அந்நியன் விக்ரம்
மாலை என் வேதனை கூட்டுதடி, காதல் தன் வேலையைக் காட்டுதடி, வீசும் காற்றுக்கு என்னைப் புரியாதா, என்றெல்லாம் மென்மையாக மெலோடியில் கவர்ந்தவர் விக்ரம். சீயான், கென்னி என்றழைக்கப்படும் விக்ரம் நடிப்பு அசுரன். கதாபாத்திரத்துக்கு ஏற்றபடி தலைமுடி, தோற்றமனைத்தையும் மாற்றிக் கொள்வார். நடிப்புலகில் கமலுக்கு அடுத்தபடியாகத் தன்னை மெருகேற்றிக் கொண்டவர்.
வசீகரக் கண்கள் காதலில் மென்மையாகும் அதே சமயம் க்ரோதத்தில் ஜொலிக்கும்,உருளும். நடுத்தர உயரம், அளவான தலை முடி, சிரிக்கும் போது ஏற்படும் கன்னக்குழி எல்லாம் இவருக்குப் ப்ளஸ் பாயிண்ட். எந்தப் பாத்திரமானாலும் அதற்கேற்ற பாடி லாங்க்வேஜ் இவரின் ஸ்பெஷாலிட்டி.
விக்ரம் 1966 ஏப்ரல் 17 அன்று பிறந்தார். தந்தை வினோத்ராஜ், தாய் ராஜேஸ்வரி. மகன் துருவ் விக்ரமும் தந்தை வினோத் ராஜும் கூட நடிகர்கள்தான். விக்ரம் 1988 முதல் நடிப்புத்துறையில் இருக்கிறார். சேதுதான் இவருக்குத் திருப்புமுனையாக அமைந்த படம்.
1988 இல் கே பி இயக்கிய கலாட்டா குடும்பம் என்ற டிவி தொடரில் நடிக்க ஆரம்பித்தார். அதன் பின் இயக்குநர் ஸ்ரீதரின் அறிமுகத்தில் என் காதல் கண்மணி என்ற திரைப்படத்தில் 1990 இல் அறிமுகம். அத்துடன் அவரது தந்துவிட்டேன் என்னை படத்திலும் நடித்தார். பொறுமையுடன் பல்லாண்டுகளாக மெல்ல மெல்லத் தன்னை உருவாக்கிக் கொண்டவர் இவர். ஆரம்பத்தில் விளம்பரங்களில் கூட நடித்துள்ளார்.
வணிக மேலாண்மை படித்தவர். பின்னணிப் பாடகர் மற்றும் டப்பிங் ஆர்டிஸ்டாகவும் திறம்படச் செயலாற்றி இருக்கிறார். அஜித், வினீத், பிரபுதேவா, அப்பாஸ், ஆகியோருக்குப் பின்னணிக் குரலும் கொடுத்திருக்கிறார். பன்னிரெண்டுக்கும் மேற்பட்ட திரையிசைப் பாடல்களையும் (ஓ போடு ) பாடி இருக்கிறார். தனக்கான காலத்துக்காகக் காத்திருந்த இவர் வாய்ப்புக் கிடைத்ததும் மீரா, சேது, தில், ஜெமினி, தூள், சாமி, காசி, பிதாமகன், காதல் சடுகுடு, சாமுராய், கிங், அந்நியன், இராவணன், பொன்னியின் செல்வன் எனப் பல படங்களில் நடித்துள்ளார்.
சேதுவில் மனநலம் பாதிக்கப்பட்டவராகவும், காசியில் கண்பார்வை அற்றவராகவும், பிதாமகனில் வெட்டியானாகவும், அந்நியனில் ஆல்டர் ஈகோ பர்சனாலிட்டியாகவும் சிறப்பாகச் செய்தார். சேதுவில் சிக்காத சிட்டொன்று கையில் வந்தால் பாடலில்தான் இவர் சீயானாகக் குறிப்பிடப்பட்டு இருப்பார். நடன அமைப்பிலும் இளமை பொங்கும் துள்ளல் பாடல் அது. எங்கே செல்லும் இந்தப் பாதை என மனமெங்கும் துக்கத்தை விளைவித்த பாடலும் உண்டு.
காலாவதி மருந்துகளால் சிலர் இறக்க நேரிடும்போது அதைச் சந்தையில் புழங்கவிட்டிருக்கும் அரசியல்வாதிகளைக் கடத்தும் கதை சாமுராய். அநீதியைச் சாடும் சாமுராயின் ஆரம்பப் பாடலான ”மூங்கில்காடுகளே.. அவ்வளவு மென்மையானது.
உனக்கென உனக்கெனப் பிறந்தேனே, உயிர் என உணர்வெனக் கலந்தேனே என விண்ணுக்கும் மண்ணுக்குமாக தேவயானியும் விக்ரமும் பார்க்கும் பார்வை வசீகரம். மஜா, பீமா, கந்தசாமி, ஐ என அடுத்தடுத்துப் படங்கள். ராவணனில் வீரையா என்னும் வித்யாசமான பாத்திரம். தெய்வத்திருமகளிலும் மன வளர்ச்சி குன்றியவராக நடித்தார். ஆனால் அனுஷ்காவும் அமலா பாலும் போட்டி போட்டு இவரது பாத்திரத்தினை இன்னும் சிறப்படையச் செய்தார்கள்.
தெய்வத்திருமகள் க்ளைமாக்ஸ் கோர்ட் சீனைப் பார்த்துக் கண்கலங்காதவர்களே இருக்க முடியாது. மன வளர்ச்சியற்ற கிருஷ்ணாவுக்குத் தன் குழந்தை நிலாவை வளர்க்க இயலாது எனக் கூறி நிலாவின் தாய் வீட்டினர் ஏற்படுத்தும் உரிமைப் போராட்டத்தின் முடிவில் கிருஷ்ணா தானே விட்டுக் கொடுத்து விட்டுச் செல்வது மனம் நெகிழ்த்தும்.
உன் சமையல் அறையில் நான் உப்பா சர்க்கரையா என அடிக்கடி முணுமுணுக்க வைக்கும் தில் படப் பாடல். இதில் லைலாவும் விக்ரமும் உன் வலது கையில் பத்து விரல் என் இடது கையில் பத்து விரல் என்று கைகோர்த்து ஜில்லென்று மழையில் நனைவது இனிய அழகு.
ஆலைக் கழிவுகள் ஆற்றில் கலப்பதால் தங்கள் கிராமத்துக்கு ஏற்படும் தீங்குகளை அமைச்சரிடம் புகாரளிக்க வரும் ஆறுமுகமும் ஈஸ்வரியும் நடத்தும் களேபரம்தான் தூள். அதில் விவேக் சிக்ஸ்பேக் ஆறுமுகம் போல் போஸ் கொடுப்பது அதை விட தூள் நகைச்சுவை. கொடுவா மீசை, மதுரை வீரந்தானே என பரவை முனியம்மா வேறு ஆறுமுகத்தைக் கொம்பு சீவி விடுவார்.
ஜெமினி மசாலாக்கள் நிறைந்த கேங்க்ஸ்டர் கதை. கிரண் ஜோடி. பெண்ணொருத்தி, ஓ போடு, திவானா, நாட்டுக் கட்டை என்று ஹிந்தி கிரணை வைத்து ரகம் ரகமாகப் பாடல்கள். சாமி ஆறுச்சாமி என்ற மனிதன் நேர்மையான போலீஸாகத் தன்னை நிரூபித்த கதை. கல்யாணம்தான் கட்டிக்கிட்டு ஓடிப் போலாமா, இதுதானா இதுதானா, பிடிச்சிருக்கு பிடிச்சிருக்கு என்று கலகலப்பூட்டும் பாடல்கள். காதல் சடுகுடு சூப்பர் சுப்புவாக விவேக்குக்குப் பெயர் வாங்கித் தந்த படம்.
பிதாமகனில் ரசிகா ஜோடி. வெட்டியான் கேரக்டர். எளங்காத்து வீசுதே பாடலில் ரசிகா சைக்கிள் ஓட்டுவதும் இவர் ஹேண்டில் பாரில் அமர்ந்து அச்சு அசலாகத் தானே சைக்கிள் ஓட்டுவது போல் பாவ்லா செய்வதும் செம காமெடி. அந்நியனில் அம்பி, ரெமோ, அந்நியன் என்று மூன்று ஆல்டர் ஈகோ, ஸ்பிளிட் பர்சனாலிட்டீஸ். மூன்று கேரக்டராகவும் வாழ்ந்திருப்பார் விக்ரம். அம்பியாக ஐயராத்து பாஷை பேசுவதும் அப்பிராணியாகக் காதல் கடிதம் எழுதி காதலிக்கும் பெண்ணின் அப்பா அம்மாவிடமே கொடுத்து ஆசீர்வாதம் கேட்பதும் வித்யாசம் என்றால் ரெமோவாக படு ஸ்டைலாகக் கலக்கி இருப்பார்.
தன்னுடைய காதலியான சதாவுக்கு ரோஜாத்தோட்டத்தையே பரிசளிப்பார். விதம் விதமான உடைகளில் கேட்வாக் செய்வார். ”இதுக்கெல்லாம் பணம்?” என்று மனோதத்துவ டாக்டர் நாஸர் இவரை மெஸ்மெரிசத்தில் ஆழ்த்திக் கேள்வி கேட்கும்போது ”சிம்பிள் வீட்டை அடகு வைச்சிட்டேன்” என்று அதிரடிப்பார். நீதியற்ற காரியங்கள் நிகழும்போது அந்நியனாக அவதரிப்பார். அதிலும் அந்த க்ளைமேக்ஸ் காட்சியில் ஐஸ் தொட்டியை உடைத்து விழும் போதும் பிரகாஷ் ராஜ் அதிர்ந்து பார்க்கும் போது அம்பியாக வெலவெலத்து நடுங்குவதும் அடுத்த நிமிஷமே “என்ன யாருன்னு நினைச்சே” என அந்நியனாக புஜபலத்துடன் சிக்ஸ்பேக் காட்டி வடிவெடுப்பதுப் பிரகாஷ் ராஜை மட்டுமல்ல நம்மையும் மிரள வைப்பார்.
சிறந்த நடிகருக்கான தேசிய விருது, தமிழ்நாடு மாநில விருது, மற்றூம் 7 ஃபிலிம்ஃபேர் விருதுகள் பெற்றுள்ளார். 2011 இல் மிலான் பல்கலைக் கழகம் இவருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியதாம்!. மாற்றுத் திறன் பள்ளியின் தூதுவராகவும், காசி கண் நலப் பணியின் வேலையிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார். விக்ரம் நிறுவனம் மூலம் பல நலத் திட்டப் பணிகளையும் செயல்படுத்தி வருகிறார் என்பதும் சிறப்புத் தகவல். தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்தும் தன்னாலான சமூக சேவைகளைச் செய்தும் வரும் கென்னி என்னும் சீயான் இன்னும் சிறப்புற வாழ்த்துக்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)