எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 21 ஜனவரி, 2022

பொறுமையால் வென்றவர்கள்.

பொறுமையால் வென்றவர்கள்.

எவ்வளவுதான் நல்லவர்களாக இருந்தாலும் சிலர் தம் கோபத்தால் அனைத்தையும் கெடுத்துக் கொள்வார்கள். ஆனால் பஞ்சபாண்டவர்கள் தம் பொறுமையால் எதற்கும் உதவாத காட்டையே திருத்தி நாடாக்கினார்கள். அதைக் கண்டு துரியோதன் முதலானோர் அழுக்காறு அடைந்தார்கள். பாண்டவர்கள் எப்படிக் காட்டைத் திருத்தி நாடாக்கினார்கள் எனப் பார்ப்போம் வாருங்கள் குழந்தைகளே.
அஸ்தினாபுர அரண்மனையில் குருவம்சத்தில் பிறந்த  திருதராஷ்டிரன் மூத்தவர் ஆனாலும் பார்வையற்றவர் என்பதால் ஆட்சிப் பொறுப்பை ஏற்க இயலாமல் இருந்தது. அந்தக் காலக்கட்டத்தில் ராஜ்ஜியத்தின் மன்னராவதற்கும் சில கட்டுப்பாடுகள் இருந்தன. அதனால் திருதராஷ்டிரன் தன் தம்பியான பாண்டுவை மன்னராக்கினார்.
அண்ணன் இருக்கத் தான் அரசாள்வது பிடிக்காத பாண்டு அரசாட்சியை தனது தம்பியான விதுரரின் பொறுப்பில் ஒப்படைத்துவிட்டுத் தன் மனைவிகளாக குந்தி, மாத்ரி ஆகியோருடன் கானகம் ஏகினார்.

கானகம் சென்றதும் அடுத்த ஆண்டிலேயே தர்மபுத்திரர் பிறந்தார். அதற்கு அடுத்த ஆண்டுகளிலேயே பீமன், அர்ஜுனன், நகுலன், சகாதேவன் ஆகியோரும் பிறந்தனர். பாண்டுவின் புத்திரர்கள் ஐந்து பேர் என்பதனால் பஞ்ச பாண்டவர்கள் என அழைக்கப்பட்டனர். கானகத்தில் பீமன் பிறந்து ஒருநாள் கழித்து இங்கே திருதராஷ்டிரருக்குத் துரியோதனன் மகவாய்ப் பிறந்தான். அடுத்தடுத்து நூறு குழந்தைகள் பிறந்தன திருதராஷ்டிரனுக்கு.
பாண்டு கானகம் ஏகியதால் ராஜ்ஜியம் தங்களுடையதே என மனப்பால் குடித்தனர் திருதராஷ்டிரனும், துரியோதனனும். தர்மபுத்திரருக்குப் பதினாறு ஆண்டுகள் ஆகும்போது பஞ்சபாண்டவர்கள் தம் தந்தையாகிய பாண்டுவை இழந்து தாய் குந்தி, மாத்ரியுடன் அஸ்தினாபுரம் திரும்பினர்.
அதுவரை இளவரசுக்குரிய மிதப்பில், அடுத்த சக்ரவர்த்திக்குரிய பெருமிதத்தில் அரண்மனையில் உலாவந்துகொண்டிருந்தான் துரியோதனன். பஞ்சபாண்டவரின் வருகை அவன் மனதிலும் அவனது தந்தை திருதராஷ்டிரன் மனதிலும் நஞ்சை ஊற்றியது.ஏனெனில் உரிமைப்படி தர்மபுத்திரர்தான் அடுத்த இளவரசுப் பட்டத்துக்குரியவர்
அதன் பின் பதிமூன்று ஆண்டுகள் பாண்டவரும், கௌரவர்களும் துரோணர், கிருபர் ஆகியோரிடம் ஆய கலைகளைக் கற்றனர். எல்லாரிலும் திறமையாளனான அர்ஜுனன் வில்லுக்கு விஜயன் எனப் புகழப்பட்டான். இதெல்லாமில்லாமல் பீமன் செய்த விளையாட்டுத்தனமான செயல்கள் கூட கௌரவர்களை அச்சமுற வைத்தது.
திருதராஷ்டிரனோ தானும் தன் பிள்ளைகளும் இதுவரை ஏகபோகமாக அனுபவித்து வந்த அரசு ’தன் மகனுக்கு வருமா, தம்பி மகனுக்குப் போகுமா’ என்ற கவலையில் உழன்று கொண்டிருந்தான். அதன் பின் துரியோதனாதிகள் பாண்டவரை அரக்குமாளிகைக்கு அனுப்பித் தீமூட்டி எரிக்க முயன்றனர். அதிலும் தப்பித்துவிட்டனர் பஞ்சபாண்டவர்.
அதன்பின் அவர்கள் அஸ்தினாபுரம் திரும்பி வந்தபோது அவர்களுக்கு நாட்டில் பாதியைத் தரவேண்டி வந்தது. மக்களிடம் நல்லபேர் வாங்குவதற்காக திருதராஷ்டிரன் எதற்குமே உதவாத காண்டவ வனத்தைப் பாண்டவர்களுக்குத் தந்தான்.
வனம் என்றால் பறவைகள் மிருகங்கள் இருக்கும்தானே. அதிலும் காட்டு விருட்சங்களில் மேல் கொடிகள் படர்ந்திருக்க சிங்கம், சிறுத்தை போன்ற கொடிய விலங்குகளும் நாகங்களும் உலவிக்கொண்டிருந்தன. தட்சகன் போன்ற நாகர்களும் அரக்கர்களும் அவ்வனத்தை ஆக்கிரமித்திருந்தார்கள்.

காண்டவனத்தைத் தங்கள் பெரியப்பா கொடுத்ததும் சிறிது திகைத்துப்போன பாண்டவர்கள் அடுத்து அதை நாடாக மாற்றக் கடுமையாக உழைத்தார்கள். அர்ஜுனன் மயன் என்ற சிற்பியின் உதவியை நாடினான். பாண்டவர்கள் ஐவரும் அவ்வனத்தை ஆக்கிரமித்திருந்த கொடியவரைப் போரிட்டு அகற்றினர்.
அதன்பின் கொடிய விலங்களையும் மாய்த்தனர். காட்டுக்கொடிகளை எல்லாம் வெட்டி நிலத்தைச் சமப்படுத்தினர். உவர்நிலமாய் இருந்தவற்றை விவசாயிகள் கொண்டு உழுது பண்படுத்தி விவசாய நிலமாக்கினர். இதற்குப் பல்லாண்டுகள் ஆயிற்று. பாண்டவர்பால் வாஞ்சையும் அன்பும் கொண்ட மயனோ இந்திரலோகத்தை ஒத்த ஒரு நகரை அங்கே நிர்மாணித்துக் கொடுத்தான். அதை இந்திரப் பிரஸ்தம் என அழைத்தனர்.
வனம் நாடானதும் மக்கள் அங்கே குடியேறத் தொடங்கினர். இந்திரலோகத்தைப் போன்ற அதன் அழகைப் பார்த்து வியந்து பாண்டு புத்திரர்களின் பெருமைகளைப் போற்றினர். தர்மபுத்திரர் ராஜ்ஜிய பாரத்தில் ஈடுபட்டிருக்க அர்ஜுனனும் பீமனும் நாட்டை விரிவாக்குவதில் ஈடுபட்டனர். நகுலனும் சகாதேவனும் தங்கள் சகோதரர்களுக்குப் பக்கபலமாய் இருந்தனர்.

அர்ஜுனன் நாட்டை விரிவாக்கத் திக்விஜயம் மேற்கொண்டான். பல்வேறு நாடுகளுக்கும் சென்று அரசர்களை வென்று தம் இந்திரப்பிரஸ்தத்தை விரிவாக்கினான். போரிட்டு அந்நாட்டின் தனக்குவியலைக் கொண்டு வந்து கருவூலத்தை நவநிதியத்தால் நிரப்பினான். அவன் தந்தை பாண்டுவால் வெல்ல இயலாத மன்னனான ஸௌவீர ராஜன் என்ற அரசனை வென்றதே எங்கும் பேச்சாக இருந்தது.
இதன் பிறகு பாண்டவர்கள் ராஜாக்களை வென்று தம் ராஜ்ஜியம் பெற்ற வெற்றியைக் கொண்டாட ராஜசூயயாகம் செய்ய நினைத்தனர். அதனால் தம் பெரியப்பா திருதராஷ்டிரனையும் தம் தம்பிகளாகிய கௌரவர்களையும் அழைத்தனர். காட்டைத்தானே கொடுத்தோம் என்ன பெரிதாகச் செய்திருக்கப் போகிறார்கள் என்ற அலட்சியத்தோடு வந்த கௌரவர்க்கு இந்திரப் பிரஸ்தத்தைக் கண்டு பொறாமை ஏற்பட்டது.
அது மயனின் உழைப்பால் இந்திரலோகத்தையும் விட சிறந்து விளங்கியது. அந்த அரண்மனை முகப்பில் இருந்த படிகளே அனைவரையும் வாய்பிளக்க வைத்தன. உள்ளேயோ பல்வேறு இந்திரஜால வேலைகளோடு மயன் மாளிகையாகத் திகழ்ந்தது அரண்மனை. தாமரை பூத்த தடாகங்களும், வாவிகளும், எழில் கொஞ்சும் சிற்பங்களும் ஓவியங்களும் அணி செய்தன. நடனமாந்தர்களும் இசைக் கலைஞர்களும் வந்தோரை வரவேற்று எழிலூட்டினர்.
பல்வேறு நாட்டு மன்னர்களும் தர்மபுத்திரரை ஆதரித்து நட்புக் கொண்டு யாகத்துக்குத் தேவைப்படும் பொருட்களைக் கொண்டு வந்து குவித்தார்கள். சீனத்திலிருந்து ஜாவாவரை தர்மபுத்திரரின் புகழ் பரவி இருந்தது.
ராஜ சூய யாகம் வெகு சிறப்பாக நடைபெற்றது. வந்திருந்த ராஜாக்கள் அனைவருமே தர்மரையும் அவர் அரசாட்சியையும் புகழ்ந்தார்கள். இது அனைத்தையும் பார்த்த துரியோதனின் நெஞ்சு மட்டுமல்ல. திருதராஷ்டிரன் மற்றும் கௌரவர்களின் நெஞ்சும் பொறாமையால் வெந்தது. ஆனாலும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட காட்டையும் திருத்தி நாடாக்கிய பாண்டவர்களின் பொறுமை போற்றத்தக்கதுதானே குழந்தைகளே.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...