அறியாமை நிரம்பிய உலகில் அதிசயிக்கத்தக்க விஷயம் எது?
நிலைமாறிக்கொண்டே இருக்கும் இந்த உலகில் அதிசயப்படத்தக்க விஷயம் எது என்று தெரியுமா உங்களுக்கு.? இல்லாவிட்டால் அதைப் பற்றி ஒரு கந்தர்வன் கேட்ட கேள்விக்கு பஞ்சபாண்டவர்களில் மூத்தவரான தர்மர் சொன்ன பதிலைப் பார்ப்போம் வாருங்கள் குழந்தைகளே.
ஒருமுறை பஞ்சபாண்டவர்கள் ஒரு கானகம் வழியாகச் செல்ல நேர்ந்தது. அப்போது அவர்கள் அனைவரும் தாகவிடாயால் தவிக்க நகுலன் எங்கேனும் நீர் நிலை தென்படுகிறதா என ஒரு மரத்தின் மீது ஏறிப் பார்த்தான். தூரத்தே ஒரு நீர் நிலை தென்படவும் அங்கே சென்று தான் நீர் எடுத்து வருவதாக முதலில் நகுலன் புறப்பட்டுச் சென்றான். அவனைக் காணாததால் அடுத்தடுத்து சகாதேவன், பீமன், அர்ஜுனன் ஆகியோரும் சென்றனர். ஆனால் நீர்தான் வந்தபாடில்லை.எனவே தர்மரே கிளம்பிச் சென்றார்.
அங்கே அவர் தம்பிகள் மயங்கிக் கிடக்க ஒரு கணம் அதிர்ந்த அவரும் தவிர்க்க இயலாத தாகவிடாயால் அந்தத் தடாகத்துக்குள் இறங்கினார். அப்போது அதைக் காவல் காத்துவந்த யக்ஷன் அவர் முன் தோன்றினான். அவன் முன் பிறவியில் தான் ஒரு கந்தர்வனாக இருந்ததாகவும் இப்போது ஒரு சாபத்தால் இப்படி யக்ஷனாக ஆனதாகவும் கூறித் தன் கேள்விகளுக்குத் தக்க பதிலை அளித்தபின்னரே அந்த நீரை தர்மர் அருந்த வேண்டும் எனக் கட்டளையிட்டான்.
அவன் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் தர்மர் தக்க பதில் அளித்தார். அதில் முக்கியமான கேள்வி. ”இந்தப் பூமியில் அதிசயப்படத்தக்க விஷயம் எது என்பதுதான்.’”
அதற்கு தர்மர் “ இந்தப் பூமியே அதிசயமான படைப்புத்தான். ஓரணுவிலிருந்துதான் எல்லாமே உண்டாகின்றன. சின்னஞ்சிறு விதையிலிருந்து மாபெரும் விருட்சம் உண்டாகிறது. ஏன் பல்லாயிரம் விஷயங்களைச் சாதிக்கும் மனிதனே ஓரணுவில் இருந்துதான் உருவாகிறான்.”
”ஒரு சிறிய சிந்தனையை விதைப்பதன் மூலம் அவன் பல்வேறு கண்டுபிடிப்புக்களைச் செய்கின்றான். மனித சக்திக்கு அப்பாற்பட்ட பல்வேறு விஷயங்களும் இந்தப் பூமியில் நடந்துகொண்டுதான் இருக்கின்றன.”
“எல்லாவற்றையும் தன்னால் செய்துவிட முடியும் என நினைக்கிறான் மனிதன். எதைச் செய்யமுடிந்தாலும் ஒரு மனிதனுக்குத் தன்னுடைய இறப்பை மட்டும் தீர்மானிக்க முடியாது. சொல்லப்போனால் தன்னைச் சுற்றிப் பல்லாயிரம் பேர் தினமும் இறப்பதைப் பார்த்தபின்னும் தனக்கு நெருங்கியவர்கள், சமவயதுக்காரர்கள், சிறு வயதினர் ஆகியோரின் மறைவைப் பார்த்தபின்னும் தனக்கு மட்டும் இறப்பு வராது என்கின்ற ரீதியில் மனிதன் நடந்து கொள்வதே வியப்பளிக்கக் கூடியது.”
“.மனிதனானவன் காமம், குரோதம், மோகம், லோபம், ஆசை வயப்பட்டுக் காரியமாற்றுகிறான். என்றைக்கும் இப்புவியிலேயே சாஸ்வதமாயிருப்பதுபோல் மண், பெண், பொன்னின் மீது ஆசைவைத்துச் சேமிக்கின்றான். பின்னர் அனைத்தையும் விட்டுவிட்டு அழிகின்றான். பிறந்த எல்லா ஜீவராசிகளுக்கும் இறப்பு என்பது உண்டு என்பதை அறிந்திருந்தும் தான் மட்டும் நிரந்தரமாக ஜீவித்து இருக்கப்போவதாக ஒவ்வொரு மனிதனும் எண்ணிக் கொள்வதே இந்த உலகில் அதிசயிக்கத்தக்க விஷயம் ”
“ இறவா நிலை வேண்டும் என்றும் தனக்கு மட்டும் எப்போதைக்கும் அழிவில்லை என்றும் தனக்கு எதன் மூலமும் அழிவு வந்துவிடக்கூடாது என்றும், இப்புவியில் எப்போதும் ஜீவித்து இருக்க வேண்டும் என்றும், நிரந்தரத்துவம் வேண்டிக் கடவுளை நோக்கி மாபெரும் தவங்கள் செய்து வரங்கள் வாங்கிய அசுரர்கள் அழிந்த கதையும் அநேகம் உண்டு. இருந்தும் தான் மட்டும் நிரந்தரமாக இருக்கப் போவதைப் போல அறியாமைக்கு ஆட்பட்டு மனிதர்கள் புரியும் செயல்களே வியப்பளிக்கக் கூடியன. “
” காலையில் உதிக்கும் சூரியன் மாலையில் மறைகிறது. மாலையில் உதிக்கும் சந்திரன் காலையில் மறைகிறது. நட்சத்திரங்களும் அப்படியே. பருவகாலங்கள் மாறிக்கொண்டே இருக்கின்றன. காலையும் மாலையும் பிறந்திறந்து பிறக்கின்றன. காலம் என்னும் கலனில் உயிர்கள் உயிர்த்து முதிர்ந்து இறக்கின்றன. எல்லாவற்றையும் மண்மூடிக் கொள்கிறது.
நேற்றிருப்போர் இன்று இல்லை. இன்று இருப்போர் நாளை இல்லை. இந்த உண்மையைப் புரிந்திருந்தும் தாங்கள் மட்டும் அமரத்துவம் பெற்று வாழ்வோம் என நினைப்பது அறியாமை. இதுவே இப்புவியில் வியப்பளிக்கக் கூடிய விஷயம். மரணம் என்பது தவிர்க்க முடியாத விஷயம் என்பதை உணர்ந்து அறியாமையை விலக்கிக் கடவுளைச் சரணடைந்தால் இந்த ஆட்டபாட்டங்கள் அடங்கி மனிதமனம் உண்மைப் பொருளில் தெளிவு பெறும். ” என்றார் தர்மர்.
அவரது பதிலால் திருப்தி அடைந்த கந்தர்வன் நால்வரையும் உயிர்ப்பிக்கிறான். தானும் சாபவிமோசனம் பெற்று தன் கந்தர்வ உலகம் எய்துகிறான்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)