ட்ராச்சென்பர்க் கோட்டை
ஜெர்மனிக்குச் சென்றிருந்த போது பையர் ட்ராச்சன்பர்க் கோட்டைக்கு
அழைத்துச் சென்றார். நம்மூரு என்றால் மலை உச்சியில் கோவில் இருக்கும். இங்கே கோட்டைகள்
இருக்கின்றன.
ராயல் சேர், டைனிங் ஹாலில்
காரில் மகனார் கொலோனில் இருந்து அழைத்துச் சென்றார். பான் நகரில்
இருந்து மேலே ட்ரெயினில் சென்றோம்.
ஸ்கோலே ட்ராச்சென்பர்க் எனப்படும் இக்கோட்டை கட்டப்பட்டது
19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில்தான். கோனிக்ஸ்விண்டரில் உள்ள ட்ராச்சென்பெல்ஸ் என்னும்
மலையில் இம்மாளிகை கட்டப்பட்டுள்ளது.
விதானத்தில் மர வேலைப்பாடுகள்
கண்ணாடி ஓவியங்கள்
1882 இல் இருந்து 1884 வரை இரண்டாண்டுகள் இதன் கட்டுமானம் நடைபெற்று
உள்ளது. இதைக் கட்டியவர் வங்கியாளரும் ப்ரோக்கருமான பரோன் ஸ்டீபன் வான் சார்ட்டர் என்பவர்
ஆனால் அவர் அங்கே வசிக்கவேயில்லை என்பது உபரித் தகவல்.
பின்னர் இது பல கை மாறி ரைன் வெஸ்ட்பாலியா மாநில அறக்கட்டளைக்கு
சொந்தமானது. இதை ட்ராச்சென்பெல்ஸ் ரயில்வேகாரர்கள் பராமரிப்புச் செய்துவருகிறார்கள்.
அங்கே ஒரு ஹோட்டலும் செயல்பட்டு வருகிறது. உள்ளே பூரா கண்ணாடி
ஓவியங்களின் அணிவகுப்புத்தான். காணக் கண் கோடி வேண்டும். ம்யூசிக் ஹால், டைனிங் ஹால்,
பெட்ரூம், பாலே ரூம், ரிஸப்ஷன், கிச்சன் என்று பல்வேறு பகுதிகள் கொண்ட இது இரண்டு தளமாக
அமைந்துள்ளது. அங்கே ஒரு ராயல் சேரும் இருந்தது. அதில் அமர்ந்து புகைப்படம் எடுத்துக்
கொண்டேன்.
இதன் முதல் உரிமையாளர் ஸ்டீபன் சார்ட்டர் பானில் பிறந்தவர்.
வங்கியாளரான அவர் பாரீஸில் வசித்து வந்தாலும் தனது கோட்டையை ஜெர்மனியின் பிரபுவுக்குப்
பொருத்தமானதொரு பின்னணியில் ஜெர்மனியிலேயே
அமைத்தார்.
முதலில் டுஸில்டார்ஃப் கட்டிடக் கலைஞர்களான பெர்ன்ஹார்ட் துஷாஸ்,
லியொ வான் அபேமா ஆகியோர் நியமிக்கப்பட்டனர். பின்னர் சார்ட்டருக்கு அவர்களுடன் கருத்து
வேறுபாடு ஏற்பட பாரீஸ் கட்டிடக் கலைஞர் வில்ஹெல்ம் ஹாஃப்மேனை அழைத்துக் கட்டிடத்தை
முடித்தார்.
ராணியின் நாற்காலி போல உள்ளது.
இக்கோட்டை அவருக்குப் பின் அவரது வாரிசுகளுக்குச் சென்றது. இதைச்
சுற்றுலாத்தலமாக மாற்றலாம் என்று மற்ற வாரிசுகளிடம் இருந்து ஜேக்கப் ஹூபர்ட் பைசன்பாக்
என்ற ஒரு வாரிசுதாரர் மொத்தமாக 3,90,000 டாலர்களுக்கு வாங்கினார். 1900 ஆம் ஆண்டு டிராச்சென்பர்க்
கோட்டையைத் திறம்பட நடத்தத் தெரியாததால் அவர் எக்பர்ட் வான் சைமன் என்ற குதிரைப் படை
வீரருக்கு விற்கும்படி நேரிட்டது.
பின்னர் ஹெர்மன் ஃப்ளோரல் என்பவர் ஏலத்தில் இதை எடுத்து வசித்தார்.
1930 இல் அது கத்தோலிக்க சபைக்கு விற்கப்பட அவர்கள் அங்கே செயிண்ட் மைக்கேல் என்ற உறைவிடப்
பள்ளியை நடத்தி வந்தார்களாம். பின்னர் ஜெர்மன் தொழிலாளர் முன்னணிக்கு விற்கப்பட்டது.
1969 க்குப் பிறகு பராமரிக்கப்படாமல் மோசமடையத் தொடங்கியதால்
அதை பெடரல் ரயில்வேக்கு வாடகைக்குக் கொடுக்கப்பட்டது. 1963 இல் ஒரு சிண்டிகேட்டை நிறுவினர். 1971 ல் பால்
ஸ்பினாட் என்பவர் வாங்கி மறுசீரமைப்புச் செய்து அதன் பின் பார்வையாளர்களுக்காகத் திறந்து
வைத்தார்கள். தற்போது வடக்கு ரைன், வெஸ்ட்பாலியா அறக்கட்டளையால் இது நிர்வகிக்கப்பட்டு
வருகிறது.
இக்கோட்டை டிவி தொடர்களிலும் ஜேம்ஸ்பாண்ட் நாவல்களிலும் இடம்
பெற்றுள்ளது சிறப்புத் தகவல்.

















கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)