வெள்ளி, 1 செப்டம்பர், 2017

குற்றப் பரம்பரை. - ஒரு பார்வை.ஆகஸ்ட் மாதத்திலேயே எழுதி இருக்க வேண்டியது இந்த நூல் விமர்சனம். மனதில் ஊறிக்கொண்டே இருக்கும் ஒரு விஷயம் எளிதில் உலர்வதில்லை. வேல ராமமூர்த்தியின் குற்றப் பரம்பரை கார்பந்தியரின் எழுத்துப் போல் மாஜிகல் ரியலிசம் நிரம்பியதாக உணர்கிறேன்

"கறுப்பின மக்களின் புரட்சியை எழுதினார் கியூபாவின் அலெஜா கார்பந்தியர். அற்புத எதார்த்தம் ((Marvelous Real) , மாந்திரீக எதார்த்தம்(Magical Realism) பாணியில் இணைத்து கருப்பு x  வெள்ளை, மேல் x கீழ், முதலாளி x  தொழிலாளி என்ற அனைத்துப் பிரிவினையையும் உடைத்து The Kingdom of this world என்ற நாவலை எழுதி, உலகத்தையே தன் பக்கம் திருப்பினார். கார்பந்தியருக்கு பிறகு, உலகம் முழுவதும் இந்த உத்தி பரவியதுமார்க்வெஸ், சரமோகா, ருஷ்டி, ரூல்ஃபோ என இந்த உத்தியை பின்பற்றியவர்கள் ஏராளம்…" -- நன்றி வாசுதேவன்.


பதினேழாம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்கள் இந்தியாவுக்குள் வியாபார நிமித்தம் ஊருடுவி நாட்டை ஆக்கிரமித்து ஏகாதிபத்தியம் செய்து இங்கே இருந்த மக்களின் மேல் அநியாய வரி விதித்து சொத்துக்களைச் சுரண்டிச் சென்றுள்ளனர். அப்போது அவர்களை எதிர்த்த அல்லது அவர்களோடு கைகோர்த்திருந்த ஆதிக்கக்காரர்களை எதிர்த்த மக்களை அவர்களின் தொழிலைக் காரணம் காட்டி கைது செய்கிறார்கள். மேலும் தினம் காவல் நிலையம் சென்று கைரேகை வைத்துச் செல்லவேண்டும் எனவும் குற்றப் பரம்பரையாக முத்திரை குத்தப்பட்டதை வலிமையாக ஆவணப்படுத்துகிறது  இந்நாவல்.    

பெருநாழி, பெரும்பச்சேரி, கொம்பூதி ஆகிய இடங்களில் நாம் நேரடியாகச் சென்று உலவுவது போல் இருக்கிறது இதன் சொற்கோவை. எதைச்சொல்ல எதைவிட. இந்நாவலை வாசிப்பதே அக்காலகட்டத்தில் வாழ்ந்த உணர்வைத் தருகிறது.

பெருநாழி பெருமக்கள் வாழிடம். பெரும்பச்சேரி அவர்களுக்கு சேவை செய்தவர்களின் வசிப்பிடம். கொம்பூதி கானகம் மடிந்த பாதையில் கல்லையும் முள்ளையும் காலுக்கு மெத்தையாக்கி ஓடித் தாம் செய்யும் தொழிலின் தாத்பர்யம் அறியாத ஆனால் வீரம் செறிந்த மக்களின் இருப்பிடம்.

வியாபாரம்,விவசாயம், களவு ஆகிய மூன்று கூறுகள் , முதலாளிகள் , விவசாயிகள், கள்ளர்கள் என்று மூன்றுவித வாழ்வியல். கிராமம், சேரி, வனம் என்று மூன்றுவித நிலக்கூறுகள். இதன் நடுவில் வந்தேறிகளான ஆங்கில ஆட்சியாளர்களும் காவலர்களும். அவர்களுக்குக் குடைபிடிக்கும் சுயதேசத்தின் கால்வருடிகளுமாக இக்கதை ஒரு யதார்த்ததைக் கண்முன் நிறுவிக் காட்டுகிறது.

ரத்தமும் சதையும் நிணநீர்வடிதலுமாக  உண்மைக்கு மிக அண்மையான கதையைப் படைத்திருக்கும் வேல ராமமூர்த்தியின் கதாபாத்திரங்கள் தேவைக்குமேல் அதிகம் ஒரு சொல் கூடப் பேசுவதில்லை. ஒவ்வொரு அத்தியாயமும் ஒவ்வொரு கதாபாத்திரமும் ஒவ்வொரு வர்ணனையும் ஒவ்வொரு நிகழ்வும் ஒரு காரண காரியம் கருதி வெளிப்படுகிறது. எந்தப் பாத்திரமாக  இருந்தாலும் அதில் கதாசிரியரின் ஊடுருவல் இல்லை.

இரண்டு இடை கதைகளில் மட்டும் கதாசிரியரின் அதிகற்பனாசக்தி அதீதமாக வெளிப்படுகிறது. இரண்டும் ஆரம்பத்தில் இன்பச்சுவையும் முடிவில் அவலச்சுவையும் கொண்டவை. காளத்தி கதை கன்னிமார் கேட்கக்கூடாத கதை என்றாலும் முழுதும் சொல்லப்படுகிறது. கேட்கக்கூடாது என்றால்தானே ஆவல் பொங்கி எழும். ஆனால் கேட்டபின் கதவுகள் நமக்குக் பரம எதிரிகளாகிவிடுகின்றன. சாதி துவேஷத்தின் மாறாத ஆறாத ரத்தத்துயர் வெளிப்படுகிறது.

வஜ்ராயினி,வில்லாயுதம், ஹசார் தினார், நாகமுனி  வைரங்கள் என வைரவேட்டைக் கதை கொஞ்சம் பாண்டஸி வகைக் கதை. இருந்தும் அவள் துயரும் வாட்டுகிறது.

அன்னமயில், சிட்டு, பந்தனம் செவ்வந்தி, பூமயிலு ஆகிய கொம்பூதிக் குமரிகள், வில்லாயுதம், பாண்டி, துருவன், நரிவேலு, சோலை, கழுவன் ஆகிய கொம்பூதிக் குமரர்கள் ஆகியோர்பால் நமக்கு வியப்பு கலந்த விருப்பு ஏற்படுவது இயற்கை. ஆனால் வேயன்னா, அங்கம்மா, கூழானிக்கிழவி, வெள்ளையம்மா, திருவேட்டை, சிகப்பி, வையத்துரை, துருவன், ராக்கு, கார்மேக ஆசாரி, ஜென்சி, வில்லியம்ஸ், விக்டர், நான்சி, இன்ஸ்பெக்டர் சேது ஆகியோர்பாலும் கருணை மிகுகிறது.

சேறும் சகதியும் முள்ளும் கல்லும் நிறைந்த பாதையிலும் பகுதிகளிலும் வாழும் புழுதி படிந்த உடம்புக்குச் சொந்தக்காரர்களான கொம்பூதி ஜனங்கள், அவர்களில் தலைவரான வேயன்னாவின் கம்பீரம், அவற்றோடு மூன்றுவகை மக்களின் நியாயம், வாழ்க்கை முறை எல்லாவற்றையும் வேல்கம்பால் ரத்தக்களரியாக வரைந்து செல்கிறது வேல ராமமூர்த்தியின் பேனா. 

வெறுக்கத்தக்க பாத்திரப் படைப்புகள்  நாகமுனியும் வீரசுத்தியும், சுப்பையாவும், ஏகாம்பரமும், பகதூரும் கிழட்டுப் போலீஸும், கிளிஞ்ச் துரையும், பச்சமுத்தும்.

கன்னமிடுதல், கன்னக்கோல் பற்றிய விபரங்கள், வளரிக்கலையின் நுணுக்கங்கள், மாடுபிடித்தல், போலீசையே ஆட்டிப் படைக்கும் கொம்பூதி மக்கள்., மூவகை மக்களின் வாழ்வியல்  (விவசாயிகள் , நிலக்கிழார்கள் & வியாபாரிகள் , கள்ளர்கள் ) ஆகியவற்றையும் தகுந்த விவரணைகளோடு தந்திருக்கிறார் ஆசிரியர். இதிலும் பெருநாழியின் திருவிழா விவரிப்பும், பெரும்பச்சேரியின் வாழ்வியல் விவரிப்பும், கொம்பூதியின் கட்டமைப்பின், வீரத்தின் விவரிப்பும் சிறப்பு.     

வேல்கம்பு, வெட்டரிவாள் , வளரி ஆகியவற்றின் ஓசையும் இரும்புப் பட்டறையின் ஒலியும் கேட்பதோடு,  நிலாவின் பால் ஒளியில் நனையும் கம்மாயும், மந்தையும் நம் கண்முன்னே விரிகிறது.  குப்பைக்குழியும் அதில் சீறும் நாகங்களும் சூழ இருந்தபோதும் தம்மை அத்துமீறித் தீண்டிய காவலர்களை கொம்பூதிப் பெண்கள் வீரத்துடன் தண்டித்து அழிப்பதும் சிலிர்க்க வைத்தது.  

அன்பு, அவலம், காதல், வீரம்,  திணிக்கப்பட்ட அல்லது சுமத்தப்பட்ட வாழ்வியலில் இருந்து மீள இயலாத மக்களின் தவிப்பு என இக்கதை படித்த பதினைந்து நாட்களாக மனதை ஊடுருவிக் கொண்டே இருக்கிறது. அதில் ஊவா முள்ளாய் இவர்களை மட்டும் இப்படி ஆக்கியது எது.,  ஏன் இதெல்லாம் என்ற எண்ணமும் ஓடிக்கொண்டே இருக்கிறது. எதனுடனும் சமரசம் செய்பவர்கள் எப்படியோ வாழ்ந்துவிடுகிறார்கள். எதனுடனும் சமரசம் செய்யாமல் தம் போக்கில் வாழும் மக்களை ஒரு வட்டமும் கட்டமும் போட்டு இந்த சமூகம் தண்டிப்பது இழிவரல் வரவைக்கிறது.

கதையின் மூன்று வித சூழல்களில் நான்காவதாக அதிகாரம் x கீழ்ப்படிதல் என்ற நிலை வரும்போது யாருக்கு யார் அடிபணிவது என்ற சிக்கலில் மேம்பட்ட நாகரீகத்துடன் இருக்கும் மேலைநாட்டு அதிகாரம், மிக வலிமையாக தனக்குக் கீழ்மைப்பட்டவர்களாகக் கருதுபவர்களை
கீழைநாட்டு மக்களை டிவைட் அண்ட் ரூல் என்ற சித்தாந்தப்படி பிரித்தாளும் சூழ்ச்சியில் அடக்கி
ஒடுக்க முற்படுவதன் போராட்டமே இக்கதை.

முடிவில் அவர்களைச் செம்மைப்படுத்தக்  கல்வி கற்றுக் கொடுக்க வரும் ஆசிரியர் கூறும் 'ஓம்சக்தி, பராசக்தி என்ற வார்த்தைகளை சிறுவர்கள் உச்சரிக்கும் விதம் படித்துத் தன்னையறியாமல் சிரித்துவிட்டேன். படித்து முடிக்கும்போது நமக்கு நெருக்கமான யாரையோ தெரியாமல் தொலைத்துவிட்ட உணர்வு ஏற்பட்டுக் கொண்டிருந்தது.    

கதையின் ஆரம்பத்தில் சொன்னதுபோல் சேது " ஊதிய ஊதி ஊரையே காட்டிக் கொடுத்துவிடுகிறான். 'கோடரிக் கம்பு' என்பார்கள். குலத்தையே வெட்டுகிறது. இருந்தும் சேதுவையும் வெறுக்கமுடியாமல் செய்திருப்பது ஆசிரியரின் எழுத்தின் சக்தி.

ஒரு வாழ்வியலுக்குள் நுழைந்து பார்க்க, நாம் அறிந்தோ அறியாமலோ வெறுத்த மக்களை நெருக்கத்தில் பார்க்க, அவர்களின் எண்ணப் போக்குகளையும்அதிகாரம், அரசாட்சி, சமூகம் இவற்றின் அளவுகோல்களில் எளிய மக்கள் பட்ட பாட்டையும் அவர்களின் கட்டுடைப்பையும் உணர இக்கதையை வாசித்தல் அவசியம்.  

கைரேகைச் சட்டம் என்றால் என்ன என்று தெரிந்துகொள்ளவே இக்கதையைப் படித்த நான் சமூகத்தின் படி நிலைகளையும் பல்வேறு முகங்களையும் முகத்திலடித்தாற்போல அறிந்துகொள்ளும் விசித்திர அனுபவம் பெற்றேன் என்றால் மிகையாகாது.  

நூல் :- குற்றப் பரம்பரை.
ஆசிரியர் :- வேல ராமமூர்த்தி
பதிப்பகம் :- டிஸ்கவரி புக் பேலஸ்
பக்கம் :- 448.
விலை :- ரூ 400/- 

4 கருத்துகள் :

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University சொன்னது…

படிக்கப்படவேண்டிய நூல்களில் இதுவும் ஒன்று. பகிர்ந்தமைக்கு நன்றி.

வெங்கட் நாகராஜ் சொன்னது…

நல்லதோர் நூல் அறிமுகம். நன்றி.

G.M Balasubramaniam சொன்னது…

குற்றப் பத்திரிக்கை என்னும் ஒரு திரைப்படமின்னும்வெள்ய்டப்படாமல் இருப்பதாக நினைவு. ஆனால் அதற்கும் இதற்கும் எந்தஒற்றுமையும் இருப்பதாகத் தெரியவில்லை

Thenammai Lakshmanan சொன்னது…

nandri Jambu sir

nandri Venkat sago

athu patriya vibaram theriyavillai sir. karuththukku nandri Bala sir.

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...