தேவயானியும் மஹாராணியும்
”சந்தனக் காற்றே செந்தமிழ் ஊற்றே சந்தோஷப் பாட்டே வாவா” எனப் பாடிக்கொண்டிருந்தது காரிலிருந்த ஆடியோ சிடி.
வளைந்து நெளிந்து செல்லும் மலைப்பாதையில் லாவகமாகக் காரை ஓட்டியபடி பாட்டை முணுமுணுத்துக் கொண்டிருந்தான் ஸாம் என்ற சுவாமிநாதன்.
நீரில் நனைந்த கூந்தல் காற்றில் ஆடி சலசலத்துப் பறக்க அவன் அருகில் அமர்ந்து ஆப்பிளை வெட்டிக் கொண்டிருந்தாள் தேவயானி.
ஒவ்வொரு ஆப்பிள் துண்டத்தையும் வெட்டித் தான் சாப்பிடும்போது அவனுக்கும் ஒரு துண்டை வாயில் ஊட்டி விட்டபடி இருந்தாள்.
திடீரென “ ஔச்” எனக் கத்தினாள் தேவயானி. ”என்னாச்சு. என்னாச்சு ”எனப் பதறினான் ஸாம். கைவிரலில் லேசாகக் கசிந்தது ஆப்பிளின் தோல் நிறத்தில் ரத்தம்.
ஒரு கையால் ஸ்டீரியங்கைப்பிடித்தபடி இன்னொரு கையால் அவளது விரல் பற்றி வாயில் வைத்துச் சப்பினான்.
”ஐய.. ரத்தம்.. இருங்க , விடுங்க காட்டனால அமுக்குறேன்” என வெட்கப்பட்டபடி டாஷ் போர்டைத் திறந்தாள்.
”இல்ல இரு. இதுலேயே நின்னுடும்” என்றபடி அவன் விரலை விட ரத்தம் நின்றிருந்தது.
”ரெட் ஆப்பிள் கன்னத்தோடு பைனாப்பிள் வண்ணத்தோடு “ என்று ஆடியோ சிடியில் பாடத்துவங்கி இருந்தார் சரத்குமார்.
வெட்கத்தால் சிவந்திருந்த அவள் கன்னத்தைத் தட்டியபடி எங்கேனும் ஒரு யூ வளைவில் சிறிது நேரம் நிறுத்தலாமா என யோசித்தான்.
ரத்தச் சிவப்பாய்ப் பூத்திருந்த ஒரு குல்மோஹர் மரத்தின் கீழ் காரை நிறுத்தினான். வெய்யில் மஞ்சள் கோலத்தை பூமியில் நகர்த்தி நகர்த்தி வரைந்துகொண்டிருந்தது.
இன்னும் இருபது கிலோமீட்டர் போனால்தான் ஸ்கந்தபுரி எஸ்டேட் கெஸ்ட் ஹவுஸை அடையலாம். அது அவனது தாத்தா வாங்கிய எஸ்டேட். வருடம் நான்கு முறையாவது அங்கே செல்வதுண்டு.
அங்கே சமையல் செய்யும் முருகன் கோழிக்கறியை விதம் விதமாய்ப் பொரித்து வைத்திருப்பான். நினைக்கும்போது பசியில் நாவூறியது அவனுக்கு.
”பசிக்குதாடா தேவி.”
”ஆமா. இருங்க. போக கொஞ்சம் நேரமாகுமில்ல, ஜூஸ் வைச்சிருக்கேன்.” என்ற படி ட்ராபிக்கானா டப்பாவைத் திறந்து யூஸ் & த்ரோ கப்பில் ஆரஞ்சுப் பழச்சாறை ஊற்றினாள்.
அவனிடம் தரும்போது ஆரஞ்சு ஆப்பிள் என ஒரு கலவையான பழ வாசனையில் இருந்தாள் தேவி. காற்று லேசான வெக்கையோடு அடித்துக் கொண்டிருந்தது. காற்றின் மணத்தோடு அவளின் மணமும் சேர்ந்து அடித்தது.
லேசாகத் திறந்த கதவின் வழி கால்களை வெளியே போட்டுக் கொண்டு ரிலாக்ஸாக ஜூஸை அருந்தினாள் தேவி.அணிந்திருந்த துப்பட்டாவின் நுனி முடிச்சில் இருந்த குட்டி மணிகள் சலசலவென அங்கும் இங்கும் காற்றில் அலைந்தன..
மாபெரும் அழகியல்ல என்றாலும் அவளின் அமைதி நிறைந்த உருவமும் புன்னகையால் செய்த முகமும் அவனைக் குளிர்விக்கத் தவறியதில்லை.
அது மார்ச் மாதம். நவம்பருக்குப் பின்னே இப்போதுதான் வர வாய்த்தது. மலை மேல் கூட குளிர் குறைந்து வெக்கையின் ஆக்கிரமிப்பு. மரங்கள் வெட்டப்பட்டு ராஜபாட்டை அகலத்துக்கு ரோடு போடப்பட்டிருந்தது.
தேவியின் முகத்தை ரசித்தபடி பழச்சாறை அருந்தினான்.
காட்டெருது ஒன்று மெல்ல நகர்ந்து சென்றது. உணவுப் பொருளின் வாசம் பார்த்து மேலே ஒரு குட்டிக் குரங்கு ”கீச், கீச்” என்று கத்தியபடி வந்தது.
டக்கென்று காரில் ஏறி அமர்ந்தவன் , ”கதவை சாத்து தேவி. குரங்கு பாய்ஞ்சி பறிச்சிடப் போகுது” என்றான்.
”வெய்யில் நேரம் உணவில்லாமல் தவிக்குதுக போல” என்று கூறி ப்ரெட் பாக்கெட்டை அப்படியே ஜன்னலுக்கு வெளியே குட்டிக் குரங்குக்காகப் போட்டு விட்டு கதவைச் சாத்தினாள் தேவி.
இன்னும் நாலைந்து குரங்குகள் எங்கிருந்தோ வந்து காரைச் சுற்றிக் குதித்தன. ஜன்னல் கண்ணாடியை அவை தட்ட “பாரு வெனையக் கொண்டு வந்திட்டே ” என்று சொல்லியபடி காரைக் கிளப்பினான்.
அவன் முகம் லேசாக சுருங்குவதைக் கூட விரும்பாத அவள் மனம் அவன் கோபித்துக் கொண்டதைப் பார்த்துத் தவித்தது. அமைதியாகச் சாலையைப் பார்த்தாள். வெட்டுப்பட்ட கைவிரலை உற்றுப் பார்த்து வருடிக் கொண்டாள்.
காரை ஓட்டியபடி அவளை ஊன்றிக் கவனித்தவன் மென்மையாக அவளின் தொடையில் லேசாகக் கையால் தட்டி சமாதானப்படுத்தினான்.
"மோப்பக் குழையும் அனிச்சம்” என்ற வார்த்தை அவன் மனதில் ஓடியது.
அவளுக்கும் இவளுக்கும்தான் எவ்வளவு வித்யாசம் என நினைத்தபடி சாலை வளைவுகளில் லாவகமாகக் காரைத் திருப்பினான். அவள் ஞாபகம் வந்ததும் கார் தானாக வேகம் எடுத்தது. அவன் நினைவுகள் பின்னோக்கிப் பயணித்தன.
அவள் …
அவள் ….
அவன் முதன் முதலாக சந்தித்த ஆளுமைத் தன்மை நிறைந்த மஹாராணி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)