எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 18 பிப்ரவரி, 2023

சாதனை அரசி சாஸ்த்ரிபவனின் ஸ்ரீசக்தி மணிமேகலை - அணிந்துரை

சாதனை அரசி சாஸ்த்ரிபவனின் ஸ்ரீசக்தி மணிமேகலை


சாஸ்த்ரி பவன் பெண்கள் சங்கத் தலைவி &  தலித் பெண்கள் நல சங்கத் தலைவி மணிமேகலை மேடம் என் முதல் நூல் சாதனை அரசிகளில் இடம் பெற்ற சாதனை அரசி. சாஸ்திரி பவனில் ப்ரஸ் பகுதியில் வேலை பார்த்து வந்த தோழி கீதா இளங்கோவன் மூலம் பத்தாண்டுகளுக்கு முன் அறிமுகமானவர். அன்றிலிருந்து இன்று வரை அன்போடும் பாசத்தோடும் தொடர்ந்து வருகிறது எங்கள் நட்பு. மனித நேயம் மிக்கவர். இவர் எங்கே இருந்தாலும் அங்கே பாஸிட்டிவ் வைப்ஸ் இருப்பதை நாம் உணரலாம். அவரது அகத்தின் அழகு முகத்தில் தெரியும். இவரின் நூலைப் படித்தேன். படித் தேன். இவரது அனுபவங்கள் பரந்துபட்டவை.

அரும்பாக்கம் மிடில் ஸ்கூலில் அம்பேத்கார் பிறந்தநாளில் உரையாற்ற தோழி மணிமேகலை அழைப்பு விடுத்திருந்தார்.  சாஸ்த்ரி பவனில் அம்பேத்கார் சிலை அமையப் பெரும்பாடு பட்டு  அதை நிகழ்த்தியும் உள்ளார்.  சென்னைத் தமிழில் அவர் ஃபோனில் உரையாடும்போதெல்லாம் மனதில் மகிழ்ச்சி பொங்கும். உடன்பிறவா சகோதரி போன்றவர்.  அட்சய பாத்திரம் கொண்டு மணிமேகலை அனைவருக்கும் புரந்தளித்ததுபோல் இவர் அட்சயா ஃபவுண்டேஷன் மூலம் அரசுப்பள்ளி சிறார்களை மேம்படுத்துகிறார்.

மேலும் பொதுத் தொண்டில் ஈடுபாடு உள்ள இவர்  லயன்ஸ், ரோட்டரி மூலம் பள்ளிகளுக்குத் தேவையான பொருட்கள், மேலும் கழிவறைகள் வகுப்பறைகள் அமைக்க உதவுகிறார். சிறார்களை மேம்படுத்துவதுடன் கோடைகாலங்களில் பறவைகளுக்கும் உணவும் நீரும் அளிக்கும் திட்டமாக உயர்ந்து விளங்குகிறது இவரது கையில் உள்ள அட்சய பாத்திரம். இதெல்லாம் ஆரம்ப அத்யாயம் இன்னும் தொடர்கின்றன இவரின் பொதுப்பணிகள். ரிடயர்ட் ஆனபின்னும் உளவியலில் முதுகலை படித்து மாணாக்கர்களுக்கு உளவியல் ஆலோசனை அளித்து நல்வழிப்படுத்துகிறார். மனித நேயத்துக்கு இவர் ஒரு வாழும் எடுத்துக்காட்டு.

நிமிர்ந்த நன்னடையும் நேர்கொண்ட பார்வையும் நிலத்தில் யார்க்கும் அஞ்சாத துணிவும் கொண்டவர். இவரது பெருமுயற்சியாலேயே சாஸ்திரி பவனில் அம்பேத்கார் சிலை நிறுவப்பட்டுள்ளது. ஜெய் பீம் என்பது இவரது தாரக மந்திரம். தன் பேரனுக்குக்கூட பீம் எனப் பெயரிட்டு மகிழ்ந்திருக்கிறார். இந்நூலில் பேரன் என்னும் பேராயுதம் எனக் குறிப்பிட்டு இருப்பது வெகு அழகு.

மிகச் சிறந்த பேச்சாளர். நடனமணி. அழகி. இந்நூலில் தொலைத் தொடர்புத்துறையில் பணிபுரிந்த போது ஏற்பட்ட வெள்ளைத்தோல் அரசியல்களை எல்லாம் தோலுரித்துக் காட்டியுள்ளது இவரது தைரியத்துக்கு எடுத்துக்காட்டு. அடுத்து ஏர் ஹோஸ்டஸ் ஆக விரும்பி எழுத்துப் பரிட்சைகளில் தேர்வாகி அதன் பின் குறிப்பிட்ட உடல் எடைதான் இருக்க வேண்டும் மற்றும் ஹிந்தி பேசத்தெரியணும் என்பது தெரியாமல் அதைக் கோட்டை விட்டதை இவர் விவரிக்கும் பாங்கு எத்துறையிலும் வழிகாட்டி வேண்டும் எனத் தோன்ற வைத்தது.

சாஸ்திரி பவனுக்கு சிறப்பு விருந்தினராகப் பெண்கள் தினத்தில் அழைத்துச் சிறப்புச் செய்தவர். மகப்பேறு சிறப்பு மருத்துவர்  கமலா செல்வராஜ் மற்றும் அடையார் புற்றுநோய் மையத்தின் தலைவர் மருத்துவர் சாந்தா ஆகியோருடன் சம மேடையில் என்னை  அமர வைத்தவர்.  இந்நூலிலும் தோழிகளை மட்டுமல்ல. சிவகாமி மேடத்தையும் அவர் தம் பணிகளையும் எழுத்துப்பணிகளையும் புகழ்ந்திருப்பது அழகு. தன் குடும்பத்தினரை ஒவ்வொருவராக அவர்களின் சிறப்பைச் சொல்லி அறிமுகப்படுத்தி இருக்கும் பாங்கையும் ரசித்தேன். மாமியாரைப் புகழ்ந்த மருமகள் மணிமேகலை. J

எனது ஒன்பதாவது நூல் காதல் வனத்தை வெளியிட்டபோது அனைவருக்கும் அண்ணல் அம்பேத்காரின் உருவப்படத்தை வழங்கி மகிழ்ந்தவர். அண்ணல் சிலை நிறுவப்பட்ட போது அதற்காகப் பெருமுயற்சி எடுத்த இவர் அதில் பங்குபெற இயலவில்லை என்பதைப் படித்து வருந்தினேன்.

அதிசயமான விஷயம் ஒன்று உண்டென்றால் அது எனது காதல் வனம் நூலை வெளியிட்டவர்கள் , பெற்றுக் கொண்டவர் இருவருமே மணிமேகலைகள். காதலை வெறுத்த துறவி மணிமேகலையின் பெயர் கொண்ட இருவரும் எனது காதல்வனம் நூலைப் படித்துப் பார்த்தார்கள் வெளியிடும் முன். ஒருவர் எனது அன்பிற்குரிய தோழி சாஸ்திரி பவன் பெண்கள் சங்கத் தலைவி, தலித் பெண்கள் நலச் சங்கத் தலைவி மணிமேகலை. இன்னொருவர் பேராசிரியை மணிமேகலை சித்தார்த்தன். ( இவரது பெயரில் இருவரின் பெயருமே காதலையும் இல்வாழ்வையும் துறந்தவர்களாக இருப்பது ஆச்சர்யத்துக்குரியது )  

நமது நூல் வெளியீடு என்றால் நாம்தான் , நினைவுப் பரிசு, சிறப்புப் பரிசு வழங்கிப் பொன்னாடைபோர்த்துவோம். ஆனால் எனது நூல் வெளியீட்டைத் தனது நூல் வெளியீடாக மகிழ்ந்து எங்கள் இருவருக்கும் பொன்னாடை போர்த்தி மகிழ்ந்ததோடு மட்டுமல்ல. சிறப்புப் பேச்சாளர்களுக்கு அண்ணல் அம்பேத்கார் படத்தை நினைவுப் பரிசாகவும் வந்திருந்த பெண்களுக்குப்பெண் ஏன் அடிமையானாள் ?” என்ற பெரியாரின் நூலை நினைவுப் பரிசாகவும் வழங்கி மகிழ்ந்தவர். 

இதில் என் தோழி மணிமேகலை தலைமை உரை  ஆற்றினார். அனைவருக்கும் அவர் கொண்டு வந்த அண்ணலின் படத்தை அவரே தராமல் என்னையும் எனது கணவரையும் அவரது சகோதரியையும் மற்றவர்களுக்கு வழங்கச் செய்து பெருமைப்படுத்தினார்.  .எளிமையை விரும்பும் அன்பு மனுஷி இவர்.  பெரியாரையும் அண்ணலையும் உள்ளத்தளவிலும் கருத்தளவிலும் மட்டுமல்ல  உண்மையாகவே புகைப்படமாகவும் நூலாகவும் சுமந்து வந்து அனைவருக்கும் சேர்த்த இவரின் ஆக்கப்பூர்வமான பணி போற்றற்குரியது.

தன் பணிக்காலத்தில் பெண்கள் உடல் மன நலன்களுக்காகப் பல்வேறு பெண் பிரபலங்களை சாஸ்திரி பவனில் உரையாற்ற அழைத்துள்ளார். உடல் நலனுக்குப் பல்வேறு முகாம்களும் ஏற்படுத்தி எல்லாப் பெண்களுக்கும் உற்ற தோழியாக விளங்கி வருகிறார். சீத்தலைச் சாத்தனார் இருந்திருந்தால் இவரைப் பார்த்துப் பெருமை அடைந்திருப்பார்.

அவர் தனது பால்யகால நினைவுகளையும் தைர்யலெக்ஷ்மியாய்ச் சிறுவயதிலிருந்தே தன்னுள் ஊறிய புரட்சிகர சிந்தனைகளையும் பணியின் போதும் பணிக்குப் பின்னான தனது சேவைகளையும்  தொகுத்து வரும் இந்நூல் மிகச் சிறப்பானது. அந்நூல் வெற்றியடையவும் இன்னும் பலரைச் சென்றடையவும் வாழ்த்துக்கள். அல்லும் பகலும் பெண்கள் நலனுக்காவே போராடித் தனது கொள்கைகளுக்காகவே வாழும் மணிமேகலை மேம் எனது எனர்ஜி பூஸ்டர். அவருக்கு லேடீஸ் ஸ்பெஷல் மற்றும் ரோட்டரி சங்கத்தில் இந்த மாதம் ஸ்ரீ சக்தி விருது வழங்கப்பட்டது. ஸூமில் நடத்தப்பட்ட அந்த நிகழ்ச்சியில் நானும் பங்கேற்று ஸ்ரீ சக்தி விருது வாங்கியமைக்காக எனது எனர்ஜி பூஸ்டர் மணிமேகலை மேடத்தை வாழ்த்திப் பேசினேன். :)

அவர் புத்தகம் சிறப்பாக வெளிவந்து அவரைப் பற்றி இன்னும் பலர் அறிய வேண்டும் என்பது எனது பேரவா. வாழ்த்துக்கள் ஸ்ரீ சக்தி மணிமேகலை மேம். எனது அளப்பறிய சக்தியே. !!! பெயரைப் போலவே பொதுமக்கள் தொண்டாற்றிவரும் அவர் வாழ்க பல்லாண்டு. வாழ்க அவர்தம் புகழ் !!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...