மாண்புமிகு ஆச்சி அலமேலு
திருமதி அலமேலு அவர்கள் ஆறாவயல் மஞ்சி வீட்டில் பிறந்தவர்கள். தந்தை வேதாசலம் செட்டியார். தாயார் கனகாம்பாள் ஆச்சி. இவர்களுடன் கூடப்பிறந்தவர்கள் எட்டுப் பேர். ஐந்து சகோதரிகள், மூன்று சகோதரர்கள். இவரைத் திருமணம் செய்து கொடுத்த ஊர் தேவகோட்டை. இவருக்கு இரண்டு மகள்களும் ஒரு மகனும் இருக்கிறார்கள். இவர் அம்பத்தூரில் வசித்து வருகிறார். தமிழாசிரியையாகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றுப் பட்டிமன்றங்களிலும் உரையாற்றி வருகிறார். பல்வேறு விருதுகள் பெற்ற இவர் சமீபத்தில் மாண்புமிகு ஆச்சி விருது வாங்கினார். இவரின் இளமைப்பருவம், ஆசிரியப்பணி, இலக்கியப் பணி குறித்துக் கேட்டபோது அவர் கூறியவற்றை அப்படியே தருகிறேன்.
”தேனினும் இனிய செந்தமிழ்” மொழியைக் கற்றதனால் பல பெருமைகளைப் பெற்ற அடியேன் பிறந்தது ஆறாவயல் என்ற சண்முகநாதபுரத்தில். வேதாசலம் செட்டியார், கனகாம்பாள் ஆச்சியின் மகளாகப் பிறந்தேன். நாங்கள் ஒன்பது பேர் உடன்பிறப்புக்கள். ஆண்மக்கள் மூவர். பெண்மக்கள் அறுவர். பெற்ற மக்கள் அனைவரையும் சிறந்த முறையில் நன்கு வளர்த்து ஆளாக்கி உரிய வயதில் திருமணமும் செய்து வைத்தனர் பெற்றோர்.
நான் பள்ளிக்கல்வி பயின்றது ஆறாவயலில். உயர்நிலைக் கல்வி காரைக்குடி மீனாக்ஷி பெண்கள் பள்ளியில் பயின்றேன். பின் காரைக்குடி இராமசாமி தமிழ்க்கல்லூரியில் நான்காண்டுகள் பயின்று புலவர் பட்டம் பெற்றேன். அதன் பின் சென்னை சீமாட்டி வெலிங்டன் பயிற்சிக் கல்லூரியில் தமிழாசிரியர் பயிற்சி படித்து முடித்தேன்.
பிறகு தேவகோட்டையில் கட்டிக் கொடுத்தார்கள். உடனே சென்னை அம்பத்தூரில் உள்ள அ.மு.மு. அறக்கட்டளையைச் சேர்ந்த இராமசாமி முதலியார் மேல்நிலைப் பள்ளியில் தமிழாசிரியை வேலை கிடைத்தது. தொடர்ந்து முப்பத்தி ஐந்து ஆண்டுகள் பணியாற்றி பணி ஓய்வு பெற்று விட்டேன்.
எனக்கு இயல்பாகவே தமிழ் மொழி மீது தீராத காதல் உண்டு.எனவே இலக்கிய மேடைகளில் இடம் கிடைத்தது. அம்பத்தூர் கம்பன் கழகம், இலக்கியப் பேரவை போன்றவற்றில் இன்றும் பங்காற்றி வருகிறேன். படிக்கின்ற காலத்தில் தமிழ்க்கடல் திரு. இராய. சொ. அவர்களால் மேடையேற்றப்பட்ட நான் இன்றும் தொடர்ந்து தொண்டாற்றி வருகிறேன்.
நகரத்தார் மன்றங்கள் பலவும் தொடர்ந்து என்னை மேடையேற்றுவார்கள். இதனால் பல விருதுகள் கிடைத்துள்ளன. இலக்கிய மேடைகள், பட்டிமண்டபங்கள் போன்றவற்றில் பங்கேற்றமையால் ”உவமைக் கவிஞர் திரு. சுரதா” அவர்களால் விருது வழங்கிப் பெருமை பெற்றேன். ”செந்தமிழ் அரசி” என்ற விருதைக் கவிஞர் கரங்களால் பெற்றமைக்கு மகிழ்கிறேன். 2019 இல் நடைபெற்ற உலக நகரத்தார் மகளிர் மாநாட்டில் நகரத்தார் மலர் திரு இளங்கோவன் அண்ணன் அவர்களால் “மாண்புமிகு ஆச்சி” விருது பெற்று மகிழ்ந்தேன். தமிழால் வளர்ந்தேன். வாழ்கிறேன்.
வாழ்க தமிழ்! வளர்க தமிழ்!! வெல்க தமிழ்!!”
தமிழ் படித்ததனால் சிறந்தேன் என்று கூறிய உங்கள் வார்த்தைகளுக்குச்
சிரம் தாழ்த்தி வணங்குகிறேன் மாண்பமை அலமேலு ஆச்சி அவர்களே. வாழ்க தமிழ்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)