எனது பதிமூன்று நூல்கள்

வெள்ளி, 18 அக்டோபர், 2019

கருணை விழிகள் – ஒருபார்வை


கருணை விழிகள் – ஒருபார்வை


இராஜேஸ்வரி கோதண்டம் அவர்கள் நிறைய நூல்களை மொழிபெயர்த்துள்ளார். கிட்டத்தட்ட 100 நூல்களுக்கு மேல் இருக்கும். இவருடைய சரளமான மொழிபெயர்ப்பினால் அவை நமக்கு மொழிபெயர்ப்பு என்றே தெரியாதவண்ணம் நம் தமிழ் மண்ணின் கதைகள் போல் இருக்கும். பெயர்களையும் உணவு, இடங்களையும் வைத்துத்தான் நாம் அவற்றை பக்கத்து மாநிலங்கள் என்று உணரமுடியும். 

இராமானுஜரை ஏற்கனவே பிடிக்கும் எனக்கு. இராஜேஸ்வரி அவர்களின் மொழிபெயர்ப்பில் மிக அருமையான இந்நூல் என் மனந்தொட்டது என்றால் மிகையில்லை.


ஆந்திர அரசின் சாகித்ய அகாடமி விருது பெற்ற நூல் இது. முன்பே படித்திருந்தாலும் இன்றும் ஒருமுறை படித்தேன். எடுத்ததில் இருந்து கீழே வைக்கவே தோன்றவில்லை. அவ்வளவு சரளமான மொழிபெயர்ப்பு.

இராமானுஜர் எனக்கு மிகப் பிடித்தமானவர். அவரின் விசிஷ்டாத்வைதக் கொள்கைகளைப் பிரச்சாரமாக இல்லாமல் கதை வடிவில் கொடுத்திருப்பது சிறப்பு. இராமனுஜரின் சீடர்கள் தசரதி, கோவிந்தயதி, யக்ஞமூர்த்தி, அனந்தசூரி, கூரேசர், காஞ்சிபூரணர், மஹாபூரணர் ஆகியோரின் குணநலன்களோடு திருக்கோட்டியூர் நம்பி, யாதவப் ப்ரகாசர், தஞ்சமாம்பாள் ஆகியோரின் குணமாறுதல்களையும் கூறியிருக்கிறார் ஆசிரியர் கணபதி சாஸ்திரி.

கதை நாயக நாயகியான ரங்க நாயகன், ஹேமசுந்தரி ஆகிய இருவரும் பிறப்பாலும் தொழிலாலும் தாழ்ந்தவர்களாகக் கருதப்பட்டாலும் அவர்கள் எண்ணத்தின் வீச்சால் இராமனுஜரால் சமமானவர்களாகவும் உன்னதமானவர்களாகவும் கருதப்படுகிறார்கள். முன்பொருதரம் தான் மந்திரோபதேச தீட்சை பெற்றவுடன்  கோயில் கோபுரத்தில் ஏறி அனைவரும் உய்வதற்காக மந்திரத்தை உரத்துக் கூறிய இராமானுஜர் இந்த முறையும் முடிவில் தனுர்தாசன் , ஹேமாம்பா ஆகியோருக்கு அந்த அஷ்டாட்சர மந்திரத்தை உபதேசம் செய்விக்கிறார்.

திருடனாக அடையாளப்படுத்தப்பட்டு மறைந்து வாழும் நாயகனும் கணிகையாக தாழ்த்தப்பட்டு அவனது மனைவியாக வாழும் நாயகியும் தங்கள் மன ஒற்றுமையால் உயர்ந்த நிலை எய்துகிறார்கள். அவள் கிடைத்தால் அவளது கண்போன்று அரங்கனுக்கு அர்ப்பணிப்பதாக வேண்டிக் கொள்ளும் நாயகன் அதேபோல் அரங்கனுக்கு அர்ப்பணித்தபின் அகஸ்மாத்தாக ஒரு சாலையில் இராமானுஜரின் பார்வையில் படுகிறான்.  

கடவுளின் கண்களின் அழகை தீராத தெய்வீகச் சுவையை அவர் அவனுக்குக் காட்டியபின் அவரது கண்களின் தீட்சண்யத்தாலும் அவன் கட்டுப்பட்டு வாழ்கிறான். செய்யும் தொழிலே தெய்வம் என்று இருக்கும் அவனது கர்மயோகம் ஆச்சாரியரால் அங்கீகரிக்கப்படுகிறது. 

அதேபோல் மனம் கொண்டவனை எக்காலத்தும் எதனாலும் விட்டுப் பிரியாமல் புரிந்து கொண்டு வாழும் நாயகியும் ஆச்சார்யரால் உயர்ந்தவளாகவே கணிக்கப்படுகிறாள். கணிகை என்று ஒதுக்கப்பட்டவளையும் கண்ணியமாக உயர்த்திய பெருநெறிக் கதை இது.  

த்வைதம், அத்வைதம் என்று பிரிவினைகள் ஏற்பட்டுப் பிரிந்து கிடந்த காலத்தில் விசிஷ்டாத்வைதம் என்று அனைவரையும் சமமாக நடத்திய இராமானுஜரின் நற்பண்புகளைப் படிக்கப் படிக்க மனம் நெகிழ்ந்தது.

ரங்கநாயகன், ஹேமசுந்தரி ஆகியோர் தங்களின் நற்குணங்களாலும் உயர் பண்புகளாலுமே ஆச்சாரியாரின் அன்பை அடைகிறார்கள். பிறவிப் பயனை எய்துகிறார்கள். இதை சிறப்பாகச் சொல்லிச் சென்றிருக்கும் இக்கதை இந்த நூற்றாண்டில் வெளிவந்த மிகச் சிறந்த கதைகளில் ஒன்று. உலகக் கதைகளில் ஒன்றாக மொழிபெயர்க்கப்படவும் வேண்டும். இதற்கான சரியான அங்கீகாரமும் புகழும் இன்னும் கிட்டவேண்டும் என்ற பேராவல் மனதில் மிளிர்கிறது.

வாழ்த்துக்கள் மற்றும் நன்றி ராஜேஸ்வரிம்மா. பத்தாம் நூற்றாண்டில் நடந்த இக்கதையை இன்று பக்கத்தில் நடப்பது போல் மிக அருமையாக மொழி பெயர்த்துத் தந்தமைக்கு. வாசித்துப் பாருங்கள். அனைவருமே தவறவிடக்கூடாத அருமையான மனிதநேயப் பண்புகள் நிரம்பிய கதை இது. ஸ்ரீரங்கம் அரங்கனின் கருணை விழிகளில் மட்டுமல்ல, ஹேமாம்பா மற்றும் இராமானுஜரின் கருணை விழிகளிலும் விழுந்து எழும் ஆவல் கட்டுடைத்துப் பொங்கிப் பெருகும்.

நூல் :- கருணை விழிகள்
ஆசிரியர் :- தெலுங்கு _ பி. கணபதி சாஸ்திரி
தமிழில் :- இராஜேஸ்வரி கோதண்டம்
வெளியீடு :- ஆலயா
விலை  :- ரூ. 150/-

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...