எனது படைப்புகளைப் பற்றி எழுத்தாளர் திரு. துரை.அறிவழகன் அவர்களின் பார்வை.
///அன்புள்ள தேனம்மை அவர்களுக்கு,
வணக்கம்.
தங்கள் எழுத்துக்களை வாசித்த வரையிலான கருத்துக்களை பகிர்ந்து கொள்கிறேன்.
ஆராவமுதனும் ஆதித்யாவும் ஆத்திச்சூடிக் கதைகளும் : குழந்தைகளின் கதை கேட்கும் ஆர்வத்தைப் புரிந்து ஆத்திச்சூடி அறநெறியை கதைவடிவில் குழந்தைகளுக்காகப் படைத்துள்ளீர்கள். மாத்திரையை தேனில் குழைத்துக் கொடுக்கும் குழந்தை வளர்ப்பு, பெண் என்பதையும் தாண்டி இலக்கிய வடிவில் இயங்கும் தன்மை சிறப்பு. குழந்தைகளின் உரையாடல் அவர்கள் மொழியிலேயே அமைந்துள்ளது. குறையெனப்படுவது சில எளிய தமிழ் வார்த்தைகளுக்கு ஆங்கில பதத்தை உபயோகித்து இருப்பது.
மற்றொருஇடறல் நீதிக்கதைகளை குழந்தைகள் விரும்பிக் கேட்பார்களா? என்பது. குழந்தைகள் உலகம் அதீத புனைவையே விரும்பும் என கருதுகிறேன். பாட நூல் வகைமையைச் சேர்ந்த எழுத்தாக இருப்பது என்கிற பார்வையில் இக்கதைகள் சிறப்பு. பாட நூல் கருத்தாக்கங்களையும், விழுமியங்களையும் விலகிய குழந்தைகளின் கற்பனையைச் சிறகடிக்கச்செய்யும் கதைகளை எழுதினால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்பது என் கருத்து.
காரைக்குடியின் புகழ் கம்பன் விழா குறித்த நினைவுப் பதிவு ஒரு ஆவணம். வானம்பாடி கவிஞர் வந்திருந்தது சிற்ப்புச் செய்தி. சின்மயா மிஷன் தவத்திரு இராமகிருஷ்ணானந்தா அவர்களின் பாரடைஸ் லாஸ்ட், பாரடைஸ் ரிடர்ன் போன்றது அகலிகை வரலாறு எனும் பார்வையும் பிற தகவல்களும் புதுமை. இப்படியான பதிவுகளின் வழிதான் நினைவு ரேகைகளை கடத்த முடியும். புதுப்பித்துக் கொள்ள முடியும். எனக்குள் கடத்தியதற்கு நன்றி. பதினைந்து வருட காரைக்குடியுடனான அறுபட்ட உறவை இட்டு நிரப்பியதற்கு நன்றி.
தங்களிடம் காட்சிகளை நேர்த்தியாக பதிவிடும் திறன் உள்ளது. பயண கட்டுரைகள், தங்களை சுற்றி நிகழும் நிகழ்வுகள் என எல்லாவற்றிலும் அதைக் காண முடிகிறது. கம்பன் விழா நிகழ்வுகள் விரிவான் பதிவுகளாக உங்களிடம் உள்ளது. 'கம்பன்' நாட்டரசன் கோட்டையில் கழித்த இறுதி நாட்கள் குறித்த தகவல் திரட்டோடு கம்பன் குறித்த விரிவான நூல் ஒன்றை உங்களால் தரமுடியும்.
'நீல பதமநாபனின்' - 'தலைமுறைககள்' நாவல் போல் நகரத்தார் குடும்ப ஆசாரங்கள், கட்டுப்பாடுகள், நம்பிக்கைகள், சம்பிரதாயங்கள் ஆகியவற்றின் பின்னணியில் ஒரு படைப்பை தங்களாலும் படைக்க முடியும். இந்த வட்டார இலக்கிய வெளிக்கு கிடைத்த கொடை நீங்கள். அடர்த்தியான எழுத்தைப் படைப்பதில் தங்களை குவிமையப்படுத்திக் கொள்ளவும்.
பிற பின்.
அன்புடன்,
துரை. அறிவழகன்,
01-09-2020///
டிஸ்கி: 2020 இல் அவர் கூறியதை சோகி சிவா என்ற நாவலிலும், செட்டிநாட்டுப் பெண்களின் கதைகள் என்ற சிறுகதைத் தொகுப்பிலும் ஓரளவு நிறைவேற்றி உள்ளேன் என நினைக்கிறேன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)