எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

ஞாயிறு, 10 அக்டோபர், 2021

வயிற்றிடை வாயனை வென்ற வீரர்கள்.

வயிற்றிடை வாயனை வென்ற வீரர்கள்.

ரொம்பப் பேசுறவங்களை உனக்கு காது வரைக்கும் வாய் என்பார்கள். அதிகம் சாப்பிடுபவர்களையும் வயித்துல என்ன மிஷினா ஓடுது அரைச்சுக்கிட்டு இருக்கியே என்பார்கள். ஆனால் நிஜமாகவே ஒரு அரக்கனுக்கு வயிற்றில் வாய் இருந்தது. அப்படிப்பட்டவனிடம் இரண்டு வீரர்கள் மாட்டிக் கொண்டார்கள். அவர்கள் எப்படித் தப்பித்தார்கள்னு பார்ப்போம் குழந்தைகளே.
தண்டகாரண்யத்தில் ராமரும் இலக்குவனும் சீதையைத் தேடி வருகிறார்கள். அப்போது கவந்தவனம் என்ற இடத்தைக் கடக்க நேர்கிறது. வனமா அது கொடிய பாலை போல் இருந்தது. கண்ணுக்கெட்டிய தூரம் வரை பயிர் பச்சை ஏதுமில்லை. விலங்கினங்கள் கூட அறவே காணோம். என்னாயிற்று இங்கே எனப் பார்த்தபடி வந்தனர் ராமனும் இலக்குவனும்.

எதிரே ஒரு சப்தம். ஏதோ ஒரு உருவம் நடந்து வந்தது. அதற்குத் தலையும் இல்லை, கழுத்தும் இல்லை, காலும் இல்லை, வெறும் வயிறும் இரண்டு கைகளும் மட்டுமே இருந்தன. அந்த வயிற்றிலும் இரு கண்களும் குகைபோன்று விரிந்த ஒரு வாயும் இருந்தன. இப்படிப்பட்ட ஒரு உயிரை, வயிற்றிடை வாயனை ராமனும் இலக்குவனும் எங்குமே கண்டிராததால் ஒரு நிமிடம் அப்படியே நின்று விட்டனர்.
வந்த உருவமோ இரண்டு கைகளையும் விரித்து எறும்பு முதல் யானை வரை கிடைத்தவற்றை அப்படியே வாரி வயிற்றில் உள்ள வாயில் போட்டு விழுங்கும் பழக்கமுள்ள பூதம். அவன் எப்படி வருகிறான் என்பதை உணரவே சில நொடிகள் பிடித்தன இருவருக்கும். கிட்டே நெருங்க நெருங்க அதன் விசித்திரம் புலப்படுகிறது இருவருக்கும்.
ஆனாலும் என்ன செய்வது? மிக அருகே அதன் கைப்பிடிக்கருகில் இருக்கிறார்கள் இருவரும்.தப்பித்து ஓடவே முடியாது. சீதையும் கிட்டாமல் மனமொடிந்த ராமன் தன் தம்பியிடம்” என் சீதை காணாமல் போய்விட்டாள், நம் தந்தை தயரதனோ மாண்டுவிட்டார், நம் தந்தைக்கு ஒப்பான ஜடாயுவும் சீதையைக் காக்கும்போது மாண்டுவிட்டார். இனி உலகில் எனக்கு என்ன இருக்கிறது. நான் இந்த பூதத்துக்கு இரையாகிறேன். நீ எப்படியாவது தப்பிச் சென்றுவிடு. நீயாவது பிழைத்தால் நான் மகிழ்வேன் “ என்கிறார்.  
இரண்டு கைகளையும் வாரி வீசியபடி அதி வேகமாக அவர்களை நெருங்கிவிட்டது அப்பூதம். இதோ தன் கரங்களை நீட்டி ஆவேசமாக இருவரையும் பிடிக்கப் போகிறது. வாயை வேறு குகை மாதிரி திறந்து விழிகளை விரித்துக் கொண்டு வருகிறது. இதோ பிடித்தும் விட்டது.
“அண்ணா நீ துன்பப்படும்போது நான் தனித்துப் போவது கோழைத்தனம். உனக்கு வந்த துயரம் எனக்கும் வந்ததுதானே. என் அண்ணியை, தந்தையை, தந்தையைப் போன்ற ஜடாயுவை நானும்தான் இழந்திருக்கிறேன். இந்த இக்கட்டான நேரத்தில் உன்னை விட்டுப் போவேனென்று நீ நினைத்தாயா ? அண்ணனுக்கு ஒரு துன்பம் என்றால் அது தம்பிக்கும்தான். உன்னுடன் சேர்ந்து போரிட்டு மடிவேனே தவிர உன்னை விட்டு ஓடமாட்டேன் “ என்று உரைக்கிறான்.

தன்னைவிட்டுப் போகும்படி ராமன் கூறி இலக்குவனைத் தள்ளுகிறான். அப்போது இலக்குவன் இராமனிடம் கூறுகிறான் “ அண்ணா, நாம் வனம்புகுமுன்பு நம் அன்னை சுமித்திரை என்ன சொன்னார்கள் தெரியுமா ? கானகத்தில் உன் அண்ணன் இராமனுக்கு உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் அதைத் தடுக்க முடியாவிட்டால் அவனுக்கு முன்பாக நீ உயிர்துறந்துவிடு என்று சொன்னார்கள். அதனால் நீ உயிர்துறக்குமுன் நான் இந்த பூதத்துக்கு இரையாகிறேன். “ என முன்னேறுகிறான்.
இராமனால் ஒன்றும் செய்ய முடியவில்லை. இவர்கள் வாக்குவாதத்தைப் பார்த்து வந்த பூதமே மிரண்டு திறந்தவாயை மூடாமல் நிற்கிறது. “ அண்ணா வாழ்வோ சாவோ ஒன்றாகவே இருப்போம். வா இப்போது இந்த பூதத்தின் கைகளை வெட்டிச் சாய்ப்போம் “ என்று அண்ணனிடம் கூறிவிட்டுப் பூதத்தின் இடப்பக்கம் பாய்கிறான்.

ஒரே நேரத்தில் இருவரும் அந்தப் பூதத்தின் கரங்களை வெட்ட அங்கே ஒரு அதிசயம் நிகழ்ந்தது. ஆமாம் இரத்தவெள்ளத்தில் விழுந்த அந்த பூதம் ஒரு கந்தர்வனாக மாறினான். ” என் பெயர் தனு. நான் ஒரு கந்தர்வன். அஷ்டவக்கிரமுனிவர் என்பவரை நான் ஒருமுறை உருவக்கேலி செய்தேன்.  அவர் மனம் நொந்து இட்ட ஒரு கொடிய சாபத்தால் நான் இப்படி வக்கிரமான உருவம் எடுக்க வேண்டியதாயிற்று.”
”அழகாய் இருந்த என் உடம்பில் வயிற்றில் வாய், கண் உண்டானது. கால்கள், தலை, கழுத்து இல்லை. என் கர்வம் அழிந்தது. உடனே தவறை உணர்ந்து அவரைப் பணிந்து சாபவிமோசனம் வேண்டினேன். அப்போது அவர் நீ ஒரு வனத்தில் சென்று தங்கு. அங்கு ராமன் இலக்குவன் என்ற சகோதரர்கள் வருபோது உனக்கு சுய உரு கிடைக்கும் என்று சாபவிமோசனம் கூறினார். ”
”நானும் பல்லாண்டுகாலம் இந்தக் கோர உருவத்துடன் இந்தக் கவந்த வனத்தைச் சுற்றி வந்தேன். இன்று நீங்கள் வந்து எனக்கு சாபவிமோசனம் அளித்ததற்கு நன்றி. நீங்கள் சீதையைத் தேடுவதாகச் சொன்னீர்கள். உங்களுக்கு உதவ சபரி என்றொரு தவமாது உதவுவாள். அதோடு ரிஷியமுக பர்வதத்தில் உள்ள சுக்ரீவனும் உதவுவான். அவர்களைத் தேடிப் போங்கள் “ என்று சொல்லி இராமனைப் பல்வேறு பாடல்கள் பாடித் துதித்தான்.  அதன் பின் அவன் தன் கந்தர்வலோகத்துக்குப் பறந்து சென்றான்.
ஒரு பூதத்துக்கு வயிற்றில் வாய் இருந்ததும் அது சாபவிமோசனம் பெற்றுக் கந்தர்வனாக மாறி தன்னைப் புதுப்பித்த வீரர்களுக்கு உதவியதும் விசித்திரமான செயல்தானே குழந்தைகளே.

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...