கும்மிப் பாட்டு
கும்மியடி செட்டிநாடு முழுவதும்
சீரோங்கித் தழைத்திடக் கும்மியடி
நம்மைப் பிடித்த தீமைகள் ஓடின
நன்மை கண்டோமென்று கும்மியடி
படைப்புப் பள்ளயம் பூசை என்றால்
நம் பிள்ளைகளோடு வந்திடுவோம்.
நம் பாரம்பரிய விஷயங்களை
பண்பாக அன்பாகப் புகட்டிடுவோம்
பெரியோரை வணங்கப் பழக்கிடுவோம்
சிறியோரையும் மதிக்கக் கற்பிப்போம்
படிப்பு வேலை என்றே வாழாமல்
உற்ற உறவினரோடும் கலந்திருப்போம்.
கோயில் கல்விக்கெனப் பணி செய்தோம்
கொண்டுவிக்கப் போய்ப் பொருள் செய்தோம்
கட்டுச் செட்டாய் வாழ்ந்து செட்டி மக்கள் நாம்
கெட்டி மக்கள் என்றே புகழ் பெற்றோம்
அரசும் ஆத்தாப் பொண்ணும் நம் ஆஸ்தி
அவர்கள் வாழ்வதுதானே நம் பெருமை
வீட்டுக்கு வாழ வந்த மக்களை
மறு மக்கள் என்றே போற்றிடுவோம்.
உருவத்தைப் பார்த்து ஒதுக்காமல்
உள்ளத்தைப் பார்த்து நேசிப்போம்.
திருமணத் தடைகளை நீக்கிடுவோம்
தீர்ப்புக்களை நாம் மாற்றி வைப்போம்.
திருமணம் என்பது இருமனமும்
இணைந்து முடிவெடுக்கும் செயலாகும்
இணையர்கள் வாழவே பெற்றோர்கள்
பக்கமிருந்து கை கொடுப்போம்.
பணத்தைப் பெரிதென்று கருதாமல்
கொண்ட குணத்தைப் பெரிதும் போற்றிடுவோம்
அன்பும் பண்பும் முன் நின்றால்
எந்தக் குறையும் குற்றமும் தெரியாது.
பணமும் வாழ்க்கைக்குத் தேவைதான்
பணமே வாழ்க்கை இல்லையடி
மனதுக்குள் அன்பை நிரப்பி வைப்போம்
மன்னித்து மக்களைச் சேர்த்து வைப்போம்.
வயதும் கூடிக்கொண்டே செல்லுதடி
வாயில் வந்த வரனெல்லாம் தள்ளாதே
நல்ல மனிதரே அனைவரும்
நல்ல பக்குவமான முடிவை எடு
ஜோசியக் கட்டமே வாழ்க்கையென
பன்னிரெண்டு கட்டத்தில் தொலைத்துவிட்டார்.
இந்த ஊர் வேண்டாம் அந்த ஊர் வேண்டாமென
வந்த வரனையும் துரத்தி விட்டார்
இருபதில் ஆச்சு அப்போதெல்லாம் மணம்
இருபத்தி ஐந்தில் இரு குழந்தை.
முப்பத்தி ஐந்து பெண் வயது
நாப்பதில் நிற்கின்றார்கள் ஆண்மகன்கள்.
ஏக்கத்தில் வாழும் மணமகன்கள்
ஏக்கம் தீர்க்கவே மணம் புரிவாய்
உரிய பருவத்தில் ஒரு பிள்ளை
உள்ளம் மகிழவே பெற்றெடுப்பாய்.
அண்ணன் தம்பிமார் வாழ்க்கையைப் பார்
அண்ணியார் சௌக்கியமாய் இருக்கின்றார்.
எள் என்று அண்ணி சொல்லுமுன்னே அண்ணன்
எல்லா ஏவலும் புரிந்து காக்கின்றார்.
உனக்கும் நல் வாழ்க்கை காத்திருக்கு
உள்ளம் குளிரவே பூத்திருக்கு
ஆவணி மாதத்தில் ஆனிப் பொன்னே நீயும்
அற்புதமான முடிவை எடு.
இருவரும் இணைந்தொரு புள்ளியாவீர்
இல்லறக் கோலத்தில் பிள்ளைப்பூ பெறுவீர்
நல்லறம் கொண்ட நகரத்தார் மக்கள்
நாமென்று உலகுக்குக் காட்டிடுவோம்
சமுதாயத் தொண்டையும் முன்னெடுப்போம்
நல்சமுதாயம் நாமெனக் காட்டிடுவோம்
உள்ளம் மகிழவும் இல்லம் மகிழவும்
ஒற்றுமையோடு கரம் கோர்ப்போம்.
- சேலம் நகரத்தார் சங்க ஆண்டு விழாவில் பாடி ஆடுவதற்காகக் கேட்டதால் எழுதி அனுப்பப்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)