வியாழன், 17 நவம்பர், 2016

பாம்பின் கண். ஒரு பார்வை. ( THE EYE OF THE SERPANT )பாம்பின் கண். ஒரு பார்வை.

தியடோர் பாஸ்கரன் அவர்கள் 1997 இல் ஆங்கிலத்தில் எழுதிய திரைப்படத்துறை பற்றிய நூல் THE EYE OF THE SERPANT. இது 97 ஆம் ஆண்டின் சிறந்த நூலுக்கான இந்தியக் குடியரசுத் தலைவரின் தங்கத்தாமரை (SWARNA KAMAL) தேசிய விருது பெற்றது.  இது கிட்டத்தட்ட பதினைந்து ஆண்டுகளுக்குப் பின் கிழக்குப் பதிப்பகத்தின் மொழிபெயர்ப்பாக வெளிவந்துள்ளது. மொழிபெயர்ப்பு நூல் என்றே தெரியாத அளவு சரளமாக மொழி பெயர்த்திருப்பவர் திரு லதானந்த் அவர்கள்.

பழைய புகைப்படங்கள், ஒலியின் வருகை, சினிமா வரலாற்றில் மைல் கற்கள், ஒன்றரை நூற்றாண்டுக்கும் மேலான தகவல்கள் என ஒரு சிறந்த கலைக்களஞ்சியமாகத் திகழ்கிறது இந்நூல். விடுதலைக்கு முன்னான அரசாங்கமும் அரசியலும் விடுதலைப் போரும் அதன் தொடர்ச்சியான சினிமா வெளியீடுகளும் சமகாலப் படைப்புகளும் அதன் பின் அரசியல் அரங்கில் அவை நிகழ்த்திய திருவிளையாடல்கள் பற்றியும் தமிழ் மொழிக்கான மறுமலர்ச்சி பற்றியும் மூடநம்பிக்கைகளுக்கு எதிராகக் குரல் கொடுத்தது பற்றியும் அதே சமயம் மக்களின் ஆன்மீகநம்பிக்கையைச் சிதைக்காமலும் எப்படி எடுக்கப்பட்டன என்பது பற்றியும், சாதி போன்ற பாரம்பரியக் கட்டமைப்பைத் தாக்கியும், சீர்திருத்தக் கருத்துக்கள் கொண்டனவாகவும், எந்த எந்த ஆங்கில/சர்வதேசப் படங்களில் இருந்து இவை எடுக்கப்பட்டன என்பதையும் வட்டார வழக்குப் படங்களையும் ஆவணப்படுத்திச் செல்கிறது இந்நூல்.

மௌனப் படங்களின் ஆரம்பநாட்கள் சுவாரசியமானவை. முதல் தியேட்டர், ( எலக்ட்ரிக் தியேட்டர் & கெயிட்டி) முதல் பேசாப் படம் ( கீசக வதம் ), முதல் பேசும் படம் ஆகியன பற்றிப் பேசுகிறது இந்நூல். ஒலியின் வருகை, வசனகர்த்தாக்கள், பாடல்கள், உரையாடல்கள், திரைப்படங்கள், இயக்குநர்கள், பாடலாசிரியர்களோடு தமிழ் சினிமாவின் மைல் கற்களையும் சினிமாக் கலைஞர்களுடனான சத்தியமூர்த்தியின் நட்பு திரைத்துறையில் அவர் கொண்டிருந்த ஈர்ப்பு திரைக் கலைஞர்களை தேசத்தின் நலனுக்காகப் பயன்படுத்திய விதம் ஆகியவற்றைப் பேசுகிறது நூல்.

சுதந்திரப் போராட்டத்தில் முக்கியப் பங்கு வகித்துள்ளது சினிமா என்றால் மிகையாகாது. திரைப்படமாக எடுக்கப்பட்ட கல்கியின் தியாக பூமி அதில் சிறப்பான ஒன்று. இரண்டாம் உலகப் போர் சமயத்தில் அதற்கு ஆதரவான படங்கள் எடுக்க அரசாங்கமே ஊக்கம் கொடுத்ததாம் !.

ஒலி பதிவு செய்யும் வசதி இல்லாததால் பேசாப்படங்களில் டைட்டில் கார்டுகளில் வசனங்களை எழுதிக் காண்பித்திருக்கிறார்கள். கீசக வதத்தில் இருந்து விஷ்ணு லீலா வரை இதுபோல் 73 பேசாப் படங்கள் தயாரிக்கப்பட்டிருக்கிறதாம். இரண்டாவது பேசும் படம் ‘கலவ ரிஷி’. நடிகர்கள் கிடைப்பது அரிதாகையால் அந்தக் காலத்தில் சினிமா நிறுவனத்தில் வேறு பொறுப்புகளில் இருந்தவர்களையே நடிக்க வைத்திருக்கிறார்கள். அதிலும் பெண்கள் நடிப்புத் துறைக்கு வந்ததே இல்லை என்பதால் ஆண்களே பெண்களாகவும் வேஷமிட்டு நடித்திருக்கிறார்கள். 

திரைத்துறையில் இருந்து மக்கள் மனதில் கோலோச்சிய ஐந்து முதலமைச்சர்கள் வந்திருக்கிறார்கள்.. அதிலும் நடிப்பு, வசனத் துறைகள் பெரும்பங்காற்றி இருப்பது குறிப்பிடத்தக்கது. ஒலி , ஒளி ஊடகத்தின் மாபெரும் சக்தி என இதைச் சொல்கிறார்கள். வசனகர்த்தாக்களான சி என் அண்ணாதுரை, கலைஞர் கருணாநிதி ஆகியோர் பற்றி மட்டுமல்ல, பாரதிதாசன், ஏ வி பி ஆசைத்தம்பி, கண்ணதாசன், இளங்கோவன், டி வி சாரி, ஏ எஸ் ஏ சாமி, எஸ் டி சுந்தரம், ஜலகண்டபுரம் பா கண்ணன் ஆகியோரின் எழுத்துச்சக்தி பற்றியும் சொல்லப்பட்டுள்ளது.

எல்லீஸ் ஆர் டங்கன் என்ற இயக்குநரின் பணி பிரம்மிக்கத்தக்கது. ரஷ் டைரக்டர்களின் உதவியோடு சகுந்தலா, சதி லீலாவதி, சீமந்தினி, இரு சகோதரர்கள், அம்பிகாபதி, ரோமியோ ஜூலியட், மீரா, காளமேகம், தாசிப்பெண், பொன்முடி,மந்திரி குமாரி,என இவ்வளவு தமிழ்ப் படங்களை எடுத்திருக்கிறார். 93 வயது வரை வாழ்ந்த இவர் எடுத்த கடைசிப் படம் ரிட்டர்னிங் சோல்ஜர். 

மின்சாரம் வந்தவுடன் வெகுஜன மக்களைச் சென்றடைந்த பொழுதுபோக்கு அம்சமான சினிமா மாபெரும் வெற்றி அடைந்தது. ஆனால் வெகு ஜன ரசனைக்குள்ளான இதை மேல்தட்டு மக்கள் தங்களுக்கானதாக இன்னமும் அங்கீகரிக்கவில்லை. இதை வெறும் பொழுதுபோக்கு என்றும் கழைக்கூத்து என்றும் கழைக்கூத்தாடிகள் என்றும் சொல்லும்போக்கு இன்னமும் நீடிக்கிறது. எவ்வளவுதான் பொதுமக்களைச் சென்றடைந்திருந்தாலும் கல்லூரிகளின் பாடத்திட்டத்தில் இதற்கான அங்கீகாரம் இல்லை. விஷுவல் கம்யூனிகேஷன் என்றொரு துறை சமீபத்தில்தான் வந்திருக்கிறது . அதே போல் திரைப்படத்துக்கென தனிக் கல்லூரிகள் புனேயிலும் சென்னையிலும் அமைக்கப்பட்டுள்ளன.

வாரிசு அரசியல் போல வாரிசு நடிகர்களும் உருவாகிறார்கள். ஆனால் திறமை இருப்போரே மக்கள் மனதில் தங்கள் இடத்தைத் தக்க வைத்துக் கொள்கிறார்கள். சினிமா முதலில் நாடகப் பண்புகளோடும் கூறுகளோடும் ( ட்ராமா ஃபிலிம்ஸ் ) படமாக்கப்பட்டதாகவும் அதன் பின் தான் காட்சி பிம்பங்களில் கதை சொல்லும் போக்கு அதிகரித்தாகவும் கூறுகிறார் ஆசிரியர். அதே போல் நீள நீளமான வசனங்கள் கொண்ட படங்கள் ஒரு காலகட்டத்தில் பிரபலமடைந்திருந்தன என்கிறார். போன நூற்றாண்டில் சினிமாவில் சமஸ்க்ருதம் மற்றும் உரைநடை சார்ந்த உரையாடல்கள் பின்னாளில் பேச்சு வழக்கில் எப்படி மாறியது என்பதும் குறிப்பிடப்படுகிறது.

ஆதி காலத்தில் ப்ரேம் மாற்றும்போது அந்த இடைவெளியில் கூத்துக்களும் நடனங்களும் சண்டைகளும் நிகழ்த்தப்பட்டது போல இன்றைய திரைப்படங்களும் அவ்வாறான கூறுகளைக் ( கதைக்குத் தேவையும் சம்பந்தமும் இல்லாமலே நடனம், பாடல், சண்டைக்காட்சிகள் ) கொண்டிருப்பதாகக் கூறுகிறார். பாடல்கள் இல்லாத படங்களைக் கைவிரலில் எண்ணி விடலாம். கர்நாடக சங்கீதம் மேல்தட்டு மக்களின் ரசனையாயிருந்தபோது கிராமியப் பாடல்களும் சினிமாவில் கோலோச்சி இருந்திருக்கின்றன.

கிராமஃபோன் சாதனங்களின் வருகை, நாட்டிய சங்கீதம், ஹிந்துஸ்தானி இசை, குஜராத்தி கிராமிய இசையையும் பார்ஸி மெட்டுகளையும் கொண்ட கலப்பு இசை கொண்டு எப்படி எல்லாம் சினிமா சங்கீதம் தன்னை மெருகேற்றிக் கொண்டது என்று கூறப்பட்டுள்ளது.

500 திரைப்படப் பாடல்கள் எழுதிய பாபநாசம் சிவன், ஒரு படத்தில் நடிக்க ( நந்தனார் ) ஒரு லட்சம் சம்பளம் வாங்கிய கேபி சுந்தராம்பாள், பக்த மீராவாகக் கொள்ளை கொண்ட எம் எஸ், இசை மேதை அசோக் ரானடே , தமிழின் முதல் பெண் எழுத்தாளர் & நாவலாசிரியை வை மு கோதைநாயகி அம்மாள், ஒளிப்பதிவாளர் மீனாக்ஷி ஆகியோர் பிரமிக்க வைக்கின்றார்கள்.

கிட்டத்தட்ட 1897 இல் இருந்து 2016 வரையிலான காலகட்டத்தில் தொடங்கிய ஒன்றேகால் நூற்றாண்டுக்குள் சினிமாவில் ஏற்பட்டிருக்கும் மாற்றம் அளப்பரியது. இன்று டூரிங்க் டாக்கிஸுகளே இல்லை. ஒவ்வொரு ஊரிலும் பேர் சொல்லும்படி இருந்த நாலைந்து தியேட்டர்களும் காத்தாடிக் கொண்டிருக்கின்றன. எல்லாத் தியேட்டர்களும் பராமரிப்பின்றிப் புராதனமாகிவிட்டன வேறு. அதைத் தவிர எல்லாப்படங்களுக்கும் கூட்டம் என்பதே இல்லை. முதல்நாளே ஐம்பது பேரிலிருந்து நூறுபேர் வரை இருந்தாலே அது வெற்றிகரமான ஒன்றுதான். ஒன்றிரண்டு தியேட்டர்களையும் ஷாப்பிங் மாலாகக் கட்டி அதன் ஒரு பகுதி தியேட்டராக உருமாற்றம் கொள்கிறது. ம்யூசிக்கோடு படப் பெட்டி வந்தது போக மிகப் பிரபல ஹீரோக்கள் ஓரிருவரின் படம் வந்தால் மட்டுமே பேனர் கட் அவுட் பாலாபிஷேகத்தோடு படம் நடக்கிறது.

காளிதாஸ், இரு சகோதரர்கள், அம்பிகாபதி, மின்னல்கொடி, ராஜமோஹன், மாத்ரு பூமி, தியாக பூமி, அசோக் குமார், நாம் இருவர், கஞ்சன், வேலைக்காரி, ஏழை படும் பாடு, மந்திரி குமாரி, மர்ம யோகி, பராசக்தி, அந்தமான் கைதி, தேவதாஸ், முதல் தேதி, அலிபாபாவும் 40 திருடர்களும், அமரதீபம், மதுரை வீரன், அவன் அமரன், சிவகங்கைச் சீமை, கல்யாணப் பரிசு, பார்த்திபன் கனவு, பாவமன்னிப்பு, கப்பலோட்டிய தமிழன், சர்வர் சுந்தரம், தில்லானா மோகனாம்பாள், காவல் தெய்வம், எங்கள் தங்கம், வியட்நாம் வீடு, தாகம், ஞான ஒளி, அவளும் பெண்தானே, அன்னக்கிளி, அக்ரஹாரத்தில் கழுதை, சில நேரங்களில் சில மனிதர்கள், அவள் அப்படித்தான், பசி, புதிய வார்ப்புகள், சம்சாரம் அது மின்சாரம், தண்ணீர் தண்ணீர், சிறை, ஊமை விழிகள், நாயகன், வீடு, ஒரே ஒரு கிராமத்திலே, உச்சி வெய்யில் ஆகிய சிறந்த திரைப்படங்களை சீர்தூக்கி விமர்சித்திருக்கிறார்.

அதேபோல் கே எஸ் கோபாலகிருஷ்ணன், எஸ் ஏ சாமி, டி ஆர் சுந்தரம், கே சுப்ரமண்யன், சேரன், எல்லீஸ் ஆர் டங்கன், துரை, ஆர் நடராஜ முதலியார், ஏ பி நாகராஜன், ஏ நாராயணன், ப நீலகண்டன், ஆர் பத்மநாபன், கே பாக்யராஜ், பாரதிராஜா, எஸ். பாலசந்தர், கே. பாலசந்தர், பாலு மகேந்திரா, ஆர். பிரகாசா, பீம்சிங், ஜே. மகேந்திரன், முருகதாசா, டி ஆர் ரகுநாத், கே ராம்நாத், ராஜா சந்திரசேகர், ராஜா சாண்டோ, டி ராஜேந்தர், எஸ் எஸ் வாசன், ஜெயபாரதி, சி.வி. ஸ்ரீதர் ஆகியோரின் வாழ்க்கைச் சரிதமும் அவர்கள் எடுத்த படங்களும் கொடுக்கப்பட்டுள்ளன.

உடுமலை நாராயணகவி, கண்ணதாசன், கம்பதாசன், தஞ்சை ராமையாதாஸ், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், பாபநாசம் சிவன், பாஸ்கரதாஸ், ஏ மருதகாசி, வாலி, வைரமுத்து ஆகிய பாடலாசிரியர்கள் பற்றிய தொகுப்பும் சிறப்பானது. இவற்றில் சிகரம் திரைப்பட வரலாற்றின் மைல்கற்கள்.

மிகச் சிறப்பான இந்நூலைப் படித்ததும் ஒன்றேகால் நூற்றாண்டுக்கான தமிழ் சினிமாவில் உலவி இன்று வரை நீடித்திருக்கும் அதன் வலிமையை உணர்ந்தேன். மிகச் சிறப்பான தொகுப்பு படித்து பாருங்கள் 

நூல்:- பாம்பின் கண். தமிழ் சினிமா ஓர் அறிமுகம்.
ஆசிரியர் :- தியடோர் பாஸ்கரன்
தமிழில்:- லதானந்த்
பதிப்பகம் :- கிழக்கு
விலை:- ரூ. 190/-


5 கருத்துகள் :

KILLERGEE Devakottai சொன்னது…

தங்களின் விமர்சனம் முழுமையாக நாவலைப் படித்த உணர்வைத் தந்தது எவ்வளவு விடயங்கள் இருப்பினும் வாங்கி பாதுகாக்க வேண்டிய நூல்தான் வாங்குவேன் சகோ

கணவன்-மனைவி ஊடல் சண்டை இணைப்பு
http://killergee.blogspot.ae/2016/10/blog-post_24.html

பரிவை சே.குமார் சொன்னது…

Nalla vimarsanam akka

லதானந்த் சொன்னது…

மிகவும் நன்றிங்க

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி கில்லர்ஜி சகோ

நன்றி குமார் சகோ

நன்றி லதானந்த் சார்

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...