எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 20 ஜூலை, 2021

இண்டஸ்ட்ரியல்/மருத்துவ ஆக்ஸிஜன் பற்றி வள்ளிபழனியப்பன் அவர்களுடன் ஒரு பேட்டி

 திருச்செந்தூரான் கேஸஸ் சேல்ஸ் & சர்வீசஸ் ப்ரைவேட் லிமிடெட் திருமதி வள்ளிபழனியப்பன் அவர்களுடன் ஒரு பேட்டி


கொரோனா காலத்தில் ஆக்ஸிஜனின் தேவை அதிகம். இந்த சமயத்தில் அம்பத்தூர் நகரத்தார் சங்கத்தின் மகளிர் அணித் தலைவி திருமதி வள்ளி பழனியப்பன் அவர்கள் தன் கணவரோடு இணைந்து திருச்செந்தூரான் கேஸஸ் சேல்ஸ் & சர்வீஸ் என்னும் நிறுவனத்தை நடத்தி வருகிறார். இது இண்டஸ்ட்ரியல் ஆக்ஸிஜனை தொழிற்சாலைகளுக்கு சப்ளை செய்யும் நிறுவனம். இவரின் கணவர் திரு பழனியப்பன் சிவில் காண்ட்ராக்டராக இருக்கிறார்.  பள்ளத்தூர் இலுப்பைக்குடிக் கோயிலைச் சேர்ந்த இவர்கள் சென்னை, அம்பத்தூரில் இரு குழந்தைகளுடன் வசித்து வருகிறார்கள். இண்டஸ்ட்ரியல் ஆக்ஸிஜனை மருத்துவத் தேவைக்குப் பயன்படுத்த முடியுமா.. வேறு என்னென்ன உபயோகங்கள் என்று தெரிந்து கொள்ளும் ஆர்வம் வந்தது. 


இது வித்யாசமான துறையாக இருந்ததால் அவரிடம் உங்களுக்கு இண்டஸ்ட்ரியல் ஆக்ஸிஜன் துறையில்/ பிஸினஸில் ஆர்வம் வந்தது எப்படி , இதை எப்படிக் கற்றுக் கொண்டீர்கள்? இதற்கென ஏதும் படித்தீர்களா என்று கேட்டேன்.  ” படிக்கும் காலத்தில் இருந்தே தொழில் செய்யவேண்டும் என்ற ஆர்வம் இருந்தது. திருமணத்திற்கு பின்பு கணவரும் தொழில் தொடங்குவதற்கு ஊக்கமளித்தமையால் அவர் தொழில் செய்யும் இடங்களுக்கு சென்று  பேப்ரிகேஷன் ,(Fabrication) செய்யும் பொழுது உருளைகளில் (Cylinder) ஆக்சிஜன் நிரப்பி வருவதையும் பார்த்தேன். மற்றும் என்னுடைய சகோதரரும் இத்துறை சம்பந்தமாக தகவல் சேகரித்து ஊக்கம் அளிப்பதும் நான் இத்துறைக்கு வர முக்கிய காரணம். 

தொழில் தொடங்கலாம் என்று முடிவெடுத்தவுடன் இத்துறை சம்பந்தமாக திரவ ஆக்சிஜனை உருளைகளின் நிரப்பும் இடங்களிலும் அதை எங்கு எங்கு பயன்படுத்துகிறார்கள் என்பதை கேட்டறிந்து  அங்கு சென்று பார்வையிட்டு அதன் அனுபவத்தை தெரிந்து கொண்டேன்.எங்கள் நிறுவனத்தின் பெயர் திருச்செந்தூரான் கெஸஸ் சேல்ஸ் அண்ட் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட்.”என்றார். 

என்ன மாதிரியான முறைகளில் ஆக்ஸிஜன் நிரப்புகிறீர்கள், அவற்றின் பயன்பாடு என்ன என்று சொல்லுங்கள் ,இத்துறையில் உங்கள் ஸ்பெஷாலிட்டி என்ன, புதுமைகள் என்ன என வினவியபோது “ திரவ ஆக்சிஜன் ஐ Inox... National oxygen போன்ற பெரிய நிறுவனங்களிடம் இருந்து பெற்று அதனை உருளைகளில் வாயுவாக நிரப்பி MRF, MFL, MFPL மற்றும் Fabrication நடைபெறும் தொழிலகங்களுக்கு வினியோகம் செய்வது.   ஆக்சிஜன் வினியோகம்  செய்யும் இடங்களுக்கு சென்று  அவர்களுக்கான தேவை குறித்தும்  உருளைகளை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதையும் கலந்துரையாடி அதற்கு ஏற்றவாறு குறித்த நேரத்தில்  வினியோகம் செய்வது எங்களுடைய ஸ்பெஷாலிட்டி” என்றார். 

இத்தொழிலின் ஏற்ற இறக்கங்கள் ,இடர்கள், கொரோனா கால தேவைகள் என்ன ? அதை எப்படி எதிர்கொண்டீர்கள், இண்டஸ்ட்ரியல் ஆக்ஸிஜனை சுவாசிக்க உபயோகிக்க முடியுமா என்று கேட்டதற்கு “ ஆக்சிசன் பற்றாக்குறை ஏற்படும் காலங்களிலும் எங்களுடைய வாடிக்கையாளர்கள் பாதிக்காத வகையில் அவர்களுடைய தேவைகளை பூர்த்தி செய்வது பெரிய சவாலாக இருக்கும். கொரோனா காலத்தில்  இன்டஸ்ட்ரியல் தேவையைவிட மருத்துவமனைகளில் ஆக்சிஜனின் தேவை மிக அதிகம்.  எனவே இன்டஸ்ட்ரியல் கேஸ் விநியோகம் அரசாங்க விதிமுறைப்படி நிறுத்தி வைக்கப்பட்டது. இண்டஸ்ட்ரியல் மற்றும் மருத்துவத்திற்கு பயன்படும் திரவ ஆக்சிஜன் ஒன்று தான். மருத்துவ ஆக்சிசன் நிரப்புவதற்கு அரசாங்கம் அனுமதி பெற்றிருந்தால் ஆக்சிஜனை அதற்கு உரிய அரசாங்க  வழிமுறைப்படி நிரப்பிப் பயன்படுத்தலாம்.  

எத்தனை வருடங்களாக இந்நிறுவனத்தை நடத்தி வருகிறீர்கள்.  இத்தொழிலின் நுணுக்கம் பற்றியும் கூறுங்கள். “இந்த நிறுவனத்தை கடந்த நான்கு வருடங்களாக நடத்தி வருகின்றோம். சிலிண்டர் மற்றும் ஸ்டோரேஜ் டேங்க்கையும் கையாளும் விதம் மற்றும் அதற்கு உரிய காலத்தில் டெஸ்ட் செய்தல் மிக அவசியம். புதிதாக இத்துறையில் ஈடுபட விரும்புபவர்களுக்கு இது  மிகவும் நல்ல தொழில். வெற்றிக்காக பொறுமையுடனும் கவனத்துடனும் செயல்பட வேண்டும்.


மேலும்  இத்தொழிலின் லாப நஷ்டங்கள் நாம் தொழிலை நடத்தும் விதங்களை பொறுத்தே அமையும். . நிகழ்காலத்திலும் எதிர்காலத்திலும் மருத்துவத் துறை மற்றும் தொழிலகங்களில் இதன் தேவை மிக அதிகம். கடின உழைப்புடன் செயல்பட்டால் லாபம் நிச்சயம்.பெரிய தொழில் நிறுவனங்கள் நாங்கள் அளிக்கும் சேவை சிறந்த முறையில் இருப்பதால் இன்று வரை எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வருகின்றனர். வரும் காலங்களில் நிறுவனத்தை விரிவுபடுத்தி பெரிய நிறுவனங்கள் நடத்தும் ஒப்பந்த புள்ளிகளிலும் கலந்து கொண்டு சிறந்த முறையில் வெற்றி கொள்வோம். ”என்கிறார். 

பெருந்தொற்று இடர்க்காலத்தில் திரவ ஆக்ஸிஜனின் பயன்களையும், தொழிலக ஆக்ஸிஜனின் பயனையும் விளக்கிக் கூறிய அவரின் பணி சிறக்கட்டுமென வாழ்த்தி வந்தோம். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...