எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 25 மார்ச், 2016

சில சருகுகள் துளிர்க்கின்றன.



சில சருகுகள் துளிர்க்கின்றன.

மனோகரமான மாலைப் போதில் சிட்டுக்குருவி ஒன்று தன் குஞ்சுகளுக்கு சத்துணவு கொடுத்துவிட்டு மின்மினிக்களைப் பிடித்துப் போட்டுத் தன் வீட்டுக்கு விளக்குப் போட்டது. இந்த ரம்யத்தை ரசித்துக் கொண்டிருந்த ரம்யா – வெள்ளை வெளேரென்று ஆறடி உயரத்தில் – ஆளை அசரவைக்கும் அழகில் – ஏக்கம் நிறைந்த பெரிய விழிகளுடன் சின்ன மூக்கும் சிரிப்பு மறந்த இதழ்களுமாய் இருப்பவள் – ஹாலில் மாட்டியிருந்த ஜப்பான் கடிகாரத்தில் குயில் வந்து ஐந்துமுறை கூவிவிட்டுப் போனவுடன் திடுக்கிட்டு, ‘ஓ ! நேரமாகி விட்டது. அவர் வந்துடுவார் ‘ என்ற நினைப்பில் அவசர அவசரமாக எழுந்தாள்.

இப்படித்தான் முந்தாநாள் இவளும் வினோத்தும் இவள் அக்கா மகள் சுபாஷிணியின் கல்யாணத்துக்குக் கொடுப்பதற்கு பரிசுப்பொருள் வாங்க ஷாப்பிங்க் போயிருந்த போது எதிரே குட்டியாய் வெள்ளை ரோஜாப்பூ ஒன்று தத்தித் தத்தி நடந்து வர, இவள் ஆசையுடன் போய் அதன் கன்னத்தை லேசாய்த் தொட்டுப் பார்க்க, அது தன் குண்டுக் கண்களால் இவளைப் பார்த்து சிநேகமாய்ச் சிரிக்க, இவள் பரவசத்துடன் அதை வாரிக்கொண்டு கன்னத்தில் முத்தமிட்டு அதன் கையில் சாக்லேட்டுக்களை அடுக்க அது ‘தின்கின்றேன்’ என்று பேர் பண்ணிக்கொண்டு கையில், வாயில் , மூக்கில், கன்னத்தில், அப்பிக்கொண்டு இவள் முகத்திலும் தேய்த்துவிட்டு வாயினுள் போட “டேய் சந்துருக் கண்ணா ! இங்கேயாடா இருக்குற ! படுவாப் பய ! உன்னை எங்கேயெல்லாம் தேடுறது “ என்று கூறிக்கொண்டு அங்கு வந்த ஒரு ஆண் வினோத்தைப் பார்த்ததும் “ஹலோ சார் ! நீங்க எங்க இப்படி ? இவனுக்கு ரெண்டு நாள் கழிச்சுப் பிறந்தநாள். அதுக்காக பாபா சூட் வாங்க வந்தோம். நாங்க ட்ரஸ் தேர்ந்தெடுத்துக்கிட்டு இருக்குறப்ப என் வைஃப் ’என்னங்க சந்துரு எங்கேங்க’ என்றாள். நான் அலறி அடிச்சிக்கிட்டு ஓடி வந்தேன். வந்து பார்த்தா, இப்பத்தான் நிம்மதியா இருக்கு “ என்று கூறினான்.

இவன் அங்கு வந்த விஷயத்தைச் சொன்னதும்,”சார் நீங்க கட்டாயம் இவனோட பிறந்தநாளுக்கு எங்க வீட்டுக்கு வந்து சாப்பிட்டுட்டுப் போகணும். ஸிஸ்டர் நீங்களும் கட்டாயம் வரணும் “ என்று கூறிக் குழந்தையைத் தூக்கிச் சென்று விட்டான்.

இவளுக்கு மனசு மனசாயில்லை. இராத்திரி முழுக்கத் தூக்கத்தில் ”சந்துரு சந்துரு” என்று ஒரே புலம்பல்தான். வினோத் அடிக்கடி எழுந்து “ கண்ணம்மா என்னடா வேண்டும். உடம்பு சரியில்லையா ? “ என்று கேட்டு உடம்பைத் தொட்டுப் பார்த்தான். அவனுக்கு மட்டும் குழந்தை ஆசையில்லையா என்ன ? காலையில் அவனுக்கு வேண்டியதைச் செய்து முடித்து அவனை ஆஃபீசுக்கு அனுப்பிவிட்டுத் திரும்பி வந்த போது தனிமை வந்து வதைக்க மனசு ஆயாசப்பட்டது. படுத்தாலும் தூக்கம் வரவில்லை. 

திருமணம் ஆன புதிதில் அவள் ஆசையாகச் சேர்த்து வைத்த காலண்டர் குழந்தைகள், பத்ரிக்கைகளில் வெளிவந்து வெட்டி வைத்த குழந்தைப் படங்கள், தன் ஆல்பத்தில் சேர்த்து வைத்திருந்த தன் அக்கா, அண்ணன், குழந்தைகள், அவர்களின் பேரக் குழந்தைகள், நாத்தனார்கள், கொழுந்தனார்களின் குழந்தைகள் ஏன் இவர்கள் திருமணத்திற்குப் பிறகு இவளது மாமியாருக்குப் பிறந்த இரண்டு குழந்தைகள் எல்லாம் இவளைச் சுற்றிச் சுற்றி வந்து சுற்றிலும் ஒரே குழந்தைகள் மயமாய்ப் போய் எல்லாம் சித்தி, அத்தை, மாமி, அம்மா என்று புன்னகையுடன் கூப்பிட எதைத் தூக்கிக் கொள்வது என்று இவள் தடுமாறிப்போய் நிற்க குண்டுக் கண்களும், வெள்ளை நிறமும் கொண்ட சந்துரு வந்து , “மம்மி, என்னைத் தூக்கிக்கோ “ என்று கையிரண்டையும் நீட்ட இவள் ஆசையுடன் ஒருவித வெறியுடன் பாய்ந்து அதைத் தூக்கி இருகைகளாலும் அணைத்துப் பிடித்து முத்தமிட, ‘படார்’ என்று அவள் எங்கிருந்தோ கீழே விழுவது போலச் சத்தம் கேட்க விழித்துப் பார்த்தாள் அவள்.

கட்டிலிலிருந்து கீழே விழுந்து கிடந்தாள் அவள்.  முகத்தில் வியர்வை வெள்ளம். மனசு தவித்தது. முழுசாய்ப் பத்து ஆண்டுகள். முதல் மூன்று ஆண்டுகள் பிறகு பிறக்கட்டும் என்று வாழ்க்கையை அனுபவித்தார்கள். நான்காம் ஐந்தாம் ஆண்டுகளில் இதோ பிறந்துவிடும் என்ன இளவயதுதானே என்று சாமாதானம். அடுத்து வந்த ஆண்டுகளில் அனுபவித்ததை விட அழுகைதான் அதிகம். இப்போதெல்லாம் இவளுக்கு சமாதானம் கூறவந்த வினோத்தே இவளுடன் சேர்த்து கண்கலங்கிப் போய் தாளமுடியாமல் சிகரெட்டுகளைப் பாக்கெட் பாக்கெட்டாகப் புகைத்துத் தள்ளி அமைதி பெறவேண்டியவனானான்.

மணமாகி ஆறாம் ஆண்டின் தொடக்கத்தில் ஒவ்வொரு முறையும் தூரமாகும் நாள் நான்குநாள் தள்ளிப் போனால் மனதுக்குள் சந்தோஷப்பட்டுக் கொண்டிருக்க ஐந்தாம் நாள் காலை மூலைக்கு ஒதுங்க நேரிட கண்ணும் மூக்கும் சிவந்து போகுமளவுக்கு அழுது தீர்த்துவிட்டுத்தான் ஓய்வாள்.

ஒரு முறை  45 நாளாகிவிட இவள் அம்மா, வினோத்தின் அம்மாவெல்லாம் பேரனா பேத்தியா என்று குசுகுசுத்துக் கொண்டிருக்க வினோத்துடன் சென்று வைத்தியரிடம் காட்டியதற்கு ”உடம்பில் இரத்தம் குறைஞ்சிருக்கு , உடம்பு பலகீனமா இருக்கு, அதனாலதான் , நத்திங் டு வொர்ரி “, என்று கூறினார். அத்தனை உற்சாகமும் ‘பொசுக்’கென்று வடிந்துவிட்டது. அப்போதே ரம்யாவும் வினோத்தும் உடம்பைப் பரிசோதித்துக் கொண்டதில் இருவரிடமும் குறையில்லை எனத் தெரிய வர ‘சரி, இனி ஆண்டவன் விட்ட வழி’ என்று நினைத்துக் கொண்டு காசி முதல் இராமேஸ்வரம் வரையுள்ள அத்தனை கோயில்களையும் சுற்றி, சந்தான கோபால விக்கிரகங்களை இருவரும் சேர்ந்து வாங்கி குழந்தை பிறக்கவேண்டும் என்று தாலாட்டி, அத்தனை கோயில்களிலும் தொட்டில் கட்டி , அப்பப்பா ! நினைத்தாலே எரிச்சலாய் வந்தது அவளுக்கு.

இவர்களுக்குப் பின் கல்யாணம் செய்து கொண்ட வினோத்தின் தம்பி  ரவிக்குக் கூட வரிசையாய் மூன்று பிறந்துவிட பணத்தில் புரளும் இவள் மாமியார் மாமனாருக்கு ஏக குறை மனதில். இருக்கத்தானே செய்யும். ? அவர்கள் வீட்டில் ஒவ்வொருவருக்கும் ஐந்து குழந்தைகளுக்குக் குறையாமல் பிறந்திருக்கும்போது ?

எல்லா வைபவங்களுக்கும் எல்லாரும் குஞ்சு குவான்களுடன் வந்து கூடியிருக்கும்போது வினோத்தும் ரம்யாவும் தாம் தனித்து நிற்பதாய் உணர ஆரம்பித்தனர். வந்திருக்கும் கிழடு கட்டைகள் எல்லாம் வேலையற்றுப் போய் ஒவ்வொன்றும் ராமலிங்கம் – ”வினோத்தின் அப்பா செய்த புண்ணியமெல்லாம் எவ்வளவு ? ஆனா அவரு மகனுக்கு இப்பிடியா இருக்கணும். ஒரு பூச்சி புழுவைக் கூட இவனுக்குப் பொறக்கக் கொடுத்து வைக்கலையே ” என்று ஆரம்பித்து ஆளுக்கு ஒரு யோசனை சொல்ல, இளைய சமுதாங்களும் அதனை ஆதரித்துப் பேச, அவள் நாத்தனார் “என்ன அண்ணி! வாழ்க்கையை இன்னுமா ரசிக்கிறீங்க. “ சீக்கிரம் எங்க கண்ணனுக்கு ஒரு ராதையைப் பெத்துக் கொடுங்க “ என்று பரிகாசமாகக் கேட்க, இவள் சிரித்துக் கொண்டே  நழுவி விடுவாள். 

அவள் சோறு ஊட்கிறேன்று தன் கொழுந்தனார் குழந்தையைத் தூக்கியபோது கொழுந்தனாரின் மாமியார் வேகமாக வந்து ,” ரம்யா, அவனை இங்கே குடு , நான் ஊட்டுகிறேன் “ என்று கூறி வெடுக்கென்று பிடுங்கிச் சென்று ரவியின் மனைவி நித்யாவிடம் சென்று இவள் கேட்கவில்லை என்று நினைத்து “ஏண்டி நித்தி! உனக்குக் கொஞ்சமாவது இருக்கா.. மலடி கிட்டப் போயி குழந்தைக்குச் சோறு ஊட்டச் சொல்லி விடறியே. குழந்தைக்கு ஏதேனும் ஆயிடப் போகுது “ என்று கூட, இரண்டாம் நாளில் குழந்தைக்கு அனலாய் உடம்பு சுட இவள் பதறிப் போய்த் தனக்கும் குழந்தைக்கும் ராசியில்லை , தான் துக்கிரித்தனம் பிடித்தவள் என்று எண்ணி மருகிப் போனாள். மறுநாள் குழந்தை எழுந்து விளையாட ஆரம்பித்துவிட்டது.

பின்பு தனிமையில் வினோத்துடன் இருக்கும்போது வினோதிடம் எல்லாவற்றையும் கூறி, “ எனக்கு இப்பவே ஒரு குழந்தை வேணுங்க. ! என் குழந்தை எனக்கு மட்டுமே. நான் மட்டுமே கொஞ்ச உரிமையாய் எல்லாம் செய்ய என் வயிற்றில் உங்க குழந்தை வேணுங்க “ என்று கதறிக்கொண்டே அவனை அணைத்துக் கொண்டு அழ, அவன் அவளைத் தேற்ற வழி தெரியாமல் அதிர்ந்துபோய் அமர்ந்திருந்தான். அதிலிருந்து ஆரம்பித்ததுதான் இந்த சிகரெட் பிடிக்கும் பழக்கம். இது இப்போது அவளுக்கும் தெரிந்துவிட்டதால் அவனிடம் குழந்தையைப் பற்றி ரொம்பப் பேசுவதில்லை.

இனிப் பிறக்கும் என்ற நம்பிக்கையற்றுப் போய் ஒரு வீட்டுக்குள் இரண்டு ஜீவன்கள் ஒன்றிற்கொன்று குழந்தையாய் வாழ்ந்துகொண்டு வரும் நேரத்தில் சந்துரு ஒரு மனப் போராட்டத்தைக் கிளப்பிவிட்டுச் சென்றுவிட்டான். ரம்யாவுக்கு மனசு வலித்தது. இன்று சந்துருவுக்குப் பிறந்தநாள். இவள் விரும்பாவிட்டாலும் வினோத் கட்டாயம் அந்தக் குழந்தையைப் பார்க்க வேண்டியே இவளை இழுத்துச் சென்று விடுவான். காலையிலேயே ஆஃபீஸ் போனதும் முதல் வேலையாய் ஃபோன் பண்ணி ஞாபகப்படுத்தித் தயாராக இருக்கச் சொல்லியிருந்தான். 

எல்லாவற்றையும் மனம் நினைத்துக் கொண்டே இருக்க கைகளை இயந்திரப்படுத்தி டிஃபன் பண்ணி, காஃபி போட்டு முகம் கழுவித் தலை வாரிப் பொட்டு வைத்து ப்ளூ கலர் பட்டுச் சேலையும் ப்ளூ கலர் கல் வைத்த நகைகளையும் அணிந்துகொண்டு, வினோத் வந்ததும் டிஃபன் காஃபி கொடுத்து அவனையும் ப்ளூ சூட் அணியச் செய்து, குழந்தைக்குப் பரிசாகக் கொடுக்க மஸ்டர்ட் கலர் சிங்கப்பூர் பாபா சூட்டும், டமாரம் கொட்டும் கரடிப் பொம்மை, கழுத்தில் மணியை அசைத்துக் கண்ணை மட்டும் உருட்டும் பூனைப் பொம்மை, சைக்கிள் ஓட்டும் முயல்குட்டி, தத்திச் செல்லும் தவளை, டான்ஸ் ஆடும் யானை, என்று ஒரு கூடை நிறைய பொம்மைப் பார்சல்கள். பாரக்ஸ் ஒரு சின்ன டப்பா, தொட்டிலின் மேல் மாட்டித் தொங்கவிடும் கிண் கிணி என்று சத்தமிடும் குருவிக்கூடு, என்று ஒரு மூட்டையைக் கட்டிக்கொண்டு சந்துருவைப் பார்க்கச் சென்றால், அங்கு குழந்தை வாடிய ரோஜாப்பூவாய் கட்டிலில் கிடக்க, சந்துருவின் அப்பா, ரமேஷ் முந்தாநாள் ராத்திரிலேருந்து இப்படித்தான் ஜூரமாய் இருக்கின்றான் என்று கூற அவன் மனைவி சரசுவும் ஆமாங்க என்று கூற, கொஞ்ச நேரம் இருந்து மனச்சுமையுடன் ஆசையுடன் வாங்கிய பரிசுப் பொருட்களைக் கண்ணீருடன் கொடுத்துவிட்டு வீடு சேர்ந்ததுதான் தாமதம். “என் கரிக்கை பட்டதுதான் இதுக்கெல்லாம் காரணம். “ என மனத்தில் அடிக்கடி நினைத்து நினைத்து அதனால் பாதிக்கப்பட்டு வினோத்தையும் தூங்கவிடாமல் நிம்மதியாக இருக்க விடாமல் அடித்துக் கொண்டிருந்தாள் ரம்யா.

இரண்டு மாதம் சென்றிருக்கும். ஒரு நாள் காலை எழுந்தவுடன் வினோத்தைப் பிடித்துக் கொண்டு “ எனக்கு மயக்கமாய் வருதுங்க. தலை சுத்துது. வாந்தியாய் வருது “ என்று கூற வினோத் அலறி அடித்துக் கொண்டு டாக்டருக்குப் ஃபோன் பண்ண அவர் வந்து பரிசோதித்துவிட்டு, இவன் பக்கம் திரும்பி “ கன்கிராஜுலேஷன்ஸ் ! ஸ்வீட் கொடுங்க வினோத் ! நீங்க அப்பாவா ஆகப்போறீங்க !” என்க, இவனும் ரம்யாவும் வாயடைத்துப் போய், என்ன சொல்வதென்று திகைத்துப் போய், “ எங்களுக்கா, குழந்தையா “ என்று சந்தோஷித்துக் காண்பது கனவா நனவாவென்று யோசித்து , நனவுதான் என்று புரிபட்டபின்பு இந்த விஷயத்தை வினோத் ரம்யா அம்மாக்களிடம் சொல்ல ஒரு வாரம் கழித்து சுபாஷிணியின் கல்யாணத்துக்கு ஊர் போக முடிவு செய்தார்கள்.

சந்துருவுக்குக் காய்ச்சல் சரியாகி ஒரு மாதமாய் ப்ளே ஸ்கூல் சென்று வருகிறானாம். அவனைத் தூக்கிக் கொண்டு ரமேஷும் சரசுவும் இன்று மாலை வருவதாக வினோத் ஃபோன் பண்ணிச் சொல்ல வயிற்றுக்குள் இருந்த சின்ன வினோத் தன் அம்மாவைச் செல்லமாக முட்ட, ரம்யா “ம்மா” என்று இன்பத்துடன் முனகினாள்.

-- 85 ஆம் வருட டைரி. 



9 கருத்துகள்:

  1. நெஞ்சை உருக வைத்தகதை. ஆங்காங்கே உணர்வுபூர்வமான எழுத்துநடை. கடைசியில் சுப முடிவு கொடுத்துள்ளதில், ரம்யா+வினோத் போல் எனக்குள்ளும் ஓர் மகிழ்ச்சி. பாராட்டுகள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

    நானும் பெண்களுக்கான இதே பிரச்சனைகளை என் ஒருசில கதைகளில் வேவ்வேறுவிதமான முடிவுகள் கொடுத்து எழுதியுள்ளேன். நினைவுக்கு வரும் சிலவற்றிற்க்கான இணைப்புகள் இதோ:

    http://gopu1949.blogspot.in/2014/03/vgk-11.html நாவினால் சுட்ட வடு

    http://gopu1949.blogspot.in/2014/03/vgk-09.html அஞ்சலை

    http://gopu1949.blogspot.in/2014/06/vgk-24.html தாயுமானவள்

    பதிலளிநீக்கு
  2. நெஞ்சை உருக வைத்தகதை. ஆங்காங்கே உணர்வுபூர்வமான எழுத்துநடை. கடைசியில் சுப முடிவு கொடுத்துள்ளதில், ரம்யா+வினோத் போல் எனக்குள்ளும் ஓர் மகிழ்ச்சி. பாராட்டுகள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

    நானும் பெண்களுக்கான இதே பிரச்சனைகளை என் ஒருசில கதைகளில் வேவ்வேறுவிதமான முடிவுகள் கொடுத்து எழுதியுள்ளேன். நினைவுக்கு வரும் சிலவற்றிற்க்கான இணைப்புகள் இதோ:

    http://gopu1949.blogspot.in/2014/03/vgk-11.html நாவினால் சுட்ட வடு

    http://gopu1949.blogspot.in/2014/03/vgk-09.html அஞ்சலை

    http://gopu1949.blogspot.in/2014/06/vgk-24.html தாயுமானவள்

    பதிலளிநீக்கு
  3. அற்புதமான கதை
    துவங்கி சொல்லிப் போன விதமும்
    முடித்த விதமும் அருமை
    மிகக் குறிப்பாக கதையின் தலைப்பு மிக மிக அருமை
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  4. //ஏன் இவர்கள் திருமணத்திற்குப் பிறகு இவளது மாமியாருக்குப் பிறந்த இரண்டு குழந்தைகள்//

    ஐயோ...!

    சுப முடிவு!

    பதிலளிநீக்கு
  5. அருமையான அற்புதமான கதை அக்கா...
    கலக்கல்.

    பதிலளிநீக்கு
  6. ஸ்ரீராம். சொன்னது… //ஏன் இவர்கள் திருமணத்திற்குப் பிறகு இவளது மாமியாருக்குப் பிறந்த இரண்டு குழந்தைகள்//

    இந்த இடம்தான் நம் ஹனி மேடம் ஓர் மிகச்சிறந்த எழுத்தாளர் என்பதை நிரூபிப்பதாக உள்ளது. நான் இதனை வெகுவாக ரஸித்தேன். ஆனாலும் அதனைக் குறிப்பிட்டு நான் சொல்லவில்லை. இதெல்லாம் அந்தக்காலத்தில் (ஒரு 50-60 ஆண்டுகளுக்கு முன்) வெகு சகஜம், ஸ்ரீராம்.

    இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்தபிறகே, கணவன் மனைவி இஷ்டப்படி ஜாலியாக இருந்து அடுத்தடுத்து குழந்தைகள் பெற்றுக்கொள்ளும் சுதந்திரம் பறி போய்விட்டது. :(

    இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்தபிறகு பிறந்துள்ள என்னையும் இது வெகுவாக பாதித்து விட்டதாக்கும். :(

    பதிலளிநீக்கு
  7. நிச்சயம் பார்க்கிறேன் விஜிகே சார் :)

    ஸ்ரீராம் முக்கிய விஷயம் கண்ணுல பட்டிருச்சே :) ஹாஹா நன்றி :)

    நன்றி குமார் தம்பு :)

    அஹா விஜிகே சார் :) அந்த வயதில் அப்போதிருந்த சூழலைப் பதிவு செய்தேன். அவ்வளவே :) நன்றி சார் .:) வாழ்க சுதந்திரம். அப்பாடா நாமள்ளாம் தப்பிச்சோம். :) நமக்குத் திருமணம் ஆனபின்னாடி தம்பி தங்கையா .. ஐயகோ :) ஹாஹா.

    பதிலளிநீக்கு
  8. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு
  9. /ஏன் இவர்கள் திருமணத்திற்குப் பிறகு இவளது மாமியாருக்குப் பிறந்த இரண்டு குழந்தைகள்// அட!! எங்கள் பாட்டி காலத்தில் உண்டு இது. என் மாமாவை விடச் சின்னவர் அவரது சித்தி - அம்மாவின் தங்கை!!! ...85 ல நீங்க எழுதினது இல்லையா...அருமை சகோ. அப்போவே தேர்ந்த எழுத்தாளராக உருவெடுக்கத் தொடங்கியிருப்பது தெரிகின்றது...முடிவு நல்லதாக முடிந்திருப்பது உட்பட எல்லாம் அருமை...

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...