எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

ஞாயிறு, 6 மார்ச், 2016

கம்பன் நின்று நிலைப்பது அழகியல் பாடல்களிலா, அறவியல் பாடல்களிலா .

”ராமன் நான்கு கொலைகள் செய்திருக்கிறான். ஆனால் ராவணன் உயிர்க்கொலை செய்ததே இல்லை. “ என்று கம்பராமாயணப் பேச்சின் ஊடே ஒரு எதிர்பாரா செய்தியை கம்பனின் கோட்டையான காரைக்குடியில் கம்பன் கழகத்தில் நடைபெற்ற இசைப் பட்டிமண்டபத்தில் வழங்கிவிட்டுத் தப்பிச் சென்றிருக்கிறார் நண்பர் வளரும் கவிதை முத்து நிலவன் அவர்கள். !!!

விஷயம் இதுதான். மார்ச் மாத கம்பர் விழா - 5- 3- 2016. அன்று காரைக்குடி கிருஷ்ணா மண்டபத்தில் நடைபெற்றது. அதில் நண்பர் பதிவர் புதுக்கோட்டை முத்துநிலவன் தலைமையில் நடைபெற்ற இசைப் பட்டிமண்டபத்தில் கம்பன் நின்று நிலைப்பது அழகியல் பாடல்களிலே என்று மகா சுந்தர் அவர்களும், அறவியல் பாடல்களிலே என்று முனைவர் மு.பாலசுப்ரமணியன் அவர்களும் வாதாடினார்கள்.


மிக சுவாரசியமான இவ்விழாவுக்கு மகா சுந்தர் பேசி முடிக்கும்போதுதான் செல்ல இயன்றது. அடுத்து முத்துநிலவன் அவர்கள் செறிவார்ந்த உரையையும் மு பாலசுப்ரமணியன் அவர்களின் உரையையும் , கம்பன் அடி சூடி அவர்களின் நெகிழந்த உரையையும் கேட்கும் பாக்கியம் பெற்றேன். 


முனைவர் பாலசுப்ரமணியன், அறவியல் என்று சகோதரத்துவம், ( நானிலம் சார்ந்த சகோதரர்கள் - குகன், சுக்ரீவன், வீபீடணன், ) பற்றியும், சீதையின் கற்பின் அறம் பற்றியும் கூறினார். இராமனின் கற்பின் பெருமை பற்றியும் “ இரு மாதரைச் சிந்தையாலும் தீண்டேன் ” என்ற எண்ணம் பற்றியும் கூறினார். அழகியல் மட்டுமல்ல அனைத்தையும் பாடியிருக்கும் கம்பனின் அறத்தைப் புகழ்ந்தார்.


முத்துநிலவன் பேச்சு மிக அருமையாக இருந்தது.  மனைவியைக் கவர்ந்து சென்ற எதிரிக்கும் இரங்கும் மனநிலையில் இராமன் இராவணனிடம் , இன்று போய் நாளை வா என்று உரைத்த அறத்தையும், தசரதனிடம் கைகேயியும் பரதனும் அடுத்த ஜென்மத்திலும் தாயும் தனயனுமாகக் கிடைக்கும் பாக்கியம் அருளும் வரம் வேண்டிய இராமனின் அறம் பற்றியும் சிலாகித்துக் கூறினார். 

மேலும் கம்பனின் சொல்சித்திரத்தைப் புகழ்ந்து அவர் வார்த்தைகளை அடுக்கும் வித்தை பற்றிச் சிறப்பித்துக் கூறினார். நான் ரசித்த இடம் இதுதான்.

சீதையைப் பார்த்துத் திரும்பியதும் இராமனிடம் 

கண்டேன் கற்பினுக்கு அணியை, கண்களால். 

என்று கூறிய இடத்தில் கம்பன் வார்த்தைகளை அடுக்கிய விதத்தைச் சிறப்பித்துப் பொருள் கூறினார். ஒருவரைத் தேடிச் சென்று திரும்பும்போது முதலில் கேட்கப்படும் கேள்வி பார்த்தியா. பார்த்தேன். யாரைப் பார்த்தான் கற்பின் கனலியைப் பார்த்தேன். (கற்பின் கனலி என்றால் அது சீதை மட்டுமே. ). நீ பார்த்தியா இல்ல வேற யாரும் பார்த்தாங்களா. - கண்களால். எனது கண்களால் பார்த்தேன். என்று அவர் கூறியபோது மிக அருமையாக இருந்தது. 

மக்களை உயிராகவும் மன்னனை உடலாகவும் , உடல் மாறலாம் உயிர் மாறாது என்றும் மக்களுக்காகவே அரசாண்ட இராமனின் அறம் பற்றியும் சிறப்பித்துச் சொன்னார். 

அழகியல் இருந்தாலும் அறவியல் சார்ந்தே தீர்ப்பளித்தார் நடுவர். அப்போதுதான் வான்மீகியில் இல்லாததைக் கம்பன் எப்படி மாற்றி அமைத்திருக்கிறார் என்றும் குறிப்பிட்டார். அங்கே இராவணன் சீதையைக் கவர்ந்து சென்றதையும் தமிழகத்துக்கு ஏற்றமாதிரி கம்பராமாயணத்தில் அப்படியே பூமியோடு பேர்த்துச் சென்றதையும் குறிப்பிட்டார். அப்போதுதான் இராமன் கொலை செய்தான் என்றும் இராவணன் கொலை செய்ததே இல்லை என்றும் குறிப்பிட்டார். இராவணனின் ராஜ்ஜியத்திலும் மக்கள் சந்தோஷமாக வாழ்ந்தார்கள் என்றும். அறம் பற்றிய மதிப்பீடு வரும்போது மட்டுமே இராமன் ஏகபத்தினி விரதனாக இருந்ததையும் அதே சமயம் எவ்வளவோ பெருமைகள் இருந்தும் பிறன்மனை நோக்கியதால் சீர்கெட்டழிந்த இராவணனின் நிலை பற்றியும் செம்மையாக மனதில் பதியும் வண்ணம் உரைத்தார்.

சிலர் கவிதைகள் எழுதுவார்கள். சில கவிஞர்கள் தங்கள் எழுத்துக்களால் இன்னும் சில கவிஞர்களை உருவாக்குவார்கள். ஆனால் மகா கவிஞனோ காலத்தை எழுதுவான் அப்படிப்பட்ட கவிஞர்களுள் ஒருவர் கம்பர். ( ஏனையோர் வள்ளுவன், பாரதி  எனக் குறிப்பிட்டார் ).  இன்றைக்கும் காலம் கடந்தும் வாசிக்கப்படும் நேசிக்கப்படும் ஒன்றாக கம்பரசம் இருப்பதைக் குறிப்பிட்டார். 

அறவியல் பற்றிய தனது தீர்ப்பே இறுதியானது அல்ல என்றும் இன்னும் இதுபற்றிய விவாதங்களை முன்னெடுக்கலாம் என்றும் குறிப்பிட்டது அவரது முதிர்ச்சியையும் எதிர்க்கருத்துக்களை எதிர்கொள்ளும் பெருந்தன்மையையும் காட்டியது.  

கம்பன் கழகம் சார்பாக போட்டிகள் நடத்தப் பெற்று மாணாக்கருக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. 

கம்பனடிசூடி பழ பழ அவர்களின் உரை நெகிழ்வாக இருந்தது. ஏப்ரல் மாதம் அந்தமானில் கம்பன் கழகம் சார்பாக நடைபெறப்போகும் மூன்றாம் உலகத் தமிழ்க் கருத்தரங்கம் பற்றிக் கூறினார். அங்கே கம்பராமாயணத்தில் வெவ்வேறு தலைப்புகளில் ஆராய்ச்சிக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட இருக்கின்றன.

காரைக்குடியில் வரும் மார்ச் 21, 22, 23, ஆகிய தேதிகளில் கம்பர் விழா நடைபெறப் போவது குறித்துக் கூறினார்கள். அதில் சிறப்பம்சங்களாக கோயிலூர் ஆதீனகர்த்தா திருப்பெருந்திரு. மெய்யப்ப ஞான தேசிக சுவாமிகளுக்கு அவர்தம் தமிழ், ஆன்மீகம், கல்விப் பணிகளைப் பாராட்டி தெ இலக்குவன் இல்லத்தார் நிறுவி இவ்வருடம் வழங்க உள்ள கம்பனடிப்பொடி விருது பற்றிக் கூறினார்.  மதுரை கம்பன் கழகத் துணைத்தலைவர் திரு சங்கர சீதாராமன் அவர்கள் வழங்க புதுச்சேரி கம்பன் கழகத் தலைவர் திரு வி பி சிவக்கொழுந்து அவர்களுக்குக் கம்பவள்ளல் விருது வழங்கப்படப் போவதாகக் குறிப்பிடார்.

பேராசிரியர் சொ. சேதுபதி அவர்கள் ஜீவாவைப் பற்றி எழுதிவரும் ”காரைக்குடியில் ஜீவா “ நூல் வெளியிடப்படும் என்று கூறினார். கலெக்டர் சகாயம், நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, சுதர்சன நாச்சியப்பன்,பழ. கருப்பையா, கவிதாயினி சல்மா, ருக்மணி பன்னீர்செல்வம்,நெல்லை கண்ணன், சுமதி ஸ்ரீ, பழ முத்தப்பன், ஆகியோர் &  இன்னும் பலர் பங்கேற்றுச் சிறப்பிக்கிறார்கள். 


முத்து பழனியப்பன் அவர்களின் நன்றியுரையோடு விழா இனிது நிறைவுற்றது.  

விழாவின் முடிவில் நண்பர் முத்துநிலவனை கம்பன் அடி சூடி அறிமுகத்தோடு சந்தித்து எனது நூல்களை வழங்கி அவரது கம்பன் தமிழும் கணினித் தமிழும் என்ற நூலை ( நூலுக்கு நூல் என்றபடி - எனது நாலு நூலுக்கு ஒரு நூல் . ( அவ்ளோ சின்னம் எனது புத்தகங்கள் :) :)  ) பெற்றுக் கொண்டு வந்தேன். அப்போது கம்பன் அடி சூடியிடம் இவர் நம்ம ஊருக்கு வந்து கம்பன் கழகத்தில் இராமனைப் பற்றிக் குறைகூறிவிட்டுப் போறாரே என்றேன் சிரித்தபடி. அதற்கு கம்பன் அடிசூடி அவர்கள் மந்தகாசமாகப் புன்னகைத்தபடி ”இவர் வெகுநாள் முன்பே கம்பனையும் கார்ல்மார்க்ஸையும் கம்பேர் பண்ணி புக்கே போட்டுருக்கார்.” என்று  சொல்லி அதிர வைத்தார். :) சரி படித்துப் பார்ப்போம் என்று நினைத்திருக்கிறேன். :) 

கம்பரசம் பருக வருக. 
கம்பன் புகழ் வாழ்க.
கன்னித் தமிழ் வாழ்க.

11 கருத்துகள்:

  1. இராமாயணத்திலேயே பல விதமாகக் கதைகள் உள்ளன ஆத்யாத்ம ராமாயணத்தில் வால்மீகியும் கம்பனும்சொல்லாத பாட பேதங்கள் நிறையவே இருப்பதாகத் தெரிகிறது. திருமுத்து நிலவனுக்கு கம்பனைப் பிடிக்கும் ராமனை அவ்வளவாகப் பிடிக்காது போல் உள்ளது

    பதிலளிநீக்கு
  2. மிகச்சிறப்பான மேடைப் பேச்சாளர்கள் கலந்துகொண்ட நிகழ்ச்சியினை பதிவாக்கித்தந்துள்ளது அருமை. பேச்சாளர்கள் அனைவருக்கும் + தங்களுக்கும் பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  3. //திரு. முத்து நிலவனுக்கு கம்பனைப் பிடிக்கும் ராமனை அவ்வளவாகப் பிடிக்காது போல் உள்ளது// என்ற நம் Mr. GMB Sir அவர்களின் கருத்து ரஸிக்கும்படியாக உள்ளது. :)

    பதிலளிநீக்கு
  4. முத்துநிலவன் அவர்கட்குக் கம்பனையும் பிடிக்கும் ராமனையும் பிடிக்கும். அதே சமயம் ராவணனையும் பிடிக்கும் பாலா சார். எல்லாரிடமும் இருக்கும் நல்லியல்புகளைப் பட்டியலிடுகிறார். :)

    நன்றி விஜிகே சார்

    அஹா அது ஹாஸ்யத்துக்காக சொல்லி இருக்கிறார் விஜிகே சார். :)

    பதிலளிநீக்கு
  5. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு
  6. விழா பற்றிய தகவல்கள் நன்று. சந்திப்புகள் தொடரட்டும்.

    பதிலளிநீக்கு
  7. அருமையான ஒரு விழா பற்றிய பகிர்வு. நன்றி சகோ..

    பதிலளிநீக்கு
  8. அன்பின் சகோதரிக்கு வணக்கம். தாமதமாக வந்தாலும் தகுதியான தொகுப்புரையைத் தந்து மிரட்டிவிட்டீர்களே! (என்னமா கவனிச்சிருக்கீங்க தாயி?) எமக்கு மூவருக்கும் சேர்த்து தரப்பட்ட நேரம் ஒன்றரை மணிநேரமே என்பதால் கம்பன் எனும் கடலை ஒரு கரண்டியில் அள்ளித்தான் கொடுக்க முடிந்தது. அதனால் என்ன? பானைச் சோற்றுக்கு ஒரு சோறு, வெல்லக்கட்டிக்கு ஒரு “காக்காக் கடி” கடிச்சாலும் இனிப்புத்தான் என்பதுபோல நாங்கள் சுருங்கச் சொன்னதை நீங்கள் அதனினும் சுருக்கித் தந்துவிட்டீர்கள். நான் சொன்னது உண்மை! கம்பராமாயணத்தில் இராவணன் யாரையும் கொன்றதாக இல்லை. ராமன்தான் நான்குபேரை (தாடகை, கரன், வாலி, இராவணன்) கொன்றதாக உள்ளது. ஏனைய பண்புகளில் இராவணனும் குறைந்தவனல்லன், அதுதான் கம்பனின் கம்பீரம்! வில்லன்களை 100விழுக்காடு கெட்டவராகவும், நாயகர்களை 100விழுக்காடு நல்லவராகவும் காட்டும் நம்பிக்கையற்ற படைப்பாளியல்லவே கம்பன்? எதார்த்த உலகில் அப்படி யாரும் 100விழுக்காடு நல்லவரோ, கெட்டவரோ இல்லை என்பதையும் புரியவைத்து அதைப்புரிந்து கொள்வார்கள் என்று வாசகரையும் நம்பியவன் கம்பன்! அதுதான் அவனது கவியாளுமை! இன்னும் ஏராளம் சொல்லலாம். எனினும் நான் கம்பனைக் கரைகண்டவன்தான் - அதாவது கரையிலேயே உட்கார்ந்து ரசித்துக்கொண்டே இருப்பவன்! தங்கள் வருகைக்கும் வார்த்தைக்கும்,புத்தகங்கள் வழங்கியமைக்கும் நன்றி. (“ங்கா..” படங்களிலேயே மிரட்டுகிறது. சில கவிதைகள் மகிழவும் சில நெகிழவும் வைத்தன. ஏனைய நூல்களையும் படித்துவிட்டு எழுதுவேன் - கொஞ்சம் கால அவகாசம் தேவைப்படுகிறது.) தங்கள் தொகுப்புரைக்கு மீண்டும் நன்றி.

    பதிலளிநீக்கு
  9. தாங்கள் சொன்னது உண்மைதான் சகோதரி. எனக்கு ராமனையும் பிடிக்கும், ராவணனையும் பிடிக்கும். இருவரையும்விடக் கம்பனை ரொம்பவே பிடிக்கும். நான் சொன்ன 4கொலைகளை விடவும் கொடுமையான -இராமன்செய்த அநியாயக்- கொலை சம்பூகன் எனும் சாதாரண வீரனைக் கொன்றது! இதுபற்றி விரிவாக இராமாயண வல்லாரிடம் கேட்டறியுங்கள். இராமனின் பலம் பலவீனமறிந்து விமர்சிக்கலாம். நன்றி

    பதிலளிநீக்கு
  10. சீதையைப் பார்த்துவந்த அனுமன், இராமனிடம் சொல்வதாக வரும் பாடல் இதுதான்-
    “கண்டனன், கற்பினுக்கு அணியை, கண்களால்
    தெண்டிரை அலைகடல் இலங்கைத் தென்னகர்,
    அண்டர் நாயக! இனித் துறத்தி ஐயமும்,
    பண்டுள துயரும்” என்று அனுமன் பண்ணுவான். வார்த்தைகளை அடுக்கிய அழகில் உளவியல், சொல்நயம் காணலாம். இதனால்தான் அனுமனை “சொல்லின் செல்வன்” என்று இராமனே சொன்னதாக, கிட்கிந்தைக் காண்டத்தில் கம்பன் எழுதுவான்.

    பதிலளிநீக்கு
  11. நன்றி வெங்கட் சகோ

    நன்றி துளசி சகோ & கீத்ஸ்.

    நன்றி முத்துநிலவன் சகோ. அருமையான கருத்துகள். உங்கள் பேச்சையும் எழுத்தையும் பிரமிப்போடு பார்க்கிறேன். தொடருங்கள். நல்வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...