எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 12 ஜூலை, 2019

சகோதர பாசத்தில் சிறந்த சத்ருக்னன். தினமலர் சிறுவர்மலர் - 23

சகோதர பாசத்தில் சிறந்த சத்ருக்னன்
இராமாயணத்திலும் மகாபாரதத்திலும் பாசத்தால் விஞ்சிய சகோதரர்கள் பலரைப் பார்த்திருக்கிறோம். ஆனால் அதிகம் பேசப்படாமல் இராமாயணத்தில் ஓரிரு இடங்களில் ஆங்காங்கே வந்தாலும் சத்ருக்னன் இராமன் மேல் மட்டுமல்ல தன் சகோதரர்கள் மூவர் மேலும் கொண்ட பாசம் நம் கண்களைக் கலங்க வைத்துவிடும்.
அயோத்தியை ஆண்ட தசரத மன்னருக்குப் புத்திர பாக்கியமில்லை என்பதால் புத்திர காமேஷ்டியாகம் நடத்துகிறார். ஹோமப் ப்ரசாதமாக பாயாசம் தரப்படுகிறது. அதை தசரதரின் மனைவியரான கௌசல்யை, கைகேயி, சுமித்திரை ஆகியோர் அருந்துகிறார்கள். கடைசியாக அருந்தும்போது பாயாசப் பாத்திரத்தில் சுமித்திரைக்கு மட்டும் கடைசியாக இருமடங்கு பிரசாதம் கிடைக்கிறது. அதனால் கௌசல்யைக்கு ராமரும், கைகேயிக்கு பரதனும் பிறக்க சுமித்திரைக்கு லெக்ஷ்மணன், சத்ருக்னன் என்ற இரு மகன்களும் பிறக்கிறார்கள்.
இவர்கள் அனைவரும் வசிஷ்டரின் வழிகாட்டுதலின் படி கல்வி கேள்விகளில் சிறந்து விளங்குகிறார்கள்.  இப்படி இருக்கையில் ஒரு நாள் விசுவாமித்திர முனிவர் தனது தவத்துக்கு இடையூறு செய்யும் அரக்கர்களை அழிக்க ராமனையும் லெக்ஷ்மணனையும் அனுப்பும்படி தசரதரிடம் கேட்கிறார். குழந்தைகளைப் பிரிய தசரதர் தயங்கினாலும் அனுப்பி வைக்கிறார்.

இளவல்கள் இருவரும் அரக்கர்களை அழித்து விசுவாமித்திரரின் யாகத்தைக் காக்கிறார்கள்.அவர் மகிழ்ந்து அவர்களுக்கு இன்னும் சில அஸ்திரங்கள் அளிக்கிறார். மேலும் மிதிலைக்கு அழைத்துச் செல்கிறார். அங்கே ராமர் சிவதனுசு என்னும் வில்லை முறித்து சீதையை மணந்துகொண்டு அயோத்தி திரும்புகிறார்
அதன் பின் அவருக்கு பட்டாபிஷேகம் நடத்த தசரதர் முடிவெடுக்கும்போது கைகேயி கூனியின் சொல் கேட்டு ராமன் வனம் பதினான்கு ஆண்டுகள் ஏகவேண்டும். தன் மகன் பரதன் அரசாளவேண்டும் என வரம் கேட்கிறாள். முன்னொருகாலத்தில் தசரதர் கைகேயிக்குக் கொடுத்த வாக்கை நிறைவேற்ற ராமன் வனம் செல்ல நேரிடுகிறது. அப்போது அவரோடு சீதையும் லெக்ஷ்மணனும் வனத்துக்குச் செல்கிறார்கள்.
இந்தக் கொடுமை நிகழ்ந்த போது பரதனும் சத்ருக்னனும் தங்கள் பாட்டனார் ஊரில் இருந்தார்கள். தசரதர் இறந்த செய்தி கேள்விப்பட்டு இருவரும் அயோத்திக்குத் திரும்பினார்கள். ராமர் வனம் புகப்போகும் செய்திகேட்டு பரதன் வருந்தி ஓடினான். ராமருடன் தானும் வனத்துக்கு வருவதாகக் கூறினான் பரதன். ராமன் ஒப்புக்கொள்ளாததால் அவரின் பாதுகையை வேண்டிப்பெற்று வந்து அரியணையில் வைத்து அரசாட்சி நடத்தி வந்தான் பரதன்.
ராமன் கானகம் புகுமுன் பரதனுக்கு ஒரு வாக்கு அளித்தார். ”பதினான்கு ஆண்டுகள் கழித்து இதே நாள் நான் அயோத்தி மாநகரம் திரும்புவேன். அதுவரை நீ அரசாட்சி செய்துவா. ” இவ்வளவுதான் அவர் கூறிச் சென்றது. இதோ பதினான்கு ஆண்டுகள் முடிந்துவிட்டன. அதே நாள். ராமர் கானகம் சென்ற அதே நேரம் நெருங்கிக்கொண்டிருக்கிறது.
மாபெரும் தீக்குண்டத்தை வளர்க்கிறான் பரதன். அதில் தீப்பாயச் சித்தமாகிறான். அவனது தாய் கைகேயி, பெரியன்னை கௌசல்யை, சிற்றன்னை சுமித்திரை ஆகியோர் பதைக்கிறார்கள்.
பரதன் தன் சிறிய தம்பி சத்ருக்னனை அருகே அழைக்கிறான். “ நம் அன்பிற்குரிய அண்ணன் ராமர் வரும் வேளை நெருங்கிவிட்டது. இன்னும் காணோம். என் மனம் அவருக்கு என்ன நேர்ந்ததோ என்னும் கவலையில் வாடுகிறது. ஒரு வேளை அவர் குறிப்பிட்ட நேரத்தில் வராவிட்டால் நான் இந்த சிதையில் பாய்ந்து உயிர்த்தியாகம் செய்வேன். எனக்குப் பிரதியாக நீ இந்த நாட்டின் அரசபாரத்தைச் சுமந்து அரசாட்சி செய்து வரவேண்டும் . இது என் கட்டளை ” என்கிறான்.
இதைக்கேட்டு சத்ருக்னன் கோபத்தால் கொந்தளிக்கிறான் ,” ஆமாம் நீ மட்டும்தான் கவலையில் வாடுகிறாயா. ராமர் அண்ணாவைக் காணாமல் நானும்தான் கவலையில் வாடுகிறேன். என்னை என்ன இரக்கமற்றவன் என நினைத்தாயா ? தந்தையின் கட்டளைக்கேற்ப அண்ணன் காட்டுக்குச் சென்றான். அவனைத் தொடர்ந்து அவன் பாத அடி பற்றி சின்ன அண்ணன் லெக்ஷ்மணனும் காட்டுக்குப் போய்விட்டான். நீ பொறுப்புக்களை என் மேல் சுமத்தி விட்டுச் சிதை ஏறிவிடு. ஏனெனில் நாந்தானே இழிந்தவன். என்னை இந்த இக்கட்டில் சிக்கவைத்துவிட்டு நீங்கள் எல்லாம் தப்பி விடுங்கள். மக்கள் முன்னே நான் பாவியாகி நிற்க வேண்டுமா. ?” எனக் கதறுகிறான்.
”பட்டம் கட்டிக்கொள்ள எனக்கு முன்பே மூன்று சகோதரர்கள் இருந்தும் பாவியாகிய நான் தான் அயோத்தி ராஜாவாக வேண்டுமா. இந்தப் பாவத்தை நான் சுமக்க வேண்டுமா. யாராவது பரதனுக்கு எடுத்துச் சொல்லுங்கள் ” என குமுறித் தீர்க்கிறான்.
இதையெல்லாம் காதுகொடுத்துக் கேளாமல் சிதையை பரதன் சுற்றி வர “ ராமா அண்ணா நீ எப்போது வருவாய்.. வந்து இந்த இக்கட்டிலிருந்து எங்களைக் காப்பாய். சீக்கிரம் வா “ என அரற்றுகிறான். சிதையின் அக்னி ஜுவாலையே அவன் கூவலைக் கேட்டுப் பயந்து நடுங்குகிறது.
அந்நேரம் வானில் அனுமன் வாயுவேகமாகப் பறந்துவந்து சிதையில் ஏறப்போகும் பரதனைத் தடுக்கிறார். அதைக் கண்டு பரவசமாக ஓடிவரும் சத்ருக்னன் அனுமனிடம் விபரம் கேட்கிறான். ராமர் திரும்பிக் கொண்டிருப்பதாக அனுமன் சொன்ன சேதிகளைக் கேட்டு மகிழ்கிறான்.
”அப்பாடா அறம்பிழைத்தது. என் அண்ணன்கள் பிழைத்தார்கள். நானும் பாவியாவதிலிருந்து தப்பித்தேன் ” என மகிழ்கிறான். நாட்டை ஆளும் அரசபதவியே கிடைத்தாலும் அது முறைப்படி தன் அண்ணன்களுக்குத்தான் கிட்டவேண்டும் என நினைத்த சத்ருக்னனின் பாச உள்ளத்துக்கு முன் எதுதான் நிற்கமுடியும் ?
சகோதர பாசத்தில் லெக்ஷ்மணன், பரதன் போல் சத்ருக்னனும் போற்றத்தக்கவனே இல்லையா குழந்தைகளே. 

டிஸ்கி 1 :-  இந்தக் கதை இதிகாச புராணக் கதைகள் என்ற தலைப்பில் 28. 6. 2019  தினமலர் சிறுவர்மலர் இதழில் இடம்பெற்றுள்ளது. நன்றி தினமலர் சிறுவர் மலர், தனது அழகான ஓவியங்களால் கதைக்கு எழில்கூட்டும் ஓவியர் ரஜனி & எடிட்டர் தேவராஜன் ஷண்முகம் சார்.

டிஸ்கி 2:- அரும்புகள் கடிதத்தில் இதிகாச புராணக் கதை தன்னுடைய நல்ல பண்புகளை வளர்த்து நேர்வழிக்குக் கொண்டு செல்வதாகப் பாராட்டிய தக்கோலம் வாசகர் மு.பயாசுதீன் அவர்களுக்கு நன்றிகள். வாசகி ஸ்ரீரங்கம் எஸ். கவிதா அவர்களுக்கும் நன்றிகள்.  

4 கருத்துகள்:

  1. சிறுவர்களுக்கு மட்டுமன்றி அனைவருக்குமே பாடம், இதுபோன்ற தொடர்கள். தொடர்ந்து வாசிக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  2. நன்றாகச் சொல்லியிருக்கீங்க. இப்போதுதான் இக்கதை அறிகிறோம். வாழ்த்துகள்

    கீதா

    பதிலளிநீக்கு
  3. மிக்க நன்றி ஜம்பு சார். உங்கள் வார்த்தைகள் மகிழ்வளிக்கின்றன

    நன்றி கீத்ஸ்

    நன்றி ஜெயக்குமார் சகோ

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...