காரைக்குடிச் சொல்வழக்கு:-
பச்சநத்தமும் தொருதொருத்தபழமும்.
1081. குருவ அரிசி – குறுவை அரிசி , சிவப்பரிசி, (பாயாசம், பணியாரம்,
கொழுக்கட்டை செய்யப் பயன்படுவது).
1082. அள்ளுபிடி முள்ளுபிடி – ஒரு
பாத்திரத்தில் அரிசி பருப்பு வகையறாக்களை சமையலுக்கு அளந்து போடும் முன்பு முதலில்
ஒரு கைப்பிடி அள்ளிப் போட்டுவிட்டு ( வெறும் பாத்திரத்தில் அளக்கக் கூடாதாம் அதனால்
) அதன் பின் தேவையானதை உழக்கில் அளந்து
போடுவார்கள். இது அள்ளு பிடி. அளந்து போட்டு முடித்ததும் கடைசியாக ஓரிரு கைப்பிடி
போடுவது உண்டு. அல்லது குறைந்த அளவில் மிச்சமிருக்கும் தானியங்களை அதிலேயே
போட்டுவிடுவார்கள். அதற்கு முள்ளுபிடி என்று பெயர்.
சிலர் அளக்கும்போதே உழக்கு அல்லது
படியில் கோபுரமாக நன்கு அமுக்கி அதன் பின்னும் அதிகமாக அந்த கோபுரத்தில் தானியத்தை
அமுக்கிப் பிடித்து அளந்து போடுவார்கள் . இதற்கு முள்ளுபிடி என்றும் பெயர்.
1083. பெரும்போட்டுப் புள்ள –
உடலில் எலும்பு பெரிதாக அமைந்து பார்க்க (ஜைஜாண்டிக்காக ) ஈடு தாடாக இருப்பவர்களை
பெரும்போட்டுப் பிள்ளை என்பார்கள். இவர்கள் எவ்வளவு மெலிந்தாலும் மெலிந்தது போல்
தெரியாது. சதை குறைவாகவும் உடலில் எலும்பின் அடர்த்தி அதிகமாக அமைந்தும்
உள்ளவர்கள்தான் பெரும்போட்டுப் பிள்ளைகள். இவர்கள் அளவில் பெரிதாக இருப்பதால்
உண்பதும் அதிகமாக இருக்கும். அதே சமயம் அடுத்தவர்க்குக் கொடுப்பதும் ( ஈதல் ) நன்கு கொடுப்பார்கள். எனவே அவர்களைப்
பெரும்போடு என்று சொல்வதுண்டு.
1084. சவலப்புள்ள – ஒரு பிள்ளை
கையில் இருக்கும்போதே அடுத்து ஒரு பிள்ளை பிறந்தால் மூத்த பிள்ளை சவலைப்
பிள்ளையாகிவிடும். ஏனெனில் இதற்குக் கிடைக்கவேண்டிய கவனிப்புப் பூரா சின்னப்
பிள்ளைக்குக் கிடைப்பதால் இது எப்போதும் தாயின் அண்மைக்கும் பாசத்துக்கும்
கவனிப்புக்கும் ஏங்கிக் கொண்டே இருக்கும். அதனால் சவலை தட்டி மெலிந்து போய் என்ன
கொடுத்தாலும் தேறாமல் இருக்கும்.


