்றோர் - திரு.இராமசாமி செட்டியார்திருமதி.சிவகாமி ஆச்சி

மாமாஅத்தை - திரு.சிதம்பரம் செட்டியார் , திருமதி.செல்லம்மை ஆச்சி.

கணவர் திரு.அருணாசலம்மகன் - செல்வன்.சித்தார்த் சிதம்பரம்


2.   தங்கள் படிப்பு மற்றும் பணி பற்றி சொல்லவும்

BE, MBA முடித்துள்ளேன். தற்போது தனியார் IT நிறுவனத்தில் திட்ட மேலாளராகப் (Project Manager )பணி  புரிகிறேன்


 

3.   இசையிலும் இசைப் பேருரையிலும் உங்களுக்கு ஆர்வம் வந்தது எப்படி.

இசையார்வம்: முதன் முதலில் (சுமார் 3 / 4 வயதில்) இசையை எனக்கு முருகன் பக்தி பாடல்கள் மூலம் அறிமுகப் படுத்தியவர் எனது அத்தை  திருமதி.லக்ஷ்மி பழனியப்பன். பின்னர் இசையார்வத்தை நான் அறியும் வண்ணம் எனக்கு உணர்த்தி , அதனை வளர்த்த பெருமை எனது பள்ளி ஆசிரியைகள் திருமதி.விஜயா சுந்தர், திருமதி கீதா, மற்றும் எனது பள்ளி முதல்வர் திருமதி பிரேமலதா பன்னீர்செல்வம் அவர்களையே சேரும்.  மற்ற பாடல்களைவிட பக்திஇசையில் மேலும் எனது கவனம் திரும்ப முக்கிய காரணமாக இருந்தது எனது தோழி கீர்த்தி கணேஷின்  வழிகாட்டுதல்.

இசைப்பேருரையார்வம்: பக்தி கதைகள் மீதும் , பக்தி பாடல்கள் பாடுவதிலும்  பள்ளிக்காலங்களிலிருந்து ஈடுபாடு உண்டு. ஆனால் நான் இசைப்பேருரை செய்யவேண்டும், என்ற எண்ணம் எனக்கு வரக் காரணமாக இருந்தவர்கள் - என்னுடைய சித்தப்பா சித்தி - ஆத்தங்குடியைச் சேர்ந்த திரு.சுப்ரமணியம் செட்டியார், திருமதி.சாந்தி ஆச்சி அவர்கள். இவர்கள் தான் முதன்முதலில் 2018ல் நடந்த ஆத்தங்குடி நகரச்சிவன் கோவில் கும்பாபிஷேக விழாவில் - எனக்கு மேடையளித்து, என்னை நிகழ்ச்சி ஒன்று வழங்குவதற்கு ஊக்கமும் வாய்ப்பும் அளித்தவர்கள். அந்த நிகழ்ச்சியில் தான் முதன்முதலில்  - திருமுறை போன்ற தமிழிசைப் பாடல்களையும், பக்தி இலக்கியங்களையும் சேர்த்து இசையுரை வழங்கலாம் என்ற எண்ணமும் ஆர்வமும் பிறந்தது

 

 

4.   எத்தனை ஆண்டுகளாக இசைப் பேருரை ஆற்றி வருகிறீர்கள்.

2018ஆம் ஆண்டிலிருந்து இசைப்பேருரை செய்து வருகிறேன்

 


5.   இதற்கு உங்கள் வழிகாட்டி யார்

பொற்கிழிக் கவிஞர் சொ.சொ.மீ.சுந்தரம் ஐயா,  திருமதி. சாரதா நம்பி ஆரூரன், திருமதி.விசாகா ஹரி போன்ற பல தமிழ் மற்றும் இசைப்  பேரறிஞர்களின்  பாதையை எனக்கு வழிகாட்டுதலாகக் கருதுகிறேன்

 

6.   யாரிடம் இசை பயின்றீர்கள்.

 

பள்ளிக்காலங்களில் முறையாக யாரிடமும் இசைபயிலவில்லை, இருப்பினும் பள்ளிப் பாடகர்கள் குழுவில் (SCHOOL CHOIR) இருந்ததனால், திருமதி.விஜயா சுந்தர், திருமதி.கீதா கற்றுக்கொடுத்த பாடல்களே எனக்கு இன்றளவிலும் இசைபொக்கிஷமாக உள்ளவை.. பிறகு சென்னையில் சில மாதங்கள் திருமதி. ப்ரியா முருகேஷ் அவர்களிடம் கர்நாடக இசை பயின்றேன். தற்போது திருச்சி- கலைக்காவிரி கல்லூரியில், தொலைதூரக் கல்வித்திட்டம் மூலமாக இளங்கலை இசை முடித்துவிட்டு, முதுகலை இசை 2ஆம் ஆண்டு பயின்று வருகிறேன். மேலும் சமீபத்தில் ஓதுவாரிடம் திருமுறை இசையும் பயின்று வருகிறேன்.

 

7.   இதற்கு உங்கள் குடும்பம் நட்பு வட்டத்தினரின் பங்களிப்பு என்ன

 

எனது குடும்பம் மற்றும் எனது நட்பு வட்டங்களின் பங்களிப்பு அளவிட முடியாத அளவிற்கு பெரும் பங்களிப்பு ஆகும். எனது பெற்றோர், பள்ளி நாட்களில் என்னைப் பல இசை மேடைகளில் அறிமுகம் செய்து, என்னுடைய இசையார்வத்தை வளர்த்தனர். தந்தை ரோட்டரி கிளப்பில் உறுப்பினர் என்பதால் - எனக்கு பல வாய்ப்புகள் ஏற்படுத்திக்கொடுத்தார். சுமார் 45 வருடங்காளாக அவர் பழனி பாதயாத்திரை செல்வதனால் - அவருடைய பழனி அன்பர் வட்டாரங்களில் பல இடங்களில் என்னை பாடச்சொல்லி ஊக்குவிப்பார். இன்றும் என்னுடைய எல்லா நிகழ்ச்சிகளுக்கும் எனது பெற்றோர்கள் வந்து என்னைப் ஊக்குவிப்பார்கள். திருமணத்திற்கு பின் - எனது அத்தை , கணவர்,மகன் ஆகியவர்களின் ஆதரவினால் மட்டுமே இந்த நிகழ்ச்சிகளை என்னால் செய்ய இயலுகிறது. குறிப்பாக என்னுடைய அத்தையார் தான்  எனக்கு மலைபோல நின்று ஊக்கமளிப்பவர்கள். அலுவலகப் பணியில் இருந்துகொண்டு, இந்த  நிகழ்ச்சிகளை நான் செய்ய முடிகிறதென்றால் - அவர்களின் ஆதரவினால் மட்டுமே இது சாத்தியம். என்னுடைய எல்லா நிகழ்ச்சிகளுக்கும் எனது கூடவே பக்கபலமாக நின்று என்னை மேடையேற்றி வாழ்த்துவார்கள். பல வாய்ப்புகளை எனக்குக் கிடைக்க இன்றைக்கு முழுமுயற்சி எடுப்பவர்கள் அவர்கள். எனது கணவர் நான் நிகழ்ச்சி நிமித்தம் வெளியூர் செல்ல நேருமானால்,வீட்டையும் , எனது புதல்வனையும் சமாளித்துக் கொண்டு பெருமளவில் ஆதரிப்பார். எனது மகனும் என்னுடன் சேர்ந்து எனக்கு ஊக்கமளித்து தற்போது அவனும் பாடி, சிறு பக்திக்கதைகளைச் சொல்லவும் தொடங்கியுள்ளேன். மேலும் என்னுடைய பல நண்பர்கள், மற்றும் பல உறவினர்களின்   ஊக்குவிப்பும் எனக்கு பெரும் பக்கபலமாக அமைந்துள்ளது

 

8.   என்னென்ன விருதுகள் பெற்றுள்ளீர்கள்

Aug 2019 மாதம், திருச்சிராப்பள்ளி தமிழிசைச்சங்கம் "இசையுரை அரசி"   என்ற பாராட்டுச் சான்றிதழை வழங்கினார்கள்

Nov 2019 மாதம் , உறையூர்  (திருச்சி) - வாகீச பக்தஜனசபை - சமரச சுத்த சன்மார்க்க சங்கம்  “திருப்புகழ் இசைவாணி” என்ற பட்டம் அளித்து கவுரவித்தார்கள் 

 

9.      நீங்கள் கலந்து கொண்டு இசை நிகழ்வு வழங்கிய இடங்கள், கோயில்கள் பற்றிக் கூறுங்கள்.

ஆத்தங்குடி கும்பாபிஷேக விழா, காவிரிப்பூம்பட்டினம் பட்டினத்தார் திருவிழா, பிள்ளையார்பட்டி சதுர்த்தித் திருவிழா, காரைக்குடி செக்காலை கோயில் கந்த சஷ்டி விழா, திருச்சி நகரத்தார் மகளிர் சங்க ஆண்டுவிழா, Rainbow Printers தேவகோட்டை கரு. நா. நா. சொ. சொக்கலிங்கம் செட்டியார் 92ம் ஆண்டு பிறந்தநாள் - நினைவாக விழா , காஞ்சிபுரம் அத்திவரதர் வைபவம், திருச்சிராப்பள்ளித் தமிழிசைச்சங்கம், சென்னை விஸ்ராந்தி முதியோர் இல்லம் நவராத்திரி விழா, சென்னை வேளச்சேரி ஞான சித்தி விநாயகர் திருக்கோயில் நவராத்திரி விழா, சைவ பக்த ஜன சபை - கந்தர்கோட்டம்  - கந்தர் சஷ்டி விழா, தேவகோட்டை - 74th ஆண்டு கந்த சஷ்டி விழா, திருச்சி உறையூர் வாகீசர் பக்த ஜன சபை - கந்தர் சஷ்டி விழா, மயிலைத் திருவள்ளுவர் தமிழ் சங்கம், போன்ற மேடைகளில் இசையுரை நிகழ்ச்சிகள் வழங்கியுள்ளேன்


 


10.  உங்கள் யூ ட்யூப் சேனல் பற்றி சொல்லுங்கள் , இதுவரை எத்தனை காணொளிகள்  வெளியிட்டு உள்ளீர்கள்

Nithya Isai Visai என்ற பெயரில் Feb 2018 ல Youtube Channel தொடங்கினேன்.

மேடை நிகழ்ச்சிகள் வாயிலாக தமிழிசை மற்றும் இசையுரை நிகழ்சிகள் செய்தாலும் - அடுத்த தலைமுறையினருக்கு இந்த பொக்கிஷங்களைக் கொண்டு சேர்க்க வேண்டுமென்றால் அது DIGITAL  CONTENT  மூலமாகத்தான் முடியும் என்ற எண்ணத்தில் இந்த youtube channel தொடங்கப்பட்டது.

 

இதிலே

·       மார்கழியில் 30 நாட்களும் - திருப்பாவை, திருவெம்பாவை மற்றும் திருப்பள்ளியெழுச்சி - தினமும் ஒரு பாடல் மற்றும் விளக்கத்தை வெளியிட்டுள்ளோம்.

·       தித்திக்கும் திருப்புகழ் என்ற தொடர் series நிகழ்ச்சி - மாதம் ஒரு திருப்புகழை இசையுரையாக வழங்கி வருகிறோம் - இதுவரை சுமார் 13 திருப்புகழ் வெளியிடப்பட்டுள்ளன.

·       சில தேவார பாடல்களின் இசையுரைகள், பக்திப்பாடல்கள், பாரதியார் பாடல்களும் உள்ளன.

·       மேலும் "கதையும் பாடலும்" என்ற அமைப்பில் - ஆன்மீக வரலாற்றைக் கதையாக சொல்லும் பாணியில், சில தமிழ் பாடல்களை எழுதி, பாடி வருகிறேன். Eg:காவடிக்கதை கேளு ,பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் வரலாற்றுப் பாடல், ,ஆறுபடைவீடு வரலாற்றுப் பாடல்

இவ்வாறாக - இதுவரை சுமார் 130 வீடியோக்கள்  பதிவிட்டுள்ளோம்


 


11. இந்த youtube channel க்கான உழைப்பு எப்படிப்பட்டது

இன்றைய சூழலிலே மக்கள் அனைத்து video / படங்கள் போன்றவற்றை தொலைக்காட்சியில் CAST செய்து பார்க்கிறார்கள். அதனால் NithyaIsaiVisaiன் அனைத்து  வீடியோக்களையும் - பெரிய திரையில் பார்க்கும் வண்ணமாக, Professional முறையிலே Latest Shooting Technologies , Cameras கொண்டு Professional Technical Team ஆகிய SOLFOTONS DIGITAL குழுவுடன் இணைந்து உருவாக்குகிறோம். 

  

12. உங்கள் டிஜிட்டல் டீம் பற்றி

SOLFOTONS DIGITAL பள்ளத்தூரைச் சேர்ந்த சோலையப்பன் ஷண்முகம் அவர்களால் 2017ல் தொடங்கப்பட்டது. சின்ன சின்ன வீடியோ எடிட்டிங், கிராஃபிக் டிசைன் என்று நண்பர்களுடன்  செய்து கொண்டிருந்தபோது, இந்த இளைஞர்களுக்கு   ஐரோப்பிய நாட்டில் நண்பர் ஒருவரின் தொடர்பு கிடைத்தது. அப்போதுதான் இந்த தொழில்நுட்ப துறையில் இதுக்கான வாய்ப்பு அதிகமாக இருப்பதை உணர்ந்து , தற்போது சுமார்  7 YOUTUBE channelகளுக்கு  கான்செப்ட், எடிட்டிங் என்று, ஒரு சேனலுக்கு தொடக்கம் முதல் முடிவு வரையிலான மொத்த பணிகளும் செய்கிறார்கள் .


 

13. உங்கள் நிகழ்ச்சிகளின் மற்றும் காணொளிகலின் சிறப்பம்சம் என்ன. அதைப் பாராட்டியவர் யார்

தினமலர் பத்திரிக்கையின் வார இதழான பெண்கள் மலர் - திருச்சிராப்பள்ளி edition dated 23Nov2019 ஆன்மிக சொற்பொழிவில் கலக்கும் ஐடி பெண்" என்ற தலைப்பில், அடியேனைப் பற்றி ஒரு கட்டுரை வெளியிட்டுப் பாராட்டினார்கள்  இசையுடன் கூடிய வரிக்கு வரி விளக்கங்கள் மிகவும் தனித்துவம் வாய்ந்தன என்று பலர் பாராட்டுகிறார்கள்.

மாதம் ஒருமுறை நாங்கள் youtube channel லில் வெளியிடும் தித்திக்கும் திருப்புகழ் நிகழ்ச்சியை ,பலர் - விவரமான விளக்கங்களுடன் திருப்புகழ் பாடல்களை வழங்குவது, பாடல்களை உணர்ந்து பாட எளிமையாக உள்ளது என்றும் , நாங்கள் வெளியிட்ட திருப்பாவை, திருவெம்பாவை இசையுரை தொடர் நிகழ்ச்சியின் மூலம் சிலர் வீடுகளில் - தினமும் குழந்தைகளை அதை கேட்டு பாட வைத்ததாகவும் கூறினார்கள்.


 

14. இத்துறையில் இருக்கும்பொழுது தாங்கள் சந்தித்த/ சந்திக்கும் சவால்கள் என்னென்ன

முழுநேர அலுவலகப் பணியில் இருப்பதனால், கால நிர்வாகம் பெரிய சவாலாக இருக்கும்., பெரும்பாலும் நிகழ்ச்சிகள் மற்றும் எங்கள்  youtube படப்பிடிப்புகளை  சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில்தான் வைத்துக்கொள்ள இயலும். திறமையையம் உழைப்பையும் வெளிக்காட்டினாலும் கூட - வாய்ப்புகள் கிடைப்பது சற்று அறிய விஷயமாகவே உள்ளது. பிரபலங்களுக்கு கிடைக்கும் மேடைகள் அளவிற்கு, முன்னேறி வருபவர்களுக்கு வாய்ப்புகள் கிடைப்பதில்லை. திறமையையும், நிகழ்ச்சியின் தரத்தையும் பார்த்து புதுமுகங்களுக்கும் வாய்ப்புகள் கொடுத்தால் ஊக்குவிக்கும் வண்ணமாக இருக்கும்.



15. இத்துறையில் ஈடுபட விரும்புபவர்களுக்கு உங்கள் வழிகாட்டுதல் என்ன

தமிழும் தமிழிசை மற்றும் பக்தி இலக்கியங்கள் - நமக்கு இறைவன் அருளால் கிடைத்த ஈடுஇணையற்ற களஞ்சியங்கள். இவற்றின் பெருமையை அறிய ஒரு பிறப்பு போதுமானதல்ல. இருப்பினும் இந்தத்துறையை தேர்ந்தெடுக்கிறவர்களுக்கு நான் சொல்ல விரும்புவது - முழு ஈடுபாட்டுடன் தமிழிசையையும் பக்தி இலக்கியங்களையும் நீங்கள் அணுகி அனுபவிக்க முயற்சி எடுத்தீர்களானால் - இந்தக் களஞ்சியங்களே உங்கள் முன்னேற்றப்  பாதையை அமைத்துத் தரும்.

 எந்தப்பாடலைப் பயின்றாலும் அதைப் பொருளுணர்ந்து பாட முயற்சி செய்யுங்கள். "கலைஞனை விடக் காலை பெரியது" என்ற மந்திரத்தை மனதில் கொண்டு உங்கள் ஆத்மார்த்தமான உழைப்பை நீங்கள் கொடுத்தால் அதுவே போதுமானது. மேலும் இந்தக்  களஞ்சியங்களை அடுத்த தலைமுறையினருக்கு கொண்டு சேர்க்கும் கடமை நம் அனைவருக்கும் இருக்கும் தலையாய கடமையாகும்.


16. இதனால் நீங்கள் சந்தித்த பிரபலங்கள், சிறப்புகள் பற்றியும் கூறுங்கள்

இந்தத்துறையில் இருப்பதானால் பெரும் அறிஞர்களையும் சான்றோர்களையும் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. நான் பெரிதும் போற்றும் பொற்கிழிக்கவிஞர் சொ.சொ.மீ. சுந்தரம் ஐயா, பேராசிரியர்.கண சிற்சபேசன் ஐயா, தமிழறிஞர்.அரு .சோமசுந்தரம் ஐயா, கலைமாமணி ஆவுடையப்பன் அவர்கள்,பழ.கருப்பையா அவர்கள்,  T .R .சுப்பையா அவர்கள்,Dr .சபா அருணாச்சலம் அவர்கள், Dr .பழ.அன்புமீனாள், Dr . சாரதா நம்பி ஆரூரன் அவர்கள், கலைமாமணி. Dr . சேயோன் அவர்கள், கலைமாமணி Dr . வாசுகி கண்ணப்பன் அவர்கள், தமிழிசை ஆய்வாளர். நா . மம்முது அவர்கள், கவிஞர் K .V .ஸ்ரீதரன் அவர்கள் , வித்தக இளங்கவி விவேக்பாரதி அவர்கள் - இவர்கள் அனைவரும் என்னைப்  பெரிதும் ஊக்குவித்த பிரபலங்கள்

2 கருத்துகள்:

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...