திங்கள், 4 செப்டம்பர், 2017

மாவீரன் மருதநாயகம் என்ற முகம்மது யூசுஃப்கான்.:-

மாவீரன் மருதநாயகம் என்ற முகம்மது யூசுஃப்கான்.:-


மாவீரன் மருதநாயகம் என்ற முகம்மது யூசுஃப்கான்.:-கமாண்டோ கான் எனவும் கான்சாகிப் எனவும் அழைக்கப்பட்ட ஜெனரல் முகம்மது யூசுஃப் கான் பற்றிக் கூறாவிட்டால் விடுதலைப்போராட்ட வரலாறு முழுமை பெறாது. ஆதியில் ஆற்காடு நவாபுடனும் ஆங்கிலேயர்களுடனும் சேர்ந்துகொண்டு வரிவசூலிக்கும் நிமித்தம் பாளையக்காரர்களை கொடுமை செய்து கொடூரமாக அழித்து மக்கள் வெறுப்பைச் சம்பாதித்த ஒருவர் மனம்மாறி ஆதிக்க சக்திகளை எதிர்த்து தனது மக்களுக்காகப் போராடியது வெகு சிறப்பான ஒன்றுதானே. இத்தனைக்கும் இவர் வாழ்ந்தது 39 ஆண்டுகள் மட்டுமே.
இராமநாதபுரம் மாவட்டம் பனையூரில் 1725 இல் வேளார் இனத்தில் பிறந்து இஸ்லாத்தைத் தழுவியவர். அதனால் மருதநாயகம் முகம்மது யூசுஃப்கான் ஆனார். யாருக்கும் கட்டுக்கடங்காத மருதநாயகம் பிரெஞ்சு கவர்னர் மான்செலா வீட்டில் வேலைசெய்து அதன்பின் தஞ்சைக்குச் சென்று தளபதி பிரட்டனின் படையில் படைவீரராக சேர்ந்தார். கல்வியறிவு பெறாத அவர் பிரட்டனிடமிருந்து தமிழ், பிரெஞ்சு, ஃபோர்ச்சுகீசியம், உருது, ஆங்கிலம் ஆகிய ஐம்மொழிகள் கற்றுத் தேர்ந்தது அதிசயம். அதன் பின் நெல்லூர் சென்று தண்டல்காரராகவும் ( வரி வசூலிப்போர் ) ஹவில்தாராக அதன்பின் சுபேதாகப் பதவி பெற்றார்.1751 இல் முகமது அலி வாலாஜாவிற்கும் சந்தா சாஹிப்பிற்கும் இடையில் நடந்த ஆட்சிச் சண்டையில் சந்தாசாகிப்பின் சார்பாகப் பிரெஞ்சு தளபதி ட்யூப்ளேயுடன் சேர்ந்து போராடினார். ஜெயித்தது என்னவோ இராபர்ட் க்ளைவ் தலைமையில் வாலாஜா சார்பாகப் போராடிய ஆங்கிலேயர்தான். ஆனால் இவரது திறமையைக் கண்டு வியந்த இராபர்ட் க்ளைவ் தனது படையுடன் கானை இணைத்து மேஜர் ஸ்டிங்கர்லா மூலம் ஐரோப்பிய இராணுவ முறைகளில் பயிற்சி அளித்தார்.ஆங்கிலேயர் பெற்ற பல்வேறு வெற்றிகளுக்கு யூசுஃப்கான்தான் முக்கிய காரணம். இவ்வெற்றிகளின் பொருட்டே அவருக்கு தளபதி லாரன்ஸ் கான்சாஹிப் பட்டமும் தங்கப்பதக்கம் பரிசும் வழங்கினார்..1755 இல் மதுரை நெல்லை ஆகிய இடங்களில் வரிகட்டுவதை எதிர்த்த பாளையக்காரர்களை தளபதி அலெக்ஸாண்டர் கெரானுடன் சென்று அடக்கினார். வீரன் அழகு முத்துக் கோன், பூலித்தேவன் ஆகிய பாளையக்காரர்களை ஒடுக்கியதால் ஆங்கிலேயர்கள் மதுரையை ஆளும் அதிகாரத்தினை வழங்கினார்கள்.1757 இல் மதுரை கவர்னரான அவர் அடுத்து திருநெல்வேலிக்கும் கவர்னரானார். 1758 இல் சென்னையை முற்றுகையிட்ட பிரெஞ்சு தளபதி தாமஸ் ஆர்தர்லாலியின் படையை கொரில்லா தாக்குதல் நடத்தித் தோற்கடித்து மாபெரும் புகழடைந்தார். அதன்பின் அவர் கமாண்டோ கான் என்றும் அழைக்கப்பட்டார்.

கான் இஸ்லாத்தைத் தழுவியவரானாலும் மீனாட்சி அம்மன் கோயிலுக்குரிய இறையிலி நிலங்களை மீட்டுக் கோயிலிடம் ஒப்படைத்தார். மேலும் மதுரையின் ஏரி குளம் ஆகியவற்றைப் புதுப்பித்துப் பாசனவசதிகளை மேம்படுத்தி விளைச்சலைப் பெருக்கினார். கள்வர்களை ஒழித்து வணிகர்கள் பாதுகாப்பை மேம்படுத்தினார். 
 
வருடம்தோறும் 5 லட்சம் வரிவசூல் செய்து அனுப்பவேண்டும் எனக் கூறியது ஆங்கில அரசு.  இதை அவர் நேர்பட நிறைவேற்றினாலும் அவரது புகழ் பெருகுவதை ஆபத்தாகக் கருதினர் ஆங்கிலேயர்களும் ஆற்காடு நவாபும். கான் வசூலிக்கும் வரித்தொகையைத் தன்னிடமே செலுத்தவேண்டும் எனக் கிழக்கிந்தியக் கம்பெனியாரிடமும் சொல்லி ஒப்புதல் பெற்றான். 


 
ஆற்காடு நவாபின் பணியாளர் கான் என அறிவித்து அவமானப்படுத்தியது ஆங்கிலேய அரசு. 1761 ஆம் ஆண்டு சுமார் 7 லட்சம் வரிவசூல் செய்து செலுத்த முகம்மது யூசுஃப்கான் முன் வந்தும் நவாபும் கிழக்கிந்தியக் கம்பெனியாரும் ஏற்கவில்லை. 


 
தென்புலத்து வணிகர்கள் பலர் யூசுஃப்கான் மக்களிடம் பிரிட்டிஷாருக்கு எதிர்ப்பு உணர்வை உண்டாக்கியதாகப் புகார் அளித்திருந்தனர். இதைக் காரணம் காட்டி நவாபும் கம்பெனியாரும் கேப்டன் மேன்சனிடம் கானைக் கைது செய்துவரப் பணித்தனர்.  


 
இதனால் டெல்லியின் ஷாவிடமும் ஹைதராபாத் நிஜாம் கிமாமி அலியிடமும் உதவியுடன் சட்டப்படித் தன்னை மதுரையின் சுல்தானாகப் பிரகடனப்படுத்திக் கொண்டார். சுதந்திர ஆட்சியாளராகத் தன்னைப் பிரகடனப்படுத்திய அவர் 27,000 படைவீரர்களோடு ப்ரெஞ்சுப் படையின் உதவியும் பெற்றார்.


 

1764 ஜூனில் மேஜர் பிரஸ்டன் தலைமையில் மதுரைக் கோட்டையின் மீது தாக்குதல் நடத்தினர். கோட்டைக்குச் செல்லும் அனைத்தையும் கம்பெனிப்படை தந்திரமாக நிறுத்திவிட கானின் தளபதி மார்ச்சண்ட் சரணடைய முடிவெடுத்தார். ஆனால் வெற்றி அல்லது வீரமரணம் என்பதைத் தீர்மானித்த கான் அதை விரும்பவில்லை. 

1764 இல் தொழுகையில் ஈடுபட்டபோது அவரது தளபதிகளே வஞ்சகமாக டர்பன் கொண்டு அவரைக் கட்டி கும்பினிப்படையிடம் ஒப்படைத்தனர். அக்டோபர் 15 ஆம் தேதி மதுரை சம்மட்டிபுரம் பகுதியில் அதே ஆங்கிலேயர்களால் தூக்கிலிடப்பட்டார் கான்.

 
அவரைக் கண்டு அஞ்சி நடுங்கிய கும்பினியார் அவரது இறப்பின் பின்னும் நடுங்கி உடல் பகுதிகளை வெவ்வேறு இடங்களில் புதைத்தனர். 1808ல் மதுரையில் தர்கா ஒன்று கட்டப்பட்டு அது இன்றும் கான்சாகிப் பள்ளிவாசல் என்று வணங்கி வரப்படுகிறது. 


 
ஆதியில் ஆங்கிலேயரை ஆதரித்தாலும் அதன்பின் அவர்களை எதிர்த்துப் போராடிய மாவீரன் கான் சாஹிபின் வீரம் இன்றும் மக்களால் கொண்டாடப்படுகிறது. கான்சாபுரம், கான்சாமேடு, கான் பாளையம், கான்சாகிப் வாய்க்கால் ஆகியன இன்றும் இவர் பெயர்கூறும் இடங்களாகும்

DISKY:- Thanks for the vasagar kaditham. 
 4 கருத்துகள் :

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

சூப்பர்!!! ரொம்ப நல்லாருக்கு!!

G.M Balasubramaniam சொன்னது…

பெரிய ஆரவாரத்துடன் கமல் ஹாசன் தொடங்கிய படத்தின் நாயகன் கதைதானே நம் இந்தியர்களின் இயல்பு பற்றி ஒரு பதிவு எழுதி இருந்தேனே அதற்கு உரம் ஊட்டுகிறதுஇது
/1764 இல் தொழுகையில் ஈடுபட்டபோது அவரது தளபதிகளே வஞ்சகமாக டர்பன் கொண்டு அவரைக் கட்டி கும்பினிப்படையிடம் ஒப்படைத்தனர். அக்டோபர் 15 ஆம் தேதி மதுரை சம்மட்டிபுரம் பகுதியில் அதே ஆங்கிலேயர்களால் தூக்கிலிடப்பட்டார் கான்./

ஆரூர் பாஸ்கர் சொன்னது…

//1951 இல் முகமது அலி வாலாஜாவிற்கும் சந்தா சாஹிப்பிற்கும் // நீங்கள் மேலே சொன்னது போல, 1951 என்பது சரியா ??

Thenammai Lakshmanan சொன்னது…

nandri Tulsi sago & Geeths.

nandri Bala sir

thiruthiviten Basker sir :) 1751 . 1951 alla.

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...