எனது நூல்கள்.

செவ்வாய், 16 ஏப்ரல், 2019

வாக்கைக் காப்பாற்றத் தன்னையே கொடுத்த சக்கரவர்த்தி . தினமலர் சிறுவர்மலர் - 12.

வாக்கைக் காப்பாற்றத் தன்னையே கொடுத்த சக்கரவர்த்தி :-
ராஜாக்கள் தன்னை நாடி வருவோருக்குப் பொன்னைக் கொடுக்கலாம், பொருளைக் கொடுக்கலாம். அன்னமிடலாம், ஆனால் தன்னை நாடி வந்த புறாவுக்காகத் தன்னையே கொடுத்த ஒரு அன்பான சக்கரவர்த்தி பத்தித் தெரிஞ்சுக்கப் போறோம்.
சோழ மன்னர்களில் ஒருவர்தான் சிபிச் சோழர். தான் கொடுத்த வாக்கைக் காப்பாற்ற அவர் எதையும் கொடுக்கத் தயாரா இருப்பவர். இவர் ஒரு முறை தன்னுடைய அரண்மனையின் தோட்டத்தில் அமர்ந்திருந்தார்.
சுற்றிலும் மரங்களும் செடிகளும் கொடிகளும் அடர்ந்து பல்வேறு வகைப் பூக்களால் வாசனையாயிருந்தது அந்த நந்தவனம். மன்னர் அமைச்சருடன் உரையாடியபடி அமர்ந்திருந்த போது வானத்தில் பல்வேறு பறவைகள் பறந்து களித்துக் கொண்டிருந்தன.

அப்போது மேலிருந்து திடீரென ஒரு புறா அடிபட்டு சொத்தென மன்னன் சிபியின் மடியில் விழுந்தது.  அவர் அணிந்திருந்த பட்டுப் பீதாம்பரம் எல்லாம் ஒரே ரத்தம். அந்தப் புறாவைத் துரத்தியபடி ஒரு ஆண் பருந்து விர்ரென அம்பைப் போலப் பறந்து பின் தொடர்ந்து வந்தது.
வந்த பருந்து அந்தப் புறாவை மன்னரின் மடியில் இருந்து கொத்திச் செல்ல முயன்றது. நடு நடுங்கியது புறா. ”மன்னா காப்பாற்றுங்கள். அபயம், அபயம் ‘ என்று கிரீச்சிடுகிறது புறா “ அதன் இறக்கைகள் படபடக்கின்றன. மன்னர் தன் இரு கரங்களாலும் அதைப் பொத்தி அடைக்கலம் கொடுத்து அமைதிப் படுத்துகிறார்.
மன்னரின் அருகில் அமர்ந்த பருந்து சொல்லுகிறது. “ மன்னா , அந்தப் புறாவை நான்தான் வீழ்த்தினேன் அதுதான் என் இன்றைய உணவு. அதை எனக்குத் தாருங்கள் “
மன்னரோ பேசும் பறவைகளைப் பார்த்து ஆச்சர்யப்பட்டதோடு புறாவின் காயம் பார்த்தும் கவலையுறுகிறார். “பருந்தே, இன்று உனக்கு உணவாக நான் வேறு ஏதும் மிருகத்தின் இறைச்சியைத் தரச் சொல்லுகிறேன். இந்தப் புறாவை விட்டு விடு “
உடனே பருந்து “இல்லை எனக்கு இந்தப் புறாவின் இறைச்சியே வேண்டும். இதை உண்டால்தான் நான் வாழ்வேன். அப்படியானால்தான் என் குடும்பத்தை நான் காப்பாற்ற முடியும் “ என்கிறது.
”மன்னனின் கடமை தன்னிடம் அபயம் தேடிவந்தவர்களைக் காப்பது அதனால் இதற்கு ஈடாக நீ என்ன சொல்கிறாயோ அதைத் தருகிறேன். இப்புறாவை மட்டும் விட்டு விடு”  என்கிறார் மன்னர்.
“அப்படியானால் இப்புறாவின் எடைக்கீடாக எனக்கு புதிய இறைச்சி வேண்டும் ”என்கிறது.  
புதிய இறைச்சிக்கு எங்கே போவது. மன்னர் உடனே முடிவெடுக்கிறார். புறாவைக் காப்பாற்ற அதன் எடைக்கீடாக தன் தொடையில் இருந்து தசையை வெட்டிக் கொடுப்பதென. மந்திரி பிரதானியார் யார் தடுத்தும் கேட்கவில்லை. பருந்தோ புதிய தசையே இறைச்சியாக வேண்டுமெனப் பிடிவாதம் பிடிக்கிறது.
உடனே அங்கே யானைத் தந்தத்தினாலான தராசு கொண்டுவரப்படுகிறது. தராசின் இரு தட்டுக்களில் ஒரு தட்டில் புறாவை வைத்துவிட்டு மன்னன் கத்தியால் தன் வலதுபக்கத் தொடையின் சிறுபகுதியை தன் வாளால் வெட்டித் தராசின் இன்னொரு தட்டில் இடுகிறார்.
அட என்ன இது அச்சிறு புறாவின் தட்டு தாழ்ந்தே இருக்கிறது. மன்னன் இன்னும் சிறிது தசையை வெட்டி வைக்கிறார். அவரது தொடைகளில் ரத்தம் வழிகிறது. தன் வலியையும் பொருட்படுத்தவில்லை அவர். இன்னும் கூட தராசுத் தட்டுகள் சமமாகவில்லை.
ஆச்சர்யமாயிருக்கிறது மன்னருக்கு ஒரு சிறு புறா தூக்கும்போது இலகுவாக இருந்தது, தன் ஒரு பக்கத் தொடைச்சதை முழுவதையும் வைத்துமா அதன் எடைக்கு ஈடாகவில்லை. அவ்வளவு எடையா இருக்கிறது என்ற எண்ணத்தோடு தன்  வலது பக்கத்தின் தொடைச்சதை முழுவதையுமே வெட்டி தராசுத் தட்டில் இடுகிறார்.
மந்திரி பிரதானிகளும் அவையோரும் பதறுகிறார்கள். மன்னரோ கொடுத்த வாக்கைக் காப்பாற்ற தன் இடது தொடையையும் வெட்டத் துணிகிறார்.  அதையும் வெட்டி வைத்தும் புறாவின் எடை அதிகமாகவே இருந்தது. உடனே மன்னனே அந்தத் தராசுத் தட்டில் ஏறி அமர்கிறார்.
இப்போதுதான் புறாவின் எடைக்கீடாக மன்னனின் எடையும் அமைகிறது. தராசுத் தட்டு சமமாகிறது. பார்த்துக் கொண்டிருந்த பருந்தே பதறிப் போகிறது. தன்னையே உணவாகத் தர இசைந்த மன்னனைப் பார்த்து ,”மன்னா நிறுத்துங்கள்” என்று கூறுகிறது.
மன்னனும் மந்திரி பிரதானியாரும் காணும் வண்ணம் அந்தப் பருந்து இந்திரனாகவும் அந்தப் புறா அக்னிதேவனாகவும் மாறுகின்றன. மன்னனின் முன் தர்மதேவன் தோன்றுகிறார். ”மன்னா குடிகளைக் காப்பதில் நீயே சிறந்தவன். உன் மக்களை மட்டுமல்ல உன்னிடம் அபயம் நாடி வந்த புறாவைக் கூட அற்பப் பறவை என்று எண்ணாமல் தன்னையே ஈந்தாயே அந்தப் பண்பு நற்பெரும் பண்பு. உன் பண்பை அறிவதற்காகவே தர்மராஜனான நான் இந்திரனை பருந்தாகவும் அக்னி தேவனைப் புறாவாகவும் மாற்றி அனுப்பினேன்.
”மக்களைக் காக்கும் உன் மாண்பு வாழ்க” என்று சொல்லி மூவரும் மறைகிறார்கள். மன்னனின் காயங்களும் மறைகின்றன. தன்னை நாடி வந்தோரைக் காப்பதில் சிறந்தவரான சிபிச் சக்கரவர்த்தியை மனதார நாமும் வாழ்த்தி வணங்குவோம் குழந்தைகளே.

டிஸ்கி:-  இந்தக் கதை இதிகாச புராணக் கதைகள் என்ற தலைப்பில் 5. 4. 2019  தினமலர் சிறுவர்மலர் இதழில் இடம்பெற்றுள்ளது. நன்றி தினமலர் சிறுவர் மலர், தனது அழகான ஓவியங்களால் கதைக்கு எழில்கூட்டும் ஓவியர் அஷோக் & எடிட்டர் தேவராஜன் ஷண்முகம் சார்.

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...