எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 4 அக்டோபர், 2019

சிறுபிழையும் பொறுக்காத எறிபத்தர். தினமலர் சிறுவர்மலர் - 35.

சிறுபிழையும் பொறுக்காத எறிபத்தர்
ஒருவர் சிறுபிழை செய்தாலும் பொறுக்காமல் தான் ஏந்திய மழு என்ற ஆயுதத்தால் தண்டித்து விடுவார் எறிபத்தர் என்பார். அதுவும் அவர் உயிராய்க் கருதும் சிவனடியார்களுக்குத் துன்பம் ஏற்பட்டால் பொறுப்பாரா. தன் பரசு என்னும் ஆயுதத்தைக் கொண்டு அவர்களை தண்டித்தார் ஆயினும் அவர் சிவகணங்களின் தலைவராய் உயர்ந்தார் அது எப்படி எனப் பார்ப்போம் குழந்தைகளே.
கொங்குநாட்டில் கருவூர் என்ற ஊரில் மாசி மாதம் ஹஸ்த நட்சத்திரத்தில் பிறந்தவர் எறிபத்தர். இவர் அன்பும் பண்பும் ஒருங்கே கொண்டவராயினும் சிவபக்தர்களுக்கு இடையூறு ஏற்பட்டால் பொறுக்க மாட்டார். அப்படி இடையூறு செய்தவர்களை தன் மழுப்படையால் தண்டித்து விடுவார். அவ்வளவு கோபக்காரர்.
ஒருமுறை சிவகாமியாண்டார் என்பார் சிவனுக்கு சார்த்த அதிகாலையில் எழுந்து தூய நறுமணமிக்க மலர்களைக் கொய்து தனது பூக்குடலையில் எடுத்துத் தலையில் சுமந்து கொண்டு திருக்கோயில் நோக்கிச் சென்று கொண்டிருந்தார். அந்த அதிகாலையில் அலங்காரமாக நகர் உலா வந்து கொண்டிருந்தது புகழ்ச்சோழர் என்ற அரசரின் பட்டத்து யானை. கூடவே நான்கு பக்கமும் நான்கு பாகர்களும் யானையின் மேல் அமர்ந்து அங்குசத்தால் குத்தியபடி ஒருபாகனுமாக மொத்தம் ஐந்துபாகன்கள் சூழ அது நடந்து சென்று கொண்டிருந்தது.

இத்தனை பாகன்களுக்கு அடங்காமல் ராஜபாட்டையின் நாலாபுறமும் இஷ்டப்படி நடந்து ஓடிக்கொண்டிருந்தது அந்த மத யானை. அப்போது சாலை ஓரமாகச் சென்று கொண்டிருந்தார் சிவகாமியாண்டார். என்ன நினைத்ததோ திடீரென அவர் பற்றியிருந்த பூக்குடலையைப் பறித்து வீசி மிதித்து இன்னும் வேகமாக ஓடத்துவங்கியது. சிவகாமியாண்டாருக்கோ  ஒரு கணம் ஒன்றும் புரியவில்லை.
அடுத்தகணம் அவர் கண்ணீர் விட்டுக் கதறி அழத் துவங்கினார். அவர் அழுவதை பரிதவிப்புடன் பார்த்தார்கள் மக்கள். அப்போது அங்கே வந்தார் எறிபத்தர். அவர்தான் அடியவர் துன்பம் பொறுக்கமாட்டாரே
என்ன விஷயம் என வினவினார். சிவகாமியாண்டார் தனது பூக்குடலையைப் பறித்து அரசயானை வீசி மிதித்துச் சென்றதைக் கண்ணீருடன் கூறினார். மற்றவர்கள் என்றால் நமக்கேன் அரச பொல்லாப்பு என விலகிச் சென்றிருப்பார்கள். ஆனால் எறிபத்தர்தான் சிவனுக்கெதிரான சிறுபிழையும் பொறுக்க மாட்டாதவராயிற்றே.
“எங்கே சென்றது அந்த யானை “ என வினவினார்.
“இதோ இவ்வீதி வழியாகத்தான் சென்றது “ என்று திசை காண்பித்தார் சிவகாமியாண்டார்.
உடனே தனது மழுப்படையுடன் விரைந்து ஓடினார் எறிபத்தர். அரச யானையைக் காப்பாற்றி விடவேண்டுமென்ற வேகத்தோடு ஓடிக்கொண்டிருந்த ஐந்து பாகன்களையும் ஆணவத்தோடு ஓடிக்கொண்டிருந்த மத யானையையும் பார்த்தார் எறிபத்தர்.
எடுத்தார் தன் மழுப்படையை. துச்சமாய்ப் பூக்குடலையையைத் தூக்கியெறிந்த யானையின் தும்பிக்கையைத் துண்டித்தார். அது உடனே பிளிறியபடி வீழ்ந்து இறந்தது. அதைக் கண்டும் சாந்தமடையாமல் தவறிய யானையைப் பாதுகாக்கத் துணிந்த பாகன்கள் ஐவரையும் தன் பரசால் வெட்டிவிட்டு அங்கேயே அமர்ந்தார் எறிபத்தர்.
யானையும் பாகன்களும் வீழ்ந்த செய்தியறிந்து அங்கே வந்தார் புகழ்ச்சோழ மன்னர். பார்த்தார். ராஜபாட்டையெங்கும் ரத்தம். வந்ததோ பெரும்படை அல்ல, ஒரே ஒரு மனிதர்தான். பார்த்தால் சாத்வீக சந்நியாசி மாதிரித் தெரிந்தார். அவரா பாகன்கள் ஐவரையும் யானையையும் வெட்டினார் என்ற ஐயம் ஏற்பட்டது அவருக்கு.
அவரது நால்வகைப் படையும் அவரது பின் நின்றது. ஒரே கணத்தில் எறிபத்தரை துவம்சம் செய்திருக்கலாம். ஆனால் மன்னன் யோசித்தார். “என்ன காரணத்தால் யானையையும் பாகன்களையும் வெட்டினீர்கள் ?” எனக் கேட்டார்.
”சிவனடியாரான சிவகாமியாண்டார் அதிகாலை எழுந்து இறைவனுக்காகப் பறித்த புனிதமான மலர்களை இறைவனடியில் சேர்க்குமுன் தன் துதிக்கையால் பறித்து நாசமாக்கியது அந்த மதயானை. அதை அதன் பாகன்களும் அடக்காமல் தப்பிக்க வைத்தார்கள். தவறுணராதவர்களைத் தண்டித்தேன் “ என்று கூறினார் எறிபத்தர்.
அரசராயிற்றே என்று பயப்படாமல் உண்மையைக் கூறிய அவரின் தன்னம்பிக்கையையும் துணிவையும் நேர்மையையும் பக்தியையும் பார்த்து மெய்சிலிர்த்தார் புகழ்ச்சோழர். “ ஐயா, அந்த யானை என்னுடையதே. அதனால் பாகன்கள் அதைத் தப்புவிக்கப் பார்த்தார்கள். அவர்களும் என்னுடையவர்களே. ஆகையால் தவறு முழுவதும் என்னைச் சார்ந்தது. என்னையும் தாங்கள் தண்டிக்க வேண்டுகிறேன் “ என்று கூறித் தன் வாளை எறிபத்தரிடம் கொடுக்கிறார் புகழ்ச்சோழர்.
எங்கே தான் வாங்காவிட்டால் புகழ்ச்சோழர் தன்னையே தன் வாளால் மாய்த்துக் கொண்டுவிடுவாரோ என்று பயந்த எறிபத்தர் அவ்வாளைக் கையில் வாங்கிக் கொள்கிறார். அவர்முன் மண்டியிட்டு அமர்ந்து ” என்னையும் தண்டியுங்கள் ஐயனே “
இப்போது மெய்விதிர்க்கிறது எறிபத்தருக்கு. யானையையும் பாகன்களையும் தண்டித்தது சரி என்று எண்ணியவருக்கு மன்னரைத் தண்டிப்பது சரி எனத் தோன்றவில்லை. தன் கோபத்தையும் எதையும் பொறுக்காமல் நீதி வழங்கும் தன்மையையும் நினைத்துத் தன்மீதே வெறுப்புப் பொங்குகிறது அவருக்கு.
தன் மழுவைத் தூக்கி விசிவிட்டு அரசர் கொடுத்த உடைவாளினால் தன்னையே மாய்த்துக் கொள்ள எண்ணி தன்மேல் பாய்ச்சிக் கொள்கிறார். ஆனால் ஈதென்ன அவ்வாள் பாயாமால் அப்படியே நிற்கிறதே. புகழ்ச்சோழர் எழுந்து எறிபத்தரின் கைகளைப் பிடித்துக் கொண்டிருக்கிறார்.
அசரீரி ஒலிக்கிறது “ அன்பரே. உங்கள் தொண்டை உலகறியச் செய்யவே இந்நிகழ்வு நடைபெற்றது. அதனாலேயே யானைக்கு மதம் உண்டானது. கவலற்க “ எல்லாம் நலமாகும் என்று கூறுகிறது. அப்போது யானையும் பாகன்களும் உயிர்பெற்று எழுகிறார்கள். பூக்குடலையிலும் பூக்கள் புத்தம் புதிதாய் நறுமணத்துடன் மணம் வீசிக் கொண்டிருக்கின்றன.
நடந்ததெல்லாம் கனவா நனவா என்று சிலிர்ப்போடு பார்த்துக் கொண்டிருக்கிறார் எறிபத்தர். இவ்வளவு நேர்மையாகவும் நியாயமாகவும் நடந்துகொண்டதால் சிவகணங்களுக்குத் தலைவராகும் பேறும் பெற்றார். எனவே சிறு பிழை என்றாலும் நாம் அதைச் செய்யாமல் நல்லதையே செய்திருப்போம் குழந்தைகளே.

டிஸ்கி 1 :-  இந்தக் கதை இதிகாச புராணக் கதைகள் என்ற தலைப்பில் 20 . 9. 2019  தினமலர் சிறுவர்மலர் இதழில் இடம்பெற்றுள்ளது. நன்றி தினமலர் சிறுவர் மலர், தனது அழகான ஓவியங்களால் கதைக்கு எழில்கூட்டும் ஓவியர்கள் அஷோக் &  ரஜனி & எடிட்டர் தேவராஜன் ஷண்முகம் சார்.


டிஸ்கி 2. இதிகாச புராண கதைகளைப் பாராட்டிய வாசகர்கள் கீழ்வேளூர் எஸ். மணிகண்டன், தக்கோலம் மு. பயாசுதீன், திருவையாறு கா. தரணிவேலன், ஆடுதுறை ச. ராம்சுதன் ஆகியோருக்கு மனமார்ந்த நன்றி. 

2 கருத்துகள்:

  1. எறிபத்தர் கதை அறிவேன். இன்று உங்கள் மூலமாக மறுபடியும் படிக்கும் வாய்ப்பு.

    பதிலளிநீக்கு
  2. நன்றி ஜம்பு சார்

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...