எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 29 டிசம்பர், 2020

தன்னையே தரணிக்கீந்த லோபாமுத்ரா.

தன்னையே தரணிக்கீந்த லோபாமுத்ரா.

அன்னதானம் செய்வார்கள் பலர். கல்விதானம் செய்வார்கள் சிலர். இரத்ததானம் செய்வார்கள் மிகச்சிலர். ஆனால் தான் உயிரோடு இருக்கும்போதே தன்னை இந்த உலகுக்கு ஈந்தாள் ஒரு பெண். அதுவும் நீராக மாறி இவ்வுலக மக்களின் தாகம் தீர்த்தாள். யார் அந்தப் புனிதவதி எனப் பார்ப்போம் வாருங்கள் குழந்தைகளே.
பிரம்மகிரிக் குன்றத்தில் வாழ்ந்து வந்தார் கவேர மகரிஷி என்பவர். அவர் தனக்கு ஒரு மகள் வேண்டுமென்று பிரம்மனைக் குறித்துத் தவமியற்றி வந்தார். மிகக் கடுமையான தவம். அந்தத் தவத்தின் நெருப்பு பிரம்மலோகத்தை எட்ட பிரம்மன் ஓடோடி வந்து “ என்ன வரம் வேண்டுமோ வாங்கிக் கொள்ளுங்கள். இந்த தவத்தை நிறுத்துங்கள் “ என்றார்.
“பிரம்ம தேவரே.. எனக்கு ஒரு மகள் வேண்டும். “ என்றார் கவேர மகரிஷி.
மகள் வேண்டுமா. உடனே எப்படி உருவாக்க முடியும்.. யோசித்தார் பிரம்மா. மகாவிஷ்ணு முன்பொருமுறை உருவாக்கித் தன்னிடம் வளர்த்துவரும்படித் தந்த லோபாமுத்ரா என்ற பெண் குழந்தையின் ஞாபகம் வந்தது. அப்போதுதான் அவள் பதின்பருவத்தை எட்டியிருந்தாள்.

உடனே பிரம்மா கவேர மகரிஷியிடம் “ மகரிஷியே உங்கள் தவத்தை மெச்சி உடனே இந்த மகளை உங்களுக்குத் தருகிறேன். இவள் விஷ்ணுவால் உருவாக்கப்பட்டு என்னால் வளர்க்கப்பட்டவள் “

மகரிஷியும் சந்தோஷமாக வாங்கிக் கொண்டார். லோபாமுத்ரா அழகும், அடக்கமும் பொறுமையும் நிரம்பிய அன்பான பெண். சில நாட்கள் கழிந்தன.
இமயமலையிலிருந்து பொதிகை நோக்கி வந்துகொண்டிருந்தார் குறுமுனி அகத்தியர். அவர் கவேர மகரிஷியின் ஆஸ்ரமத்திற்கு வந்து சிரமபரிகாரம் செய்து கொண்டார். அப்போது அவரது கண்களில் பட்டாள் லோபாமுத்ரா. அவளது பண்பும் செயல்களும் அவரை ஈர்த்தன.
உடனே அவளிடமே கேட்டுவிட்டார், “ பெண்ணே உன்னை எனக்குப் பிடித்திருக்கிறது. என்னை மணக்கச் சம்மதமா “ கவேர மகரிஷியிடமும் கேட்டார் “ ரிஷிபுங்கவரே உம்மகளை எனக்கு மணம் செய்துதர வேண்டுகிறேன் “
கவேர மகரிஷியால் தட்டமுடியவில்லை. ஆனால் லோபாமுத்ரா ஒரே ஒரு கோரிக்கை மட்டும் விடுத்தாள். “ ஐயனே உம்மை மணக்க எனக்கு முழு சம்மதமே. ஆனால் நீங்கள் என்னைவிட்டு ஒரு கணம் கூடப் பிரியாது இருப்பதாக வாக்குக் கொடுத்தால் மட்டுமே மணப்பேன் “

இதைக் கேட்டதும் சிறிது திடுக்கிட்டாலும் ஒப்புக் கொண்டார் அகத்தியமுனி. திருமணம் கோலாகலமாக நடந்தது. அகத்தியரும் லோபாமுத்ராவும் பிரம்மகிரிக் குன்றத்திலேயே வாழ்ந்து வரலானார்கள்.
ஒரு சமயம் அகத்தியர் அக்குன்றத்தின் மறுபுறமிருக்கும் கனிக நதிக்குச் செல்ல வேண்டி இருந்தது. அங்கே லோபாமுத்ராவை அழைத்துச் செல்ல இயலாத நிலை. எனவே அவளை நீராக மாற்றித் தனது கமண்டலத்தில் அடக்கித் தனது சிஷ்யர்களிடம் கொடுத்துப் பார்த்துக் கொள்ளச் சொல்லிவிட்டுச் சென்றார்.
அந்தக் கமண்டலத்தில் அடைபட்டதும் தனிமையில் வாடிய லோபாமுத்ராவுக்கு அகத்தியர் தன்னை விட்டுப் பிரிந்து சென்றுவிட்டாரே என்று வருத்தம் ஏற்பட்டது. அவளால் அதன்பின் அந்தக் கமண்டலத்தில் இருக்க முடியவில்லை. வருத்தத்தில் தோய்ந்திருந்தவளுக்கு ஒரு விஷயம் ஞாபகம் வந்தது. விஷ்ணு அவளைப் படைக்கும்போது ”இந்த உலக நன்மைக்காக உன்னைப் படைக்கிறேன். நீ நேரம் வரும்போது இந்த உலகத்துக்குச் சேவை செய்வாய்” என்று கூறியிருந்தார்.
அது நினைவுக்கு வந்ததும் இருப்புக் கொள்ளவில்லை அவளுக்கு. அகத்தியர் வரும் முன்பே வெளியேறி மக்களுக்கு நன்மை பயக்க வேண்டும் என்ற உந்துதலோடு கமண்டலத்திலிருந்து தாவிக் குதித்தாள்.
பதறிப்போன அகத்தியரின் சீடர்கள் அவளை மறித்தார்கள். அவளோ அவர்களிடமிருந்து தப்பித்துப் பூமிக்குள் புகுந்து இரகசியமாக சிறிது தூரம் ஓடினாள். அங்கே நாகர்கள் உலகம் இருந்தது. அங்கே வாழ்ந்துவந்த நாகர்களும் அவளைத் தடுத்து அவள் கணவரான அகத்திய முனிவருடன் திரும்பிப் போய் வாழ வலியுறுத்தினார்கள்.

அவர்களது அன்பு வேண்டுகோளை செவிமடுத்த அவள் “ நாக தேவர்களே.. என்னைப் படைத்தவுடன் நான் உலக நன்மைக்காக படைக்கப்பட்டதாக விஷ்ணு கூறினார். அதே போல் மனித உடலுடன் லோபாமுத்ரா என்ற பெயரில் படைக்கப்பட்ட நான் உலக நன்மைக்காகவே அகத்திய முனிவரால் நீராக மாற்றப்பட்டிருக்கிறேன் என்பதை உணர்ந்தேன். என்னை ஈந்த இந்த உலகத்துக்கு என் கடமையைச் செய்ய விடுங்கள். தடுக்காதீர்கள். “
”நீரின்றி அமையாது உலகு. நீயின்றியும் அமையாது உலகு . சென்றுவா தேவி” என நாகர்கள் அவளுக்கு வழிவிட்டு வணங்கி விலகி நின்றார்கள். அந்த லோபாமுத்ரா பாய்ந்து வந்து பிரம்மகுண்டிகை என்ற இடத்தில் பீரிட்டுப் பொங்கிப் புதுப்புனலாய்ப் பாய்ந்தாள். மலைகளில் வழிந்து காடுகளை நனைத்து வயல்வெளி அனைத்தையும் வளமாக்கினாள்.
அந்த லோபாமுத்ரா வேறு யாரும் அல்ல. குடகு மலையிலிருந்து ஓடி வந்து நமக்கு நீராகவும் வயல்வெளிகளுக்கு ஆறாகவும் பாய்ந்து தாகம் தீர்க்கும் காவிரிதான் அவள். அவளைப் போல நாமும் உலகநலத்துக்கு நம்மை முழுமையாக அர்ப்பணிக்க முயற்சிப்போம் குழந்தைகளே. 
டிஸ்கி:- இந்தக் கதை டிசம்பர் 20 - ஜனவரி 5, 2020 சொற்கோவில் மின்னிதழில் வெளியானது. நன்றி குமார் சார் & சேதுராமன் சாத்தப்பன்சார். 

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...