ஒரு மனிதனின் வாழ்வில்
இரு சிலம்புகளின் ஒலிக்கிடையேயான அவன் கதைதான் சிலப்பதிகாரம்.
ஒருத்தி சிலம்பினால்
கவரப்பட்டு இன்னொருத்தி சிலம்பினால் மரணப்பட்ட கோவலனின் காவிரிப்பூம்பட்டினத்துக்குச்
சென்றபோது அவனது வாழ்வின் மொத்தத் துயரையும் குத்தகை கொண்டதுபோல ஆவேசமாக அடித்து அடித்து வருத்தம் தீர்த்துக்கொண்டிருந்தன
அலைகள்.
ஒரு பெண்ணின் பார்வையிலேயே
இதுவரை சிலம்பைப் பார்த்திருக்கிறோம். ஒரு ஆணின் பார்வையில் சிலநிமிடம் யோசித்தேன்.
திருமணமான உடனே
ஆண் ஒருவன் ஒரு ஆடலரசியின் கால்தண்டையின் ஒலியின்பால் மயக்கப்பட்டுப் பின் சென்றுவிடுகிறான்.
அத்தலைக்கோலரிவையிடம் தன்னையே இழக்கிறான்.
தவறைத் தவறென்று அறியாமல் செய்த அவன் அத்தவறிலேயே மூழ்கி மணிமேகலை என்ற முத்தையும்
எடுக்கிறான்.
அதன் பின் அவனுக்கும்
அவனுடைய இணையான மாதவிக்கும் பிணக்கு ஏற்படத் திரும்பத் தன் மனை(வி)யிடமே திரும்புகிறான்.
எப்போதும் அவனுக்காய் மலர்ந்திருக்கும் கண்ணகியின் இல்லமும் உள்ளமும் அப்போதும் அவனை
ஏற்றுக் கொள்கிறது.
இருவரும் மதுரை
திரும்புவதும் கவுந்தி அடிகளைச் சந்திப்பதும், அதன் பின் கண்ணகி கணவனுக்கு அறுசுவை
உண்டி படைப்பதும் தனது தண்டையைக் கழட்டித்தருவதும் நிகழ்கிறது.
ஒரு சிலம்பில்
வாழ்வைத் தொலைத்தவன் மறுசிலம்பில் மீட்டெடுக்கப் பார்க்கிறான். இரு சிலம்புகள் மட்டுமல்ல
மூன்றாம் சிலம்பு ஊடுருவி ஊழ்வினையாய் அவனை ஆக்கிரமிக்கிறது. ஆனால் தவறிழைத்தபோதெல்லாம் காத்த சிலம்பு சரியான
பாதைக்கு வந்தபோது அவனைத் தவறானவனாகக் காட்டித் தண்டித்துவிடுகிறது.
மிகுந்த துயரம்
தோய்ந்த இக்கதையை இளங்கோ அடிகள் எப்படித்தான் எழுதினாரோ என்று வருந்தும்படி இருந்தது.
சீர்காழிக்கு அருகில்
உள்ள பூம்புகாரில் சிலப்பதிகாரக் கலைக்கூடத்தில் இசைக்கருவிகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
கண்ணகி, கோவலன் மாதவியின் புடைப்புச் சிற்பங்களோடு
கதை சொல்லப்பட்டுள்ளது. கண்ணகியின் கால் சிலம்பை எடுக்க முயன்றபோது காமிராவில் அந்த
ஃபோட்டோ மட்டும் சரியா விழலை. அத அப்ப கவனிக்கவும் இல்லை. இதுனாலதானே அவனே போய்ச்சேர்ந்தான்
என்ற காரணமோ என்னவோ.
கண்ணகியும் கோவலனும்
மணக்கோலத்தில்.
பூம்புகார் என்ற
பட்டினப்பாக்கம். ( காவிரிப்பூம்பட்டினம்.)
மணவிழா வாழ்த்து.