எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 29 மார்ச், 2021

வாடிகன் சர்ச்சில் புனிதக் கதவும் புனிதர்களின் சலவைக்கல்/கிரானைட் சிற்பங்களும்.

 வாடிகன் நகரம். கத்தோலிக்கக் கிறிஸ்தவர்களின் புனித திருச்சபை அமைந்த இடம். இத்தாலியின் ரோம் நகரத்தில் செயிண்ட் பீட்டர்ஸ் பேசிலிக்கா என்ற சர்ச் அமைந்த இடம். ஹோலி சீ என்ற இந்த இடம் பிஷப்பின் ஆட்சிக்கு உட்பட்ட தனி நாடு. குட்டி தேசம். 

இஸ்லாம் மக்களுக்கு மெக்கா போல் கிறிஸ்தவ மக்களுக்கு இது புனித ஸ்தலம். தங்கள் வாழ்நாளில் ஒருமுறையாவது இங்கே வந்து செல்ல வேண்டுமென்பது அவர்களின் ஆசையாக இருக்கும். 

செயிண்ட் பீட்டர்ஸ் ஸ்கொயர் என்ற இடத்தில் அமைந்திருக்கும் இது( 120 ஆண்டுகளுக்குமேல் உருவாக்கப்பட்டு) பதினாறாம் நூற்றாண்டில் ( 18 நவம்பர் 1626 ) கட்டமைக்கப்பட்டது. 14 முதல் 16 ஆம் நூற்றாண்டின் மறுமலர்ச்சிக் கால ஓவியங்கள் மற்றும் சிற்பங்களால் அழகூட்டப்பட்டது இது. 

இங்கே பியட்டா என்ற மேரி மாதா மடியில் ஏசுவைத் தாங்கி இருக்கும் ( துயரச்) சிலை காட்சிப் படுத்தப்பட்டுள்ளது. மைக்கேல் ஏஞ்சலோவின் ஓவியங்கள், மார்பிள் சிற்பங்களையும் கண்டு பிரமித்தேன். 

இங்கே பைபிளின் பல்வேறு நிகழ்ச்சிகளோடு அப்போஸ்தலர்கள், போப்பாண்டவர்கள் ஆகியோரும் பளிங்குச் சிற்பமாகக் காட்சி அளிக்கிறார்கள். 

வடக்கில் நாங்கள் பார்த்த இந்தக் கதவைப் "புனித கதவு" என்கிறார்கள்.செங்கல் சுவரில் வெண்கலக் கதவுகளில் சிற்பம் வடிக்கப்பட்டு இணைக்கப்பட்டுள்ளது.  போப்பின் ஜூபிலி ஆண்டு போன்ற புனித ஆண்டுகளுக்கு மட்டுமே திறக்கப்படுகிறது. இதை  1950 இல்  சிற்பி விக்கோ கன்சோர்டி என்பவர். வடிவமைத்து புளோரன்ஸ் நகரில் ஃபெர்டினாண்டோ மரினெல்லி ஆர்ட்டிஸ்டிக் ஃபவுண்டரி என்பவரால்  உருவாக்கம் செய்யப்பட்டது.  கதவின் மேலேயே திறக்கப்பட்டதை நினைவுகூரும் கல்வெட்டுகள் உள்ளன “PAVLVS V PONT MAX ANNO XIII மற்றும் GREGORIVS XIII PONT MAX” .

பால் ஆறாம் போன்டிஃபெக்ஸ் மாக்சிமஸ், 1975 ஆம் ஆண்டு ஜூபிலி ஆண்டில் இந்த  வத்திக்கான் பசிலிக்காவின் புனித கதவைத் திறந்து மூடினார் என்று சமீபத்தில் நிறுவப்பட்ட நினைவு தகடுகள் கதவுக்கு மேலே பதிக்கப்பட்டுள்ளன. 

ஒவ்வொரு சிற்பத்தின் பின்னணியிலும் ஒவ்வொரு வரலாற்றுத் தகவல் அடங்கியுள்ளது. இந்த சர்ச் பற்றி வால்யூம் வால்யூமாக புத்தகம் எழுதலாம். 

இறைவனின் அருட்கருணை ஒளி வெள்ளமாய்ப் பாய்கிறது. 


இதுதான் என் மனதைத் துயரத்தில் ஆழ்த்திய “ பியட்டா” சிற்பம். 

சிலுவையில் அறையப்பட்ட பின் மேரி மாதாவின் மடியில் தாங்கி இருக்கும் ஏசுவின் உருவம் சொல்லொண்ணாத் துயரை விளைவித்தது.  1498 - 99 இல் மைக்கேலேஞ்சலோவால் வடிவமைக்கப்பட்டது.


ஏதோ ஒரு போப் கை உயர்த்தி ஆசி வழங்குகிறார்.
இன்ஃபேண்ட் எனப்படும் குழந்தை உருவங்கள் ஒவ்வொரு புனிதரையும் தாங்கி நிற்கும் மார்பிள் வேலைப்பாடுகள் அதி அற்புதம். 

மார்பிள் எனப்படும் சலவைக் கல், கறுப்பு நிற கிரானைட் கல் சிற்பங்களாலும், மெயினாக மைக்கேல் ஏஞ்சலோவின் ஓவியங்களாலும் நிரம்பி வழிகிறது வாடிகன் சர்ச். தரை பூரா மொசைக் . ஏர் சர்க்குலேஷனுக்காக அங்கங்கே சிறு சிறு மெட்டல் வெண்டிலேட்டர்களும் பதிக்கப்பட்டுள்ளன.

திருப்பலி கொடுக்கும் போப் அரசர். 
ஏதோ ஒரு அரசர் என்றுதான் தோன்றுகிறது. இங்கிலாந்தின் எட்டாம் ஹென்றி ( பதினைந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் ) என்று நினைத்தேன். ஆனால் சரியாகத் தெரியல. 
சமய வளர்ச்சிக்குப் பாடுபட்ட பெண் புனிதர்கள். 

 செயிண்ட் வெரோனிக்கா - வடிவமைத்தவர் ஃப்ரான்செஸ்கோ மோச்சி.
கிறிஸ்துவ சமயத்தை உலகெங்கும் பரப்புவதற்காக உயிர் விட்ட மார்டியர்- வீர தீர சமயத் துறவிகளுள் ஒருவர்.  ஒவ்வொருவருக்கும் குவி மாடம் போல் அமைத்து அங்கே பீடங்களில் சிலைகளை நிறுத்தியுள்ளார்கள். 

அப்புனிதர்களுள் ஒருவரான செயிண்ட் லாங்கினஸ்.  பெரினியால் வடிவமைக்கப்பட்ட அவரது சிற்பம். 
இவர் சொர்க்கத்தின் திறவுகோல் சாவிகளைக் கையில் ஏந்தியிருக்கும் செயிண்ட் பீட்டர். 
போப்கள், பிஷப்கள் என பல நூற்றாண்டு கால துறவிகளை கௌரவிக்கும் வண்ணம் சிலைகளை நிறுவி உள்ளார்கள். 
பல நூற்றாண்டுகளைக் கடந்துள்ளதால் அதன் தாக்கம் சிற்பங்களிலும் ஓவியங்களிலும் படிந்துள்ளது. பல சிற்பிகள் மற்றும் ஓவியர்களின் கைவண்ணங்களில், வேலைப்பாடுகளில் உருவாக்கப்பட்டுள்ளது இந்த சர்ச். 
இவர் போப் இன்னோசெண்ட் 3. இவர் பேரு லொதார் ஆஃப் செக்னி, கத்தோலிக்கத் திருச்சபையின் 176 ஆவது போப் இவர். 

கீழே நிற்கும் தராசு சுமந்த நீதி தேவதை யார்னு தெரில. 

போப் பெனெடிக்டோ 14 பற்றியும் குறிப்பிட்டு இருக்காங்க. இவங்க வரலாறு எல்லாம் கூகுள் பண்ணிப் பார்த்துக்குங்க மக்காஸ். 




போப் பதிமூன்றாம் லியோ - பதிமூன்றாம் லியோனி என்றும் அழைக்கப்படுகிறார். அவரது சிற்பம். 
எங்கெங்கு நோக்கினும் கண்கவர் மார்பிள் சிற்பங்கள்தான். ஒரு நாள் முழுதாகப் போதாது இவற்றை எல்லாம் கண்டு களிக்க. ஆங்காங்கே பொன் வண்ண நிறச்சுவர்களும் தங்க வண்ணத்தில் பாயும் ஒளிக்கீற்றுக்களும் நம்மை வேறோதோ ஒரு கனவுலகில் இட்டுச் செல்லும்.
சுமை சுமந்து சோர்ந்திருப்போரே எல்லோரும் என்னிடம் வாருங்கள். என்ற பைபிள் வாசகத்துக்கு ஏற்றாற்போலத் தன் கைகள் இரண்டையும் விரித்து அன்போடு அழைப்பவர் போப் பத்தாம் பையோ/பியஸின் சிலை.  


புனித நீர் தெளித்துக் குணப்படுத்துகிறாரோ ?. 

அனைவரையும் நினைவு கூறும் வண்ணம் அழகான மார்பிள் சிற்பங்களாக்கி அழியாப்புகழ் கொடுத்துள்ளார்கள். 

மொத்தத்தில் வாடிகன் சர்ச்சில் புனிதர்கள், போப்பாண்டவர்கள், அபோஸ்தலிக் அரண்மனை, வாடிகன் சர்ச், ஒபிலிக்ஸ் எனப்படும் ஸ்தம்பம்/ஸ்தூபி, இதன் மணிகள் பற்றி இன்னும் சில இடுகைகளில் விரிவாகப் பார்க்கலாம். 

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...