இரும்புப் பெண்மணி, கல்வி ஆலோசகர் நெல்லை உலகம்மாள்.
நெல்லை உலகம்மாள். நெல்லையில் மட்டுமல்ல சென்னையும் அறிந்த பெயர்தான். சின்னச் சின்னதாய்த் தடங்கல்கள் இடையூறுகள் குறைகள் ஏற்பட்டாலே ஓய்ந்து போய் அமரும் பெண்ணினம், நெல்லை உலகம்மாள் பற்றிக் கேள்விப்பட்டால் தங்கள் தன்னம்பிக்கைக்குப் புத்துயிர் ஊட்டிக் கொள்ளும். லேடீஸ் ஸ்பெஷலுக்காகப் பேட்டி வேண்டும் என்றபோது மிக மகிழ்ந்து தன் முனைவர் பட்ட வேலைகளுக்கு நடுவிலும் இன்னொரு கல்லூரிக்கு உரையாற்றச் சென்ற பயணப் பொழுதினில் தன் காரில் இருந்தபடியே என் கேள்விக்கான பதில்களை அனுப்பினார்.
நெல்லையில் பிறந்தவர் உலகம்மாள். கூடப்பிறந்தவர்கள் நால்வர், மூத்த சகோதரி, மூத்த சகோதரர் மற்றும் இரு தம்பியர். பெற்றோர்கள் இருவரும் ஆசிரியரகள் என்றாலும்,
பார்ன் வித் கோல்டன் ஸ்பூன் என்ற சொல்லுக்குத் தகுதியான அன்பினையும், அரவணைப்பினையும், பெற்றோரிடமும், உடன் பிறப்புகளிடமும் பெற்றுக் கொண்டிருப்பவர். சிற்சில உடற்குறைபாடு இருந்தாலும் அவற்றை எல்லாம் பொருட்படுத்தாமல் தன்னை இன்னும் இளமையாக இனிமையாகப் புதுப்பித்துக் கொண்டிருப்பவர். எப்போதும் தான் எடுத்த முடிவிலும் பின் தயங்காதவர். இரும்புப் பெண்மணி என்ற பட்டத்துக்குப் பொருத்தமானவர். சேவைக்காகவே தன்னை ஒப்புக் கொடுத்தவர்.
எந்த விழா என்றாலும் தன் உதவியாளர் உதவியுடன் தன் வாகனத்தில் சரியான நேரத்துக்கு வந்து சிறப்பிப்பார். எந்த இடம் என்றாலும் தயங்கியதே இல்லை. சென்னை மட்டுமல்ல எந்த ஊர் என்றாலும் நட்புக்குக் கரம் கோர்ப்பதில் இவர் வல்லவர். இவரை நண்பர்களாகப் பெற்றவர்கள் கொடுத்து வைத்தவர்கள். நானும்தான்.
இவர் ஆற்றி வரும் பணிகளில் சிலவற்றை உங்களுக்காகத் தொகுத்து அளித்துள்ளேன். சென்னையில் உள்ள ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் அகாடமியில் 14 ஆண்டுகளாக கல்வி ஆலோசனை மற்றும் வழிகாட்டலோடு, நிர்வாக பணியில் இருந்து நல்ல அனுபவம் பெற்ற அடிப்படையில், 2015 முதல், பள்ளி மாணவர்களுக்கு இப்போது வரை கல்வி ஆலோசனை வழங்கி வருகிறார்.
JEO பணிக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட வேலைவாய்ப்பு அலுவலரர்களுக்கு, அவர்களின் பயிற்சியின் போது உரையாற்றும் வாய்ப்பினை 2016 முதல் பெற்று, அதற்கான சான்றிதழும் பெற்றுள்ளார். அத்தோடு, வேலைவாய்ப்பு திறன் மேம்பாட்டு கழகம் ஏற்பாடு செய்யும் போட்டித் தேர்வுக்கு தயாராகும் மாணவ/மாணவியருக்கு ஆலோசனை மற்றும் வழிகாட்டலும் தொடர்ந்து செய்து வருகிறார்.
தமிழ்நாடு காவலர் நிறைவாழ்வு “முதன்மை பயிற்சியாளராகப்” பணிபுரிந்து வருவதோடு, கொரோனா தொற்றுக் காலத்தில் கைபேசியில் காவலர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு உளவியல் ஆலோசனையுடன், தேவையான உதவிகளை, துறை உயர் அதிகாரிகள் மூலம் நிறைவேற்றிக் கொடுக்கும் பணியினையும் செய்து அதற்கான சான்றிதழும் பெற்றுள்ளார்.
பல்வேறு தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் பல பணிகள் ஆற்றுவதுடன், சென்னை லயோலா கல்லூரி அவுட் ரீச் மாணவர்களுடன் பல்வேறு இடங்களுக்குச் சென்று பெண்களுக்கான விழிப்புணர்வுடன், பெண்களுக்கான உளவியல் ஆலோசனை, முதியோர் இல்லமும் சென்று ஊக்க உரையாற்றி வருகிறார்.
கொரோனா தொற்றுக் காலத்திலும், பல்வேறு கல்லூரிகள், பள்ளிகள், வேலைவாய்ப்பு மையம், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் நிகழ்த்தும் நிகழ்வுகளில் பங்கெடுத்து ஆன்லைனில் உயர்கல்வி, உளவியல் ஆலோசனை வழங்கி வருகிறார். பல மாவட்டங்கள், பல மாநிலங்கள், பல நாடுகளில் உள்ள பல்லாயிரக்கணக்கான மக்களையும், பல்வேறு நிகழ்வுகளில் சந்தித்து வருகிறார்.
காது கேளாதோர் பள்ளி பணியாற்றும் 30 ஆசிரியர்களிடையே அவர்கள் பணியினை உற்சாகமூட்டும் வகையில்ஊக்க உரை ஆற்றியுள்ளார். காது கேளாதோர் பள்ளி மாணவ/மாணவியர்களிடமும் அறநெறி குறித்து ஆலோசனை வழங்கும் நிகழ்வு ஆகியனவும் நிகழ்த்தி உள்ளார்.
கோட்டூர்புரம், பார்வையற்றோருக்கான செயிண்ட் லூயிஸ் பள்ளிக்குச் சென்று மாணவர்களுக்கான வழிகாட்டலுடன், 10 & 12 வகுப்பு பொதுத் தேர்வுக்கு தயாராவது குறித்த ஆலோசனை வழங்கியுள்ளார். அத்தோடு அவர்களுக்குத் தேவையான ஒலி புத்தகங்களையும் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பதிவு செய்து கொண்டு போய் கொடுத்துள்ளார். 2015 விருந்து நேரடியாக பள்ளிகளுக்குச் சென்று, 26000க்கும் மேற்பட்ட மாணவ/மாணவிகளைச் சந்தித்துள்ளார். கிட்டத்தட்ட 200 மாநகராட்சி மற்றும் அரசுப் பள்ளிகளுக்கு சென்று வழிகாட்டல் ஆலோசனை வழங்கியுள்ளார்.
இதற்கெல்லாம் தூண்டுதலாக இருந்தது எது எனக் கேட்டபோது,
நான் குழந்தையாக இருந்த போது அப்பா துவங்கிய மழலையர் பள்ளியிலிருந்து கிடைத்தது எனக் கூறினார். கல்வி ஆலோசனை சேவைக்கெனவே M.Com., M.Ed., M.Phil., D.Co.Op., PGDCA., M.Sc Counselling & Psychotherapy ஆகிய பட்டங்களைப் பெற்றதோடு தற்போது Ph.D "கல்வி"யில் முனைவர் பட்டப் படிப்பினைத் தொடர்ந்து கொண்டிருக்கிறார்.
இப்பணியின் ஏற்ற இறக்கங்கள் என்ன, தடைகள் என்ன? எனக்கேட்ட போது ஏற்ற இறக்கங்கள் என்று எதுவும் என் வாழ்க்கையில் எப்போதும் இல்லை. சுமுகமான சீரான வாழ்க்கை. இயலாமை என்பது அனைவருக்கும் பொதுவானது என்று என் அறியாத வயதிலேயே ஏற்றுக் கொண்டதாலோ என்னவோ இறக்கங்கள் என்று எதனையும் எண்ணியதில்லை என்றார். இவர் செய்யும் "பணிக்கான தனித்துவம்" என்பது, எளிமையாகச் சொல்லி விளங்க வைப்பது என்கிறார்.
மேலும் இத்துறையில் பலருக்கு வேலையிலும், உயர் கல்விக்கும் வழிகாட்டுதல் என்பது, இதனை "செய்", "செய்யாதே", என்று "அறிவுரை" கூறாமல், வழிகாட்டுகிறார். செய்யாதே என்பதனை விட எதைச் செய்தாலும் சிறப்பாக செய்ய வேண்டும் என்று ஆலோசனயுடன் வழிகாட்டுவேன் என்கிறார். ஆகையால் குழந்தைகளுக்கு என்னைப் பிடிக்கும். மேலும் நான் தடைகளாக எதையும் பார்த்ததில்லை. சவால்களாகத் தான் பார்க்கிறேன். ஆகையால் எதுவும் எனக்கு தடை இல்லை.
இத்துறையில் என் 20 வயதில் கல்லூரி காலங்களிலேயே சேவை மனப்பான்மையுடன் என் பயணத்தை துவங்கிவிட்டேன். கல்வித் தகுதியுடன் 2001 விருந்து முழு மூச்சாக செயல்பட ஆரம்பித்தேன். முதலில் வழிகாட்டல் ஆலோசனை வழங்குவதை தொழிலாகச் செய்யவில்லை. ஆங்கிலத்தில் பாசன் (Passion) என்று சொல்லக்கூடிய வேட்கை, ஆர்வம், ஆசை என்று சொல்லுமளவிற்கு செயல்பாடுகளில் ஈடுபடுகிறேன். புதிதாக எதையும் செய்ய விரும்புபவர்களுக்கு அறிவுரையாக அல்லாமல் வழிகாட்டலாக கூறுகின்றேன். செய்யும் பணியில் ஈடுபாட்டுடன், நேசித்து உங்களை ஈடுபடுத்துங்கள்.
அடைக்கலம் அறக்கட்டளையின் ’’ஜெம்ஸ் ஆஃப் திஷா’ விருது, சிற்பி அமைப்பினர் வழங்கிய ”தைரியமான வீரமங்கை” விருது, அமுத சுரபி என்னும் முகநூல் பக்கத்தினர் வழங்கிய ”அமுத பட்டிமன்ற விருது”, மற்றும் ”இரும்புப் பெண்மணி” விருது, ஊருணி அறக்கட்டளையின் ”பாத் பிரேக்கர்” விருது, பூவரசி அமைப்பின் ”நம்பிக்கை” விருது, S2S அமைப்பின் “சமூகச் சிற்பி” விருது, கலாம் யு.வி. அறக்கட்டளை “பாராட்டு விருதுகள்”, இந்தியன் உலக சாதனைகள் – சிறந்த மனிதநேய விருது, சூப்பர் ராயல் டிவி விருது – 2021, சிறந்த கல்வியாளர் & ஆலோசகர், காவல்துறை பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கு ஆலோசனை வழங்குவதற்கான பாராட்டு சான்றிதழ், கலங்கரை விளக்கம் அறக்கட்டளை, காருண்யம் அறக்கட்டளை, கவித்திறன் மேடை இணைந்து பத்மஸ்ரீ விவேக் நினைவாகக் “கலைச்செல்வர் விருது”, “ஆரஞ்சு உலக சாதனை சான்றிதழ்” பதின்பருவ சவால்கள்” தலைப்பில் ஆற்றிய உரைக்காக, ஷாக்ஷம் “டைனமிக் கேரியர் கவுன்சிலர்” விருது, தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ், “பெண்மையை” கொண்டாடுதல் மற்றும் கௌரவித்தல், ஸ்ரீமதி சோனியா காந்தி விருதுகள்-2022, சிரம் அறக்கட்டளை, கெளரவ விருந்தினர், தங்க மங்கை விருது – 2022, தமிழால் இணைவோம்-உலகத் தமிழ் பேரியக்கம் ஆகியன இவருக்கு இப்பணிகள் மூலம் கிடைத்த விருதுகள், பரிசுகள், முக்கியஸ்தர்களின் வாழ்த்துகளும் அடங்கும்.
வாழ்க்கையில் நட்டம் என்று எதுவுமில்லை. லாபம் என்று பார்த்தால், பல ஆயிரக்கணக்கான மாணவ/மாணவியரின் அன்பினையும், பல்வேறு ஆளுமைகளின் இதயங்களிலும் இடம்பெற்றுள்ளேன். இந்த உலகில் நெல்லை உலகம்மாளுக்கு என்று தனி ஒரு இடம் கொடுத்துக் கொண்டிருக்கும் சமூகத்திற்கும், அதனைக் கண்டு ஆனந்திக்கும் என் பெற்றோருக்கும், செயல்பாடு கள் மூலம் நன்றி கடன் செலுத்திக் கொண்டிருக்கிறேன்.
தன் வாழ்க்கையில் எதையுமே பாசிட்டிவாக எதிர்கொள்ளும் நெல்லை உலகம்மாளைப் பார்த்தால் எந்தப் பெண்ணுமே ஓய்ந்து அமர மாட்டார்கள். புயல் ஒன்று புறப்பட்டதே என்று வேகம் கொள்வார்கள். அவ்வளவு எனர்ஜி ஏற்பட்டது எனக்கும் இந்தப் பளிச் பெண்ணுடன் உரையாடியபிறகு. உங்களுக்கும்தானே !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)