விதிக்கப்பட்டதை எல்லாம் ஏற்று வாழ்ந்து சென்ற சீதையில் குரலாய் ஒலிக்கிறது ஆற்றைக்கடத்தல். அம்பை எழுதிய ஆற்றைக் கடத்தலை வெளி ரங்கராஜன் நாடக ரூபமாக பார்த்தபோது மனம் கூம்பியது, கொந்தளித்தது, வெம்பியது, வெந்தணலானது.
காலம் காலமாகப் பல ரகசியங்களைத் தாங்கி ஓடிக் கொண்டிருக்கும் நதியை உற்றுக் கவனித்திருக்கிறீர்களா.. உங்கள் பாடு என்ன கவலை ஆற்றைப் பேருந்தில் கடந்திருப்பீர்கள் , பரந்து விரிந்த அந்த ஆற்றில் எப்போதோ ஒரு முறை இறங்கி ஒரு முங்கு போட்டிருப்பீர்கள். அல்லது உங்கள் பங்குக்கு கழிவுகளை அதில் கொட்டி விஷமாய் ஆக்கி இருப்பீர்கள். பெண்களையும் அப்படித்தானே கடக்கிறீர்கள். தேவைக்கு உபயோகப்படுத்தி பின் பகடைக் காய்களாக. உடமைப் பொருட்களாக, பல நூற்றாண்டுகளாக.
உங்கள் இறுகிய பார்வையில் அவளை முடக்குகிறீர்கள். அல்லது அன்பால் முடங்க செய்கிறீர்கள். அவளைப் பற்றி வரையறை வைத்திருக்கிறீர்கள். இன்னது செய்யலாம் இன்னது கூடாது.. இப்படி இருக்கலாம் இப்படிக் கூடாது என்று. அதில் உங்கள் தோழிகளுக்கு சில சலுகைகள் இருக்கலாம். மகளுக்கும்கூட ஆனால் மனைவிக்கு அல்ல.