எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 11 ஜனவரி, 2022

நகுலன் - ஒரு மாயவெளிச் சிற்பம்.

காரைக்குடி கம்பன் கழகத்தைச் சேர்ந்த கம்பன் அடிசூடி திரு பழ.பழனியப்பன் அவர்களும், திரு. முத்துப் பழனியப்பன் அவர்களும் நூற்றாண்டு காணும் அறிஞர்கள் பற்றிய காணொலிகளைத் தொகுத்து வெளியிட்டு வருகின்றார்கள். அதற்காக என்னிடம் நகுலன் பற்றி ஒரு காணொலி எடுத்து அனுப்பும்படிக் கேட்டிருந்தார்கள். அதற்காகத் தொகுத்த குறிப்புகளை இங்கே அளித்துள்ளேன். இதன் யூ ட்யூப் லிங்க். 

நகுலன் I ஒரு மாயவெளிச் சிற்பம் I தேனம்மை லெக்ஷ்மணன்




காரைக்குடி கம்பன் கழகம், வாழ்த்து, நகுலன் நூற்றாண்டு விழா. இதுபோல் பிற அறிஞர்களின் நூற்றாண்டு விழாவையும் கொண்டாடும் கம்பன் கழகம்.

Writers writer – எழுத்தாளர்களின் எழுத்தாளர். எழுத்தாளர்களால் கொண்டாடப்படும் எழுத்தாளர்.

1921-ல் கும்பகோணத்தில் பிறந்தவர் நகுலன் என்ற டி. கே துரைசாமி,  திருவனந்தபுரத்தில் 14 வயதிலிருந்து வசித்து வந்தவர். தமிழ் ஆங்கிலம் இரண்டிலும் முதுகலைப்பட்டம் பெற்றவர். நனவோடை உத்தியில் வெர்ஜீனியா வுல்ஃப் எழுதிய நாவல்களில் தனது ஆய்வினைச் செய்தவர். திருவனந்தபுரத்தில் உள்ள மார் இவனீயோஸ் கல்லூரியில் நாற்பது ஆண்டுகளாக ஆங்கிலம் கற்றுக்கொடுத்தார். கநாசுவைப் போலச் சிறந்த விமர்சகர், நாவலாசிரியர், மொழிபெயர்ப்பாளர்,  கவிதை, சிறுகதை, விமர்சனம், மொழிபெயர்ப்பு எனப் பல தளங்களில் இயங்கியவர்.

தமிழ் இலக்கிய மரபுச் சிந்தனைகளில் தனது நவீனக் கவிதைகள் மூலம் புது வெளிச்சம் பாய்ச்சியவர் நகுலன்.  இவரது கதைகளில் வெளிப்படும் சுசீலா என் மனம் கவர்ந்தவள். ஏனெனில் என் ஆசிரியையின் பெயரும் அதுவே.

 நிழல்கள்’ (1965), ‘நினைவுப் பாதை’ (1972), ‘நாய்கள்’ (1974), ‘நவீனன் டைரி’ (1978), ‘இவர்கள்’ (1983), ‘சில அத்தியாயங்கள்’ (1983), ‘வாக்குமூலம்’ (1992) , மஞ்சள் நிறப் பூனைக்குட்டி. ஆகிய எட்டு நாவல்கள் எழுதி இருக்கிறார்.

 கவிதைத் தொகுதிகள்மூன்று’, ‘ஐந்து’. பின்னர், ‘கோட்ஸ்டாண்ட் கவிதைகள் இவற்றின் மூலம் நவீன கவிஞராக அறியப்பட்டார். மூன்று ஐந்தில் புராண மாந்தர்களைப் பற்றிய புனைவுகள் இருக்கும். கொல்லிப்பாவை என்ற தலைப்பில் திரௌபதி, அகலிகை போன்றோர்.

ஜேம்ஸ் ஜாய்ஸ் டி எஸ் எலியட் கே அய்யப்ப பணிக்கர் நூல்களை மொழிபெயர்த்திருக்கிறார். தமிழில் நகுலன் என்ற புனைபெயரிலும் ஆங்கிலத்தில் தனது பெயரிலும் எஸ் நாயர் என்னும் பெயரிலும் எழுதி இருக்கிறார். சுப்பிரமணிய பாரதியாரின் “ தி லிட்டில் ஸ்பாரோ” என்ற நூல்தான் இவர் மொழி பெயர்த்த நூல்களில் முக்கியமானது. ஆங்கிலத்தில் இவரது குறிப்பிடத்தக்க எழுத்துக்கள் “WORDS TO THE WIND, NON BEING, A TAMIL WRITERS JOURNAL 1 , 2, 3 , WORDS TO THE LISTENING AIR.

நீல பத்மநாபன், ஷண்முக சுப்பையா, கநாசு, ஆ. மாதவன். ஆகியோருடன் தொடர்பில் இருந்தவர்

இவருடைய எழுத்து மனவெளியில் உண்டாக்கும் மாயச் சிற்பங்களின் அழகு வியக்க வைக்கும். அவரின் பல பரிமாணங்களில் கவிதை வெளி எனை ஈர்த்தது. சில கதைகள் மனப்பிறழ்வு , உன்மத்த நிலையைச் சொல்வன. 

காப்கா, ஜாய்ஸிலிருந்து திருக்குறள், மஸ்தான் சாய்பு, திருமந்திரம், சித்தர் பாடல்களின் பிரதிபலிப்புகள், எடுத்தாள்தல்களும் உண்டுயதார்த்தம், தத்துவம். குழந்தைத் தன்மை, உரையாடலைக் கூடத் தத்துவத்தளத்துக்கு எடுத்துச்செல்லும் வல்லமை. குழந்தையின் புன்னகை கொண்டவர்.

சில அப்ஸ்ட்ராக்ட் வகை  கவிதைகள்.  சிறுகதைகளில் உரையாடலைத் தத்துவத்தின் வழி கொண்டு செல்வது இவரின் தனிச்சிறப்பு. சி. சு செல்லப்பாவின் எழுத்து இதழில் தன் முப்பத்தி எட்டாவது வயதில் எழுதத் துவங்கியவர்

அடையாள மயக்கம், சுயத்தின் பிளவு, இருப்பின் சிக்கல் – இருப்பின் வியாபகம் மறைதல்,மனப்பிறழ்வு, மயக்கநிலை, பித்து நிலை, உன்மத்தக் குரல், தானற்ற நிலை

குழந்தைக்கான எளிமை அதுவே தத்துவார்த்தம் கொள்கிறது. தன்னை அறிவுஜீவியாக முன் நிறுத்திக் கொள்வதில்லை. மெல்லிய கேலி இருக்குமே தவிர யாரையும் புண்படுத்தும் எள்ளலான கவிதைகள் என்பது கிடையாது.

குழந்தைமையும் மேதமையும் கொண்டவர். அரை நூற்றாண்டுக்கும் மேலாக இலக்கியப் பயணம் செய்தவர். தன்னைத் தன்னிலிருந்து விலக்கிப் பார்க்கும் அக தரிசன உணர்வு இவர் எழுத்துக்களில் வெளிப்படும்.

உன்மத்தநிலை  வெளிப்படும் கவிதைகள்.

நான் வழக்கம்போல் என் அறையில் நான் என்னுடன் இருந்தேன் கதவு தட்டுகிற மாதிரி கேட்டது ''யார்'' என்று கேட்டேன் ''நான் தான் சுசீலா கதவைத் திற "என்றாள் எந்த சமயத்தில் எந்தக் கதவு திறக்கும் என்று யார்தான் சொல்ல முடியும்?

நான்(2) நேற்றுப் பிற்பகல் சுசீலா வந்திருந்தாள் கறுப்புப் புள்ளிகள் தாங்கிய சிவப்புப் புடவை வெள்ளை ரவிக்கை அதேவிந்தைப் புன்முறுவல் உன் கண்காண வந்திருக்கிறேன் போதுமா என்று சொல்லிவிட்டுச் சென்றாள் என் கண் முன் நீல வெள்ளை வளையங்கள் மிதந்தன.

இருப்பின் சிக்கல்கள் வெளிப்படும் கவிதைகள். –

முக்கோணம்
முடிவில் ஒரு
ஊசிமுனை ஞானம்.

மேலே செல்ல
எத்தனிக்கும் வார்த்தைகள்
மிக விரைவாகக் கீழே சரிந்து விழும்

இருப்பதற்கென்றுதான் வருகிறோம்
இல்லாமல் போகிறோம்.

உனக்கு நீ இருப்பதால்
நான் உண்டு;
எனக்கு நீ இல்லை என்றால்
நான் இல்லை.

இறப்பைப் பற்றிய  கவிதைகளில் –

உங்கள் மனநிலையை
அது மாற்றிவிடும்’.
உங்களை எதுவும்
பயமுறுத்த முடியாது’.
அதாவது
இல்லாது இருத்தலை
முன்கூட்டி ருசிப்பது’.

சுயத்தின் பிளவு வெளிப்படும் கவிதைகள் –

எனக்கு
யாருமில்லை
நான் கூட..

நினைவு ஊர்ந்து செல்கிறது
பார்க்கப் பயமாக இருக்கிறது
பார்க்காமல் இருக்கவும் முடியவில்லை

மழை மரம் காற்று என்ற நெடுங்கவிதை பல்வேறு தளங்கள் கொண்டது.

அடையாள மயக்கம் சொல்லும் கவிதைகள்.

அம்மாவிற்கு எண்பது வயதாகிவிட்டது
கண் சரியாகத்தெரியவில்லை
ஆனால் அவன் சென்றால்
இன்னும் அருகில் வந்து
உட்காரக் கூப்பிடுகிறாள்
அருகில் சென்று உட்காருகிறான்
அவன் முகத்தைக் கையை
கழுத்தைத் தடவித் தடவி
அவன் உருக்கண்டு உவகையுறுகிறாள்
மறுபடியும் அந்தக்குரல் ஒலிக்கிறது
நண்பா அவள் எந்த சுவரில்
எந்தச்
சித்திரத்தைத் தேடுகிறாள் ?`

வந்தவன் கேட்டான்
`
என்னைத் தெரியுமா ? `
 `தெரியவில்லையே` என்றேன்
`
உன்னைத்தெரியுமா ?` என்று கேட்டான்
`
தெரியவில்லையே` என்றேன்
`
பின் என்னதான் தெரியும்` என்றான்.
உன்னையும் என்னையும் தவிர
வேறு எல்லாம் தெரியும் என்றேன்.

இருப்பின் வியாபகம் , தேடல்  வெளிப்படும் கவிதை

நீங்கள்?” என்று உசாவ
அவனுக்கு அவன் பெயர்
மறந்துவிட்டது.

இந்தக்கவிதையில்அவன்என்ற வார்த்தை திரும்பத்திரும்ப வருகிறது. சொற்சிக்கனம் அறியாதவரல்ல நகுலன். பின் ஏன் இத்தனை அவன்? எல்லா அவன்களும் ஒன்றா, கேட்பவன் எவன், அவன் பெயரை மறப்பவன் எவன் இவையெல்லாம் அறுதியிட்டு பதில்சொல்லமுடியாத வினாக்கள். “

நம் குடும்ப அமைப்புகளில் யாரும் யாரிடமும் எதையும் மனம் விட்டுப்பகிர்ந்து கொள்வதில்லை. அலுத்துச் சலித்து மரணிக்கிறோம் என்ற அவஸ்தையைப் பதிவு செய்யும் எழுத்து. மற்றவர்களுக்காக ஒரு தோற்றம்தரும் வாழ்வை நாம் அனுசரிக்கிறோம் என்பது அவர் எழுத்தில் ப்ரத்யட்சம் ஆகி இருக்கும்.

ஒரு ராத்தல் இறைச்சி எஸ்ரா தொகுத்த நூறு சிறந்த சிறுகதைகளில் இடம் பெற்றிருக்கிறது. ஒரு ராத்தல் இறைச்சி முன்பே படித்த கதைதான். இறைச்சிக்காக காலை நக்கும் நாயை சகிக்க முடியவில்லை என்று இவர் அடையாளமிடுவது அடிவருடும் மனிதர்களையே.

நினைவுப்பாதை டி கே துரைஸ்வாமியிலிருந்து நகுலனாக மேற்கொண்ட பயணம். அதில் நவீனன் என்ற படைப்பாளிக்கும், நகுலன் என்ற புனைபெயர் கொண்ட மனிதனுக்கும் நடக்கும் உரையாடல்தான் கதை.

பூமிச்செல்வம் அவர்கள் நகுலனின் 16 கதைகளைத் தேர்ந்தெடுத்து நேர்த்தியாக அளித்துள்ளார். நகுலனின் கதைகளில் நாம் ஆத்ம தரிசனத்தை அடையலாம். இயற்கையின் மீதான காதல், சுசீலா என்ற அரூப ரூபத்தின் மேலுள்ள ப்ரேமை, தனிமை, உள்நிறைவுடன் விலகி இருத்தல், குதியாட்டம்போடும் மனது, மன விசாரங்கள், பிரமை அல்லது சித்தப் ப்ரமை எனக் குறிக்கப்படும் விஷயம் குறித்தான விவாதம், வாழ்க்கையை அதன் போக்கில் கடந்து செல்லும் ஞானம், வெறுமே அமர்ந்து மரத்தைக் காணும் காற்றை உணரும் மனம் எனக் கலவையாக இருக்கிறார் நகுலன்.

தெருவின் கதை ஆத்மவிஞ்ஞாபனம். சவப்பெட்டி தயாரிப்பவன் அதற்கும் சலுகைகள் கொடுப்பதும் ஏமாந்துவிடாமல் இருக்கச் சொல்வதுமான இவரது எள்ளல் பிடித்திருந்தது.

சிதம்பர ரகசியத்தை யாரும் தெரிந்து கொள்வதில்லை. ஏனெனில் திரை விலகுவதில்லை என முத்தாய்ப்பாகக் கூறுகிறார். உண்மைதான் இல்லாவிட்டால் கோடீஸ்வரனோ, தெருவில் நிற்பவனோ இவ்வளவு பாடுகளும் ஏது ?

அழைப்பிதழ் பாதைகள் பிரிந்தவர்களின் எண்ணப் போக்கை வரைகின்றன. உள்நிறைவுடன் விடைபெறும் பந்தம் ஏதும் உண்டா.

என் பெயர் வைத்தியநாதன் பதின்பருவத்தில் மனச்சிக்கலுக்கு ஆளான ஒரு நபரை அடையாளம் காட்டியது.

சிப்பி கொஞ்சம் ரொமாண்டிக் கதை. தம்பி குழந்தைகளுடன் குழந்தைகளாகப் பழகும் மனது. அவர்களைப் பேச்சில் ஜெயிக்காமலே வென்றவிதமும் முடிவில் தந்தை இவரையும் குழந்தையாக எண்ணி நடத்துவதும் வெகு அழகாக இருந்தது. பக்குவப்பட்ட குழந்தை மனது.

மனக்கோளாறு உடல் கோளாறையும் உருவாக்கும் எனச் சொன்ன கதை வெய்யில். (ஒரு கதையில் தாய், இன்னொரு கதையில்) தந்தைக்கு (இன்னொரு கதையில் மகன் ஆகிய அனைவருக்குமே) மனநோய் பீடித்திருப்பதாக இவர் வரைந்து காட்டுவதும் சுசீலா என்ற உருவத்தின் மேல் உள்ள ப்ரேமையும் இக்கதையில் வெளிப்படுகிறது. காலை அறை என்ற கதையில் தந்தைக்குத் தன் அறையில் யாரோ இருப்பது போல் பிரமை தட்டுகிறது.

ரொம்பவே அசைத்த கதைகள் நிலக்கடலையும் பீடித்துண்டுகளும், பிரிவும் எதுவும் மாறாது திரும்பத் திரும்ப இதே சுழற்சிதான் என்று ஒருவிதமாகப் பயமுறுத்திய கதை அது. பிரிந்தாலும் தூரத்தில் வாழ்ந்தாலும் பின்னர் சந்திக்கவே முடியாது போனாலும்  எண்ணங்களால் நாம் அவர்களோடு பிணைக்கப்பட்டிருக்கிறோம் என்று சொன்ன கதை பிரிவு.

சாயைகளும் அப்படித்தான். இருவேறு பொருட்களுக்கிடையேயான உறவு அப்பாற்பட்டதா அல்லது பார்ப்பவனின் கற்பனையா என்ற கேள்வி இன்னும் சுழன்றுகொண்டுதான் இருக்கிறது. கயிற்றரவு எதற்குச் செய்கிறோம் என்பது தெரியாமல் பிடிவாதத்திற்கா, பொழுதுபோக்கிற்கா, வேறு என்ன செய்வதெனத் தெரியாததாலா. அல்லது அதற்கு ஆட்பட்டுவிட்டதாலா என நாம் செய்யும் அனிச்சைச் செயல்களைப் படம் பிடித்தது.

குழந்தைகள் ரொம்பப் பிடித்த கதை. மேலும் எட்டு வயதுப் பெண் குழந்தையும் மலையாளக் கவியும் கூட. ஒரு குழந்தை மாபெரும் கவியைப் போலக் கவி இயற்றி விடுகிறது. இதுவல்ல இங்கே விஷயம் அதன் மன வருத்தத்தையும் கவியாக இயற்றிவிடுவதுதான் வலி மிக்க செய்தி. அந்த வருத்தத்தில் கரைந்து நாமும் இல்லாமல் போவது என்பது எப்போதாவது நடப்பதுதானே.

சிறுமியும் மலையாளக் கவிதையும் சிமி உமி அடுப்புக்கரி கவிதை மூலம் என்பது சப்த ஒழுங்கால் அமைவது. . நாம் சொல்கிறோமே எதுகை , மோனை, சந்தம் என அதுபோல்

காக்கையைப் பற்றிய கதை படிமக் கவிதை. காக்கை மட்டுமல்லாமல் பருந்து, கருடன், புறா, நாரை, வாத்து, மைனா, சிட்டுக்குருவி, மயில் என மனம் தாவி அது சுசீலாவையும் தொட்டுச் செல்லும் அற்புதம். அதன் பின் அது மரங்கொத்தி, அக்காப் பறவை, மீன் கொத்தி, எனப் போய் பருந்து போலப் பறந்த தருணங்களையும் அக்காக் குருவிபோல அழுத தருணங்களையும் நம்முன் பரப்பி வைக்கிறது. நாமும் அக்காக் குருவி ஆகிறோம். தவம் செய்யச் சென்றவளை விட்டுவிட்டுப் பின் உள் வெளியில் ஒளிவீசக் கண்டோம்.  

சுசீலாவுக்கு எழுதிய கடிதங்கள் பிரேமையின் பரிசு. உறவை நோக்கிச் செல்லும்போதே பிரிவைநோக்கியும் செல்லும் மனது இவருக்கு. எப்போதும் இருமையிலேயே பயணிக்கிறார். அதனால் எல்லாவற்றையும் மறுதலித்துத் தனித்திருக்கும் மனம் வாய்க்கிறது.

அசுவத்தம் என்னும் மரம் மனதின் சாவைப் பற்றிப் பேசியது. இவரது கதை மாந்தர்கள் அநேகம் பேருக்கு இரட்டைச் சூழலில் வாழும் மனம். நிகழ்காலம் மனதின் காலம் என்று ஒன்று. மனம் பேதலித்துப் பேசுபவர்கள் இக்கதைகளில் அநேகம் தென்படுகிறார்கள். அவர்கள் சாதாரண மனிதர்கள்தாம். ஆனால் ஞானியின் மனநிலை கொண்டவர்கள். அசாதாரண பித்துக் கொண்டவர்கள். சாதாரண மனிதர்களுக்குத் தோன்றுவதுதான் இந்த  நிழல்வெளி மயக்கங்கள் , யாரோ தன்னைப் பார்ப்பது, யாரோ பின் தொடர்வது யாரோ தன்னைப் பற்றிப் பேசுவது இன்னபிற. அது அதீதமாய்ப் போகும் போதில் எப்படி மனநோயாகிறது என்பதை இக்கதைகளில் உணரலாம்.

காஃப்கா, ஃபியோதரின் கதைகள் போல்

எழுத்துக்களில் மலையாளச் சூழல்,கவிகள் இடம்பெறுவது போல மேற்கத்திய சிந்தனைகளும் புதுமைகளும் எளிமையும் கூட இடம் பெறுகிறது. மனிதர்களின் அக புற உணர்வுகளை வடித்தவை. எல்லாருக்குள்ளும் விழும் நிழலையும் பயத்தையும்  எழுத்தாக்கிய கதைகள் இவை

இவரது காதல் வேட்கையின் உருவகமாக நினைவுப் பாதையில் அவ்வப்போது வந்து ஒளிர்ந்து செல்பவள்தான் சுசீலா. ”அவள் ஒரு ஒளிச்சுடர், நான் உருட்டும் ஜெபமாலை, நான் கண்ட தெய்வம் “ மன சஞ்சாரத்திலேயே பிரபஞ்சம் போன்ற அவளுடனான உறவைப் படைத்துக் கொண்டாடினார். இவருடைய கவிதைகளில் வரும் மரங்கொத்திப் பறவை , மீன் கொத்திப் பறவைபோல சுசீலாவின் நினைவுகளைக் கொத்தி வாழும் பறவையாக வாழ்ந்தார். கடைசிவரை திருமணம் செய்து கொள்ளவில்லை.

லாசராவுக்கு அபிதா போல் நகுலனுக்கு சுசீலா

தனியாக இருக்கத் தெரியாத இயலாத ஒருவனும் ஒரு எழுத்தாளனாக இருக்க முடியாது.

ஆனால் நகுலனின் தனிமையை சுசீலா நிரப்பிக் கொண்டிருந்தாள். இலக்கியம், வெற்றிலை, சீவல், புகையிலை, சூரல் நாற்காலி, பூனை, பிராந்தி என அனைத்தும் கூட இருந்தன.

அழியாச்சுடர்கள், கீற்று, எஸ்ரா, பெருந்தேவி, ஷங்கர சுப்ரமண்யம் , துரை அறிவழகன் ஆகியோரின் நகுலன் பற்றிய எழுத்துக்கள் வாசிப்பின்பம் நல்குபவை. பிரம்மராஜன் கவிதைகள் பற்றிய நகுலனின் பார்வை அரிய பரிசு.

'சாந்தோம் கம்யூனிகேஷன் செண்டர் விருதும்', 'குமாரன் ஆசான்' விருதும், அமெரிக்க வாழ் தமிழர்களின் 'விளக்கு விருதும்' பெற்றவர்.

நகுலனின் இறுதிக் காலத்தில் அபூர்வமான கறுப்பு வெள்ளைப் புகைப்படங்களை எடுத்து அவரது கவிதைகளோடு, புகைப்படக் கலைஞர் ஆர்.ஆர்.சீனிவாசன் வெளியிட்டகண்ணாடியாகும் கண்கள்தொகுப்பானதுநகுலன் குறித்த அபூர்வமான ஆவணம். திருவனந்தபுரத்தில் இறுதிவரை தனிமைவாசத்திலேயே இருந்து மறைந்தார் நகுலன்.

1994 இல் கோணங்கி கொண்டு வந்த கல்குதிரை நகுலன் சிறப்பிதழாக மலர்ந்தது. அவரின் நேர்காணலும், நகுலன் இறந்தபின்னும் ஒலிநாடா ஓடிக்கொண்டிருக்கிறது என்ற கோணங்கியின் சிறுகதையும் அழுத்தமானவை.

”உருவம் அருவம்.” என்ற தலைப்பில் நூற்றாண்டுக்கான நூல் ஆக்கம் பெறப்போகிறது. வாழ்த்துகள் நகுலனோடு பயணிக்கும் அனைவருக்கும்.

தானற்ற நிலை உரைக்கும் இக்கவிதை

பூஎன்று உதறிச் சென்று
நான் என் பயணத்தைத் தொடர்கையில் கூட
அந்த சாக்ஷாத் சந்தர்ப்பத்தில்கூடப்
பூ என்னைக் கண்டு சிரிக்கின்றதுதோன்றுகின்றது.

அர்த்தமற்றப் பெரு வெளியில்
இதழ் இதழாக ஒரு பூ விரிவதைக் கண்டு
பூ என்று உதறி எழுந்து போக விரைந்தவன்
பூ என்று சொல்லி வாயடைத்து நின்றேன்

இந்தப் பூக்களையே பூக்களைப் போன்ற புன்னகை சிந்தும் நகுலன் அவர்களுக்குக் காணிக்கையாக சமர்ப்பிக்கிறேன்.

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...