திரையுலக பிரம்மா டைரக்டர்களின் டைரக்டர் ஸ்ரீதர்
இத்தாலியின் ட்ரிவி ஃபவுண்டனுக்கும் கொலோசியத்துக்கும் போனபோது கூட நாங்கள் ரொம்ப ஆர்ப்பரிக்கவில்லை. ஆனால் டிட்லிஸ் சிகரத்துக்குப் போனவுடன் டூர் கைடைத் துளைத்தெடுத்து விட்டோம், “ ஆல்ப்ஸ் மலை எது என்று ?” ”அதன் ஒரு சிகரத்தில்தான் நீங்க இப்போ காலடி எடுத்து வைச்சிருக்கீங்க” என்றார் கைட். அட ! என்று வெள்ளிய மேகம் அள்ளி வழங்கிய வெள்ளைப் பூக்களில் துள்ளிக் குதித்தோம். பின்னே ”ஒரு ராஜா ராணியிடம்” என்று சிவந்த மண்ணில் சிவாஜி காஞ்சனாவைப் பார்த்துப் பாடிய பாட்டில் நாங்கள் இதை எல்லாம் குழந்தைப் பருவத்திலேயே பார்த்திருந்தோமே. அப்பேர்ப்பட்ட சினிமா சரித்திரத்தில் இடம்பெற்ற இடத்தில் காலடி வைத்தது எங்களுக்கு நிலவில் இறங்கியது போலிருந்தது. ( பனியின் அடர்த்தியும் காரணம் J
தனவணிகனில் சினிமா கட்டுரைகள் எழுதிக் கொண்டிருக்கும் எனக்கு சிறு பிள்ளையில் சினிமா என்றாலே பயம். வீட்டில் அனைவரும் லெக்ஷ்மி அக்கா வீட்டில் விட்டுச் சென்றுவிட அந்த அக்காவோ என்னை ஒரு சினிமாவுக்குத்தான் கூட்டிச் சென்றார். “ நேத்துப் பூத்தாளே ரோஜா மொட்டு” என்று திரையில் எம் ஜி ஆர் பாட என் விழிகளோ கண்ணீரில் கதை எழுதிக் கொண்டிருந்தன. அதற்குச் சில ஆண்டுகளுக்குப் பின் ”பனிவிழும் மலர்வனம் உன் பார்வை ஒரு வரம்” என் பருவ வயதில் என்னை நனைத்தது. என் கணவரோ அவரது இளமைப் பருவத்தில் “ ஒரே நாள் உனை நான் நிலாவில் பார்த்தது” என்ற பாடலில் மயங்கியதாகச் சொல்வார். 85 களில் எங்கள் கல்லூரிக் காலத்தில் என் சின்ன மாமா சிதம்பரம் அண்ணாமலை நகரில் தினம் தினம் பார்த்து மகிழ்ந்த படம் ”தென்றலே என்னைத் தொடு”. நன்குபுரிந்த ஒரு விஷயம் என்னெவென்றால் நாங்கள் அனைவரும் வயசு வித்யாசமில்லாமல் ஸ்ரீதரின் படங்களோடு வாழ்ந்திருக்கிறோம்.
