எனது பதிமூன்று நூல்கள்

புதன், 6 ஜனவரி, 2021

400 வருடப் புராதன ட்ரிவி ஃபவுண்டன். TREVI FOUNTAIN. ROME.

 சிவந்தமண் படத்தில் ஒரு பாடலில் வரும் ( ஒரு ராஜா ராணியிடம் வெகு நாளாக ஆசை என்றார் ) இந்த இடத்தை ஞாபகம் இருக்கா மக்காஸ். அந்த இடம்தான் இது. இத்தாலியில், ரோமில் இருக்கு. யூரோப் டூரில் நான்காவது நாள் நாங்கள் பார்த்த இடங்கள் கொலோசியம், ட்ரிவி ஃபவுண்டன், வாடிகன் சர்ச், மைக்கேல் ஏஞ்சலோவின் சிற்பங்கள், ஓவியங்கள். 

மூன்று நூற்றாண்டுகளுக்கு முன்பு நிகோலா சால்வி என்ற கலைஞர் வடிவமைச்சதுதான் இந்த ட்ரிவி ஃபவுண்டன். கியூசெப் பன்னினி மற்றும் பலர் இதைப் பூர்த்தி செய்திருக்கிறார்கள். பல்வேறு ஹாலிவுட், கோலிவுட், பாலிவுட் படங்களில் நடித்திருக்கிறது இந்த இடம். 
இது 86 மீட்டர் உயரமும், 50மீ அகலமும் கொண்ட பலாஸோ போலி என்ற அழகான கட்டிடத்தோடு அமைந்திருக்கிறது பரோக் என்று சொல்லப்படும் மிகப் பிரபலமான இந்த ஊற்று.  கலைநயத்தோடு அமைக்கப்பட்ட சிற்பங்கள் அழகூட்டுகின்றன இந்த நீரூற்றை. 


மூன்று ரோடுகள் சந்திக்கும் இடத்தில் ( ட்ரி வீ) அமைந்திருப்பதால் இதற்கு ட்ரிவி ஃபவுண்டன் என்று பெயரிட்டிருக்கிறார்கள் பதினாறாம் நூற்றாண்டின் பிற்பகுதிகளிலேயே. அந்தக்காலத்தில் நகரத்துக்குக் குடி தண்ணீர் கொண்டு வந்த இடம் இது. கிட்டத்தட்ட 400 வருஷமா இது பயன்பாட்டுல இருக்கு என்பதே உலக அதிசயம் !.

1629 இல் இதை மாற்றி அமைக்க முயற்சி செஞ்சிருக்காங்க. நாலு நூற்றாண்டா இது பல்வேறு மாற்றங்களுக்கு உட்பட்டு இன்னிய அழகை அடைஞ்சிருக்கு. மார்பிள் கட்டிடத்தின் முன் மார்பிள் சிலைகள், தெள்ளிய நீரூற்றும் ஓடையும் வெகு துல்லியம் & கொள்ளை அழகு. !
எதிர்த்தாற்போல இன்னொரு கட்டிடம்.. எவ்ளோ உயரம் ! 
இந்த ஃபவுண்டனை அடைய படிக்கட்டுகள் இருக்கு. அதை ஸ்பானிஷ் படிகள்னு சொல்றாங்க. 
விதம்விதமான சிற்ப வேலைப்பாடுகள், உட்குவிந்த மாடம், கொரிந்தியர் பாணித் தூண்கள், ஜாலி வைத்ததுபோல் செதுக்கப்பட்ட சாளர அமைப்புகள், நடுவில் ஆர்ச்சுகள், வரலாற்றுக் காட்சிகள், முன்னே நிற்கும் அரசன் ஒஸியேனஸ் ( யூரேனஸ், கியா ஆகியோரின் மகன் - நதிக்கடவுள்களின் தந்தை, மேலும் உலகம் முழுதும் சுற்றி வரும் உலகத்திலேயே பெரிய நதியின் அடையாளம் இவர்   ) , பின்னே நிற்கும் வீராங்கனையும் நடனப் பெண்ணும் என அழகூட்டுவதோடு, சங்கு ஊதியபடி பறக்கும் குதிரையைப் பிடித்து ஓடி வரும் வீரனும், ட்ராகன் உடலுடன் இன்னொரு பறக்கும் குதிரையை அடக்கும் வீரனும் இருபக்கமும் அழகூட்ட. நடுவில் வெள்ளமாய்ப் பொங்கி வருகிறது நீர். 

மேலே பறக்கும் தேவதைகளும் போப்பாண்டவரைக் காக்கும் ஆயுதங்களும். 

அதன் கீழேயே பைபிள் காட்சிகள் போலச் சிலவும் சித்தரிக்கப்பட்டுள்ளன. போப் எட்டாவது க்ளமெண்ட் பொதுமக்கள் காட்சிக்குத் திறந்துவைத்துள்ளார் எனவும் செதுக்கப்பட்டுள்ளது. 
பார்த்துப் புகைப்படம் எடுத்துவிட்டு எதிரே இருந்த ஐஸ்க்ரீம் ஷாப்பில் அனைவரும் சென்று ( ஸ்டார் ட்ராவல்ஸ்காரர்கள் கொடுத்த டோக்கனைக் கொடுத்து ஐஸ்க்ரீம் வாங்கிச் சாப்பிட்டோம். பல்வேறு வகையான ஐஸ்க்ரீம்களில் மூன்று வித ஐஸ்க்ரீம்களைக் கப்பில்/கோனில் வாங்கி சாப்பிட்டது வித்யாச அனுபவம். நான் ப்ளாக் கரண்ட் ஐஸ்க்ரீம் வேண்டுமெனக் கேட்க அங்கே சர்வ் செய்தவர் சற்றுப் புரியாமல் தலையாட்டி விட்டு அங்கே இருந்த விதம் விதமான ஐஸ்க்ரீம்களில் மூன்றை மாங்கோ, சாக்லெட், பிஸ்தா எனக் கலந்து கொடுத்தார். ! :) 
நீரூற்று உங்களுக்காக மிக நெருக்கத்தில். வடிவமைப்பைப் பாருங்கள் என்ன ஒரு கலைநயம். நம்மூரில் என்றால் உட்கார்ந்து குளிக்க ஆரம்பித்து இருப்போம் :) 
அடிக்கிற வெய்யிலுக்குத் தலையை நனைக்கலாம் போலத்தான் இருந்தது. கண்ணைச் சுட்டெரிக்கும் வெய்யில் இத்தாலி முழுவதும். இந்தியா தேவலாம்பா. 

1730 இல் இதை வடிவமைச்ச சால்வி பாதியிலேயே விட்டுட்டு 1751 இல் இறந்துவிட அதன் பின் க்யூசப் பன்னினி இதை பூர்த்தி செய்தார். 

1762 இல் இதைத் திறந்து வைத்தவர் போப் எட்டாவது க்ளமெண்ட் 

ட்ராவர்டைன் எனப்படும் சுண்ணாம்புக் கற்களால் அமைக்கப்பட்டுள்ளது இது. 

1988 இல் ஸ்மாக் எனப்படும் புகைப்பனியால் மங்கி இருந்த இதைத் திரும்பப் புதுப்பிச்சு இருக்காங்க. 2013 இல் இதைப் புதுப்பிக்க ஃபெண்டி என்கிற இத்தாலிய ஃபேஷன் நிறுவனம் 2.2 மில்லியன் யூரோ செலவழிச்சிருக்காங்க. 

ஆமா முக்கியமான விஷயம் இங்கே எல்லாரும் நம்மூரு மாதிரியே ஃபவுண்டன்ல காசு போட்டுட்டு இருந்தாங்க, நாங்களும் காசு போட்டுட்டு வந்தோம். அதுவும் எப்பிடி திரும்பி நின்னு கண்ணை மூடி மனசுக்குள்ள எதையாவது வேண்டிக்கிட்டு வலது கையால காசை எடுத்து இடது தோளுக்கு மேலே வீசி நீரூற்றுக்குள்ள விழுறமாதிரிப் போடணும் :) ஒரு நாளைக்குக் கிட்டத்தட்ட 3000 யூரோவுக்கு மேலே மக்கள் இதுமாதிரிக் காசுகளை இந்த நீரூற்றுல வீசுறாங்களாம். சுற்றுலாப் பயணிகளால நல்ல வருமானம்தான் :) மிகப் பிரம்மாண்டமான நீரூற்று இல்லை எனினும் பிரபலமான நீரூற்று இது :) 

1 கருத்து:

  1. படத்தைப்பார்த்ததும் சிவந்த மண் திரைப்படம் நினைவிற்கு வந்தது. உங்களின் அனுபவப் பகிர்வு அருமை.

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...