திருமணப் பெண்ணுக்கு சீர் செனத்தியாக சாமான் வைப்பது அருகி வருகிறது. புழங்கும் சாமான் போக அனுவலுக்கு எடுக்கும் அனைத்துப் பொருட்களும் வைப்பதுண்டு. இப்போது இவை யாவுமே கிடையாது. மேலும் வரதட்சணை போல வது தட்சணை கொடுக்கும் காலம் வந்துகொண்டிருக்கிறது. மாப்பிள்ளைக்கு உடைகள், டேபிள் சேர், மின் விசிறி, டேப்ரெக்கார்டர், வாசனைத் திரவியங்கள் அலங்காரப் பொருட்கள் போன்றவையும் மாமியாருக்கு என்று சில பொருட்கள், கோலக்கூட்டு, அடுப்பு, பொங்கல் தவலை போன்றவையும் கொடுப்பதுண்டு. இதில் மாமியாருக்குக் கொடுப்பதும் பெண்ணுக்குக் கொடுக்கும் வெள்ளிச் சாமான்கள் மட்டுமே தற்போது பெண் வீட்டார் பரப்புகிறார்கள்.
ஆனால் மாப்பிள்ளை வீட்டில் பெண்ணுக்குப் பொருட்கள் பரப்புவது குறையவில்லை. ஆறேழு பட்டுப் புடவைகள் , ஏழெட்டு சிந்தடிக் பட்டுகள், நைட் ட்ரெஸ்கள்,உள்ளாடைகள், கர்சீஃப், குடை, செருப்பு,வாளி, கப், அண்டா, சாப்பிடும் தட்டு, சூட்கேஸ்கள், வெள்ளிச் சாமான்கள், தங்க நகைகள் ( அல்லது வைர நகைகள் ) கொடுக்கிறார்கள். திருமணத்தில் பெண்ணுக்கு சீதனமாகக் கொடுக்கப்படும் பணத்தைப் பெண்ணின் பேரிலேயே போட்டு விடுகிறார்கள்.
கழுத்திருவுக்குப் பொன் உருக்க பெண்ணின் அப்பா அம்மாவிடம் ஒரு பவுனில் இருந்து 3, 5, 16, அண்ட் சோ ஆன் விகிதத்தில் பணமாகவோ, தங்கக் காயினாகவோ ( 24 கேரட் ) மாப்பிள்ளை வீட்டார் கொடுத்துவிடுகிறார்கள்.
மாமியார் சாமான், பின் முறை, மாப்பிள்ளை சாமான், பெண்ணுக்குப் பரப்பும் சீர் சாமான் எல்லாமே பெண் வீட்டார் பெண்ணுக்குக் கொடுக்கும் சீதனப் பணத்தில் அடங்கி விடுகிறது. அது எத்தனை லட்சமாக இருந்தாலும் இன்றைக்கு இதை அநேகம் மாப்பிள்ளை வீட்டினர் பெண்ணின் பேரிலேயே டெபாஸிட்டாகப் போட்டு விடுகின்றார்கள்.
பெண் போட்டு வரும் நகைகள் பற்றி ஏதும் கேட்பதும் இல்லை. அதெல்லாம் அந்தக் காலம். பெண் வீட்டார் என்ன போடுகின்றார்களே அது அவர்களின் பிரியத்தையும், அன்பையும் கொடுக்கும் சக்தியையும் காட்ட ..மேலும் அது பெண்ணுக்குத்தான் நமக்கெதுக்கு அது பற்றி என்ற எண்ணம் வேரோடுகிறது.
ஓரிரு இடங்களில் இன்னும் பழம் பெருமையை விட்டுக் கொடுக்காமல் பெண்ணுக்குச் சாமான் பரப்பி வருகிறார்கள் அதை ஆவணப்படுத்தவே இதை எல்லாம் எடுத்திருக்கிறேன். கோபால் சார் சொன்னது போல் ஒவ்வொரு பாத்திரத்துக்கும் பேர் இருக்கிறது. அதையும் ஒரு முறை ஆவணப்படுத்துவேன்.
இதில் சில்வர், பித்தளை, மங்கு, மரச்சாமான்கள், நவீன வீட்டு உபயோக சாதனப் பொருட்கள் உள்ளன. பொதுவாக வீட்டின் மேல் மாடியில் சாமான் பரப்புவார்கள்.
பித்தளைச் சாமான்கள். :- காசாணி அண்டா, 21 குழி இட்லி சட்டி , உயர அடுக்கு - 7 , தராசு, குத்து விளக்கு, கேரளா விளக்கு, தண்ணீர்க்கிடாரம், குப்பை எடுக்கும் ( ஓவல் ) தொட்டி, தெக்களூர் தவலை சின்னம் பெரிசு மூடியுடன் 5, தண்ணீர்த்தவலை மூடியுடன் 5, தூக்குச்சட்டிகள், வடிகட்டி, சோத்துத் தவலை, டம்ளர், வாளி அடுக்கு, கரண்டி , எண்ணெய்த்தூக்குகள், டிஃபன் கேரியர்.