எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 6 ஜூன், 2023

ஆராவமுதனும் ஆதித்யாவும் ஆராதனாவும் ஆத்திச்சூடிக் கதைகளும் :- 1

ஆராவமுதனும் ஆதித்யாவும் ஆத்திச்சூடிக் கதைகளும் :- 1

  தித்யா ஆங்கில மீடியம் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படிக்கும் சிறுவன். அவனது தாத்தா ஆராவமுதன் வங்கிப் பணியில் இருந்து பணி ஓய்வு பெற்றவர். இருவரும் நண்பர்களைப் போலப் பேசிக் கொள்வார்கள். அவர் அவனுக்கு வீட்டுப் பாடங்கள் செய்வதில் உதவி புரிவார். சந்தேகங்களைத் தீர்த்து வைப்பார். லீவு நாட்களில் அவனோடு கிரிக்கெட் விளையாடுவார். இருவரும் சேர்ந்து வினாடிவினா, புதிர்கள், விடுகதைகள் சொல்லி அவ்வப்போது விளையாடுவதுண்டு.

  ”ஆதித்யா மணி ஒன்பதாச்சே. ஏன் இன்னும் தூங்காம என்ன செய்றே?” என்று வினவினார் தாத்தா ஆராவமுதன். ”தாத்தா இன்னிக்கு எங்க க்ளாஸ் மிஸ் ஆத்திச்சூடி படிக்கணும் அதன்படி நடக்கணும்னுன்னாங்க. ஆத்திச்சூடின்னா என்ன தாத்தா யார் எழுதினாங்க.” என்று கேட்டான்.

  ”ஆத்திச்சூடியை எழுதினது ஔவையார். அவர் சங்ககாலப் பெண்பாற்புலவர். அவர் இயற்றிய ஆத்திச்சூடியில் வாழ்க்கைக்குத் தேவையான நீதிநெறிகள் அடங்கி இருக்கு.

  ”தாத்தா தாத்தா எனக்கு அது பத்தி எல்லாம் சொல்லுங்க தாத்தா ” என்றான் ஆதித்யா.

  “ஆத்திச்சூடியில் நாம் பின்பற்ற வேண்டிய 109 விதமான நீதிநெறிகள் இருக்கு. அதுல உயிரெழுத்துக்களில் அ னாவில் ஆரம்பித்து 13 விதமான நன்னெறிகளும் மெய்யெழுத்துக்களில் உயிர்மெய் வருக்கம், ககர வருக்கம், சகர வருக்கம், தகர வருக்கம், நகர வருக்கம், பகர வருக்கம், மகர வருக்கம், வகர வருக்கம் என ஏழு வருக்கங்களில் நீதி நெறிகள் போதிக்கப்பட்டிருக்கு.

  அதுல முதல்ல ”அறம் செய விரும்பு” என்று சொல்லி இருக்கார் ஔவையார். ”தான தருமம் செய்ய ஆசைப்படு” என்று அர்த்தம். ”ஏன் தாத்தா தான தருமம் செய்னு சொல்லாம செய்ய ஆசைப்படுன்னு சொன்னாங்க” என்றான் ஆதித்யா.

  ”அதுக்கு ஒரு கதை சொல்றேன் ஆதித்யா. ஒரு முறை தர்மர் ஒரு விருந்து அளித்தார். தருமத்தில் தன்னைவிடச் சிறந்தவர்கள் யாருமில்லை என்று அவருக்கு எண்ணம் ஏற்பட்டது. அப்போது ஒரு கீரிப்பிள்ளை அவர் முன் வந்தது. ”நீ எவ்வளவுதான் தானதருமம் செய்தாலும் பயனில்லை” என்று கூறி ஒரு கதை சொன்னது.

  “கானகத்தை ஒட்டிய ஒரு ஊரில் ஒரு ரிஷி  இருந்தார். அவர் வீட்டில் அவர் மனைவி மகன் மருமகள் நால்வர்தான். அவர் ஒவ்வொரு நாளும் அறுவடை நடந்து முடிந்த வயலுக்குப் போய் அங்கே சிதறிக் கிடக்கும் நெல்மணிகளை எடுத்து வருவார். அந்த மணிகளைச் சேர்த்து உரலில் குத்தி தவிடெடுத்துப் புடைத்து அரிசியாக்கி அதை வறுத்து சத்துமாவு செய்து அவர்கள் நால்வரும் பதினைந்து நாட்களுக்கு ஒருமுறைதான் துவாதசியன்று உண்பார்கள்.

  அவர்கள் வீட்டுக்கு ஒருநாள் ஒரு அதிதி - விருந்தாளி – வந்தார். வந்த விருந்தாளிக்கு முதலில் முனிவர் தன் பங்கான சத்துமாவை ரிஷி கொடுத்தார். அது போதாதது போல விருந்தாளி அமர்ந்திருந்ததும் அடுத்து ரிஷி பத்தினியும் அவரது மகனும் மருமகளும் கூட தன் பங்கைக் கொடுத்தனர்.அவர் சாப்பிட்டுக் கை கழுவிய தண்ணீரில் நான் விழுந்து புரண்டேன். அந்தத் தண்ணீரில் புரண்டதும் என் உடல் பொன்னிறமாக மாறிவிட்டது. ஆனால் அங்கங்கே சரியாகப் பொன்னிறமாகவில்லை.

  உலகுக்கே விருந்தளிக்கும் உன் விருந்துக்கு வந்து இங்கே உண்டவர்கள் கழுவிய நீரில் புரண்டால் முழுதும் தங்கமயமாகிவிடலாம் என்று வந்தேன். ஆனால் ஏதும் மாற்றமில்லை. எனவே அறம் செய்தால் மட்டும் போதாது. கொடுக்கிறேன் என்ற எண்ணம் இல்லாமல் விருப்பத்தோடு கொடுப்பதே சிறந்த அறம். என்று சொல்லியது அணில்பிள்ளை. “இதைக்கேட்ட தருமர் நாணித் தலைகுனிந்தார்.

  இந்தக் கதையைச் சொல்லிய தாத்தா ஆராவமுதன் பேரனிடம் சொன்னார். “தானதர்மம் செய்தால் முழுவிருப்பத்தோடு செய்யணும்.. எனவேதான் மூதுரைக் கிழவி அறம் செய விரும்பு என்று கூறிச் சென்றிருக்கிறார்” என்றார். ”தாத்தா தாத்தா அடுத்து என்ன சொல்லி இருக்காங்க ஔவைப்பாட்டி” என்று கேட்டான் ஆதித்யா. ”அது நாளைக்குச் சொல்றேன். இப்போ நாம் உறங்குவோம்” என்றார் தாத்தா. தாத்தாவின் கழுத்தைக்கட்டிக் கொண்டு கன்னத்தில் முத்தமிட்டு, ‘தாங்க்ஸ் தாத்தா’ என்றான் ஆதித்யா. அவன் மனதில் அடுத்த நாளுக்கான ஆத்திச்சூடி என்னவாக இருக்கும் என்ற யோசனை ஓடிக் கொண்டிருந்தது. அவர்கள் பக்கத்தில் இந்தக் கதையைக் கேட்காமல் தூங்கிக் கொண்டிருந்தாள் இரண்டாம் வகுப்புப் படிக்கும் அவனது தங்கை ஆராதனா. அவள் நாளைக்குத் தாத்தாவிடம் எனக்கு ஏன் கதை சொல்லல என்று சண்டைபோடுவாள் என நினைத்ததுமே ஆதித்யாவின் முகத்தில் தான் மட்டும் கதை கேட்ட பெருமிதம் ஒட்டிக்கொண்டிருந்தது.

1.    1.   அறம் செய விரும்பு
தருமம் செய்ய ஆசைப்படு.

2 கருத்துகள்:

  1. எதுவுமே மேம்போக்காக இல்லாமல் மனதார செய்வதுதான் சிறந்தது.

    பதிலளிநீக்கு
  2. ஆம் ஸ்ரீராம்.

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...