முதல் மரியாதை வடிவுக்கரசி
”நான் ஒன்ன நினைச்சேன் நீ என்ன நினைச்சே” ”அடி அம்மாடி ஒரு சின்னப் பொண்ணு அவ ஆசை வச்சா அவ நெஞ்சுக்குள்ளே..” “அவாரம்பூமேனி ஆடாதோ ஒயிலாட்டம்” “அழகிய கண்ணே” ”நான் ஒரு பொன்னோவியம் கண்டேன் எதிரே” ”மெட்டி ஒலி காற்றோடு என் நெஞ்சைத் தாலாட்ட” இந்தப் பாடல்களை 70ஸ் கிட்ஸ் மறந்திருக்க முடியாது. இதில் மெட்டி ஒலி பாடலில் விஜயகுமாரி, ராதிகா, வடிவுக்கரசி இந்த மூவர் இடையே இருக்கும் ஹார்மனி ரசிக்கத்தக்கது. சிலர் அறிமுகமாகும் போது மட்டும் கதாநாயகியாகவும் அதன் பின் சப்போர்ட்டிங் ஆர்டிஸ்டாகவுமே ஜொலிப்பார்கள். சில படங்களில் இந்த சப்போர்ட்டிங் ஆர்டிஸ்ட்தான் அந்தப் படத்தின் க்ளைமாக்ஸையே அதிரடியாக்குவார்கள். அந்தத் துணைப் பாத்திர வரிசையில் வடிவுக்கரசிக்கு முக்கியமான இடமுண்டு.
வடிவுக்கரசி பிறந்தது 7 ஜூலை 1962. டைரக்டர் ஏபி நாகராஜனின் தம்பி மகள். அவர் வடிவுக்கு வளைகாப்பு திரைப்படம் இயக்கியபோது பிறந்ததால் வடிவுக்கரசி எனப் பெயரிட்டார்கள். தனது பதினாறாவது வயதில் நடிக்க வந்தார். கன்னிப்பருவத்திலே படத்தில் ராஜேஷுடன் நாயகியாக அறிமுகம். அதன் பின் பாரதிராஜா இயக்கத்தில் 1978-ம் ஆண்டு வெளியான சிகப்பு ரோஜாக்கள் என்ற படத்தில் நடித்தார்.
350 திரைப்படங்கள். 40 தொலைக்காட்சித் தொடர்கள். நான்கு மொழிகளில் நடித்திருக்கிறார். முதலில் கதாநாயகி, அதன் பின் சகோதரி, தாய், எதிர்நாயகியாகவும் நடித்துள்ளார். ,84 இல் தன் 22 ஆவது வயதிலேயே வைதேகி காத்திருந்தாளில் விஜய்காந்தின் அம்மாவாக நடித்துள்ளார் ! அதற்கு அடுத்த வருடமே 1985 இல் முதல் மரியாதை பொன்னாத்தாவாக பொல்லாத பெண்மணித் தோற்றம்.