நித்யகல்யாணி – 2.
“கல்யாணி கல்யாணி. வெய்யில் வந்திருச்சு பாரு “ என்று எழுப்பினார்
பாட்டி பகவதி. “என்ன பாட்டி இப்பவே எழுப்புறீங்க.. இன்னும் கொஞ்சம் தூங்குறேன். அதான்
ஸ்கூல் இல்லீல்ல. தாத்தா எங்கே ? “ என்றபடி புரண்டு படுத்தாள் கல்யாணி.
”தாத்தா மாளய அமாவாசை தர்ப்பணம் கொடுக்கப் போயிருக்காரு. நீ
எந்திருச்சுப் பல் தேய்ச்சுட்டு வா. “ என்றபடி பாட்டி உள் சென்றார். கல்யாணி எழுந்து
பல் தேய்த்துவிட்டு பாட்டி கொடுத்த நாட்டுச் சர்க்கரை போட்ட பாலை அருந்திக் கொண்டிருக்கும்போது
தாத்தா நித்யதேவன் வீட்டிற்குள் நுழைந்தார்.
“தாத்தா எங்கே போனீங்க. தர்ப்பணம்னா என்ன ? “ என்றாள் கல்யாணி.
தாத்தா பேத்தியின் கைபிடித்துப் பக்கத்தில் அமர வைத்துக் கொண்டார். “ இறந்துபோன நம்ம
முன்னோர்களுக்குக் கொடுப்பதுதான் தர்ப்பணம்.”
“அப்பிடின்னா என்ன செய்வாங்க தாத்தா “.
”இறந்து போன நம்ம முன்னோர்களுக்கு மாதம் ஒரு முறை அவங்க இறந்த
திதியில் கொடுப்பது திவசம். வருடமொருமுறை கொடுப்பது தர்ப்பணம். எள்ளும் அரிசிமாவும்
கலந்து தர்ப்பைப் புல்லின் மேல் வைத்து நம்முன்னோர்களை நினைத்து நீர் நிலைகளில் கரைத்து
விடுவதுதான் தர்ப்பணம்.”
“நாம அதை ஏன் செய்யிறோம் தாத்தா”.