எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 21 செப்டம்பர், 2018

யார் உயர்ந்தவர் ? தினமலர் சிறுவர்மலர் - 36.

நதிகள் சொல்லித்தந்த பாடம்.

யார் உயர்ந்தவர்?

னிதர்களுக்குள்ளே யார் உயர்ந்தவர் என்ற போட்டி பொறாமை ஏற்படுவதுண்டு. ஆனால் ஒருமுறை நதிகளுக்குள்ளே யார் உயர்ந்தவர் என்ற போட்டி ஏற்பட்டது. இதை யாரிடம் சொல்லித் தீர்வு காணலாம் என யோசித்தன. அந்த நேரம் பார்த்து திருக்கழுக்குன்றம் என்ற ஊரில் ஒரு புஷ்கரமேளா நடைபெறவிருந்தது.

அனைத்து நதிகளும் அத்திருக்கழுக்குன்றத்தில் கோயில் கொண்டிருக்கும் வேதபுரீஸ்வரரிடம் சென்று யார் உயர்ந்தவர் என்பதைக் கேட்கலாம் என முடிவு செய்தன. வாருங்கள் குழந்தைகளே நாமும் சென்று யார் உயர்ந்தவர் என்று வேதபுரீஸ்வரர் கூறினார் எனப் பார்ப்போம்.

மார்க்கண்டேயரைத் தெரியுமல்லவா ? நீலகண்டனால் என்றும் பதினாறு என்று வரம் பெற்றவர். அவர் ஒருமுறை திருக்கழுக்குன்றம் வந்தார். அங்கே நான்கு வேதங்களால் உருவான மலைமீது  சிவன் வேதபுரீஸ்வரர் என்னும் பெயரில் கோயில் கொண்டிருந்தார். இம்மலையைச் சுற்றிலும் தேவகணங்களும் பூதகணங்களும் சிவனுக்குக் காவலாய் இருக்கும்.

அங்கே வந்த மார்க்கண்டேயர் கோயிலைச் சுற்றிப் பல்வேறு குளங்களையும் தீர்த்தங்களையும் சுனைகளையும் கண்டார். அகத்திய குளம், மூலிகைக் குளம், அக்கினி குளம், லெட்சுமி தீர்த்தம், ரிஷப தீர்த்தம், சங்கு தீர்த்தம் ஆகிய புஷ்கரணிகளைக் கண்டு புனித நீராடினார். சிவனையும் அத்தீர்த்தங்களால் அபிஷேகிக்க விரும்பினார். சிவன்தான் அபிஷேகப் பிரியராயிற்றே.

ஆனால் மார்க்கண்டேயர் அக்குளத்திலிருந்து குன்றுக்கு நீரை எப்படி எடுத்துச் செல்வது என்று மனம் தளர்ந்து பார்த்துக் கொண்டிருந்தார். என்னே அதிசயம் அவர் கடைசியாக நீராடிய குளத்திலிருந்து புஸ் ஸென்ற ஒலி கேட்டது. நுரை நுரையாய் வட்ட அலைகள் கொப்புளித்து வந்தன. மெல்ல மெல்ல மேலெழும்பி ஏதோ ஒன்று வந்தது. அட.. அது ஒரு பெரிய வலம்புரிச்சங்கு.

அதைக்கண்ட மார்க்கண்டேயரின் விழிகள் வியப்பால் விரிந்தன. அபிஷேகப் பிரியனுக்கு நீரை அபிஷேகிக்க ஒரு சங்கு கிடைத்துவிட்டதே. அதுவும் வலம்புரிச்சங்கு. ஆதுரத்தோடு அச்சங்கை எடுத்து அதில் நீர் முகர்ந்து சென்று இறைவனுக்கு அபிஷேகம் செய்து, தீபங்கள் வைத்து மகிழ்ந்தார் மார்க்கண்டேயர்.

பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை இவ்வாறு அந்த புஷ்கரணியில் சங்கு தோன்றுவதால் அது சங்கு தீர்த்தம் என அழைக்கப்பட்டது.

திகள் என்ன ஆயின என்று பார்ப்போம். புஷ்கர மேளா நடக்கும் திருக்கழுக்குன்றத்துக்கு அனைத்து நதிகளும் வேகமாக வந்து கொண்டிருந்தன.

வேகவேகமாக ஓடிவரும் வேகவதி தானே சிறந்தவள் , உயர்ந்தவள் என்றது. பக்கத்தில் வந்த அனகையும் அம்பையும், கம்பையும், கவுதமையும், பம்பையும், பாலியும், பிராமியும் பினாகியும் தாங்களே உயர்ந்தவர்கள். ஏனெனில் உயர்ந்த இடத்திலிருந்து ஓடிவருகிறோம் என்றன.

இந்திரபுத்ராவும், ருத்ராவும், துங்கபத்ராவும், காவேரியும், தென்குமரியும், தேவிகையும், நாங்கள் மட்டும் சளைத்தவர்களா என்றன.

தாமிரபரணியும், மலைப்பிரதாரிணியும், மந்தாத்ரியும், மணிமுத்தும் வேத்ராவதியும், கைதாரிணியும் வைகையும் நாங்கள் மட்டும் இளைத்தவர்களா என்றன.  

சிந்துவும், சிங்கையும், சோமமும்,  சோவதியும், யமுனையும் நர்மதையும், நந்தினியும் தாங்கள் மனிதர்களைப் புனிதப்படுத்துவதால் உயர்ந்தவை என்றன.

காளிந்தி கடவுள் கால் பட்டதால்தானே உயர்ந்தவள் என்றது. கங்கை மனிதர்களின் பாவம் போக்குவதால் தானே உயர்ந்தவள் என்றது.

இப்படிக் கூச்சலிட்டபடி அவை தங்கள் கணவரான கடலரசனுடன் ஓடிவந்து வேதபுரீஸ்வரர் கோயிலின் சங்கு தீர்த்தத்தில் சங்கமித்தன. கடலரசன் பேச்சின்றி அமைதி காத்தார். மனிதர்கள் கூச்சலிட்டாலே சகிக்காது. கல்லையும் கடலையும் உருட்டிவரும் நதிகளின் சப்தத்தில் வேதபுரீஸ்வரர் கண் திறந்தார். அவர் செவியில் அனைத்து நதிகளின் பேச்சரவமும் கேட்டிருந்தார்.

மௌனமாய் தன்னருகில் இருக்கும் சங்கு தீர்த்தத்தைப் பார்த்தார். பிற நதிகளையும் பார்த்தார். அனைத்தும் கை கூப்பி அவர் சொல்லப்போகும் தீர்ப்பை எதிர்பார்த்தன. தாமே உயர்ந்தவர் என்று அவை ஒவ்வொன்றின் மனதிலும் தற்பெருமை நிரம்பி இருந்தது.

அப்போது ஒரு அதிசயம் நிகழ்ந்தது. சங்கு தீர்த்தத்தில் மிகப்பெரும் அலைகள் நுரையோடு தோன்றின. அவற்றில் இருந்து புஸ்ஸென்ற ஒலியோடு ஒரு பொருள் மிதந்து வந்தது. அது ஒரு வலம்புரிச் சங்கு. இறைவனுக்கு அபிஷேகம் செய்வதற்காக பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை அந்தக் குளம் உருவாக்கிய சங்கு அது.

வேதபுரீஸ்வரர் எல்லா நதிகளையும் பார்த்தார். அவற்றுக்கு ஏதோ புரிந்தது போல் இருந்தது. “  குளம் போலத் தேங்கி நிற்கும் இந்த சங்கு தீர்த்தம் அபிஷேகத்துக்காக வலம்புரிச் சங்கைப் புதிதாக உருவாக்குகிறது. மனிதர்களின் பாவத்தையும் போக்குகிறது. அகன்று பரந்து விரிந்து நீண்ட நெடிய பாதையில் காடு மலை மேடு எல்லாம் கடந்து வந்தும் பாயும் இடங்களைப் பசுமையாக்காமல் கடமையை மறந்து குறுகிய மனப்பான்மையில் நீங்கள் உங்களுக்குள் யார் உயர்ந்தவர் என்று அற்பச் சண்டையிட்டுக் கொள்கிறீர்கள். நீங்களே சொல்லுங்கள். யார் உயர்ந்தவர்?” என்று கேட்டார்.

அனைத்து நதிகளும் வெட்கித் தலை குனிந்தன. இறுமாப்பு ஒழிந்தன. இறைவனே உயர்ந்தவன் என்று சங்கு அளித்த சங்கு தீர்த்தமே உயர்ந்தது என்று சொல்லி அதில் சங்கமித்தன. இறைவனைப் பணிந்தன. ஆகையால் என்றும் நானே உயர்ந்தவன் என்ற இறுமாப்பும் தற்பெருமையும் எப்போதும் கொள்ளக்கூடாது குழந்தைகளே.  

டிஸ்கி:-  இந்தக் கதை இதிகாச புராணக் கதைகள் என்ற தலைப்பில் 14. 9. 2018  தினமலர் சிறுவர்மலர் இதழில் இடம்பெற்றுள்ளது. நன்றி தினமலர் சிறுவர் மலர் & தேவராஜன் ஷண்முகம் சார்..

2 கருத்துகள்:

  1. நன்றி ஸ்ரீராம்

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...