மண்டோதரி என்னும் மங்கை நல்லாள்
தீய ஆசை கேடு விளைவிக்கும். தனக்கு மட்டுமல்ல. தன்னைச் சேர்ந்தோரையும் எரிக்கும் என்பதை உணராமல் அழிந்தான் மன்னன் ஒருவன். அவனை நல்வழிப்படுத்த முயன்றாள் நங்கை நல்லாள் ஒருத்தி. உத்தமியான அவள் எத்தனைதான் அறிவுறுத்தினாலும் அதைக் கேளாமல் அழிந்த அந்த மன்னன் யார் அவனை நல்வழிப்படுத்த நினைத்த அவன் பத்தினி யார் எனப் பார்ப்போம் வாருங்கள் குழந்தைகளே.
மாலைப்போதவிழ்ந்து இரவு முகிழ்க்கும் நேரம். கடல் தாவி இலங்கையில் காவல் தெய்வமும் தாண்டி இராவணனின் அரண்மனைக்குள் அடி எடுத்து வைத்தான் அனுமன். மாட மாளிகைகள், கூட கோபுரங்கள், அரிவைகள் ஆர்ப்பரித்துச் சிரிக்கும் உப்பரிகைகள், நிலவொளியில் மின்னும் கலசங்கள், இரவு நேரத்து உற்சாகத்தால் நிரம்பி வழிந்த அங்காடிகள், இராஜபாட்டைகள், வாசனை மலர்கள் சூடிய அழகு மங்கையரின் ஆடல் மாளிகைகள் இவற்றைக் கடந்து சீதாதேவியைத் தேடிக்கொண்டு முடிவில் அந்த அரண்மனைக்கு வந்திருந்தான்.
அவன் நின்ற பகுதி தோட்டங்கள் சூழ்ந்த ஒரு மாளிகை. அது இராவணனின் மனைவி மண்டோதரி தேவியின் அந்தப்புரம். அங்கே ஒரு சப்ரமஞ்சத்தில் உறக்கத்தில் ஆழ்ந்திருந்த ஒரு அழகிய வனிதையைக் கண்டான். பேரொளி வீசியது அவள் முகத்தில். சிறுத்த இடையுடன் வடிவழகோடு ஒரு பக்கமாக ஒஞ்சரித்துப் படுத்திருக்கும் அவளுக்கு அரம்பையும் ஊர்வசியும் கால் பிடித்து விட்டுக் கொண்டிருக்க, மேனகையும் திலோத்தமையும் சாமரம் வீசிக் கொண்டிருந்தார்கள்.
உறங்கிக் கொண்டிருந்த பெண்ணின் வெள்ளந்தியான அழகிய உள்ளம் போலவே அவள் முகமும் தூக்கத்தில் கூட விகசித்தது. அழகு பொலியும் அப்பெண்ணின் திருமுகத்தை ஒரு சாளரத்தின் வழி கண்ட அனுமன் ஒருகணம் அவள்தான் சீதையோ என்று பிரமித்தான். ’இதோ சீதை, சீதையைக் கண்டுவிட்டேன்’ என்று குதூகலித்தது அவன் உள்ளம்.
ஆனால் அடுத்த கணமே தெளிந்தான், ’என்னது, போயும் போயும் ஒரு அரக்கனின் மாளிகையிலா சீதை துயில்வாள், அதுவும் இவ்வளவு நிம்மதியாக?. இவள் சீதையாய் இருக்காது. இருந்தும் இவளின் மாசு மருவில்லாத முகம் இவளின் வெள்ளை உள்ளத்தைப் பிரதிபலிக்கிறதே. உருவில்தான் இவள் இயக்கியோ, மனதில் தேவதையோ? என் சிந்தை குழம்புகிறதே ’ என ஐயத்தோடு நோக்கினான்.
அது இராவணன் மாளிகை என்பதால் அவள் அவன் மனைவி மண்டோதரியாய் இருக்கலாம் எனத் தெளிந்தான். அனுமனே மதிமயங்கும் வண்ணம் பொன்னிதயம் வாய்த்தவள் மண்டோதரி. அவள் இராவணனைத் திருமணம் செய்து கொண்டதே ஒரு அபூர்வ நிகழ்வுதான்.
அவளது தந்தை மயன் ஒருமுறை தன் மகள் மண்டோதரியுடன் கானகத்தில் வசித்து வந்தார். இலங்கையின் மன்னனாகப் பட்டம் சூட்டப்பட்டு பூலோகம் மேலோகம் என எல்லா லோகங்களையும் தன் கைப்பிடிக்குள் கொண்டு வந்து நவக்கிரகங்களையும் தன் சிம்மாசனப் படியாக வைத்த இராவணன் ஒருமுறை அக்கானகத்துக்கு வேட்டையாடச் சென்றிருந்தான். அங்கே மயனையும் மங்கைப் பருவத்தில் மலர்ந்திருந்த மண்டோதரியையும் சந்தித்தான். அவளின் அழகையும் எழிலையும் கண்டு மயங்கினான் இராவணன்.
அரக்கர் குலத்தைச் சேர்ந்த மயன் இராவணனிடம், “ நான் அசுர சிற்பியான மயன். எனக்கும் ஹேமை என்ற அப்சரஸ் பெண்ணுக்கும் பிறந்த பெண்மகள் இவள். பெயர் மண்டோதரி. எனக்கு மாயாவி, துந்துபி என இரு மகன்கள் வேறு இருக்கிறார்கள். எனது மனைவி ஒரு வேண்டுகோளின் பொருட்டு தேவதைகளுக்கு உதவச் சென்றிருக்கிறாள். மணவயதை அடைந்த இப்பெண்ணைக் கூட்டிக் கொண்டு நான் கானகம் முழுவதும் இடம் பெயர்கிறேன். நீங்கள் யார் ?” எனக்கேட்டார்.
”நான் பிரம்மாவின் மகனான புலத்தியரின் மகன் விச்ரவஸ் மகரிஷியின் இரண்டாவது மகன். எனக்கு தசமுகன் என்று பெயர். இலங்கை எனது தேசம். நான் அதன் மன்னன்” எனக் கம்பீரமாகக் கூறினான்.
இதைக் கேட்டு மகிழ்ந்த மயன் அங்கேயே தன் மகள் மண்டோதரியை இராவணின் கைப்பிடித்துக் கொடுத்து மணம் செய்து வைத்தார். அங்கேயே அக்கினி வளர்த்து அவளைத் தன் பத்தினியாக்கி இலங்கை அழைத்து வந்தான் இராவணன். பலகாலம் தான் பெற்ற தவப்பலன் அனைத்தையும் இராவணனுக்குத் தாரை வார்த்துக் கொடுத்தார் மயன்.
இலங்கை அரண்மனைக்கு அடியெடுத்து வைத்தாள் மண்டோதரி. அசுர குலத்திலும் நாகர் குலத்திலும் ஏகப்பட்ட மனைவிகள் இருந்தும் இவளே ராவணனின் மனம் கவர்ந்தவளாய் ஆனாள். சாமுத்ரிகா லட்சணத்திற்கு எடுத்துக்காட்டாய்த் திகழ்ந்தவள் மண்டோதரி, பேரழகி, குணம், குலம் அழகு, ஒழுக்கம், இவற்றில் சீதைக்குச் சிறிதும் குறைந்தவள் இல்லை மண்டோதரி. சிறந்த மதியூகி,
இல்லற வாழ்க்கையின் பயனாக சிறந்த வீரனான இந்திரசித்தனின் தாயானாள். வாழ்க்கை அப்படியே போயிருந்தால் நலமாய் இருந்திருக்கும். ஆனால் இராவணனுக்கு வாய்த்த அடாத ஆசை நாட்டையே ஆட்டி வைத்தது. சூர்ப்பனகையின் சொற்கேட்டுச் சீதையை இலங்கைக்கு எடுத்து வந்து சிறைவைத்தான்.
”அறமே உருவெடுத்து வந்தவன் ராமன் ஆகையால் பிறன்மனை நயத்தல் தவறு, சீதையை விட்டு விடுங்கள்” என்று மாரீசன் கூறிய அச்சொற்களையே இராவணனிடம் கூறிக் கெஞ்சினாள் மண்டோதரியும். நல்வழி போதித்தாள். போர் மூண்டது. இலங்கை இருண்டது. வாராது என்று நினைத்த அழிவு வந்தேவிட்டது இலங்கைக்கு. மானுடர்கள் வானரர்களின் துணையுடன் படையெடுத்து விட்டார்கள். அபாயச் சங்கு அலறியது மண்டோதரியின் மனத்தில். கணவனைத் தடுத்தாள்.
”அறத்துக்குப் புறம்பான செயல்களைச் செய்தல் கூடாது அறத்துடன் இணைந்தவர்க்கு அனைத்து உயிரும் ஆதரிக்கும். அறத்தை விலக்கியவருக்கு உடன்பிறந்தோரும் விலக்கி வைப்பர். சீதையைத் திருப்பி அனுப்பி விடு. ராமனின் பகை வேண்டாம். மானிடனால்தான் உன் அழிவு நிகழும் என்றே நான் அதைத் தடுத்தேன். ஆனால் மானிடன் தானே என நீ தப்புக்கணக்குப் போட்டாய். பிறன்மனை தீண்டும் பெரும் பாவம் செய்தாய். பதிவிரதையின் கண்ணீரும் சாபமும் பழி வாங்கும். கணவனின் செயல்பாடு மனைவியையும் தாக்கும்.” மண்டோதரி முதல் மாரீசன் வரை கூறிய அறிவுரைகள் எதுவும் அவனை அசைக்கவில்லை.
தந்தைக்குப் பின்புலமாய்ச் சென்று ஆதரித்த தனயனையும் தடுத்தாள். ஆனால் அவள் வார்த்தை வெல்லவில்லை. போர்க்களம் சென்று பொருது இறந்த இந்திரசித்தனைப் பார்த்து அவள் புலம்பினாள். ”அஞ்சினேன் அஞ்சினேன். அமிழ்தால் செய்த நஞ்சு சீதை. அந்நஞ்சால் இன்று என் இந்திரசித்தன் இறந்தான். நாளை என் உயிருக்கும் மேலான இலங்கை வேந்தனுக்கும் இதே நிலைதானோ” எனக் கதறுகிறாள்.
இதையெல்லாம் கேட்கும் நிலையில் இல்லை இலங்கை வேந்தன். மண்டோதரி மட்டுமல்ல, மாலியவான் கும்பகர்ணன், விபீஷணன், ஏன் மரணத்துக்கு முன்னர் இந்திரசித்துமே அறிவுரை சொல்லியும் இராவணன் கேட்கவில்லையே. செவி வழி ஏறிய அறிவுரைகள் மனம்வழி புகவில்லை.மூளைக்கும் ஏறவில்லை. இதோ யுத்தம் தொடங்கி விட்டது. தன் மனைவி சீதையை நினைத்த நெஞ்சைத் தன் பாணங்களால் துளைத்தார் இராமர்.
நேருக்கு நேர் நடந்த ராம ராவண யுத்தத்தில் ராமபாணம் பாய்ந்து மண்ணில் விழுந்த தன் கணவரின் உடல் மேல் விழுந்து கதறிக் கதறி அழுதாள். மண்டோதரி. பெண்ணாசையால் அழிந்த, பொன்னாபரணங்கள் அணிந்த ராவணன் மார்பினைத் தடவித் தடவி ஏக்கங் கொண்டு உரத்த குரலில் புலம்பி அழுதாள். அவனைப் பிரிந்த ஏக்கம் தாளாமல் அவன் உடல்மீதே விழுந்து மரித்தாள். அவளின் உத்தம குணங்களால் கூட அவனைச் சீர்திருத்த முடியவில்லை.
சீதையின் மேல் வைத்த தகாத ஆசையால் சீதையைப் போன்ற நற்குணங்கள் பொருந்திய மண்டோதரியை மறந்து தன்னையும் தன் சீரையும் சிறப்பையும் உடன்பிறப்புக்களையும் தான் பெற்ற மக்களையும் மனைவியையும் இழந்தான் இராவணன். கற்புக்கரசியான மண்டோதரி அதைத் தடுக்க நினைத்தும் அவளால் இயலாமல் போனது. அவனது நினைவிலேயே வாழ்ந்து மடிந்தவள். அவளின் அறம் கணவனைக் காத்து வந்தது. ஆனால் கணவனின் தீய ஆசை கேடு விளைத்தது.
எனவே எவ்வளவுதான் நற்குணங்கள் வாய்க்கப் பெற்றிருந்தாலும் சிறு தீய ஆசை கூடக் கேடு விளைக்கும் என்பதை உணர்ந்து தீய செயல்களில் நாட்டத்தை விடுத்து அறச்செயல்களில் ஈடுபடுவோம் குழந்தைகளே.
பதிலளிநீக்குவலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!