சனி, 29 அக்டோபர், 2016

சாட்டர்டே போஸ்ட். கரந்தை ஜெயக்குமாரின் உயிர்காத்த நண்பன்.எனது வலைப்பூ சகோதரர் கரந்தை ஜெயக்குமார். இவர் ஆசிரியப் பணியில் இருப்பதாலோ என்னவோ இவரின் பதிவுகள் நச்சென்று இருக்கும். மிகத் தெளிவான கருத்துகள் கொண்டதாக மிளிரும்.  வெற்றிவேல் முருகன் பேசுகிறேன் என்று தற்போது ஒரு தொடர் வெளியிட்டு வருகிறார். பரவலாக வலைப்பூ எழுத்தாளர்கள் பேராதரவைப் பெற்றவர். எட்டு நூல்களை வெளியிட்டிருக்கிறார். எழுத்து அருமையாக இருந்தால் யாவரையும் ஈர்க்கும்தானே. :) -- ( தேனம்மை நோ பொறாமை ப்ளீஸ் - எனக்கு நானே சொல்லிக்கிட்டேன் :) 

இவரிடம் சாட்டர்டே ஜாலிகார்னருக்காக எழுதித் தரும்படி கேட்டேன். அவரது பதிவு அதிர வைத்தாலும் படிப்பினை கொடுத்தது. எல்லாம் தெரிந்தாலும் ஏதோ ஒரு தருணத்தில் நாம் செயலற்று இருக்கிறோம் என்பதை அறைந்தது.  இனி அவரைப் பற்றியும் அவரது எதிர்நீச்சல் பற்றியும் படியுங்கள்.

இது அவரைப் பற்றி அவர் வலைப்பூவில் கொடுத்திருக்கும் சுயவிபரம்.


///கரந்தைத் தமிழ்ச் சங்கக் கல்வி நிலையங்களுள் ஒன்றான, உமாமகேசுர மேனிலைப் பள்ளியில் பட்டதாரி நிலை கணித ஆசிரியராகப் பணியாற்றி வருகின்றேன்.கரந்தை வரலாற்றில் சில செப்பேடுகள்,விழுதுகளைத் தேடி வேர்களின் பயணம், கணித மேதை சீனிவாச இராமானுஜன்,கரந்தை ஜெயக்குமார் வலைப்பூக்கள், கரந்தை மாமனிதர்கள், வித்தகர்கள், உமாமகேசுவரம்,இராமநாதம் முதலிய எட்டு நூல்கள் எழுதி வெளியிட்டுள்ளேன். கரந்தைத் தமிழ்ச் சங்கத் திங்களிதழாகிய தமிழ்ப் பொழில் இதழின் பதிப்பாசிரியர் குழு உறுப்பினர்.கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் இராதாகிருட்டின விருதினையும் பெற்றுள்ளேன்.///

 வடவாறு :-
************

முப்பத்து ஐந்து ஆண்டுகளுக்கு முன் ஓர் விடுமுறை நாள்,தஞ்சாவூர், கரந்தை, வடவாற்றின் பாலத்தின், அகன்ற கைப் பிடிச்சுவற்றில் ஏறி நிற்கின்றேன்.

சற்றே தலை குனிந்து பார்க்கின்றேன். ஆற்றில் வெள்ளம் கரை புரண்டுஓடிக் கொண்டிருக்கிறது. ஒரு நொடி தயங்கினேன், ஒரே ஒரு நொடிதான், அடுத்தநொடி, ஆற்றிற்குள் பாய்ந்தேன்.


தண்ணீரில் விழுந்த வேகத்தில், தண்ணீரைக் கிழித்துக்கொண்டு வெகுவேகமாய் உள்ளே, உள்ளே சென்றேன். மூக்கில் தண்ணீர் புகுந்து திக்குமுக்காடிப் போகிறேன்.


கால் தண்ணீருக்கு அடியில் தரைப் பகுதியைத் தொடுகிறது. மெதுவாக காலைத் தரையில் உந்தி, மெல்ல மெல்ல மேலே வருகிறேன்.தலை மெல்ல தண்ணீர் பரப்பிற்கும் மேலே வருகிறது. வேகமாய் மூச்சுவிடுகிறேன். ஒரு நொடிதான், தண்ணீர் வெகுவேகமாய் என்னை உள்ளே இழுக்கிறது.


நீரில் மூழ்கி உள்ளே சென்ற நான், மீண்டும் காலைத் தரையில் ஊன்றி,உந்தி எழும்பி மேலே வருகிறேன், வந்த வேகத்தில் மீண்டும் உள்ளே செல்கிறேன்.


வாய் வழியே ஆற்று நீர் வெகுவேகமாய் உள்ளே சென்று கொண்டிருக்கிறது. வாயோ அனிச்சைச் செயலாய் தண்ணீரைக் குடித்த வண்ணம் இருக்கிறது. ஆற்றுநீரைக் குடிப்பதை உணர்ந்த பிறகும், தண்ணீர் குடிப்பதை நிறுத்த வாயை மூடிவேண்டும் என்ற எண்ணம் கூடத் தோன்றாமல், உடலோடு சேர்ந்து, மனமும்மரத்துப் போய்விட்டது,


ஆற்றின் நீரைக் குடித்தபடி மேலே வருவதும், பின் மூழ்குவதுமாய் ஒரு சிலநிமிடங்கள் கரைகின்றன. ஆற்றின் கரையில் நின்றபடி, என் நிலையினைக் கவனித்த, என் நண்பன் இராசேந்திரன், வேகமாய் ஆற்றில் குதித்து, வெகு லாவகமாய் நீந்தி, என் பின்புறம் வருகின்றான்.


நான் தண்ணீர் மட்டத்திற்கும் மேலே, மேலெழுந்து வரும் பொழுது, என்முதுகில் கை வைத்து, எவ்வளவு வேகமாய் முடியுமோ, அவ்வளவு வேகமாய் ஒரு தள்ளு தள்ளுகிறான். அவன் தள்ளிய அழுத்தமான தள்ளலில், தண்ணீர் மட்டத்தின் மேல், தலை கவிழ்ந்து, முன்புறம் கவிழ்ந்து படுத்த நிலைக்கு வந்த நான், திடீரென்று சுய நினைவை அடைந்தவனாய், இரு கைகளையும் மாற்றி மாற்றி முன் புறம் கொண்டு வந்து, மெதுவாய் நீச்சல் அடிக்கத் தொடங்குகிறேன்.


நண்பன் இராசேந்திரன் என் பின்புறம் தொடர்ந்து வந்து, மேலும் இரு முறை என்னை முன்னோக்கித் தள்ள, வாயைத் திறந்த படி, மேல் மூச்சு, கீழ் மூச்சு வாங்க, ஆற்றின் கரையில் கால் பதித்து மெல்ல எழுந்து நிற்கின்றேன் உடம்பின் படபடப்பு அடங்கவே வெகு நேரமாகிறது. போன உயிர் திரும்பி வந்தது.


புதிதாய் நீச்சல் கற்றுக் கொண்ட தொடக்க காலம் அது. ஆற்றின் பாலத்தில் இருந்து குதித்துத்தான் பார்ப்போமோ என்ற ஆசையில், குதித்தபோது, வேகமாய் தண்ணீரில் விழுந்த அதிர்ச்சியில், நீச்சல் அடிக்க வேண்டும் என்பதையே முற்றாய் மறந்து போய்விட்டேன்.


அன்று என் உயிரைக் காப்பாற்றியவன் என் நண்பன் இராசேந்திரன். கால ஓட்டத்தில், என் உயிர் காத்த நண்பன் இராசேந்திரனைச் சந்தித்து, இருபத்து ஐந்து ஆண்டுகளுக்கும் மேல் ஆகிவிட்டது. என்றாவது ஒரு நாள் சந்திப்போம் என்ற நம்பிக்கை மட்டும் மனதில் உறுதியாய் இருக்கிறது.


கரந்தையின் வடவாறு, நான் ஆசிரியராய் பணியாற்றும், உமாமகேசுவர மேனிலைப் பள்ளியை, ஒட்டி, உரசியபடிச் செல்லும் வடவாறு, ஒவ்வொரு நாளும், இந்நினைவை எனக்குள் புதுப்பித்துக் கொண்டே இருக்கிறது,


அன்று மூழ்கியிருந்தால், இன்று வாழ்வில் எதிர் நீச்சல் போடும் வாய்ப்பு இயலாமல் போயிருக்கும். மாநிலம், நாடு என்ற எல்லைகளைக் கடந்து இன்று பெற்றிருக்கும் எண்ணற்ற இணைய வழி உறவுகளின், வலை உலகத் தோழமைகளின் பாசமிகு வார்த்தைகளைப் படிக்காமலேயே நேசமிகுச் சொற்களைக் கேட்காமலேயே, என் நாடித் துடிப்பு ஒடுங்கியிருக்கும்.

இராசேந்திரா, என் நண்பா, உன்னை ஒரு நாள் சந்திக்க வேண்டும், மீண்டும் ஒரு முறை நன்றி சொல்ல.

டிஸ்கி:- அடேயப்பா.. ஒரு திகில் சுழலில் சிக்கி மீண்டது போல் இருந்தது. தண்ணீர் இராட்சசம்தான். அதில் தெரியாமல் கால் வைக்கக் கூட எனக்கு அதிகம் பயம். ( நீச்சல் தெரியாதுல்ல :) சுற்றுலாத் தலங்களில் படகில் போகும்போதெல்லாம் ஜலத்தையே பயத்துடன் பார்ப்பேன். :)

அஹா என்ன ஒரு அற்புதமான நண்பன். நீங்கள் மூழ்கி மூழ்கி எழுந்ததை வைத்தே கண்டுபிடித்துக் காப்பாற்றி இருக்கிறார் ! நிச்சயம் ஒருநாள் நீங்கள் அவரை சந்திப்பீர்கள். அந்த இராசேந்திரரே வந்திருப்பாரோ :)

வாழ்வில் எதிர்நீச்சல்போடும் வாய்ப்பு என்று அழகாகச் சொல்லிவிட்டீர்கள். எல்லாருக்கும் அதுதான். இருக்கும்வரை போராட்டம்தான் :) அதைவிட ஹைலைட் இதுதான். !!! ///மாநிலம், நாடு என்ற எல்லைகளைக் கடந்து இன்று பெற்றிருக்கும் எண்ணற்ற இணைய வழி உறவுகளின், வலை உலகத் தோழமைகளின் பாசமிகு வார்த்தைகளைப் படிக்காமலேயே நேசமிகுச் சொற்களைக் கேட்காமலேயே, என் நாடித் துடிப்பு ஒடுங்கியிருக்கும்./// மிக அருமை சகோதரா.. பேச வார்த்தைகள் இல்லை. சாட்டர்டே ஜாலி கார்னரை நெகிழ்ச்சி இல்லமாக மாற்றிய உங்களுக்கு அன்பும் நன்றியும். வாழ்க வளமுடன். 

அனைவருக்கும் இனிய தீப ஒளித் திருநாள் வாழ்த்துகள். 12 கருத்துகள் :

Jeevalingam Yarlpavanan Kasirajalingam சொன்னது…

கரந்தை ஜெயக்குமார் அவர்களின் பதிவைப் பகிர்ந்து சிறப்பித்தமைக்குப் பாராட்டுகள்.
இனிய தீபாவளி வாழ்த்துகள்

ஸ்ரீராம். சொன்னது…

சுவாரஸ்யமாகச் சொல்லி இருக்கிறார் நண்பர் கரந்தை ஜெயக்குமார். எங்கள் தஞ்சாவூர்க்காரர். நாளை நான் படித்த தஞ்சை அந்தோணியார் பள்ளி, முதல் முறையாக என்று நினைக்கிறேன், பழைய மாணவர்கள் மீட் வைத்திருக்கிறார்கள். பணிகள் தஞ்சைக்கு என்னைப் போகவிடவில்லை! என் மூத்த சகோதரர் மதுரையிலிருந்து செல்கிறார்!

ஸ்ரீராம். சொன்னது…

அனைவருக்கும் எங்கள் தீபாவளி வாழ்த்துகள்.

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

தங்களின் வலையில் எனது எழுத்துக்கள்
நெகிழ்ந்து போய்விட்டேன் சகோதரியாரே
நெகிழ்ந்து போய்விட்டேன்
நன்றி சகோதரியாரே
தீப ஒளித் திருநாள் வாழ்த்துக்கள்

KILLERGEE Devakottai சொன்னது…

திரு. கரந்தையார் தனது நண்பரை நிச்சயம் ஒருநாள் சந்திப்பார்

Nat Chander சொன்னது…

ji who could forget the first school...they studied..
who could forget the first day in his college..
who could forget the first teacher they knew....
who could forget the FIRST LOVE in their life....
all sweet memories ji.

சோழ நாட்டில் பௌத்தம் Buddhism In Chola Country சொன்னது…

வலையுலகில் வரலாறு படைக்கும் நண்பர் கரந்தை ஜெயக்குமார் அவர்களின் பதிவினை தங்கள் தளத்தில் கண்டு மகிழ்ந்தேன். பழகும் குணம், ஈர்க்கும் எழுத்து, செய்திகளை ஆழ உள்வாங்கிக் கொள்ளும் திறன், வரலாற்றில் ஆர்வம், தமிழில் ஈடுபாடு என்ற பல நிலைகளில் பரிணமித்துக்கொண்டிருக்கும் அவரது எழுத்துப்பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துகிறேன். அவரை தங்கள் தளத்தில் அறிமுகப்படுத்தியமைக்கு நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவிப்பதில் மகிழ்கிறேன்.

பரிவை சே.குமார் சொன்னது…

ஐயா மிகச்சிறந்த எழுத்தாளர்... நல் ஆசிரியர்...
அவரின் வாசிப்பாளனாய் நான் இருக்க... என்னை வாசிக்கும் பெரியவர்களில் அவரும் ஒருவராய்... பாக்கியவான் நான்...

கோமதி அரசு சொன்னது…

சகோதரர் கரந்தை ஜெயக்குமார் சொன்னதை கேட்டவுடன் அவர் நண்பரை விரைவில் அவர் சந்திக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்ள ஆரம்பித்து விட்டது மனது.
நெகிழ்வான நேரம்.
வாழ்த்துக்கள்.
உங்களுக்கும் வாழ்த்துக்கள் தேனம்மை.

துரை செல்வராஜூ சொன்னது…

அன்பு நண்பர் திரு கரந்தை ஜெயக்குமார் அவர்களின் நெகிழ்ச்சியான எழுத்துக்களைத் தங்கள் பதிவில் கண்டதில் மகிழ்ச்சி..

வாழ்க நலம்..

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி யாழ்பாவண்ணன் சகோ

மீட் நல்லபடியாக நடந்திருக்கும் இல்லையா ஸ்ரீராம் :) நன்றி ஸ்ரீராம்

மிக்க நன்றி ஜெயக்குமார் சகோ :)

நன்றி கில்லர்ஜி

நன்றி சந்தர். கவிதை அருமை

நன்றி ஜம்பு சார்

நன்றி குமார் சகோ

நன்றி கோமதி மேம்

நன்றி துரை செல்வராஜு சார்


Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...