எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 4 ஜூன், 2019

துடுக்குத்தனத்தால் ஒளியை இழந்த சூரியனும் சோமனும். தினமலர் சிறுவர்மலர் - 18.

துடுக்குத்தனத்தால் ஒளியை இழந்த சூரியனும் சோமனும்
எப்பவும் எங்கயும் நம்ம துடுக்குத்தனம் செல்லுபடி ஆகாது. அகந்தையும் ஆணவமும் விளைவிக்கும் அவமானத்தை துடுக்குத்தனமும் விளைவிக்கும். சாதாரண மக்கள் மட்டுமில்ல. இந்த உலகத்துக்கே ஒளி கொடுக்குற சூரியனும் சோமனும் கூட துடுக்குத்தனமா செயல்பட்டதால தங்களோட ஒளியை இழந்தாங்க. அப்புறம் தவறை உணர்ந்து திருத்திக்கிட்டதால திரும்ப ஒளி பெற்றாங்க. அது என்ன கதைன்னு பார்ப்போம் குழந்தைகளே.
காசியப முனிவர் அதிதி தம்பதிகளின் புதல்வர்தான் சூரியன். இவருடைய ரதத்தை அருணண் என்பவன் செலுத்தி வந்தான். ஆனால் இவன் அங்கஹீனம் உள்ளவன். அதே சமயம் அன்பும் பக்தியும் கொண்டவன்.
இவன் ஒரு முறை சூரியனிடம் கைலாயம் சென்று சிவனை தரிசிக்க வேண்டும் என்ற தன்னுடைய நியாயமான கோரிக்கையைத் தெரிவித்தான். அதற்காக சூரியனிடம் அனுமதி கேட்டான். ஆனால் சூரியனோ அருணனின் உடற்குறையைச் சொல்லி கிண்டலடித்து ”நீயெல்லாம் எங்கே கைலாயம் செல்லப் போகிறாய், சிவனை தரிசிக்கப் போகிறாய்” என்று எள்ளினான்.

அருணனுக்கோ கண்ணெல்லாம் கண்ணீர் பொங்கி வழிந்தது. தன்னுடைய உடல் ஊனமானால் என்ன உள்ளத்தில் பக்தி ஒளி நிரம்பி இருக்கிறதே. எனவே அவன் மோகினிப் பெண்ணாக உருவம் எடுத்துக் கைலாயம் சென்று சிவனை தரிசித்தான். அந்த சந்தோஷச் செய்தியை சூரியனிடம் வேறு மகிழ்ச்சியோடு வந்து சொல்லி விட்டான்.
சூரியனோ அலட்சியமாக “நீயாவது மோகினி ஆவதாவது.? உனக்காவது சிவன் காட்சி தருவதாவது. கைலாயம் சென்றாயா. கனவு கண்டாயா.?  என்ன சுத்தப் பிதற்றல் ? “ என்று சொல்லிச் சிரித்தான். இதைக் கேட்டு அருணன் உடனடியாக பேரழகு கொண்ட மோகினியாக மாறினான். அதைக் கண்டு சூரியன் மயங்கினான். ஆனால் சிவனோ தன் பக்தனைத் துடுக்குத்தனமாகப் பேசிய சூரியனைப் பார்த்துக் கோபமுற்றார்.
சூரியன் எதிரே தோன்றி “உன் துடுக்குத்தனமான பேச்சினால் நீ ஒளியிழந்து போவாய் “ இதைக் கேட்டுத் திடுக்கிட்டான் சூரியன். அவன் தேஜஸ் குறைந்தது. ஒளி மங்கியது. “தெரியாமல் பேசிவிட்டேன். சாபவிமோசனம் தாருங்கள் ப்ரபோ “ என்று கெஞ்சினான்.  சிவன் ”சிறிது காலம் கழித்து உன் உருவம் கொஞ்சம் கொஞ்சமாகத் திரும்ப ஒளி பெறும். இனிமேல் உருவு கண்டு எள்ளாதே. துடுக்குத்தனமாய்ப் பேசாதே” என்று அறிவுறுத்தினார். அதேபோல் சிறிது காலம் கழித்துக் கொஞ்சம் கொஞ்சமாக சூரியன் தன் பழைய பிரகாசத்தை அடைந்தான்.
இவனைப் போல் சோமன் என்னும் சந்திரனும் துடுக்குத்தனத்தாலும் கூடா ஒழுக்கத்தாலும் தன் ஒளியை  இழந்தான். இவனது பெற்றோர் அத்திரி மகரிஷி அனுசூயா ஆவர். மிகவும் வசீகரமாக அழகாக இருந்த இவனுக்கு தட்சன் தன் இருபத்தி ஏழு  நட்சத்திரப் பெண்களையும் திருமணம் செய்துவைத்தார்.
சோமனோ இருபத்தி ஏழ்வரை மணந்தாலும் அனைவரையும் சமமாக நடத்தவில்லை. ஓரிருவர் மேல் மட்டும் கருணையோடு இருந்து மற்றவரைப் புறக்கணித்து வந்தார். மேலும் தனது குரு பிரகஸ்பதியை மதிக்காமல் துடுக்குத்தனமான நடந்து கொண்டார். இதைக் கண்ட தட்சன் சோமனின் கலைகள் ஒவ்வொன்றாக அழிந்து போகும் என சாபம் கொடுத்தார்.
பால் வெண்மையாக இருந்த சோமன் கொஞ்சம் கொஞ்சமாகக் கரைந்துகொண்டே வந்தான். ஒரு கட்டத்தில் அவனது ஒரே ஒரு கலை மட்டும் மிஞ்சியது. தட்சனிடம் மன்னிப்பு வேண்டினான். பிரகஸ்பதியின் காலைப் பிடித்தான். பிரம்ம தேவரையும் தேவேந்திரனையும் தேடி ஓடிப்போய் அழுது விழுந்து தொழுதான். ”சிவனைச் சரணடைந்தால் தப்பிப் பிழைக்கலாம்” என்று அவர்கள் யோசனை சொல்ல சிவனிடம் ஓடித் தஞ்சமடைந்தான்.
சந்திரனது பரிதாபத் தோற்றத்தைப் பார்த்துப் பரிதாபப்பட்ட சிவன் சந்திரனின் பாவங்களை மன்னித்துச் சிரசில் சூடினார். அதன் பின்தான் அவனது கலைகள் தேய்வது நின்றது. ஆனால் தட்சனின் சாபப்படி அவன் வானில் பதினைந்து நாள் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து பூர்ண சந்திரனாகவும் அதன் பின் கொஞ்சம் கொஞ்சமாகத் தேய்ந்தும் காட்சி அளித்தான்.  
எப்படி இருந்தும் சோமனின் துடுக்குத்தனம் குறையவில்லை. அதற்காக அவன் இன்னும் கூட துன்பம் அனுபவித்தான். ஒரு முறை பிள்ளையாரைப் பார்த்ததும் அவரது உருவத்தைப் பார்த்து விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்தான். அதைக் கண்டு கோபமுற்ற விநாயகர் அவனை நீசனாகப் போகும்படி சபித்தார். பயந்து நடுங்கிய அவன் மன்னிப்பு வேண்டி நிற்க சதுர்த்தி அன்று மட்டும் நீசனாகவும் மற்ற நாட்களில் சாப விமோசனமும் கொடுத்து அருளினார்.
துடுக்குத்தனம் மட்டும் எப்பவும் கூடாது. வேண்டாத பேச்சு வீண் சிக்கலை விளைவிக்கும் எனவே எல்லார்கிட்டயும் அன்பாவும் பணிவாவும் இருக்கணும்கிறத சூரியனும் சந்திரனும் நமக்குப் பாடமா உணர்த்தியிருக்காங்க இல்லையா குழந்தைகளே.

டிஸ்கி 1 :-  இந்தக் கதை இதிகாச புராணக் கதைகள் என்ற தலைப்பில் 17. 5. 2019  தினமலர் சிறுவர்மலர் இதழில் இடம்பெற்றுள்ளது. நன்றி தினமலர் சிறுவர் மலர், தனது அழகான ஓவியங்களால் கதைக்கு எழில்கூட்டும் ஓவியர் ரஜனி & எடிட்டர் தேவராஜன் ஷண்முகம் சார்.

2 கருத்துகள்:

  1. வாழ்த்துகள்! கதை அறிந்தோம்

    கீதா

    பதிலளிநீக்கு
  2. நன்றி கீதா

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...