எனது பதிநான்கு நூல்கள்

ஞாயிறு, 14 நவம்பர், 2021

ஆண்கள் எதிர்கொள்ளும் அக நெருக்கடிகள்.

ஆண்கள் எதிர்கொள்ளும் அக நெருக்கடிகள்.

பெண்கள் தினம் என்றால் மார்ச் 8 என்று கூறிவிடுவோம். அதென்ன ஆண்கள் தினம் ? அப்படி ஒரு தினம் ஏன் கொண்டாடப்படுகிறது ? பெண்களுக்கான அக புற நெருக்கடிகளே அவர்களை முன்னேறவிடாமல் இன்னும் தடுக்கும்போது ஆண்களுக்கும் அக நெருக்கடியா?

சொல்லப்போனால் கடந்த முப்பதாண்டுகளுக்கும் மேலாக ஆண்களுக்கும் அக புற நெருக்கடிகள் நிறைந்த சூழல்தான் நிலவுகிறது. முன்புபோல் ஆண் வேலை செய்துவிட்டு வர பெண் வீட்டைக் கவனித்துக் கணவனையும் குடும்பத்தையும் மட்டுமே போஷித்துக் கொண்டிருந்த காலம் மாறி விட்டது. இன்றைய காலகட்டத்தில் பெண்ணும் வேலைக்குச் செல்வதால் ஆண் வீட்டில் சரிபங்கு வேலைகளையும் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டியதாகிறது.

சிறு வயதிலிருந்தே ஆண் என்றால் அழக்கூடாது. குடும்பப் பொறுப்பை ஏற்க வேண்டும். தாயைக் கவனித்துக் கொள்ள வேண்டும். சகோதரிக்குச் சீர் செய்ய வேண்டும். நன்கு படித்துப் பெரிய வேலைக்குப் போக வேண்டும். உத்யோகம் புருஷ


லட்சணம் என்றெல்லாம் சொல்லிச் சுமையை ஏற்றி விடுகிறோம்.

வேலைவாய்ப்பின்மை, கடினமான கல்வி முறை மற்றும் தேர்வுகள், தன் உருவம் குறித்த தாழ்வு மனப்பான்மை ( குண்டாக, ஒல்லியாக, வழுக்கையாக இருப்பது), குடும்பப் பிரச்சனைகள், சிலருக்குச் சிறுவயதில் ஏற்படும் பாலியல் துஷ்பிரயோகம், வேலை அல்லது பணம் சம்பாதிக்க வேண்டியதன் மன அழுத்தம், திருமண வாழ்வின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற இயலாமல் இருத்தல், குடித்தல், புகைத்தல் போன்ற பழக்கங்கள், ஆண் தன்மைக் குறைவு, பாலியல் பிரச்சனைகள், ஆண் மலட்டுத்தன்மை, விவாகரத்துப் பிரச்சனைகள், வேலை சார்ந்த பிரச்சனைகள், உடல் சார்ந்த பிரச்சனைகள், சமூக வலைத்தளங்களினால் ஏற்படும் உணர்வெழுச்சிகள், குற்றங்கள், இணைய நட்புகள், கூடாநட்பின் இடையூறுகள், வியாபாரத் தோல்விகள், நோய்கள், தன்னை நிலைநிறுத்த வேண்டிய கட்டாயம் என ஆண்கள் எதிர்கொள்ளும் அகநெருக்கடிகளும் ஏராளம். இன்றைய காலகட்டத்தில் 95 சதவிகித ஆண்கள் இதுபோல் ஏதோ ஒரு அக நெருக்கடியைச் சந்தித்து மீள்வதாக ஒரு சர்வே தெரிவிக்கிறது. 


இந்தச் சூழலில் ஆண்களின் உரிமை மற்றும் பாதுகாப்புக் குறித்த விழிப்புணர்வு கருதி 1992 இல் இருந்து ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 19 ஆம் தேதி சர்வதேச ஆண்கள் தினம் கொண்டாடப் படுகிறது. இது தாமஸ் ஆஸ்டர் என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டது. 1999 இல் மேற்கு இந்தியாவில் உள்ள ட்ரினிடாட்& டெகோபா நாட்டில் இது மிக விரிவாகக் கொண்டாடப்பட்டது.  
2021 ஆம் ஆண்டுக்கான சர்வதேச ஆண்கள் தினம்  ஆண்களுக்கும் இளையர்களுக்கும் ஆரோக்கியமான உடல்நலத்தைப் பேணிக்காக்க வலியுறுத்துகிறது.  

இந்த 2021 ஆம் ஆண்டு சர்வதேச ஆண்கள் தினத்தின் கருப்பொருள் பாலின உறவை மேம்படுத்துவது மற்றும் ஆண்களுக்கு மட்டுமல்ல, பெண்களுக்கும் பாலின சமத்துவத்தை மேம்படுத்துவதாகும். அதாவது "ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையில் சிறந்த உறவைக் கைக்கொள்வது”. பெண்கள் உரிமை எனப் போராடுகிறோமே அதேபோல் ஆண்களையும் சமபாலராக நடத்தவும் மதிப்பளிக்கவுமே இந்த தினம் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆண்களும் பெண்கள் போன நூற்றாண்டுகளில் எதிர்கொண்ட நெருக்கடிகளை எதிர்கொள்ளுகிறார்கள்.

ஆணும் பெண்ணும் சமம் என்கிறோம்.ஆனால் இன்று பெண்கள் படிப்பு, சம்பாத்யம் ஆகியவற்றில் உயரத்தில் இருப்பதால் அவர்களை விடக் குறைந்த சம்பளம் வாங்கும் ஆண்களுக்குத் திருமணம் எட்டாக்  கனியாகி வருகிறது. வீடு, கார், பணம், சொத்து உள்ள மணமகனுக்கே முன்னுரிமை. அப்படி இணையும் திருமணங்களும் பணப் பொருத்தம் இருந்தாலும் மனப் பொருத்தம் இல்லாததால் விவாகரத்தில் முடிகின்றன. குழந்தை வளர்ப்பு, குடும்ப நிர்வாகம் வீட்டு வேலைகள் ஆகியவற்றில் இன்று ஆணுக்கான பங்களிப்பும் பொறுப்புக்களும் அதிகமே. தாயுமான தந்தைகளும் பெருகி வருகிறார்கள்.

இருமணம் இணையும் திருமணங்களில் இந்தியா எதிர்கொள்ளும் பிரச்சனைகளைச் சீனாவும் எதிர்கொள்கிறது. சீனாவிலும் தாமதத் திருமணங்கள் நிகழ்கின்றன. 20 வயதுக்கும் மேல் பலவருடங்கள் திருமணம் ஆகாமல் தனித்து வாழும் பெண்களை ”ஷெங்க் னு”  என்று அழைக்கிறார்கள். சிறு கிராமங்களில் அதிகம் சம்பாத்தியம்/வருமானம் இல்லாமல்  அதன் காரணமாகத்  திருமணமாகாமல் தனித்து வாழும் ஆண்களை ”ஷெங்க்னான்” என்று அழைக்கிறார்கள். இது ஒரு சமூகப் பிரச்சனை ஆகிவருகிறது.

எல்லாத் தகுதியும் நிரம்பப் பெற்ற ஏ க்ரேட் ஆண்கள்  தங்களைவிட அனைத்திலும் குறைந்த பி க்ரேட் பெண்களை மணந்து கொள்கிறார்கள். அதேபோல் பி க்ரேட் ஆண்கள் சி க்ரேட் பெண்களையும் சி க்ரேட் ஆண்கள் டி க்ரேட் பெண்களையும் மணக்கிறார்கள். ஆனால் இந்த கல்வி, பதவி, சம்பாத்தியம், உயரம், வயது ஆகியவற்றில் உயர்ந்த ஏ க்ரேட் பெண்களுக்கும் எல்லாவற்றிலும் சுமாராக இருக்கும் டி க்ரேட் ஆண்களுக்கும் திருமணம் என்பது எட்டாக் கனியாக இருக்கிறது. சமூகத்தின் மனநிலைகளில் மாற்றம் ஏற்பட வேண்டும்.

பொதுவாக நமக்கு ஆண்களின் கோபம்தான் தெரிகிறது. அதன் பின் உள்ள அக்கறை, குடும்ப நலம் தெரிவதில்லை. தந்தையற்ற குடும்பங்களில்  மூத்த சகோதரன்தான் இரும்புத்தூண். சிறிது கூட மனம் கோணாமல் தன் உணர்வுகளை வெளிக்காட்டாமல் குடும்பத்துக்காக சகோதர சகோதரிகளின் வாழ்வுக்காகத் தன் வாழ்வைத் தியாகம் செய்த, தந்தையாகவே மாறிய தனயன்களும் ஏன் தம்பிகளுமே உண்டு.

மனைவிக்கும் தாய்க்கும் சகோதரிகளுக்கும் இடையில் பாசத்தால் மாட்டித் தவிக்கும் ஆண்களும் உண்டு. ஒவ்வொரு சகோதரிக்கும் நெருக்கடி நேரத்தில் உதவிக்கரம் நீட்டுவது சகோதரர்களே. வடநாட்டில் பையாதூஜ், ராக்கி என சகோதரிகள் சகோதரர்களின் நீண்ட ஆயுளுக்காக இறைவனிடம் வேண்டிக் கொண்டும், திலகமிட்டு இனிப்பு ஊட்டி விட்டு ராக்கி கட்டியும் கொண்டாடும் பண்டிகைகள் உண்டு. கணவரின் ஆயுள் ஆரோக்கியத்துக்காகவும் சூரிய உதயத்திலிருந்து சந்திரோதயம் வரை உண்ணாநோன்பு மேற்கொண்டு கர்வாசௌத் என்றொரு விரதமும் இருப்பார்கள்.  

ஆண்களின் உடல்நலமும் மனநலமும் பேணிப் பாதுகாக்கப்பட வேண்டும். ஆண்களுக்குப் புரோஸ்டேட் புற்று, விதைப்பை புற்று, குடல் புற்று ஆகியவை அதிகம் காணப்படுகின்றன. அதோடு தற்கொலை விகிதமும் தற்காலத்தில் அதிகம் உள்ளது. குடும்பங்களில் ஆண்களின் பங்களிப்புப் போற்றப்பட வேண்டும். நாற்பதைக் கடந்த ஆண்கள் அனைவரும் வருடம் ஒரு முறை முழு உடல் பரிசோதனை செய்துகொள்வது அவசியம். புத்தக வாசிப்பு, தனக்குப் பிடித்த பொழுதுபோக்குகளை மேற்கொள்வதும் அவர்களைப் புதுப்பிக்கும்.

பார்க்கக் கடினமாகத் தெரிந்தாலும் மெல்லிய மனம் படைத்த ஆண்களும் உண்டு. வெற்றி பெற்ற ஒவ்வொரு பெண்ணின் பின்னாலும் ஒரு ஆண் இருக்கிறார். எனவே இந்த ஆண்கள் தினத்தில் அக நெருக்கடிகளுக்கு ஆளாகிப் புது உலகை எதிர்கொள்ளும் அனைத்து ஆண்களுக்கும் நாம் அன்புக் கரம் நீட்டி நம் வாழ்த்தையும் அன்பையும் தெரிவிப்போம்! அவர்களைப் போற்றிப் பாதுகாப்போம்!!

3 கருத்துகள்:

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...