எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 5 ஜூன், 2023

ஜெர்மனி தமிழ்க் கடைகள், வீடுகள், உணவகங்கள்

 ஜெர்மனி தமிழ்க் கடைகள், உணவகங்கள்





இங்கே தமிழர்களுக்கான உணவகங்கள் அன்னம், அம்மா, இன்னும் சரவணபவன் போன்றவையும் உள்ளன.  விருந்து வைபவங்கள் என்றால் இங்கே அனைத்துமே கிடைக்கின்றன.ஆர்டர் செய்யலாம். ஹாயாக இருக்கலாம். பொரித்த பரோட்டா, டீ இங்கே அருமை. வட இந்திய, தென்னிந்திய உணவுகள் அனைத்துமே பெறலாம். டோர்ட்மெண்டில் அம்மா உணவகம், அதன் பக்கத்தில் தமிழ் லைப்ரரி, வீடியோ கடை மேலும் ஐடி என் என்ற தமிழ்த் தொலைக்காட்சி ஒளிப்பதிவுக் கூடமும் உண்டு.

ஒவ்வொரு வாரமும் தமிழர் தெருவிழா, இசைத்தென்றல், வெற்றிமணி விழா, ஒய் ஜி மகேந்திரன் நாடகம் ஆகியன டோர்ட்மெண்டில் அல்லது டுசில்டார்ஃபில் நடக்கின்றன. இங்கே தமிழர்கள் பல்வேறு இடங்களில் இருந்தாலும் டூயிஸ்பர்க், டுசில்டார்ஃப், டோர்ட்மெண்ட், கோலன், ஆஹன், ஓபர்ஹௌசன் ஆகிய இடங்களில் குறிப்பாக ஈழத்தமிழர்கள் அதிகம் வசிக்கின்றனர். ஏறத்தாழ 60,000 ஈழத்தமிழர்கள் இங்கே வசிப்பதாகப் படித்தேன்.






தமிழ்க்கடையில் – டுசில்டார்ஃப் அக்கர் ஸ்ட்ராஸ்ஸேயில் இருக்கும் ட்ரான்ஸ்ஃபுட், ( ஹாண்ட்லர்பெலக் ) கடையில் குறிப்பிட்ட வகைகள் கலந்து ஒரு கிலோ காய்கறி 5 யூரோவுக்கு மிக்ஸடாக வாங்கிக் கொள்ளலாம். அரிசிதான் விலை அதிகம் இட்லி அரிசி 33 யூரோ சாப்பாட்டு அரிசி 36 யூரோ அல்லது 40 யூரோ. வியாழக் கிழமைகளில் ஃப்ரெஷ் காய்கறிகள் கிடைக்கும். இந்திய உணவு, விருந்து வகைகள், திருமண உடைகள், நகைகள் அனைத்துமே கிடைக்கும்.

ஜெர்மனிவீடுகள். கூம்பு வடிவக் கூரை கொண்டவை, மற்றும் ஓடுகள் பதிக்கப்பட்டவை.  பனிக்காலத்தில் பனி வீட்டின் கூரையில் தேங்காமல் வழிய வேண்டியே இவ்வாறு அமைக்கப்படுகின்றன.






ரோட்டில் நாலு பேர் நடந்து செல்வதைப் பார்த்தால் அதில் இருவர் கையில் நாயைப் பிடித்துக் கொண்டு வாக்கிங் போகின்றவர்களாக இருப்பார்கள் !. காரணம் ரோட்டிலும் வீட்டிலும் தான் சொல்வதைக் கேட்க ஒரு ஆள் வேண்டுமே! J வேறு யாரையும் மிரட்டவும் அதட்டவும் முடியாதே J தான் கண்ட்ரோல் பண்ண. தனக்குக் கட்டுப்பட்டு நடக்க. தன் ஆணைக்குக் கீழ்ப்படிய ஒரு வளர்ப்புப் பிராணி. பலர் செல்லமாகவும் வைத்திருக்கிறார்கள்.

ஜெர்மனி வாழ் ஈழத்தமிழர்களிடம் நான் வியந்த விஷயம் அவர்களின் தன்னம்பிக்கை, மன உறுதி, விடா முயற்சி, வித்ஸ்டாண்டிங் பவர்,  தொடர்ந்த உழைப்பு, தமிழ்ச் சேவை.

இங்கே வசிக்க ஜெர்மன் கற்றுக் கொள்வது அவசியம். ஜெர்மன் பாஷையைக் கற்றுக் கொள்ள இரண்டு மாத ஃபீஸ் 1,000 யூரோ மட்டுமே என விளம்பரப்படுத்தி இருந்தது ஜோஹான் வுல்ஃப்கேங் வான்கோதே இன்ஸ்டிடியூட்.

ஜெர்மனியை எனக்குப் பிடித்ததற்கு இன்னும் சில காரணங்களும் உண்டு. எங்கள் பிள்ளைகள் அங்கே இருக்கிறார்கள். ஜெர்மன் சிட்டிசன் ஆகி விட்டார்கள். அது முக்கியக் காரணம்.

மேலும் ரயில்வே ஸ்டேஷன் போன்ற இடங்களில் பார்டர் போட்டு மஞ்சள் நிறத்தில் லைன் மார்க் பண்ணி அந்த இடத்தில் மட்டும்தான் புகைக்க வேண்டும் என்று ஸ்மோக்கிங் ஏரியாவை வரையறுத்து உள்ளார்கள். அதனால் பாரலல் ஸ்மோக்கிங்கால் யாரும் பாதிக்கப்பட மாட்டார்கள். அங்கே பெண்களும் புகைப்பார்கள்.






சுற்றுச் சூழல் ஆர்வலர்கள். பொதுப் போக்குவரத்தை அதிகம் பயன்படுத்துகிறார்கள். தங்கள் சைக்கிளைக் கொண்டு வந்து ட்ரெயினிலும், பஸ்ஸிலும் நின்று கொண்டே பயணித்து ஸ்டேஷன் வந்ததும் சைக்கிளில் விடு ஜூட். ஆட்டோ இத்யாதிகள் இல்லை. எனவே எங்குமே புகையோ அழுக்கோ இல்லை. அந்த சைக்கிள்களையும் ஆங்காங்கே விட்டுச் செல்ல பளபளவென்ற ஸ்டீல் கம்பிகளுடன் கூடிய சைக்கிள் ஸ்டாண்டுகள் உண்டு. இதில் செயின்போட்டுப் பூட்டி விட்டுச் செல்கிறார்கள். 60,70 வயது முதியவர்கள் கூடத்தங்கள் சைக்கிளை மிதித்துக் கொண்டு செல்வது கண்கொள்ளாக் காட்சி.

இது ஃப்ரான்ஸில்


ஆனாலும் இவர்கள் தாங்கள் சாப்பிடுகிறார்களோ குளிக்கிறார்களோ வீட்டையும், பாத்ரூமையும் துடைத்துத் துடைத்துக் கண்ணாடி மாதிரி வைத்துக் கொள்வார்கள். மேலும் சிலர் தனியாகத் தோட்ட உரிமையாளர்களாக அதைப் பராமரித்து அதிலிருந்து தங்கள் சொந்த விளைச்சலைக் கொண்டு உணவு உண்கிறார்கள்.

வாருங்கள் நாம் நம் ஊர் நோக்கிப் பயணிப்போம். என்னதான் இருந்தாலும் நமக்குத் தமிழ்நாடே சொர்க்கம். பிள்ளைகள் இருக்கும் இடம் என்பதால் ஜெர்மனியும் இன்பம்.

”பறக்கும் கம்பளம் துவங்கி வைக்கிறது பயணத்தை. மேகங்களுக்குள் சிக்கிக் கிடக்கிறாள் லைலா.  வட்டக் கனவுகள் உருள்கின்றன விழிகளுக்குள் . வேலை பூதம் தின்ன கேட்கிறது அவளை.  வெளியேற்றும் வழியறியாது திகைத்துக் கிடக்கிறான் அலாவுதீன்.  சிறிது நேரத்தில் தரையிறங்கப் போவதாக அறிவிக்கிறார் விமானி. ” என்று ஒரு சின்னக் கவித்துவத்தோடு ஜெர்மனியின் செந்தேன் மலர்களை உங்கள் முன் படைத்திருக்கிறேன். அன்பும் நன்றியும் மகிழ்ச்சியும் என் குடும்பத்தாரும் மற்றும் வாசகர்களுக்கும். !!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...