சூலாட்டுக்குட்டி.
மல்லிகைப்பூ வாசம் மூக்கைத் துளைத்தது. அதையும் மீறி அடித்துக்கொண்டிருந்தது
மூத்திர நாற்றம். மப்ளரைச் சுற்றியபடி கதவைத் திறந்து பார்த்தவர் வாக்கிங் போகும் எண்ணத்தைக்
கைவிட்டு கைப்பிடியில் மாட்டியிருந்த மல்லிகைப்பூப் பையை எடுத்து அவசரமாகத் தாழ் போட்டார்.
’திரும்பவும்
ஒண்ணுக்குப் போயிட்டாளா’. யோசனையாய் படுக்கை அறைக்கு வந்தவர் போர்த்திப் படுத்திருந்த
மனைவியின் முகத்தில் அரை டம்ளர் தண்ணீரை ஊற்றினார். மப்ளரைக் கழட்டி வீசினார்.
நேற்றுத் தண்ணீரைத்
தெளித்ததற்கே பதறி எழுந்தாளே. இன்றைக்கு ஏன் அசைவில்லை. லேசாக உலுக்கினார். ஹேமா..
ஹேமா.. தண்ணீர் வழிந்து படுக்கையையும் போர்வையையும் நனைத்தது. அவளிடம் அசைவில்லை. சுருக்கம்
வரத் துவங்கி இருந்த எழுபத்தி ஐந்து வயது தேகம் ஜில்லென்றிருந்தது. அவருக்கு மூச்சு
முட்டியது. என்னாச்சு. அசைவில்லாம கிடக்கா. ’திட்டுவேனென்று கண்ணை மூடிக் கிடக்காளோ.’
இந்நேரம் எழுந்து
காஃபி போட்டுவிட்டு அவருக்கு இரண்டு ரஸ்குகளையும் கொடுப்பாள். இரண்டு மாதங்களாக ரொட்டீன்
மாறி விட்டது. ரொம்பவும் பயப்படுகிறாள். அடக்க முடியாமல் தூக்கத்தில் அவ்வப்போது லேசாக
ஒண்ணுக்குக் கசிந்துவிட ஒரு யூராலஜிஸ்டிடம் கொண்டு காட்டியிருந்தார்கள்.
“வயசானா சிறுநீர்ப்
பாதையின் தசை எல்லாம் தளர்ந்து இப்படி ஆவதுண்டு. இதுக்கு எக்ஸர்ஸைஸ் இருக்கு, மருந்தும்
இருக்கு. இதெல்லாம் முடியாத பட்சத்தில் ஆபரேஷன் பண்ணனும். ஆனா ரொம்ப வயசானா பாட் உபயோகிக்க
சொல்லித்தான் நாங்க அட்வைஸ் பண்ணுவோம்.” டாக்டர் ஸ்ரீகலா சில எக்ஸர்ஸைஸ்களைச் சொல்லித்
தந்திருந்தார்.
’ஆமா நீ வெளிய
கிளம்பினாலே பாத்ரூம் போறது, தண்ணீ குடிக்கிறதுன்னு ஓடிட்டு இருப்பே. பொம்பளன்னா எல்லாத்தையும்
அடக்கத் தெரியணும்’ அட்வைஸிக் கொண்டிருந்தார் சேது. கண்ணில் நீரோடு கேட்டுக் கொண்டிருந்தாள்
ஹேமா. என்ன செய்வது ? தூக்கத்தில் கனவில் சிறுநீர் கழிப்பது போல முட்டிக் கொண்டு வந்தால்
எழுந்து பாத்ரூம் போவதற்குள் சேலையிலும் பாவாடையிலும் கசிந்து விடுகிறது.
“நான் ஐந்து வயசு
வரைக்கும் படுக்கைல ஒண்ணுக்குப் போனேனாம். எங்க அம்மாவுக்கு தூரத்துச் சொந்தக்கார ஆயாதான்
அதுக்கு ஒரு வழி கண்டுபிடிச்சு நிறுத்தினாங்களாம். அத சொல்றேன் நீங்களும் அப்பிடி செஞ்சு
பாருங்க . ஒண்ணுக்குப் போறத நிறுத்திடறனான்னு பார்க்கணும்.”
“என்ன வழி. ராத்திரி
பூரா தூங்காம இருக்குறதா ?” கிண்டலடித்தார்.
“இல்ல தூங்கும்போது
ஒண்ணுக்குப் போனேனாம். அப்ப மேலே தண்ணீரை ஊத்திட்டாங்களாம் அந்த ஆயா. அந்த அதிர்ச்சில
எழுந்து அன்னிலேருந்து தூக்கத்துல மூத்திரம் போறதை நிறுத்திட்டனாம். “
’ஹாஹா’ எனச் சிரிக்க
ஆரம்பித்தார் சேது. இது ஒண்ணும் விளையாட்டில்ல நான் அஞ்சு வயசு வரைக்கும் கட்டைவிரலை
வேற சூப்பிட்டே இருப்பனாம். தூக்கத்துல வேப்பெண்ணெய் தடவி அந்தப் பழக்கத்தையும் நிறுத்திட்டாங்களாம்
என்று அவரின் கிண்டலூடே மனத்தாங்கலோடு சொல்லி முடித்தாள் ஹேமா.
வயசான காலத்தில்
மருமகள் பேரன் பேத்தி முன்பு அவமானப்படவேண்டாம் என்று வெளிநாட்டில் வசிக்கும் மகன்களின்
வீட்டுக்குப் போவதைக் கூடத் தள்ளிப் போட்டுக் கொண்டே இருந்தாள் ஹேமா.
’அட லூசே. சரி
செய்யலாம். மொதல்ல பகல்ல பன்னிரெண்டு மணிக்கு மேல தண்ணீர் குடிக்கிறத கொறைச்சுக்க”
என்றார் சேது.
இரவில் ஏசி பஸ்
பிரயாணம் என்றாலோ பஸ் பிரயாணம் என்றாலோ குலை நடுங்கும் அவளுக்கு. முதல் முறை ஏசி பஸ்ஸில்
இரவு பிரயாணித்தபோது தூங்காமல் உட்கார்ந்தபடியே பயணித்து இரண்டு மணி நேரத்துக்கு ஒரு
தரம் ட்ரைவரைக் கெஞ்சி அத்வானக் காட்டில் எல்லாம் இறங்கி ஒன்றுக்குப் போய் வந்தாள்.
“அம்மா சுகர் இருக்கான்னு செக் பண்ணுங்கம்மா “ என்று வேறு அவர் பரிதாபப்பட்டார்.
’என்ன கண்றாவி
இது. பாத்ரூம் வேற போயிட்டாளா. ’ ரொம்ப ஸ்மெல் அடிக்குதே. நேற்று வரை அவரின் கைபிடித்து
பாத்ரூமுக்கு வந்தபின் தானே போனாள். இந்த இரண்டு மாத படுக்கை வாசத்தில் அவள் படுக்கையில்
ஓரிரு முறைதான் லேசாக ஒன்றுக்குப் போயிருக்கிறாள். அதுவும் கீழே ரப்பர் பெட்ஷீட் விரித்து
படுக்கை விரிப்பை விரித்துப் படுக்க வைத்திருப்பதால் அது மட்டும்தான் ஈரமாகும். அவளுக்கு
உடம்பு துடைத்து உடை மாற்றி விடும்போது பெட்ஷீட்டையும் மாற்றிவிடுவார். பாட் வேறு வைத்து
அவளுக்கு வெந்து போய்விடக்கூடாது. பெட் ஸோர் வந்துவிடக் கூடாது என்று.
போன இருமாதங்களுக்கு
முன்பு வரை எல்லாம் நன்றாகத்தான் போய்க்கொண்டிருந்தது. கடைக்குத் துணி வாங்கச் சென்றபோது
படிதவறி இறங்கி காலில் ஃப்ராக்சர் ஆகிவிட்டது. இரு வருடங்களுக்கு ஒரு முறை அடிக்கடி
இதுபோல் நிகழ்ந்திருப்பதால் எங்கே சென்றாலும் உடல் வெயிட் தாங்காமல் கால் பலமில்லாமல்
தடுக்கி விழுபவள்தானே என அசால்டாக இருந்துவிட்டார். கைபிடித்து எழுந்து நிற்க ஹேமா
முயற்சிக்க முழங்கால் முன் பின்னாக வளைகிறது. பதற்றத்தில் அவருக்கு ஒன்றும் புரியவில்லை.
பக்கத்தில் இருந்த
எலும்பு முறிவு மருத்துவரிடம் காண்பித்தால் போன் மாஸ் இண்டெக்ஸ் கம்மியாக இருப்பதாவும்
இது முழங்கால்மூட்டு விலகல் இல்லை, ஏதோ நரம்புப் பிரச்சனை என்று சொல்லி மருந்து மாத்திரை
கொடுத்தார். அன்றைக்குப் படுத்தவள்தான்.
ரிடையர்ட் ஆகி
இருபது வருஷம் ஆச்சு. அதன் முன்பும் இப்போதும் கண்ணின் மணிபோல் காத்தவள். கண் திறக்காத
மெலிந்த ஓவியமாய்ப் படுத்துக் கிடந்தாள். அவளுக்குப் பிடித்த ரோஸ் கலர் நைட்டி அணிந்திருக்கிறாள்.
கறுப்பும் வெளுப்புமான முடி காற்றில் அலைகிறது. வகிட்டில் வைத்த குங்குமம் தடமாய் இருக்கிறது.
உடை மாற்றிவிடலாமா. அவளை அணைத்துப் படுக்கவேண்டும் போலிருக்கிறது அவருக்கு.
என்னென்னமோ பயங்கள்
ஊடுருவுகிறது அவருக்குள். பக்கத்தில் தலையணையை அட்ஜஸ்ட் செய்து அவளின் குறுக்காகக்
கைபோட்டுப் படுக்கிறார். முகத்தை லேசாக வருடுகிறார். கன்னத்திலும் நெற்றியிலும் முத்தமிடுகிறார்.
அசைவற்றுப் படுத்திருக்கிறாள் ஹேமா. கலகலவென்று இருக்கும் அவளின் கிண்கிணிச் சிரிப்பும்,
மலர்ந்த முகமும் வாடிச் சுருண்டு கிடக்கிறது. நாற்றம் அதிகமானாற்போல இருந்தது.
ஹாலுக்கு வந்தார்.
ஃபோட்டோக்கள் பெரிதுபெரிதாக மாட்டி இருந்தன. எல்லாவற்றிலும் ஸ்டிக்கர் பேர் ஒட்டி இருந்தது.
சுற்றிலும் மிக்கிமவுஸ், டொனால்ட் டக், ராஜா ராணி ஸ்டிக்கர்கள் ஒட்டி..
சரி அவள் ஈரத்தில்
கிடக்கிறாள். பரபரப்பாக புது நைட்டி எடுத்துப் போனார். இன்றைக்கு என்ன இப்படிக் கனக்குறா.
உடம்பைப் புரட்டி நைட்டியை உருவி பெட்ஷீட்டையும் உருவினார். குடலைப் புரட்டியது நாற்றம்.
மூக்கைப் பிடித்துக் கொண்டே மலஜலம் கழித்த பெட்ஷீட்டை அப்படியே உருவிப் போர்வையுடன்
துடைத்து ரூமின் மூலையில் எறிந்தார். ரப்பர் ஷீட்டின் மேல் கிடந்தாள் அவரது மனைவி ஹேமா.
கைகள் இரண்டும் புரண்டு முறுக்கிக் கிடந்தன.
அடிப்பாவி சொல்லாமல்
கொள்ளாமல் போயிட்டியா. விட்டுறுவேனா. தலை கிறுகிறுக்க அப்படியே அமர்ந்தார். மூடியிருந்த
ஜன்னலின் வழியே வெய்யில் ஆக்ரோஷமாக ஏறதுவங்கி இருந்தது. திரைச்சீலைகளை இழுத்து விட்டார்.
எல்லா ஜன்னல்களும் சாத்தி இருக்கிறதாவெனப் பார்த்தார்.
நாற்றத்தில் கிடக்கிறாளே.
மனம் பதைத்தது அவருக்கு. எவ்வளவு சுகந்தமாக மென்மையாக இருப்பாள். இப்படி ஜில்லென்று
கல்லாகக் கிடக்கிறாள். கல்நெஞ்சுக்காரி. விட்டுவிட்டுப் போய்விடுவியா என்ன. விடுவேனா
நான். முரட்டுக் கோபம் வந்தது அவருக்கு.
வேகமாகப் போய்
ஒரு துணியைத் தண்ணீரில் நனைத்துப் பிழிந்தார். அவள் முகத்தில் இருந்து முழு உடலையும்
புரட்டிப் புரட்டித் துடைத்தார். அந்தத் துண்டையும் போர்வை கிடந்த இடத்தில் வீசினார்.
எல்லாவற்றையும் ஒரு முடிச்சாகக் கட்டி குப்பை போடும் இடத்தில் வைத்தார். பவுடர் டப்பாவை
எடுத்து அவள் மேல் பூராக் கொட்டித்தடவினார் . நைட்டியைப் போட்டு அவளைப் புரட்டிவிட்டு
ஸ்டிக்கர் பொட்டை ஒட்டினார். இன்னும் வீசுவது போலிருந்தது. மல்லிகைப் பூவை எடுத்து
தலையைத் திருப்பி லேசாக முடிச்சிட்டு வைத்துவிட்டார். படுக்கையில் சாய்ந்திருந்தாள்
ஹேமா.
பாடி ஸ்ப்ரேயைப்
போட்டுப் போர்வையைப் போர்த்திவிட்டுத் தானும் தலைக்குக் கீழ் கை கோர்த்துப் பக்கத்தில்
படுத்துக் கொண்டார். பசிப்பது போலிருந்தது. மணி பத்து இருக்கும். இன்றைக்கு வாக்கிங்கும்
போகவில்லை. சாப்பிடலாமா வேண்டாமா. நேற்று வாங்கிய ப்ரெட் மிச்சம் இருந்தது. டோஸ்ட்
போடப் பிடிக்கவில்லை. ப்ரிட்ஜில் பால் இருக்கும். நனைத்துச் சாப்பிடலாம். ஹேமா சாப்பிடாமல்
கிடக்கும்போது எப்படிச் சாப்பிடுவது.
அவளைக் கட்டிப்
பிடித்துகொண்டார். ஹனிமூன் போனது, பையன்கள் பிறந்தது, சிவியர் மஞ்சள் காமாலை வந்து
கிடந்தபோது அவள் வேண்டிக்கொண்டு தாலியை உண்டியலில் செலுத்தியது, தனக்காக மொட்டை போட்டுக்
கொண்டது, எல்லாம் ஞாபகம் வந்தது. ருசியான கைப்பக்குவத்தில் அவள் செய்யும் தக்காளித்
தொக்கும் தோசையும் சாப்பிட அவருக்கு ஏக்கமாய் இருந்தது. ஒஞ்சரித்துப் படுத்து அவளை
முத்தமிட்டுக்கொண்டே இருந்தார்.
இவள் யார்? என் வீட்டில் ஏன் இருக்கிறாள். என் வாழ்க்கையில் ஏன் வந்தாள். நான் யார். ? அவருக்குக்குள் ஞாபகங்கள் குழம்பிக் குழம்பி வந்தன. எழுந்து சேரில் அமர்ந்தார். அவளை ஒரு நேர்க்கோட்டில் பார்த்தார். விருமாண்டி கோவிலில்தான் இவளை முதன்முதலாகப் பார்த்தது கனவுபோல் தோன்றி மறைந்தது.
ராக்காயிக்கோ பேச்சிக்கோ சூலாட்டு பூஜைத்திருவிழா உக்கிரத்துடன் நடந்துகொண்டிருந்தது. வயிற்றைக் கிழித்துக் குட்டியைப் பிளந்தெடுத்துப் பூசாரி பேச்சிக்குப் படைக்கிறார். எங்கும் ரத்தம் சிதறுகிறது. அதன்பின் கத்தக்கூட முடியாமல் உயிர்விட்ட ஆட்டின் தலையும் சூலாட்டுக் குட்டியும் பேச்சியின் முன் பூமியில் புதைந்திருக்கிறார்கள். புதைக்குமுன் தென்பட்ட ஆட்டின் கண் ஹேமாவின் கண்ணைப் போலிருக்க அந்தக் குட்டி அவர் உருவில் மாறியது. விலுக்கென்றது அவருக்கு. தானா, தானா அது.. தான்தானா.. ?
என்னைச் சூலுக்குள் வைத்திருந்தவளே எங்கே போய்விட்டாய். எழுந்திரு எழுந்திரு.. ஏண்டி அசையாமக் கிடக்கிறே. விலு விலுவென உலுக்கினார். கட்டில் காலில் தலையை முட்டிக் கொண்டார். தலை கலைந்து நெற்றியில் ரத்தம் பொட்டிட்டது.
மூணு மாசம் முன்னாடி அப்பா வாக்கிங் போயிட்டு ரொம்ப நேரம் திரும்பல.
நானே கிளம்பி அப்பா வாக் போற பார்க்குக்குப் போனேன். அங்கே ஒரு பெஞ்சில் உக்கார்ந்திருந்தார்.
ஆனா என்ன கண்டுக்கல. வாங்க வீட்டுக்குப் போகலாம்னோடனே ’யார் நீ ?. என்ன எதுக்குக் கூப்பிடுறே
’என கோபப்பட்டார். கையைப் பிடிச்சுத் தள்ளினார். ஆனா நான் திரும்ப கூப்பிட்டவுடனே எழுந்து
வந்தார். எனக்கு அதிர்ச்சி என்னையே யார்னு கேக்குறாரேன்னு .
அந்த பார்க்குல்
ஒருத்தர் வாங்கிங் போயிட்டு இருந்தார். எங்க சச்சரவைப் பாத்துட்டு என்னாச்சுன்னு கேட்டார்.
சொன்னேன். அவர் ஒரு டாக்டராம். உடனே அப்பாவை அழைச்சிட்டு அவரோட க்ளினிக்குக்குப் போய் சில சோதனைகள் செய்தார்.
அப்பாவுக்கு அல்ஜீமராம். அன்னிக்கு ஆட்டோவுல ஏறக்கூட அப்பா செஞ்ச அமளி இருக்கே. அப்பப்பா.
ஞாபக சக்தில புலின்னு
சொல்லிட்டு இருப்பாரே அவருக்கு அல்ஜீமராம். அப்பாவுக்கு ஞாபக மறதி அதிகமாகிவிட்டது.
என்னையே மறந்துவிடுகிறார். அதனால் அப்பா நான் இருக்கும் ஃபோட்டோவில் ஃபன்னுக்காக எழுதுவது
போல ஸ்டிக்கரால் பேரை ஒட்டி இருக்கிறேன். நம்ம நாலுபேர் இருக்கும் போட்டோவிலும் நம்ம
ஃபேமிலி ஃபோட்டோவிலும் கூட ஒட்டி இருக்கிறேன்.
பக்கத்துத் தெருவில்
இருக்கும் உன் நண்பன் ரங்கனிடம் கூட அப்பாவுக்கு வயதாவதால் ஞாபக மறதி அதிகம் இருப்பதாக
சொல்லி வெளிய தெருவுல பார்த்தா பாத்துக்க சொல்லி இருக்கேன். அப்போ அப்போ வருவான். நல்ல பையன். ரொம்ப
உதவி.
மளிகை, காய்கறி,
பால், தண்ணீ எல்லாரும் ஃபோன் பண்ணா வீட்டுக்கே வர்றாங்க. இண்டர்நெட், ஃபோன்பில் கரண்ட்
பில்லை ரங்கன்கிட்ட கொடுத்து கட்ட சொல்லிடுறேன். ஏதோ பொழுது ஓடிட்டு இருக்கு. எனக்கு
ஏதாவது ஒண்ணுன்னா அப்பாவைப் பார்த்துக்க ஏற்பாடு பண்ணனும்.
பெட்ரூமின் நடு ஷெல்ஃபில் இருந்த லாப்டாப் ஒளிர்ந்தது. கைங்க்..
கைங்க் என ஸ்கைப்பின் கால் வந்து திரை ஒளிர்ந்து கத்தியது. என்னது லாப்டாப் ஆனிலேயே
இருக்குதா. வேகவேகமாகச் சென்று அதைத் தட்டினார்.
சின்ன மகன் சிரித்தான்.
”அப்பா குட்மார்னிங். வாக்கிங் போய் வந்தாச்சா.”
தலையைக் கோதிக்கொண்டே
“ ஓ எஸ்” என்றார். ’அம்மா ’ என்றான்.
“ தூங்குறா . நேத்தி நைட் சரியான தூக்கமில்லை. “
காமிராவில் அம்மாவின் முகம் அவனுக்கு லேசாகத் தெரிந்தது. மல்லிகைப்பூ கூட.
“அட அம்மா
அதுக்குள்ள குளிச்சாச்சா. ரைட்டு என்னப்பா டிஃபன்” என்றான்.
”ப்ரெட்டுதாண்டா
. மத்யானம்தான் சமைக்கணும் அம்மா எழுந்துக்கிட்டப்புறம்’ என்றார். ”நான் ரசம் வைச்சால்
அவ்ளோ நல்லா இல்லை. அவள் சமைச்சாதான் அது சாப்பாடு. ”. பெருமையாக சொல்லிக் கொண்டார்.
“ அப்பா நீ குடுத்து வைச்சிருக்கே. எங்களுக்கு தினம் ப்ரெட்டுதான். ரெண்டு பேருக்குமே
சரியா சமைக்க தெரியாது. ஏதோ தெரிஞ்சத வைச்சு ஒப்பேத்திக்கிட்டு இருக்கோம். நீயும் அம்மாவும்
வாங்கன்னா வரமாட்டேங்கிறீங்க” என்றான்.
”அடுத்த சம்மருக்குப்
பார்க்கலாம்டா ”என்றார்.
”சரி தள்ளிக்கோ அம்மாவைப் பார்த்துக்குறேன்” என்றான்.
”தூங்குறா
என்னத்தப் பார்க்குறே. சரி சொல்றேன் அவ எழுந்ததும்” என்றார்.
ஸ்கைப்பின் கேமிராவில்
இருந்து பையன் லாகவுட் செய்ததும் ஓய்ந்து சேரில் அமர்ந்தார். அது சுழன்று சுழன்று அவரை
ஒரு மாதிரி மயக்கத்துக்குக் கொண்டு போனது. அரைமணிநேரம் அதில் தூக்கத்தில் ஆழ்ந்திருப்பார்.
திரும்ப ஸ்கைப் கைங்க் கைங்க் என்று கால் வந்து கத்தியது.
அட சட். இதை ஆஃப்
செய்ய மறந்துட்டனா. காமிராவைத் தட்டினார். பெரிய மகன். ’அப்பா’. என்றான். ’சொல்லுடா.
இப்ப என்ன நேரம் ’என்றார். இலக்கற்று எங்கோ பார்ப்பது போல் வெறித்தார்.
’அம்மா இன்னும்
எழுந்துக்கலையா’ என்றான்.
’அவளுக்குத்தான்
கால்ல பிரச்சனை இருக்குல்ல. எழுந்து குளிச்சிட்டு கால் வலிக்குதுன்னு படுத்துருக்கா
’ என்றார்.
’சாப்பிட்டியாப்பா’
என்றான்.
’ஒ ப்ரெட் சாப்பிட்டேண்டா’.
’தம்பி ஃபோன்
பண்ணான். யாரையாச்சும் ஹெல்புக்கு வர சொல்லவாப்பா என்றான்.
’வேணாம் வேணாம்’
என்றார் அவசரமாக.
‘அம்மாவைப் பார்க்கணும்பா.
நீ நகந்துக்க’. என்றான்.
‘அவ தூங்குறா.
ஏன் படுத்துறே’. என்று லேசாக நகர்ந்தார்.
”சரிடா எழுந்ததும்
சொல்றேன்”. என்றபடி ஸ்கைப்பின் காமிராவை அவசரமாக அணைத்தார்.
காலிங் பெல் அடித்தது.
பெரியவனின் நண்பன் ரங்கன்தான் வந்திருந்தான். ”அங்கிள் நெட் பில் பே பண்ணிட்டேன். இந்தாங்க
ஸ்லிப், கரண்ட் பில் அடுத்தமாசம்தான். ஏன் ஆண்டி இப்போவும் தூங்கிட்டு இருக்காங்க.
அப்புறம் என்னவோ ஸ்மெல் அடிக்குது அங்கிள். தோட்டத்துல ஏதும் செத்துப் போச்சான்னு பாருங்க.”
”வேலைக்காரம்மா வல்லையா” என்றான்.
”வேலைக்காரம்மா
ஒரு வாரம் லீவு. சரிப்பா நான் பார்த்துக்குறேன். ஆண்டிக்கு கால் வலி. அதான் மாத்திரை
போட்டு தூங்குறா. நீ கிளம்பு” என்றார்.
அவன் கிளம்பியதும்
ஆசுவாசப் பெருமூச்சு விட்டார்.
மறுநாள் காலை
பத்துமணி. காலிங் பெல் இடைவிடாமல் கதறியது. மெல்ல ஹேமாவை அணைத்த கரத்தை விலக்கி எழுந்து
சென்று திரை மறைப்பில் பார்த்தார். யாரோ மூன்று நான்கு பேர் நின்றிருந்தார்கள். டம
டம என்று கதவு அதிர்ந்தது. யார் இந்த அந்நியர்கள்.
நாங்க பக்கத்து
வீட்டுல இருக்கோம். ஏதோ ஸ்மெல் வருது பாருங்க. என்று அவர்கள் சொல்ல ரங்கனும் பார்க்கில்
பார்த்த டாக்டரும் உள்ளே நுழைந்தார்கள்.
படபடப்பாக இருந்தது அவருக்கு ”வெளிய போங்க எல்லாரும்” எனக் கத்தினார். ஓடிச்
சென்று பெட்ரூம் கதவைத் தாள் போட்டார். அவர் உடம்பில் மூன்று முரட்டுத்தனமான மனிதர்கள்
ஏறியது போல மூர்க்கமாக இருந்தார்.
டாக்டரும் ரங்கனும்
அவரது கையைப் பிடிக்க முயன்றார்கள். சட்சட் என வெட்டினார். ”தொடாதீங்க. போங்க வெளியே”
எனத் திரும்பத் திரும்பச் சத்தம் போட்டார். ரங்கனும் அண்டைவீட்டாரும் பிடித்துக் கொள்ள
டாக்டர் சேதுவுக்கு ஒரு ஊசியை ஏற்றினார். ஒரு ட்ராங்குலைஸர். மனம் அமைதியடையத் தொய்ந்து
ஒரு ஓரமாக அமர்ந்தார் சேது.
‘அடப்பாவி என்ன
மனுஷன் அவன். மூணு நாளா இறந்து போன மனைவியோட பக்கத்துலேயே உக்கார்ந்து படுத்துக்கிட்டு
இருந்திருக்காரு. மறதி நோய் வேறயாம். வெளிநாட்டுல இருக்க பசங்க ஸ்கைப்புல காமிராவுல பார்த்தே ஏதோ வித்யாசமா இருக்கேன்னு ஃப்ரெண்டை அனுப்பிப்
பார்த்துக் கண்டுபிடிச்சிருக்காங்க.’ பாசம் இருக்கவேண்டியதுதான். பேய்ப்பாசமா இருக்கும்
போல பொண்டாட்டி மேலே “ஏரியாபூரா பேசிக்
கொண்டார்கள்.
’என்ன விட்டுட்டு
ஏண்டி போனே ஏண்டி போனே..சூலுக்குள்ள வைச்ச குட்டி ஆடுமாதிரிக் கிடந்தேனே. என்ன விட்டுட்டு
ஏண்டி போனே.’ கண்கள் கரகரவென வழிய ஹேமாவும் அவரும் இருக்கும் ஃபோட்டோவின் முன்னால்
டேபிளில் முகம் சாய்த்துப் படுத்திருந்தார். மூச்சு தப்பித் தப்பி வந்தது. அவள் இல்லாத
உலகத்தில் அவருக்கு இருக்கவே பிடிக்கவில்லை. முகத்துக்கு நேரே புகைப்படத்தில் இருந்து
சிரித்தாள்.அழைத்தாள். கண்ணோடு கண் நோக்கினாள். ஹேமா..ஹேமா.. அவரது கண்கள் அவளது கண்களோடு
கலந்தன.
”தாத்தா தாத்தா
எழுந்திருங்க” என அவரது பேரன் அழைக்க அவரது கை தொய்ந்து விழுந்தது. ஃபோட்டோவில் இருக்கும்
ஹேமாவின் முகத்தோடு முகமாய்ப் பொருந்தி அவர் சூலாட்டுக் குட்டியாய் அவளோடு கலந்து போய்க்கொண்டிருந்தார்.
டிஸ்கி :- இது ரியாத் தமிழ்ச் சங்கம் நடத்திய சிறுகதைப் போட்டியில் ஊக்கப் பரிசு பெற்ற சிறுகதை.
டிஸ்கி :- இது ரியாத் தமிழ்ச் சங்கம் நடத்திய சிறுகதைப் போட்டியில் ஊக்கப் பரிசு பெற்ற சிறுகதை.
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
பதிலளிநீக்குஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!