எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 17 ஜூன், 2019

முக்கனிகளும் முத்தமிழ்ப் பாட்டியும். தினமலர் சிறுவர்மலர் - 19.

முக்கனிகளும் முத்தமிழ்ப் பாட்டியும்.
முக்கனிகள் என்றதும் மா பலா வாழை என்று நினைத்திருப்பீர்கள். இங்கே முக்கனிகள் என்று மா, நாவல், நெல்லி ஆகிய கனிகள் பற்றியும் அவற்றோடு சம்பந்தப்பட்ட முத்தமிழ்ப் பாட்டி ஒருவர் பற்றியும் கூறப்போகிறேன். கவனமாகக் கேளுங்கள் குழந்தைகளே.
கைலாயத்தில் பரமசிவனும் பார்வதியும் அமர்ந்திருக்கிறார்கள். அப்போது வருகிறார் கலகக்கார நாரதர். அவர் கையிலோ ஒரு மாங்கனி. அதை பவ்யமாக சிவபெருமான் அருகில் சென்று கொடுக்கிறார்.கையில் கனியை வாங்கிய சிவன் அதை அன்னை பார்வதியிடம் கொடுத்து பிள்ளைகளுக்குக் கொடுக்கச் சொல்கிறார்.
“சிவசிவா. இக்கனி மிகச் சிறப்பு வாய்ந்தது. அற்புதக் கனி. அதை ஒருவரே உண்டால்தான் அதன் பயன் கிட்டும். பங்கிட்டுக் கொடுக்கக் கூடாது “ என்று சொல்கிறார் நாரதர். கனியைக் கண்டதும் பச்சைக் குழந்தைகளான பிள்ளையாரும் அவர் தம்பி முருகனும் ஓடி வருகிறார்கள்.
”அம்மா அக்கனியை எனக்கே கொடுங்க” என்று பிள்ளையார் கேட்க “நாந்தான் சின்னப் பிள்ளை செல்லப் பிள்ளை” எனக்கே கொடுங்க என்று முருகனும் கேட்க பார்வதியோ திகைக்கிறார். அதை சிவனிடம் கொடுத்து ”நீங்களே பிள்ளைகளுக்குக் கொடுங்கள்” என்று கூறுகிறார்.
கையில் வாங்கிய சிவன்” ஒரு போட்டி வைக்கிறேன். யார் உலகை சீக்கிரம் சுற்றிவருகிறார்களோ அவர்களுக்குத்தான் இக்கனி “ என்று கூற சுட்டிப் பிள்ளையான முருகன் தன் மயிலின் மீதேறி உலகைச் சுற்றத் தொடங்குகிறார். தனது வாகனமான மூஞ்சூறில் சுற்றி வந்தால் நேரமாகிவிடுமே என்று யோசித்த பிள்ளையார் அங்கே இருப்பவர்களிடம் புத்திசாலித்தனமாக ஒரு கேள்வி கேட்கிறார்.
“உலகம் என்றால் என்ன ?” “ குழந்தைகளுக்குத் தாய் தந்தைதான் உலகம் “ என்று சொல்கிறார்கள் அங்கே இருந்த கணங்கள். உடனே தன் தாய் தந்தையரை வலம் வந்து வணங்கி மாங்கனியைப் பெற்று ருசிக்கிறார். அப்போது அங்கே வந்த முருகனுக்குக் கோபம் கோபமாக வருகிறது.
அவர் கோபித்துக் கொண்டு பழநிமலைமேல் அனைத்தையும் துறந்த ஆண்டிக் கோலத்தில் போய் நின்று கொள்கிறார். அவரைச் சமாதானப் படுத்த முடியாததால் சிவனும் பார்வதியும் மனம் வருந்தி நிற்கிறார்கள். அங்கே வந்த ஔவை இச்செய்தியைக் கேட்டறிந்து பழனி மலைக்குச் செல்கிறார். முருகனைப் பார்க்கிறார். சமாதானப்படுத்துகிறார். 

முருகனோ கோபமாக “ஔவையே பெரியவர்களாக சேர்ந்து சின்னப் பிள்ளையான எனக்கு அக்கனியைத் தந்திருக்கலாம் அல்லவா. ஏன் தரவில்லை. “ என்று கோபிக்கிறார். அவ்வை உடனே முருகனைப் பலவாறு புகழ்ந்து ” நீயே ஒரு ஞானப் பழம் . உனக்கு எதற்கப்பா அந்த சாதாரணப் பழமெல்லாம் “ என்று சொல்லிக் கோபம் தணிக்கிறார்.  முருகனும் கோபம் தணிந்து பெற்றோருடன் சமாதானமாகிறார்.
மாங்கனிக்காக முருகனைத் தேற்றிய ஔவை ஒருமுறை நாவல்கனிக்காக முருகனின் பரிகாசத்துக்கு உட்பட்டதும் நடந்தது. மதுரையில் மலைப்பாங்கான இடத்தில் ஔவை நடந்துவந்து கொண்டிருந்தார். வழியில் ஒரு நாவல் மரம் முழுக்க நாவல்கனிகள் கனிந்து தொங்கிக் கொண்டிருந்தன. ஆனால் ஔவை தன் கைத்தடியால் எத்தனை முறை எவ்வி அடித்தும் ஒரு பழம் கூட கிட்டவில்லை. அங்கே ஒரு சிறுவன் மரத்தின் மேல் அமர்ந்திருந்தான்.
அவன் ஔவையைப் பார்த்துப் ”பாட்டி பழம் வேண்டுமா” எனக் கேட்டான். ஆமென்று தலையசைத்தார் ஔவைப் பிராட்டி. உடனே அந்தப் பையன் கேட்டானே ஒரு கேள்வி, “பாட்டி சுட்ட பழம் வேண்டுமா , இல்லை சுடாத பழம் வேண்டுமா “ வெய்யிலடிக்கிறதே அதனால் ஒருவேளை பழம் சுடுகிறது என்று சொல்கிறான் போலிருக்கிறது என நினைத்துச் சிரித்த பாட்டி ”சுடாத பழமே கொடப்பா” என்று கேட்கிறார்.   
சிறுவன் மரக்கிளையை உலுக்க அதிலிருந்து நாவல்கனிகள் மணலில் உதிர்கின்றன. அனைத்தும் கனிந்து இருப்பதால் அதில் மண் ஒட்டிக் கொள்கிறது. அவற்றைப் பொறுக்கிய ஔவை வாயால் மண்ணை ஊதித் தின்னத் துவங்குகிறார். உடனே சிறுவன் பரிகாசமாகக் கேட்கிறான்” என்ன பாட்டி சுடாத பழம் கேட்டியே.. என்ன பழம் சுடுதா “ என்று. அவனது புத்திசாலித்தனத்தைக் கண்டு வியந்த பாட்டி தன்னைத் தமிழால் மடக்கிய அச்சிறுவன் முருகன்தான் எனக் கண்டு பணிந்து வணங்குகிறார்.
ஆமாம் யார் இந்த ஔவையார். இவர் ஒரு தமிழ்ப் புலவர். சிறுபெண்ணாயிருந்தபோதே இவருக்கு மணம்புரிய இவரது பெற்றோர் முடிவெடுத்தனர். இவரோ அங்கே அரசமரத்தடியில் கோவில் கொண்டிருந்த விநாயரிடம் ஓடிவந்து “ நான் இளமையோடு இருப்பதால்தான் என் பெற்றோர் மணம் புரிந்து வைக்க விரும்புகிறார்கள். தமிழ்மொழி மேல் கொண்ட காதலால் நான் தமிழுக்கு சேவை செய்ய விரும்புகிறேன். என்னைக் கிழவியாக்கிவிடு கடவுளே “ என்று வேண்ட விநாயகர் இவருக்கு முதுமைத் தோற்றம் கொடுத்தாராம். இவரைத் தேடிவந்த பெற்றோர் யாரோ ஒரு கிழவி என நினைத்து இவரை விட்டுச் சென்று விட்டார்களாம்.
ஆமாம் மாங்கனிக்கு சமாதானப்படுத்தி நாவல்கனி பெற்ற பாட்டி நெல்லிக்கனியும் பெற்ற கதை பார்ப்போம். தகடூரை அதியமான் என்ற அரசன் ஆண்டுவந்தான். அவன் புலவர்களைப் போற்றுபவன். அவனுக்கு ஒரு நீண்ட வாழ்நாள் அளிக்கக்கூடிய அபூர்வ நெல்லிக்கனி கிடைத்தது. அதைத் தன் அவைக்கு வந்த ஔவைக்குக் கொடுத்து மகிழ்ந்தான். அதை உண்டபின்தான் அக்கனி அபூர்வக்கனி என்றும் நீண்டநாள் ஆயுள்தரும் கனி என்றும் ஔவைக்குத் தெரியவந்தது. “ மன்னா. அதை அரசனாகிய நீயே உண்டிருக்கலாமே. உன் மக்களுக்கு நீண்ட ஆயுளோடு நல்லாட்சி வழங்கி இருக்கலாமே. எனக்கு ஏன் அளித்தாய் ? “ எனக் கேட்டார்.
அதற்கு அதியமான் சொன்னான், “ ஔவையே நான் உண்பதை விட தமிழ்ப்பிராட்டியான நீங்கள் உண்டால் தமிழுக்கு இன்னும் நிறைய சிறப்பான பாக்கள். செய்யுள்கள் கிடைக்குமே. நீங்கள் நீண்டநாட்கள் வாழ்ந்து தமிழுக்குச் சேவை செய்யவேண்டும் என்று எண்ணியே உங்களுக்குக் கொடுத்தேன் “ என்றான். எவ்வளவு நல்லகுணம் படைத்த மாமனிதன், மன்னன் அதியன் இல்லையா குழந்தைகளே. நாமும் அதுபோல் நல்லனவற்றைப் பகிர்ந்து வாழ்வோம்.

டிஸ்கி 1 :-  இந்தக் கதை இதிகாச புராணக் கதைகள் என்ற தலைப்பில் 31. 5. 2019  தினமலர் சிறுவர்மலர் இதழில் இடம்பெற்றுள்ளது. நன்றி தினமலர் சிறுவர் மலர், தனது அழகான ஓவியங்களால் கதைக்கு எழில்கூட்டும் ஓவியர் ரஜனி & எடிட்டர் தேவராஜன் ஷண்முகம் சார்.


டிஸ்கி 2. :- 24. 5. 2019 இதழில் அரும்புகள் கடிதத்தில் புராணக் கதைகளைப் பாராட்டிய திருவையாறு வாசகர் கா.தரணிவேலன் அவர்களுக்கு நன்றிகள். 




டிஸ்கி 3.:- அரும்புகள் கடிதத்தில் இதிகாச புராணக்கதைகளைப் பாராட்டிய கங்களாஞ்சேரி வாசகி மு. இனியாவுக்கு, திருலோக்கி வாசகர் இ. தமிழ்சக்தி அவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.  

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...