எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 19 ஜூன், 2023

ஆராவமுதனும் ஆதித்யாவும் ஆராதனாவும் ஆத்திச்சூடிக் கதைகளும்:- 2

ஆராவமுதனும் ஆதித்யாவும் ஆராதனாவும் ஆத்திச்சூடிக் கதைகளும்:- 2

  தாத்தா தாத்தா என்னோட ரப்பரை வைச்சிட்டுத் தரமாட்றா தாத்தா..” என்று கண்ணைக் கசக்கினான் ஆதித்யா.

  ”தாத்தா..அது என்னுது” என்று பதிலுக்குக் கத்திக் கண்ணைக் கசக்கினாள் ஆராதனா.

  ”நான்தான் ரெண்டு பேருக்கும் தனித்தனியா வாங்கிக் கொடுத்தேனே. என்னாச்சு ” என்றார் தாத்தா. 

  ”ரெண்டு பேருமே ஏ ந்னு இன்ஷியல் போட்டு வைச்சிருக்கோம் தாத்தா. ஆராதனா அவளுத தொலைச்சிட்டு என்னுத எடுத்து அவளுதுங்குறா தாத்தா “ என்றான் ஆதித்யா.

  ”அடாடா என்ன ரகளை இங்கே.. ஆதித்யா விட்டுக் கொடுத்துப் போ. வேற ரப்பர் தரேன்” என்றார் ஆதித்யாவின் அம்மா ரம்யா.

  “இந்த அம்மா எப்பவும் இப்பிடித்தான் தாத்தா. ஆராதனாவுக்கே விட்டுக் கொடுக்க சொல்வாங்க. அது என்னோடதுதானே நான் ஏன் விட்டுக் கொடுத்துப் போகணும் “ என்று கோபமாக முகம் திருப்பிக் கொண்டான் ஆதித்யா.

  “சரி ஆதித்யா நான் உனக்கு ஒரு கதை சொல்றேன். அதக் கேட்டுட்டு நீ விட்டுக் கொடுத்துப் போறத முடிவு பண்ணு “ என்றார் ஆராவமுதன்.

  கதை என்றதும் ஆதித்யா தாத்தாவின் பக்கம் ஓடி வந்து மடியில் கைவைத்து அமர்ந்து கொண்டான். எங்கே தாத்தா தன்னிடமிருந்து ரப்பரை அண்ணனுக்கு வாங்கிக் கொடுத்து விடுவாரோ என்று சிறிது சுணக்கத்துக்குப் பிறகு ஆராதனாவும் இன்னொரு பக்கம் வந்து அமர்ந்து கொண்டாள்.

  தாத்தா கூற ஆரம்பித்தார். “ பரமசிவன் பார்வதிக்கு விநாயகரும் முருகனும் பிள்ளைகள். ஒரு தரம் நாரதர் ஒரு மாம்பழத்தைக் கொண்டு வந்து பரமசிவனிடம் கொடுக்க அவர் தன் பிள்ளைகளுக்கு அதைக் கொடுத்தாராம். அப்ப நாரதர் சொன்னாராம், அந்த அபூர்வ மாங்கனியை ஒருவரே சாப்பிட்டால்தான் பலன். இருவருக்கு பங்கு வைக்கக் கூடாதுன்னு. “

  ’ரெண்டு பேருமே எங்களுக்குப் பிரியமான பிள்ளைகள், செல்லப் பிள்ளைகள். இத யாருக்குக் கொடுக்குறது’ன்னு பரமசிவனுக்கும் பார்வதிக்கும் ரொம்ப யோசனை. ஒருத்தருக்குக் கொடுத்தா இன்னொருத்தர் கோச்சுப்பாங்களேன்னு.

  ”அப்ப என்ன தாத்தா செய்தாங்க” என்று கேட்டான் ஆதித்யா. ”சரி. ஒரு போட்டி வைப்போம் அதுல யார் ஜெயிக்கிறாங்களோ அவங்களுக்கு மாங்கனியைக் கொடுப்போம்னு சொன்னாங்களாம் பார்வதி “ ”சரி என்ன போட்டின்னு நீயே சொல்லு” அப்பிடின்னாராம் பரமசிவன்.

  ”இந்த உலகத்தை யார் முதலில் சுத்தி வர்றாங்களோ அவங்களுக்குத்தான் இந்த மாங்கனி அப்பிடின்னு சொன்னாங்களாம்” பார்வதி. உடனே ஒப்புக் கொண்டு முருகன் மயில் மேலே ஏறி உலகத்தைச் சுத்தி வந்தராம்.

  அதுக்குள்ள விநாயகர் “அம்மா அப்பாதான் என் உலகம். அவுங்கதான் என்ன இந்த உலகத்துக்குக் கொண்டு வந்தாங்க. எனக்கு எல்லாமும் அவுங்கதான். அதுனால நான் அவங்களைச் சுத்தி வரேன்”னு வந்து அந்த மாங்கனியை வாங்கிக்கிட்டாராம்.

  ”அச்சோ அப்புறம் என்னாச்சு.. தாத்தா” என்று கண்களை விரித்துக் கேட்டாள் ஆராதனா. இதப் பார்த்துக் கோவமா வந்த முருகன் விபரத்தைக் கேட்டு ரொம்ப ரொம்பக் கோச்சுக்கிட்டு பழனி மலை மேலே போய் நின்னுட்டாராம். உடனே ஔவைப்பிராட்டியார் “பழம் நீயப்பா. ஞானப் பழம் நீயப்பா. தமிழ் ஞானப் பழம் நீயப்பா “அப்பிடின்னு பாடி உனக்கெதுக்குப் பழம்னு சமாதானப்படுத்தி அப்பா அம்மா அண்ணனோட சேர்த்து வைச்சாங்களாம்.

  ”அதுனால எந்த விஷயத்துலயும் கோபம் வந்தா அதப் பொறுமையோட கையாளணும். தேவையில்லாம எல்லா விஷயத்துக்கும் அதிகமா கோபப்பட்டா அது நம்ம உடல் நலத்தைப் பாதிக்கும். எனவே ஆறுவது சினம்” என்றார் தாத்தா.

  “அப்பாடா அதுலயாவது அண்ணன் ஜெயிச்சாரே” என்று சந்தோஷப்பட்டான் ஆதித்யா. ஒரு நிமிடம் கன்னத்தில் கைவைத்து யோசித்தபடி அமர்ந்திருந்தாள் ஆராதனா. குனிந்து ரப்பரைத் திருகியபடி தாத்தாவையும் ஆதித்யாவையும் மாறி மாறிப் பார்த்தாள்.  

  திடீரென ஆதித்யா கிட்டே ஓடி வந்து “அண்ணா இந்தா உன் ரப்பர். என் ரப்பர் ஸ்கூல்ல தொலைஞ்சிருச்சு. சொன்னா கோச்சுப்பாங்கன்னு சொல்லல. அம்மாகிட்ட நான் புது ரப்பர் வாங்கிக்கிறேன். “ என்றாள் ஆராதனா.

  “அடடா குட் கேர்ள்” என்றபடி தாத்தா அணைத்துக் கொள்ள “தாங்க்ஸ் குட்டி “ என ஆதித்யாவும் ஓடிவந்து ஆராதனாவை அணைத்துக் கொள்ள அங்கு சந்தோஷச் சிரிப்பு பெருகியது.

1.      2.  ஆறுவது சினம்
கோபம் தணியத் தகுவதாம்.

2 கருத்துகள்:

  1. சூப்பர்! நல்லா சொல்லிருக்கீங்க

    கீதா

    பதிலளிநீக்கு
  2. நன்றி கீத்ஸ்.

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்!!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...