எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 24 மே, 2017

பெல்லட் - குறுநாவல்.


பெல்லட்:-

அத்யாயம் – 1. சிபிஐ கோர்ட்

ஒரு கோடி ரூபாயைக் கையாடல் செய்த வழக்கில் கைதாகி கோயமுத்தூரில் இருந்த அந்த சிபிஐ கோர்ட்டில் ஆஜராகி தலைகுனிந்து அமர்ந்திருந்தார் முருகானந்தம். மது மாது சூது என்று எந்தப் பழக்கமும் இல்லாத நேர்மையான மனிதர், மிகப் பெரும் நிலக்கிழார் என்று பெயரெடுத்திருந்த, மிகப்பெரும் நிறுவனத்தின் உயர் பொறுப்பிலிருந்த அவருக்கு ஒரு கோடி ரூபாய் எடுக்கும்படி அப்படி என்னதான் தேவை பணத்துக்கு என்று அவரது அலுவலகச் சிப்பந்திகளே அதிர்ச்சியில் உறைந்து இருந்தார்கள்.

”முருகானந்தம் முருகானந்தம் முருகானந்தம்..” மூன்று முறை அழைத்தார் டவாலி.

நேரே எழுந்து சென்றவரை சைகை காட்டி பக்கவாட்டில் வரச் சொன்னார் டவாலி. மாண்புமிகு நீதிபதியின் முன் குறுக்கே செல்வதோ பின்புறம் திரும்பி நடப்பதோ சிபிஐ கோர்ட்டில் அனுமதிக்கப்படுவதில்லை.

குற்றவாளிக் கூண்டில் ஏறி நின்றார் முருகானந்தம். ஆறடி உடம்பும் ஆறு சாண் ஆகிவிடாதா எனக் குறுகியபடி இருந்தது அவர் முகம். எந்தப் பக்கம் திரும்பினாலும் எல்லாம் தெரிந்த முகங்கள்.

சாட்சிக் கூண்டில் ஒரு கோடி ரூபாய்க்கான அந்த செக் மாற்றப்பட்ட வங்கியின் ஊழியர்  ராஜன் நின்றிருந்தார். அவர் அங்கே இண்டர்னல் ஆடிட்டிங்கில் இன்ஸ்பெக்‌ஷன் டிபார்ட்மெண்டில் இருந்தார். ராஜனுக்கு முருகானந்தத்தைப் பார்க்க வருத்தமாக இருந்தது. இருந்தும் என்ன செய்ய ?. கோர்ட் நடைமுறை. நடந்ததை சொல்லித்தானே ஆகவேண்டும்.


சாட்சியிடம் வக்கீல் சத்தியப் பிரமாணம் வாங்கினார். கையாடல் செய்யப்பட்டிருப்பதை வக்கீலின் குறுக்கு விசாரணையில் ராஜன் உறுதி செய்தார். செக் போட்டுப் பணத்தை எடுத்து ஆறு மாதங்களுக்குள் சிறிது சிறிதாக அதே அக்கவுண்டில் திருப்பிக் கட்டப்பட்டிருந்தது தெரிந்தது. எனினும் கையாடல் கையாடல்தானே.

அடுத்து குற்றவாளியிடம் திரும்பினார் அரசு வக்கீல். குறுக்கு விசாரணைக்கெல்லாம் வேலையேயில்லை. வக்கீல் கேட்ட கேள்விக்கு உடனே 'ஆம்' எனச் சொல்லித் தலையசைத்தார் முருகானந்தம். கம்பெனியின் மிகப்பெரும் பொறுப்பில் இருப்பதால் ஒரு கோடி ரூபாய்வரை சாங்ஷன் செய்யும் உரிமை அவர் வசம் இருந்தது. அதுதான் வீக்காகி விட்டது. பலவருடம் கட்டிக் காத்த நேர்மை தவறி அவசரத் தேவைக்கு எடுத்துவிட்டார்.

”அப்படியானால் குற்றத்தை ஒப்புக் கொள்கிறீர்களா ?” எனக் கேட்டார் நீதிபதி. 'ஆம்' என மறுமுறை ஒப்புக் கொண்டார் முருகானந்தம். உடனே தீர்ப்பை எழுதி வாசித்துவிட்டார் நீதிபதி.

”வாதியே ஒப்புக்கொண்டதால் குற்றம் நிரூபணமாகிவிட்டது. பட்டா எண் 24/2A உட்பிரிவு 1A1A. சர்வே எண். 555/88  இல் உள்ள அவரது வயலும் நிலமும் சொத்துக்களும் முடக்கப்படுகின்றன. குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு எண் 102 இன் கீழ் விசாரணை முடியும் வரை அவரது வங்கிக் கணக்கும் முடக்கப்படுகிறது. பண மோசடிக் குற்றத்துக்காக பிரிவு 421, மற்றும் 424 இன் படி அவரைக் கைது செய்து ஆறுமாத காலம் காவலில் வைக்கவும் மீதிப்பணத்தை வட்டியுடனும் அபராதத்துடனும் கட்ட வேண்டும் எனவும் உத்தரவிடுகிறேன். “

எதற்காகச் செய்தாரோ அந்தச் சொத்தே முடக்கப்பட்டுவிட்டது. காவலர்கள் அழைத்துச் செல்லும்போது கைகளில் விலங்கில்லாமல் விலங்கு பூட்டப்பட்டது போல அதிர்ச்சியாயிருந்தது அவருக்கு. அங்கே தோட்டத்தின் நடுவில் அமைந்த வீட்டில் மகன் வருவான் என்று கடலைக் குழம்பு வைத்து மரத்தட்டத்தோடு காத்திருக்கும் அன்புத் தாய் சாரதாம்மிணியின் முகம் அவர் மனக்கண்ணில் நிழலாடியது.








அத்யாயம் :-2 சிங்காநல்லூர் தோட்டம்.

”ஏ ஆத்தா ஒன் மகனுக்கு மட்டும் கையில பிசைஞ்சு போடுவியா எனக்கும் போடாத்தா” எனக் கேட்டுக் கொண்டிருந்தாள் தனம். தனம் சாரதாம்மிணியின் தூரத்துச் சொந்தம். கை உதவிக்கு வந்தவள் இங்கேயே தோட்டத்தில் தங்கி விட்டாள். சோளம், சின்ன வெங்காயம், கடலை எல்லாம் பயிரிடும் தோட்டம் சுற்றிலும். கோம்பைாய்க் நான்கும் ாராம்பசுக்களுமாக நின்றிருந்தன. ஒரு கோபர் கேஸ் ப்ளாண்டும் இருந்தது அங்கே. எதுக்கும் குறைவில்லை.

மகனை நினைத்தபடி கனல் கனன்ற அடுப்பின் அருகே சென்றார் சாரதாம்மிணி. இந்தக் கடலைக்குழம்பு நன்கு சுண்டி தணலில் கிடக்கும்போது மரத்தட்டத்தில் சோற்றைப் போட்டு கெட்டியான குழம்பை ஊற்றி நல்லெண்ணெய் விட்டுப் பிசைந்து கொடுத்தால் அவனுக்கு ரொம்பப் பிடிக்கும் என்று நினைத்தது தாயுள்ளம். சோற்றைத் தட்டத்தில் போட்டு குழம்பைக் கிளறி கெட்டி பத்தையாகப் போட்டு நல்லெண்ணெய் விட்டுக் கொடுத்தார். வாங்கி முனகியபடி பிசந்தாள் தனம். கவளம் கவளமாக வாயில் உருண்டையைப் போட்டபடி கேட்டாள்

“ஏனாத்தா, ஐயன் இந்தவீசு ஊருக்கு வல்ல. இனி எப்பால வெருவாக, அவிக புள்ளங்களையும் பார்த்து நாளாச்சாத்தா “ என்றாள்.

“இந்த வீசு லீவிக்கே வந்திருக்கோணும். வெவரம் தெரில. ஆனா நேரமில்லியாட்டுருக்கு “ என்றார் சாரதாம்மிணி. நேரே ஆவினங்கள் சூழ கோபியர்கள் மயங்க கோகுலகிருஷ்ணன் புல்லாங்குழல் ஊதும் கோலத்தில் இருக்கும் புகைப்படம் அந்த மாளிகை வீட்டை ஒரு கானகமாகவும் கோகுலமாகவும் ஆக்கிக் கொண்டிருந்தது. பார்த்து மனதுக்குள் வேண்டிக் கொண்டார். ”கோபாலா கோவிந்தா எல்லாம் உன் செயல் புள்ளிங்கள நல்லா வையி.” நீல விளக்கு ஒளிர்ந்து கொண்டிருந்தது நீலக் கோபாலனின் புகைப்படத்தின் மேல்.

”ஏனாத்தா அவிக மகன் மகளுக்கு என்ன வயசிருக்கும் . இப்ப என்ன பண்ணுதுக” எனக் கேட்டாள் தனம். சோறு கவளம் கவளமாக அந்த பின்பனிக்கால இரவின் கூதலில் இதமாக இறங்கிக் கொண்டிருந்தது அவளுக்குள். சுகமாகக் கதை பேசியபடி சோற்றை உருட்டிக் கொண்டிருந்தாள் அவள்.
”மகன் சின்னவன் பத்தாவது படிக்கான். மகதான் பெரியவ. பள்ளிக்கோடம் படிச்சுப்போட்டு ஏதோ பத்ரிக்கைக்குப் படிக்காளாம். அதுக்காவ டில்லி காஷ்மீரூ எல்லாம் போறதா சொன்னா போனில. ” சொல்லும்போதே பெருமிதம் வழிந்தது பாட்டியின் குரலில். இல்லியா பின்னே. நாலு தலைமுறைக்கு அப்புறம் பிறந்த பெண் குழந்தை அவளுக்கென்ன ராசாத்தி.. ஆமாம் அவள் பெயர் ராதாராணிதான்.

ராதாராணியை நினைத்ததும் அவளுக்காக க்யூகட்டி நிற்கும் மாப்பிள்ளைகள் சாரதாம்மிணியின் கண்ணுக்குள் வந்து போனார்கள். நம்ம ஆளுகள்ல நல்லா தோட்டம் தொவோட படிச்ச புள்ள கிடைக்கிது. நல்ல குடும்பம் என்று நெருக்கிக் கொண்டிருப்பவர்கள் ஏராளம். அவர்களில் ஓரிருவரை சாரதாம்மணிக்கும் ரொம்பப் பிடித்துத்தான் இருந்தது. மகன் வரும்போது கேட்க வேண்டும் என்று சமயம் பார்த்துக் கொண்டிருந்தார்.

”ஏனாத்தா நீங்க உங்கலையா” எனக் கேட்டாள் சோளக் குவியல்களின் பக்கம் படுக்கையை விரித்தவாறு தனம். ”இல்லட்டி. கோதுமை ரவை உப்புமாவுல நெய்யும் வெல்லமும் பழமும் போட்டு சாப்பிட்டனுல்ல கம்முன்னு கெடக்குது “ என்றார் சாரதாம்மிணி.

”சரிட்டி நீ படுத்துக்க. காலைல அப்புனு வருவான். இந்த சோளமெல்லாம் சந்தைக்கு அனுப்போணும். நானும் தூங்கப் போறேன்” என்றார்.

மரக்கட்டிலில் படுத்தும் தூக்கம் வரவில்லை அவருக்கு. பக்கத்தில் கட்டி இருந்த கல்யாண மண்டபத்தில் இருந்து பாடல் சத்தங்கள் காதைப் பிளந்தன. மார்கழியில் முகூர்த்தம். கிடைக்காத மண்டபம் கிடைத்ததில் சேட்டு வீட்டு ஆட்கள் டோலி தட்டிப் பாடிக் கொண்டிருந்தார்கள். ஏதோ மெஹந்தி திருவிழாவாம். ரெண்டு மூணு நாளாக ஒரே ஆட்டமும் பாட்டும்தான். எல்லா வகை கார்களும் எல்லா ரக மனிதர்களோடும் வந்து போய்க்கொண்டு இருந்தன. இராத்திரியில்தான் அவர்கள் முகூர்த்தம். குதிரையில் மாப்பிள்ளை வர ஷாதி பாரத் நடந்து அதிகாலையில் முடியும் திருமணம். விருந்தின் வாசனையும் மனிதர்களின் வாசனையும் எங்கெங்கும் உலா வந்து கொண்டிருந்தது.

இந்த ஏரியாவில் இவ்வளவு பெரிய இடம் மொத்தமாகப் பார்த்ததில் வீட்டு வசதி வாரிய ஆட்கள் படையெடுத்துக் கொண்டிருந்தார்கள்.ஆளாளுக்குப் பயமுறுத்தல் வேறு. ’அரசாங்கத்துக்காக கொடுக்கணும் , நீங்க கொடுக்காட்டியும் அரசாங்கம் எடுத்துக்கிடும்’ என்று கட்டாயப்படுத்திக் கேட்டு வந்ததும்  மகன் ஒரு வக்கீலை கன்சல்ட் செய்ார்.  உடனடியாக இந்தத் தோட்டம் முழுமையையும் காப்பாத்த ஒரு பக்கத்தில் கடைகளையும் இன்னொரு பக்கத்தில் ஒரு கல்யாண மண்டபத்தையும் கட்டினா ஒண்ணும் செய்ய முடியாது என்று சொல்ல உடனடியாகக் கட்டினார்.

ஏதேதோ பத்திரங்களில் எல்லாம் மகன் கேட்டபடி கையெழுத்துப் போட்டுக் கொடுத்திருந்தார். எல்லாம் பாங்க் அடமானத்தில் இருந்து ஒவ்வொன்றாகத் திரும்பி வந்தது. அவர் போட்டு வந்திருந்த 200 பவுன் நகையும் கட்டிடமாகக் கிடந்தது.

”மெஹந்தி லகா ரக்னா டோலி சஜா ஹை ரக்னா” என்ற பாடல் அதிர அதிர ஒலித்து அவர் கவனத்தைத் திசை திருப்பியது. இந்தப் பாடலை போன விடுமுறைக்கு வந்திருந்த அவரது பேத்தி டிவியில் பார்த்து அழகாக ஆடிய காட்சி மனக்கண்ணில் வந்தது. ’ஹ்ம்ம் எந்த மகராசனுக்குக் கொடுத்து வைச்சிருக்கோ அந்த ராதா ராணியைக் கட்டிக்க’ என்று எண்ணமிட்டார்.

திடீரென அதிர்ந்த கைபேசி அவர் கவனத்தைக் கலைத்தது. போனில் அவரது மருமகள் சரசம்மணியின் முகம் நிழலாடியது. ’இந்த நேரத்தில் என்ன.. பகலில்தானே பேசுவாள் . இன்று என்ன இரவில் பேசுகிறாள். ஒரு வேளை ஏதோ காஷ்மீருக்குப் போவதாக சொன்ன பேத்தியாக இருக்குமோ’ என போனை எடுத்தார் சாரதாம்மிணி.












அத்யாயம் 3:- ஜம்மு & காஷ்மீர்.

”என்னம்மிணி.. சீக்கிரம் வாம்மிணி. அங்கே அப்புறம் ரோட்டி ராட்டியாயிடும்  “ என கிண்டலடித்துக் கொண்டிருந்தாள் ராதா ராணியின் தோழி ரேகா. தங்கியிருந்த இல்லத்திலிருந்து கைகோர்த்து இருவரும் வெளியே வந்தார்கள்.

இருவரும் சென்னை ஸ்கூல் ஆஃப் சோஷியல் வொர்க் என்ற கல்லூரியில் சமூகப் பணித்துறை மாணவிகள். அதில் இண்டர்ன்ஷிப்புக்காக ஜம்மு & காஷ்மீரைத் தேர்ந்தெடுத்திருந்தார்கள்.

காஷ்மீர் சென்றதும் அங்கே அவர்கள் எதிர்கொண்ட முதல் கேள்வியே  அதிர்ச்சிக்குள்ளாக்கி இருந்தது. “க்யா ஆப் இந்தியா சே ஆயே ?” ( என்ன நீங்கள் இந்தியாவிலிருந்தா வருகிறீர்கள்.  ’ஆமா அப்ப ஜம்மு & காஷ்மீர் இந்தியா இல்லையா.. என்ன கேள்வி இது ’ என்று கோபமாக வந்தது ராதாராணிக்கு.

கிட்டத்தட்ட ஒரு மாதமாக அங்கே தங்கி இந்த ப்ராஜெக்டை செய்து வருகிறார்கள் இருவரும். இயற்கையிலேயே இருவரும் தைரியம் தன்னம்பிக்கை மிக்கவர்கள் என்றாலும், ராணுவம், தீவிரவாதம் தலைவிரித்தாடிக் கொண்டிருக்கும் அந்த இடத்துக்குச் செல்வதில் இருக்கும் தடைகள் அச்சுறுத்திக் கொண்டிருந்தன இருவரின் குடும்பத்தாரையும்.

ராதாராணிதான் ரேகாவின் பெற்றோரிடமும் தகுந்தபதில்கள் சொல்லி இந்த இண்டர்ன்ஷிப்பை வெற்றிகரமாக நகர்த்தி இருந்தாள். வாழ்க்கைன்னா த்ரில் வேணும் . இங்கே இருப்பவர்களும் மக்கள் தானே அவர்களின் துயரம் தெரியாமல் நாம் அங்கே இருப்பதில் என்ன அர்த்தம். அவர்களின் துயரின் ஆணிவேரைக் காணவேண்டும் என்பதே அவளின் அந்தராத்மா சொல்லிக் கொண்டிருந்தது.

கார்கிலில் போர் என்னும் போதெல்லாம் எத்தனை சிப்பாய்கள் பலியாகி இருக்கிறார்கள். அவளது பள்ளித்தோழி ரம்யாவின் தந்தை பழனிசாமி கார்கிலில் பணியாற்றியபோது தீவிரவாதிகளின் தாக்குதலுக்குப் பலியான செய்தி கேட்டு அவளுடன் இவளும் எத்தனை நாள் அழுதிருக்கிறாள். தகப்பன் சாமியாக நாட்டைக் காப்பாற்றிய அந்தத் தந்தை ஏன் உள்நாட்டுக் கலவரத்தில் தீவிரவாதிகளுடன் போரிட்டு இறந்தார் ?. அந்த இடத்தை அப்படிப்பட்ட ஊரை மக்களைப் பார்க்கவேண்டும் என்ற எண்ணம் அவள் சிறுவயதிலேயே வேரோடி இருந்தது. அதைப் பார்க்க  இண்டர்ன்ஷிப்பை உபயோகப்படுத்திக் கொண்டாள்.

ரம்யா.. உன் தந்தை இருந்த இடம். மிக அருமையான பள்ளத்தாக்குடி. அங்கே பூக்கள் நிரம்பிய படகுகளும் ஆப்பிள் காய்த்துத் தொங்கும் தோட்டங்களும் மட்டுமல்ல மனிதர் உயிரைக்  குடிக்கும், செயலற்று ஜடமாக அடிக்கும், தோட்டாக்கள் விளையும் பூமியாகவும் இருக்குடி. ”

மிகச் சிறிய கலவரத்துக்குக் கூட கண்ணீர்ப் புகைக் குண்டுகளையோ, தண்ணீர் பீய்ச்சி அடித்தலையோ பிரயோகிக்காமல் பெல்லட் எனப்படும் குண்டுகளால் அடிக்கிறார்கள்.

இங்கே நாங்கள் வந்தபின்னே எத்தனை எத்தனை பார்த்துவிட்டோம்.அமைதிப் பூங்கா என்கிறார்கள். இங்கே பர்தாப் பூங்காவில் அமைதிப் பேரணி என்று நடத்துகிறார்கள். ஆனால் அங்கே ஆர்ப்பாட்டம் செய்த 400 இளைஞர்களைக் கைது செய்து ஒரே ப்ரச்சனை ஆகிவிட்டது.

இங்கே நான் சந்தித்த ஒரு தாய் சொன்ன கதைதான் என் உயிரை உலுக்கி விட்டதடி. அவர்களுக்கு இரண்டு மகன்கள். இருவரும் இப்படிப்பட்ட கலவரத்தில் காணாமல் போய்விட்டார்கள். அவர் ஒரு இயக்கம் ஆரம்பித்து அதற்காகப் போராடி வருகிறார். இப்படி எண்ணற்ற தாய்கள். ஒவ்வொருவருக்கும் இதே போன்ற பிரச்சனைகள். பன்னிரெண்டாயிரம் ஆண்கள் காணாமல் போய் இருக்காங்களாம். என்ன சொல்ல.? இதற்காக ஏபிடிபி ( அசோஷியேஷன் ஆஃப் பேரண்ட்ஸ் ஆஃப் டிஸப்பியர்ட் பீபிள் ) என்ற அமைப்பை காணாமல் போனவர்களின் பெற்றோர்கள் நடத்தி வருகிறார்கள்.

குனன் புஷ்புரா கிராமங்களில் பெண்கள் ராணுவத்தினராலேயே வல்லுறவு செய்யப்பட்ட செய்தியையும் சொன்னார்கள். மனம் திடுக்கிட்டது. நாம் பார்த்த காவல் தெய்வங்கள் வேறு. இங்கே குடும்பத்தைப் பிரிந்து தனியாக வாழும் இராணுவத்தினர் வேறு. இதில் எல்லாக் குணநலன்கள் கொண்டவரும் அடக்கம். நாம் நம் தந்தை போன்ற தகப்பன் சாமிகளையே கொண்டாடி வருகிறோம்.இங்கே பலி போடும் சாமிகளும் நம்முள்ளே இருக்கின்றன.

”என்னடி யோசனை. சீக்கிரம் சாப்பிடு” ”திடீர் திடீரென்று ஊரடங்கு உத்தரவு போட்டு விடப் போறாங்க. இன்னும் நாம அடுத்து போக வேண்டிய கிராமம் 40 மைல் தொலைவுல இருக்கு. கட்ரான்னு சொல்றாங்க. ஜீப் ஏற்பாடு செய்திருக்காங்க. சீக்கிரம். ஜல்தி ஆவோ” என்றாள் திடீரென்று கற்றுக் கொண்ட இந்தியில் பேசியபடி ரேகா.

லேசாகப் புன்முறுவல் செய்தபடி தோட்டத்தில் இருக்கும் ஆத்தாளையும், சென்னையில் இருக்கும் அப்பா அம்மாவையும் நினைத்தபடி ஜீப்பை நோக்கிச் சென்றாள் ராதா ராணி.

அவளது அப்பாவை நினைத்ததும் பெருமையில் பூரித்தது உள்ளம். அப்பா என்றால் அப்பாதான் என்ன கேட்டாலும் வாங்கிக் கொடுப்பார்.  என்ன படிக்கிறேன் என்றாலும் சம்மதம் கொடுப்பார். அம்மா மட்டும் என்ன பிரிந்திருக்க கஷ்டப்படுவாங்களே தவிர மகளின் முயற்சிகளில் குறுக்கே நின்றதில்லையே.

ஆத்தாவைப் பற்றிச் சொல்ல வேண்டாம். பேத்தியின் பெருமை பேசுவது ஒன்றே அவரது குறிக்கோள். தன் பேத்திக்கீடாக மாப்பிள்ளையே கிடையாது என்பது ஆத்தாளின் எண்ணம்.  இவர்களைப் பற்றிய எண்ணத்தோடு தன் குட்டித் தம்பி ராஜேஷையும் நினைத்துகொண்டே ஜீப்பில் பயணம் செய்தாள் ராதா ராணி.

வானில் கருமேகங்கள் வட்டமிட்டுக் கொண்டிருந்தன. அவற்றிலிருந்து லேசான தூறல் விழ ஆரம்பித்திருந்தது. அடுத்தடுத்துப் போட்ட இடியிலும் மின்னலிலும் மழையிலும் ஜீப் தள்ளாடி மேலும் கீழும் அசந்தும் பக்கவாட்டில் பள்ளத்தாக்கைக் காட்டியும் செல்ல ஆரம்பித்திருந்தது. அடுத்த நாள் சென்றிருக்கலாமோ என நினைக்கத் துவங்கினார்கள் ராதாராணியும் ரேகாவும்.







அத்யாயம் :-4. சிறைச்சாலை

எத்தனை இரவுகள் பஞ்சு மெத்தையில் பட்டு விரிப்பில் அருமையாகத் தூங்கி இருக்கிறார் முருகானந்தம். ந்த ஆறமாதமாகத்தான் தூக்கமில்லாமல் புரண்ு கண்டிருக்கிறார். ”கடன்பட்டார் நெஞ்சம் போலக் கலங்கினான் இலங்கை வேந்தன்” என்று படிக்கும்போதெல்லாம் உணராத விஷயம் உண்மையிலேயே கடன் பட்டபோது ஏற்பட்டுத்தான் விட்டது.

தோட்டத்தை வீட்டு வசதி வாரியத்திடம் இருந்து காப்பாற்றியாகிவிட்டது என்று நிம்மதியாக இருந்தவருக்கு அடுத்து ஹைவேஸ்காரர்கள் வந்து மேம்பாலம் கட்ட இடத்தை எடுத்துக் கொள்ளப் போவதாக நெருக்கடி கொடுத்தார்கள்.

என்ன செய்வது ..? தோட்டம் அவரது தாய் உறையும் கோயில் . அந்தக் கோயிலை அவர் இருக்கும் வரையாவது விற்காமல் இருக்க வெகுபாடு பட்டார். ஆனால் முடியவில்லை. என்ன செய்ய ? அப்போது ஒரு செக் கையெழுத்துக்காக வந்தது. அது ஆறுமாதம் கழித்துத்தான் ஆடிட்டிங்கில் கண்டுபிடித்தால்தான் தெரியும். அந்த நிறுவனத்தில் கையெழுத்துப் போடும் உயர் பொறுப்பில் இருந்தவர் அவரேதான். தன் சொத்தைத் தானே திருடிவைத்துக் கொள்வது போன்ற செயல்தான், இருந்தும் என்ன செய்ய ? லஞ்சம் கொடுக்க அவ்வளவு தொகை தேவைப்பட்டதே. பாவிகள் கோடிக்கணக்கான சொத்தைக் கணக்கிட்டு பர்சண்டேஜ் விகிதம் பணம் கேட்டார்களே…

தோட்டத்தையும் வீட்டையும் அடகு வைக்காமல் சமாளிக்க எப்படியோ முயன்றார். கடைசிவரை இடைவிடாத முயற்சி. ஆனாலும் முடியவில்லை. சத்தியத்தின் பால் நடப்பவர்களுக்கு மட்டும் விதி விளையாடுகிறது. அது அவரைச் சதுரங்க ராஜாவாக்கி செக் போட்டுப் பார்த்துவிட்டது அவரது தாய்ப்பாசத்தில். கடைசிப் பட்சமாக தாயிடம் சென்று குறுகியபடி சொத்துப் பத்திரங்களில் அவர் கையெழுத்து வாங்கிய தருணம் அவருடைய 50 வருட வாழ்விலே மிக மோசமான தருணம்.

எப்பேர்ப்பட்ட பரம்பரை அவருடையது. தாத்தா, தந்தை அனைவரும் கட்டிக் காப்பாற்றி வந்த பரம்பரைப் பெருமை எல்லாம் போச்சு. அவர்கள் வீட்டிற்கு சுதந்திரப் போராட்ட வீரர்கள், இலக்கியவாதிகள் எல்லாம் வந்திருக்கிறார்கள். பேரும் புகழும் பெற்ற குடும்பம் அவரது. அடிக்கடி கிடா விருந்து வைத்து அக்கம் பக்கப் பணக்காரர்கள், பிரபலங்கள் எல்லாம் வந்து குமிழும் வீடு அது. 

ஜெயிலில் இருந்த படுக்கை உறுத்தியது. அதிலிருந்து வந்த ஒரு வித மக்கு வாடை குடலைப் பிரட்டியது. சாப்பிட ஏதும் ஏற்றதாயில்லை. பாத்ரூமும் பக்கமாய் இருந்தது. ஏதேதோ பூச்சிகள் கடித்தன. மூட்டைப் பூச்சியாக இருக்கலாம். கொசுக்கள் பறந்தன. கொசுவிரட்டி வைத்து எல்லாம் தூங்க முடியாது. காவலர் ஒருவர் ஒரு சுருள் கொசுவிரட்டி வைத்திருந்தார். அதிலிருந்து எழும்பிய புகை கொசுவை விரட்டியதோ இல்லையோ அவரது மூச்சுக் குழலைப் பதம்பார்த்துக் கொண்டிருந்தது.

அன்று மதியம் முதல்வகுப்புக் கைதிகள் எல்லாம் சொகுசாக இருப்பதாக இரு போலீஸ்காரர்கள் பேசிச் சென்றது அவரது ஞாபகத்தில் அசந்தர்ப்பமாக வந்தது. வீட்டில் இருந்து சாப்பாடு, இன்னபிற பொருட்கள் லஞ்சம் கொடுத்தால் தாராளமாய் வரலாம். இன்றுதானே முதல்நாள். மனைவிக்கு எவ்வளவு அதிர்ச்சியாயிருக்கும். அலுவலகத்தில் இருந்தபடி இங்கே வந்துவிட்டார். அரையும் குறையுமாக அவ்வப்போது அவளிடம் சொல்லி இருந்தார். திடீரென அதிர்ச்சி ஆகிவிடக்கூடாதே என்று.

லேசாய் ஒளிர்ந்த விளக்கைப் பார்த்தபடி யோசித்துக் கொண்டிருந்தார். அவரது பாசத்துக்குரிய அம்மாவின் முகம், அடுத்து காதலுக்குரிய மனைவியின் முகம், அடுத்து செல்லப் பையன் சின்னவன் ராஜேஷின் முகம், கடைசியாக அவரது தங்க மகள் ராதாராணியின் கம்பீர முகம்.. அந்த முகம் வந்ததும் அவர் முகம் வெளிறியது.

என்ன செய்வது மகளின் பார்வையில் தான் இப்போது எப்படி இருப்போம். இதுவரை தன்னைப் பார்த்த பார்வையில் இருந்து அது மாறிவிடுமா. மனது பதட்டமாக இருந்தது. தன் மீது ஒரே வெறுப்பாக இருந்தது. கண்முன்னே இரண்டு வழிகள் இருந்தன அவருக்கு. ஒன்று சொத்தை விற்றிருப்பது. இன்னொன்று ஹைவேஸ்காரர்களுக்குத் தேவையான இடத்தை ஒதுக்கி இருப்பது. ஆனால் அவர்கள் கால் காசு கொடுத்து இடத்தை வாங்கிக் கொண்டு மேலும் கூட வம்பு வழக்குச் செய்வார்கள்.

இப்போது லஞ்சத்தை அள்ளிக் கொடுத்துவிட்டதால் கல்யாண மண்டபம் இருக்கு, கடைகள் இருக்கு என்று அப்படி இப்படிக் குறித்து கொஞ்சம் தள்ளிப் போய் இடத்தை எடுத்துக் கொண்டார்கள்.

மகள் வேறு ஜம்மு காஷ்மீருக்குப் போயிருக்கிறாள். தன்னம்பிக்கையும் தைரியமும் கொண்ட பேரரசி. அங்கே ராணுவம், தீவிரவாதம், ஊரடங்கு இருக்கும் எனச் சொல்லியும் சமாளித்துவிடுவதாகச் சென்றவள். சின்னப் பிள்ளையில் பெட்டைம் ஸ்டோரிஸில் எல்லாம் ஜான்சி ராணி, வேலு நாச்சியார், ஜோன்ஸ் ஆஃப் ஆர்க் ஆகியோரின் வீர தீரப் பராக்கிரமக் கதைகளையும், பிரதமராகவும் ஜனாதிபதியாகவும் சாதித்த பெண்களைப் பற்றி எல்லாம் பெருமைபடக் கூறி இருக்கிறார். அது எல்லாம் அவளது மனதிலும் பசுமரத்தாணியாகப் பதிந்திருக்கிறது. அதனால்தான் அவள் தன் முடிவுகளைத் தீர்மானமாக அறிவிக்கும் போதெல்லாம் அவர் மறுப்பேதும் சொல்வதில்லை.

பெண்ணைப் பற்றி நினைத்ததும் அவரது மனதும் கண்ணும் கசிந்தது. பேரன்புக்காரி. அவள் தன்னை மன்னிப்பாளா. ? ஒரு நெருக்கடியிலேயே இதைச் செய்தேன் என என்னை அவள் மன்னிப்பாளா. ?

தன் உத்யோகத்திலிருந்து மட்டும் அவ்வளவுபெரிய தொகையை லஞ்சமாகக் கொடுக்க முடியாது. ஆத்தா இருக்கும் வரை அது பெருமையாக வாழ்ந்த வீட்டையும் தோட்டத்தையும் விக்கவோ விட்டுக் கொடுக்கவோ முடியாது என்பதைப் புரிந்து கொள்வாளா ?. கரகரவெனக் கண்ணீர் வழிந்தது அவர் முகத்தில் முதன் முதலாக உப்பு நீரும் வேர்வையும் அவரது நாவில் பட்டுக் கசந்தது.

மகளின் கண்களில் தான் இனி எப்படித் தென்படுவோமென நினைத்த நொடியில் அவரின் அத்தனை வாழ்நாளும் சருகாய்ச் சுருங்குவதாகப் பட்டது. இன்னும் ஆறு மாதங்கள்..கொடிய வேதனை. ஒரு மாதம் கழித்து மகள் வரும்போது அவளிடம் என்ன சொல்வது? எப்படிச் சந்திப்பது ?.  அப்படியே கடவுள் தன்னைக் கொண்டு போய்விட்டால் என்ன என நினைத்தார். கண்களில் கண்ணீர்க் கோடுகள் இறங்க அறை பூராவும் அவரது மனதின் குமுறலாய் குழப்பமான ஒரு வாசமடித்துக் கிடந்தது.



அத்யாயம் :- 5. சோகவனம் .

இராமாயணத்தில் வரும் அங்கதன் குழப்பிய தோட்டமாய்க் கிடந்தது சாரதாம்மணியின் தோட்டம். சோளக்கருதுகள், சின்ன வெங்காயம், எல்லாம் அங்கங்கே கிடந்தன. யாருக்கும் எதையும் செய்யப் பிரியமில்லை. சோர்ந்து சோம்பிக் கிடந்தார்கள்.

போன் வந்த அந்த இரவு மறக்க முடியாததாக இருந்தது சாரதாம்மணிக்கு. என்ன கஷ்டம், பிள்ளையை சிபிஐ கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்திருக்கிறார்களாம். தான் இன்னும் உயிரோடு இருப்பதே சந்தேகமாயிருந்தது அவருக்கு.

போனில் மருமகளின் கலங்கிய குரலைக் கேட்டதும் கையிலிருந்த செல்ஃபோன் நழுவி விழுந்தது. அட எப்பேர்ப்பட்ட பிள்ளை. உத்திராடத்தில் ஒரு பிள்ளையும் ஊரோரத்தில் ஒரு செய்யும் இருந்தால் நல்லது என பிறந்த நேரத்தில் கிணத்துக் கடவு சோசியன் சொன்னானே. அப்படி தோட்டத்தையும் தன்னையும் எந்த இடைஞ்சலிலும் பார்த்துப் பராமரித்து வந்த பிள்ளை. மிகப் பெரும் பதவியில் இருப்பவனுக்கு என்ன கஷ்டம் வந்தது..?

லஞ்சமாகப் பெருந்தொகை வாங்கினவர்களைப் பற்றிய கோபம் கொப்பளித்தது அவருக்கு. அடப் பாவிகளா நேர்மையிலிருந்து பிறழாத பிள்ளையை நேர்மை தவறச் செய்திட்டீங்களே. உங்களை அந்த அங்காளம்மன் தான் கேக்கனும் என்று மனதுக்குள் மருகினார்.

முருகானந்தம் என்று பேர் வைத்தேனே. அந்த மருதமலை முருகன் இந்தப் பிள்ளையாகவே பிறந்திருக்கிறான் என்று மகிழ்ந்தேனே. எத்தனை கண்ணேறு. தாய் திருஷ்டியே அவனைப் பீடித்து இருக்கும். எவ்வளவு சூழ்நிலையிலும் தன் நிலையையும் நிதானத்தையும் விடாமல் இருந்த பிள்ளைக்கு வந்த சோதனைதான் என்ன ?. நெருப்பிலிட்டது போல அவர் உள்ளம் துடித்தது.

மொத்தக் காசையும் கட்டிவிட்டான்தான். ஆனாலும் எடுத்தது தப்புத்தானே.. என்ன செய்ய இயலாமையால் பரிதவித்தார் சாரதாம்மிணி. சொந்தக்காரர் முகத்திலெல்லாம் விழிப்பது கடினமாக இருந்தது. அந்த சேட்டு வீட்டுக் கல்யாணம் முடிந்து அவர்கள் சென்றதும் தன் பேத்தியின் திருமணத்தை எண்ணிப் பார்த்ததும் அவர் நினைப்பில் நிழலாடியது. யார் கச்சேரி வைக்கணும். எந்த சமையல் ட்ரூப்பைக் கூப்பிடணும். எந்த ப்யூட்டி பார்லரில் அலங்காரம் செய்யணும். மலர் அலங்காரம், மேடை அலங்காரம், நாட்டியக்குதிரை, ரிஷப்ஷனின் போது எத்தனை விதமான ஸ்டால்கள் வைக்கலாம். ஒட்டியாணம், நெக்லெஸ் எல்லாம் பேத்திக்கு என்னென்ன டிசைனில் செய்யலாம் என ஆசையாக எண்ணிக் கொண்டிருந்தார். எண்ணத்தில் எல்லாம் மண் விழுந்த நேரம். என்ன கொடுமையான நேரம் இது.. சத்தியத்துக்குத்தான் எவ்வளவு சோதனை.

தன் மகனை அது தூண்டிலில் பிடித்துப் போட்டு ஆட்டியது கண்டு அவர் உள்ம் அந்தப் புழுவாய்த் துடித்தது. அம்மாவை இருக்கும் இடத்திலேயே வைக்கத்தானே இவ்வளவு பாடும். ’ஏனப்பா நீ சொல்லி இருந்தால் இதை எல்லாம் வித்துட்டு நீ இருக்கும் வீட்டில் ஏதோ ஒரு மூலையில் கூட முடங்கி இருந்திருப்பேனே. என்னால்தானே இவ்வளவு துயரமும்.’

அங்கே ஹாலில் மாட்டி இருந்த கணவர், மாமனார், பாட்டனார் புகைப்படங்களைப் பார்த்தார். மான் கொம்பும், மாட்டுத் தலையும் பாடம் பண்ணி அலங்காரத்துக்காக மாட்டி இருந்தது. மகன் குடும்பத்தாருடன் சாரதாம்மணி சென்று வந்த வெளிநாட்டிலெல்லாம் எடுத்த புகைப்படங்கள் அலங்கரித்தன.

ஷோகேஸில் உலக அதிசயங்களும் சிற்பவடிவில் சிரித்துக் கொண்டிருந்தன. எங்கெங்கோ வாங்கின பொம்மைகள் எல்லாம் இருந்தன. அவற்றைப் பார்க்கப் பார்க்க அவருக்கு ஆற்றாமையாக இருந்தது. எல்லா இடங்களுக்கும் தன்னைக் கூட்டிச் சென்று தன் தள்ளாமையைப் பொருட்படுத்தாமல் தனக்கேற்றபடி அனைத்தையும் அமைத்துத் தரும் மகனின் தலையை மடியில் ஏந்தி அவன் தலைமுடியைக் கோதவேண்டும் போலிருந்தது.

திரும்பவும் மகனை எப்போது சந்திப்போம் எனக் காத்திருந்தார் அவர். ஆறு மாதமாகலாமாம். ’இருக்கட்டும். இதெல்லாம் காலத்தின் நெருக்கடிகள். முப்பது வருடம் வாழ்ந்தவரும் இல்லை. முப்பது வருடம் கெட்டவரும் இல்லை. தருமத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் இறுதியில் தருமமே வெல்லும்.’

சிந்தனையில் ஆழ்ந்திருந்தவரை தனம் அழைத்தாள். “ ஏனாத்தா எம்புட்டு நேரம் இப்பிடியே கெடப்பீக . இந்தாங்க ஒரு வாய் அரிசிம்பருப்பு சாதம் வெச்சிருக்கேன். வடகம் வறுத்திருக்கேன். சாப்புடுங்க” என்றாள். மனசு அழண்டு கிடந்தாலும் அந்த நேரத்தின் தனத்தின் பரிவு சாரதாம்மிணிக்குத் தேவையாகத்தான் இருந்தது.

”ஏனாத்தா பேத்தி வெளியூர் போயிருக்குன்னீங்களே எப்ப வருதாம். அதுக்கு வெவரம் தெரியுமா ? “ என்றாள்.

“நானுதான் பேத்திகிட்ட சொல்ல வேண்டாம்னு சொன்னேன். அது படிப்பு விசயமா போயிருக்கு. ரெண்டுநாளைக்கு ஒரு தரம் போனு பண்ணுது. இத சொன்னா அது கெளம்பி வந்திரும். அங்கேயும் முக்கியமான ஒரு படிப்புக்குத்தான் போயிருக்காம். ராணுவ கெடுபிடி, தீவிரவாதி எல்லாம் இருந்து சமாளிச்சிட்டுத்தான் இருக்காம் புள்ள” என்றார் சாரதாம்மிணி அப்போதும் பேத்தி மீது மாறாத பாசத்தோடு.

“என்னவோ ஆத்தா தம்பி இதுலேருந்து நல்லபடியா வரணும்னு நான் மேட்டுப் பாளையம் பத்ரகாளியம்மனுக்கு மொட்டை போடுறதா வேண்டிக்கிட்டு இருக்கேன்.” என்றாள் தனம். அவள் கூறியதைக் கேட்டதும் கண்கள் தளும்பி விட்டன சாரதாம்மணிக்கு. அவளை முதன் முறையாக அப்படியே அணைத்துக் கொண்டார். தான் பெறாத மகளைப் பெற்றது போல பாசம் ஊற்றெடுத்தது அவர் மனதில்.

அப்போது அசந்தர்ப்பமாக அவர்களது நிம்மதியைக் குலைக்க ஒரு ஃபோன் வந்தது. எடுத்து பேசிய சாரதாம்மிணி அப்படியே அதிர்ந்தார். பட்ட காலிலே படும். கெட்ட குடியே கெடும்னு இதென்ன இந்தச் செய்தி.. மருதமலை முருகா உனக்குக் கண்ணில்லையா.. எனக் கதறியவரைப் பார்த்து அதிர்ந்தாள் விஷயமேதுமறியாத தனம்.









அத்யாயம் :-6 பெல்லட்:-

காட்ரா ஒன்றும் அவ்வளவு அழகாக இல்லை. அங்கே பூராவும் ராணுவத்தினரின் கேம்ப்தான். மேலே வைஷ்ணோதேவி கோயிலுக்குச் செல்ல ஒரு ப்ரயாண வண்டியை நிறுத்தி அனுமதி வாங்கச் சென்றிருந்தார்கள். அது தமிழர்கள் வந்த பேருந்துபோலத் தெரிந்தது. டெல்லியிலிருந்து வந்த பணிக்கர் ட்ராவல்ஸின் வண்டிதான் அது. அதில் அமர்ந்திருந்தவர்கள் இவர்களின் தமிழ் முகங்களைப் பார்த்ததும் சிநேகமாகச் சிரித்தார்கள்.

ஜம்முவில் எங்கே சென்றாலும் ராணுவ அனுமதி பெற்றே போகவேண்டும். அங்கே இருந்த குல்மோஹர் மரங்களில் கூட பனி அமர்ந்திருந்தது. கை காலை விரைக்க வைத்த குளிரை விரட்ட ஸ்கார்ஃபும் ஜெர்கின்ஸும் வார்மர் பாண்டும் உல்லன் சாக்ஸ் ஷூவும் போதுமானதாயில்லை. கெஸ்ட் ஹவுஸில் இருக்கும் முன்னாபாய் சிரித்துக் கொண்டே சொல்வார். ”அச்சே காவோ. டண்டா நிகாலோ “ ’நன்றாகச் சாப்பிட்டால்தான் குளிரை வெல்லலாம்’ என்று.

சாதம், இட்லி, தோசை சாப்பிட்டுப் பழகிய தென்னிந்திய நாவுக்கு மூன்று வேளையும் சப்பாத்தி சாப்பிடுவது என்பது கடினமாகத்தான் இருந்தது. கெஸ்ட் ஹவுஸின் பக்கத்து வீட்டில் இருந்த ப்ரேம் அவ்வப்போது தால் சாவல் ( பருப்பும் சாதமும் ) கொடுத்து வந்ததால் இருவரும் சமாளித்துக் கொண்டிருந்தார்கள்.

பைரவ்நாத் மந்திர் இருக்கும் பக்கம் ஜீப் முன்னேறியது. அங்கே சிலரிடம் பேசவேண்டி இருந்தது. மனித உரிமைகள் அமைப்பில் இருந்த சிலர் அங்கே வருவதாகச் சொல்லி இருந்தார்கள். மனித உரிமை மீறலாக கண்ணீர்ப் புகைக் குண்டோ தண்ணீரைப் பீச்சி அடிப்பதோ இல்லாமல் இராணுவத்தினர் அங்கே பெல்லட் எனப்படும் துப்பாக்கி கொண்டு சுடுவதால் பலருக்குக் கண் போயிருந்தது.

ஒவ்வொரு குடும்பத்திலும் ஒருவராவது காணாமல் போயிருப்பதால் தாய்மார்கள் அனைவரும் வெறுப்பில் இருந்தார்கள். இதனால் அரசுக்கு எதிராகப் போராடும் (மக்கள்) மிலிட்டைன்ஸ்க்கும் இராணுவத்துக்கும் அடிக்கடி சண்டை நடக்கும். ஒவ்வொரு சண்டையும் இரு பிரிவினருக்கும் இடையே இன்னும் அதீத வெறுப்பையும், கோபத்தையும், அதிருப்தியையும் விளைவித்துக் கொண்டிருந்தது. அவர்கள் அதனால் இந்திய இறையாண்மைக்கு எதிராக தனிநாடு கிடைத்தால் போதுமென நினைக்கிறார்கள்.

இப்படிக் கிளர்ச்சியில் ஈடுபடும் போதெல்லாம் மக்கள் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அரசுக்கு எதிர்ப்பைக் காட்டும் விதமாக சுவர் மீது கற்களை எறிவார்களாம். அதனால் இராணுவம் பெல்லட் கொண்டு சுடும் என முன்னாபாயும் ப்ரேமும் கூறி இருந்தார்கள் ராதா ராணியிடமும் ரேகாவிடமும். எங்கே சென்றாலும் எச்சரிக்கையாகச் சென்று வரும்படிக் கூறினார்கள்.

ஜீப் ஒரு வளைவில் திரும்பியது. மனித உரிமை அமைப்பினரைச் சந்திக்கும் ஆவலில் அன்று வெள்ளிக்கிழமை என்பதோ அதனால் மக்கள் சுவர்களில் கற்களால் அடிப்பார்கள் என்பதோ மறந்திருந்தது இருவருக்கும். திடுதிடுவெனக் கற்கள் பறந்தன ஜீப்பின் மீதும் சுவரின் மீதும்.

எங்கிருந்துதான் வந்தார்களோ என்னும்படி துப்பட்டாவால் மூடிய தலையோடு பெண்களும் ுணியால் ுகம் மத் ஆண்களும் கோபமாக இராணுவ ஜீப் என நினைத்துக் கற்களால் அடித்து எதிர்ப்பைத் தெரிவித்துக் கொண்டிருந்தார்கள். ’பட், பட்’ என விழுந்த கற்கள் ஜீப் ஓட்டியை ஆட்டம் காணச் செய்தன. சில கற்கள் ரேகா மீதும் ராதா ராணி மீதும் நச் நச் என வந்து விழுந்து இரத்த காயம் உண்டாக்கிக் கொண்டிருந்தன. “வாபஸ் ஜாவோ வாபஸ் ஜாவோ “ என தனக்குத் தெரிந்த இந்தியில் ஜீப் வாலாவிடம் சொல்லிக் கொண்டே ஜீப்பில் குனிந்தாள் ராதா ராணி ரேகாவையும் குனியும்படி பிடித்து.

இருவரும் மிரண்டிருந்தாலும் ரேகா மிகவும் அதிர்ச்சியாகி இருந்தாள். சொல்வதைச் செய்ய அவளால் முடியவில்லை. திடீரென மக்கள் முளைத்தது போல திடீரென இராணுவ ஜீப் ஒன்றும் முளைத்தது. அதிலிருந்து படபடவென சத்தத்தோடு குண்டுகள் பாயத் துவங்கின. பதறிப் போய் ஜீப்பில் கீழே ரேகாவை அழுத்தித் தானும் விழுந்தாள் ராதாராணி.

ஆஆஆஆஆ என அலறியபடி விழுந்தாள் ரேகா அவளது புஜத்தைத் துளைத்துச் சென்றிருந்தது பெல்லட் குண்டு. ஒரு குண்டு அல்ல ஐநூறு அறுநூறு குண்டுகள். கோபமாகத் திரும்பி மேலெழும்பிப் பார்த்த ராதாராணியின் இடது கண்ணில் பாய்ந்தது ஒரு பெல்லட். பெருங்கூச்சலோடு இருவரும் அந்த ஜீப்பிலேயே மயங்கி விழ பக்கம் ஜீப் ட்ரைவர் விரைவாகத் திருப்பி பக்கத்தில் இருந்த ஆஸ்பத்ரிக்கு வேகமெடுத்தார். 

ஊருக்கும் ஃபோனில் தகவல் பறந்தது. சுகர் பிரச்சனையால் மயங்கிக் கிடக்கும் மாமியாரைப் பார்ப்பதா, சிபிஐ ஜெயிலில் இருக்கும் கணவரை பெயிலில் கொண்டுவரப் போராடுவதா, பிள்ளையின் படிப்பு கெட்டுவிடாமல் பார்த்துக் கொள்வதா இப்போது கண்ணில் குண்டுபட்டுக் கிடக்கும் மகளைப் பார்ப்பதா என அல்லாடிக் கொண்டிருந்தார் சரசம்மிணி.

எப்பேர்ப்பட்ட தைரியசாலி மகள். மாமியாரைப் போலக் கனிவும், தன் போலத் துணிவும், தந்தை போலக் கருணையும் கொண்டவள் என மகள் மீது பேரன்பு உண்டு சரசம்மணிக்கும். கணவர் சந்தர்ப்ப வசத்தால் அலுவலகப் பணம் எடுக்க நேர்ந்ததே தன்னிடம் கேட்டிருந்தாலாவது பெற்றோரிடம் பேசி ஏற்பாடு செய்திருக்கலாமே, அல்லது பூர்வீக இடம் தோட்டத்தை விற்று மாமியாரை இங்கே அழைத்து வந்திருக்கலாமே என்பதுதான் அவள் எண்ணமாயிருந்தது. என்ன ஆனாலும் கணவரை வெறுக்க முடியவில்லை. அப்படி எல்லாம் செய்யக் கூடியவரல்ல என்று அவரது சுபாவம் அறிந்தவளாகையால். சந்தர்ப்ப சூழ்நிலையால் தவறு நிகழ்ந்துவிட்டது, அதற்கு அவர் ஆட்பட நேர்ந்தது பாவம் என்றே எண்ணினாள். தாயின் மேல் கொண்ட பாசத்தால் சொத்தையும் தோட்டத்தையும் விற்காமல் சமாளிக்கப் பார்த்து இப்படிச் செய்து விட்டார் என அவளது மனதில் காதல் மீறியது கணவன் மேல் எனலாம்.

மாமியாரை தனம் பார்த்துக் கொள்வதாலும், வக்கீல் வசம் கேஸை ஒப்படைத்துப் பார்த்துக் கொள்ளச் சொன்னதாலும், பையனுடன் தனது பெற்றோரைத் துணைக்கு வைத்துவிட்டும் மகளைக் கவனிப்பதுதான் முக்கியம் என்று ஜம்முவுக்கு ஃப்ளைட்டில் புறப்பட்டார் ராதாராணியின் தாய் சரசம்மணி.








அத்யாயம் :- 7. கண்கள்

’பெண்கள் நாட்டின் கண்கள்’  என்கிறார்கள். பெண்கள் சொல்வதைக் கேட்கக் கூட யாருக்கும் நேரமிருப்பதில்லை. ஜனாதிபதியாகவோ பிரதமராகவோ முதலமைச்சராகவோ இருந்தால்தான் அவர்களின் பேச்சும் எடுபடுகிறது.

ஐநூறு, அறுநூறு குண்டுகள் துளைத்து கண்கள் பாதிக்கப்பட்ட பெண்கள் ஒரு கண்ணை வெள்ளைத் துணியால் சுற்றி கூட்டமாக சாலையில் அமர்ந்திருந்தனர். அவர்களுள் இரு தமிழ்ப் பெண்களும் இருந்தார்கள். அவர்கள் ராதாராணியும் ரேகாவும்தான். இருவரும்கூட இடது கண்ணைக் கட்டி இருந்தார்கள். ஜம்மு பெண்களுடன் கலந்து ஓரளவு ஹிந்தியும் காஷ்மீரியும் பேசக் கற்றிருந்தார்கள்.

மனித உரிமை மீறல் இயக்கத்தினர் இவர்களை எடுத்துக்காட்டாகக் கொண்டே அரசாங்கத்திடம் மனு சமர்ப்பித்தனர். அதுவரை தன்னை அழைக்க ஓடி வந்த தாயுடன் சென்னை திரும்ப மறுத்துவிட்டாள் ராதா ராணி. ஜான்சிராணி, வேலுநாச்சியார் ஜோன்ஸ் ஆஃப் ஆர்க் கதை எல்லாம்  கேட்டு வளர்ந்தவளாயிற்றே. எங்கே போகும் அந்த வீரமெல்லாம். அந்த மக்களுடன் கரம் கோர்த்துவிட்டு வருவதாகத் தாயிடம் உறுதி அளித்தாள். ரேகாவை அழைக்க வந்த அவர்களது பெற்றோரிடமும் அவ்வாறே சொன்னாள்.

ஜம்மு தாவியில் இருக்கும் மஹரிஷி தயானந்த் ஆஸ்பத்ரியில் கண் அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டபோது ஆழ்ந்த மயக்கத்தில்தான் இருந்தார்கள் இருவரும் . அந்த ஜீப் ட்ரைவர் மட்டும் தான்பட்ட காயத்தோடு இவர்களை சரியான நேரத்துக்கு அங்கே கொண்டே சேர்த்திராவிட்டால் என்ன நடந்திருக்குமோ தெரியாது என ராதாராணியின் தாய் நடுங்கிவிட்டாள்.

அங்கே இருந்த டாக்டர்கள் மிஸ்டர் & மிஸஸ் பாலியின் கைகளைப் பற்றிக் கொண்டு நன்றி சொன்னாள். மகளை இந்த நிலையில் பார்த்ததால் சரசம்மணிக்கு மொழி புரியாததோடு பேச்சும் வரவில்லை. 

’மக்களைத் தீவிரவாதிகளாகப் பார்க்காதீர்கள், இராணுவத்தைத் திரும்பப் பெறுங்கள்,மக்களைத் தூண்டிவிடும் அரசியல்வாதிகளை இனம் கண்டு ஒதுக்குங்கள், ஸ்டாப் ஷூட்டிங்,’ என பதாதைகள் தாங்கி அமர்ந்திருந்தார்கள் அனைவரும். இதையே கோரிக்கை மனுவில் எழுதிக் கொண்டிருந்தாள் ராதாராணி. அனைவரிடமும் சென்று அதில் ஒப்புதல் கையெழுத்து வாங்கி அங்கே அரசுக்கு அனுப்பி வைத்தாள் ராதாராணி. இவர்கள் எடுத்த புள்ளி விவரத்தைக் கொண்டு ஆவணப் படம் தயாரித்து விழிப்புணர்வு ஏற்படுத்தலாம் என்று முடிவு எடத்ிரந்தார்கள் அங்கே கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்கான நல்ல அடித்தளம் அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளும் அதில் புகுத்தப்பட்டன.

மகளை ஆச்சர்யத்தோடு பார்த்தபடி அமர்ந்திருந்தாள் சரசம்மணி. அவளது தைரியமும் துணிவும் பெருமிதம் கொள்ளச் செய்திருந்தன. வெற்றி பெறுதல் குறிக்கோள் என்றாலும் முயற்சி எடுப்பதே பெரிதும் பாராட்டப்படவேண்டியது என்பது அவளின் துணிபு. பெண்கள் நாட்டின் கண்கள் மட்டுமல்ல வீட்டின் கண்களும் கூடத்தானே. வீட்டு விஷயங்கள் ஏதும் அவளுக்குத் தெரியாதே. கிட்டத்தட்ட ஆறுமாதம் ஆகப் போகிறதே. கண்ணில் பல்வேறு அறுவை சிகிச்சை செய்து ஓரளவு சரிப்படுத்தி இருக்கிறார்கள் டாக்டர் பாலி தம்பதியினர். அவர்களுக்கு நன்றி சொல்லி ஹெஸ்ட் ஹவுஸூக்கு ராதாமணியையும் ரேகாவையும் அழைத்து வந்தாள் சரசம்மிணி

மெல்ல மெல்ல முருகானந்தம் பற்றி மகளிடம் கூறினாள். தந்தையைப் பற்றிக் கேட்டதும் ராதாராணிக்கு வருத்தமாய் இருந்தது. எப்பேர்ப்பட்ட கொள்கைவாதியையும் பணநெருக்கடி தகர்த்து விடுகிறது. தன்னை நேரில் பார்க்கத் தந்தை நிச்சயம் வருந்துவார் என அவளுக்குத் தெரியும். அவர் வகுத்த பாதையிலேயே அவரால் தொடர்ந்து செல்ல இயலாத அளவு அவரை இறுக்கிய சூழ்நிலையை உணரமுடிந்தது. அனைவரும் சூழ்நிலைக் கைதிகள்தாம். தானே இந்த பெல்லட் பற்றி அறிய வந்து அதற்கே ஆட்பட்டு அதற்காகவே போராடுவோம் என நினைத்ததுண்டா. கசியும் கண்களோடு அனைத்தையும் கேட்டுக் கொண்டாள் ராதாராணி.

தந்தையையும் ஆத்தாவையும் தம்பியையும் காணும் ஆவல் பெருகியது அவள் மனதில். இன்னும் அங்கே நடந்த விபரங்களை எல்லாம் மகளிடம்  ஊருக்குச் சென்றபின் சொல்லிக் கொள்ளலாம் என ஒத்தி வைத்தாள் சரசம்மிணி.




அத்யாயம் :- 8. அதிகாரி சார்.

சென்னையில் ஆலப்பாக்கத்தில் இருந்த அந்த ஃப்ளாட்டில் மகிழ்ச்சி வெள்ளம் ததும்பிப் பொங்கிக் கொண்டிருந்தது. சாரதாம்மிணி சோஃபாவில் அமர்ந்திருக்க பக்கத்தில் அமர்ந்து அவரது மடியில் தலையைச் சாய்த்து இருந்தார் முருகானந்தம். மகனின் தலையைப் பாசத்துடன் கோதிய தாய் பேத்தியையும் பரிவுடன் பார்த்தார். மருமகளும் பேரனும் மட்டும் குறைவா என்ன. எல்லாரும் அவருக்குக் கிடைத்த வாராது வந்த மாமணிகள் தானே.

முருகானந்தம் நினைத்தார். தன் குடும்பம் போல உலகில் எந்தக் குடும்பமும் இருக்க முடியாது என. தவறுவது மனித இயல்பு அதை மறந்து, விட்டுக்கொடுப்பது தெய்வ இயல்பு . அதைப்போல தன்னை மன்னித்த தாயையும் மனைவி பிள்ளைகளையும் பார்த்து அவரது உள்ளம் அன்பிலும் நன்றியிலும் நெகிழ்ந்தது.

பிரிந்தவர் ஒன்று கூடினால் பேசவும் வேண்டுமோ என்பது போல மகள் அவர் அருகே வந்து மடியில் படுத்துக் கொண்டாள். அவளைப் பார்த்து அவர் உள்ளம் துடித்தது. தன் மகளின் பார்வையில் தான் எப்படித் தென்படுவேனோ எனப் பயந்தது அவளது கண்களையே தாக்கி விட்டதே என அனலில் இட்ட புழுவானார். ஆனால் அது இம்மட்டில் சரியான சந்தோஷமும் தொடர்ந்தது.

மனைவியைப் பார்த்தார். சின்னப் புன்னகையோடு அவள் நிற்பது தெரிந்தது. அனைத்தும் புரிந்தவள் என்று காதல் ஊறியது அவர் மனதில். கொடுத்து வைத்த பாவிடா நீயி என்று மெய்யாகவே உள்ளத்துள் திட்டிக் கொண்டார்.

மகன் ராஜஷ் அம்மாவின் கரத்தைப் பிடித்து நின்றிருந்தான். அனைவரும் மன்னித்துவிட்டார்கள். இருந்தும் நெருடலாக இருந்தது அவருக்கு. இத்தனையும் நடந்தபின் அந்தச் சொத்தை விற்றாகிவிட்டதே. எதற்காகப் பாடுபட்டாரோ அதையே அவரது அம்மா சாரதாம்மிணி சம்பந்தியின் துணை கொண்டு விற்று அவரை கேஸிலிருந்து வெளியே கொண்டு வந்ததும், பேத்தியின் கண் ஆப்பரேஷனுக்காக பல லட்சங்கள் செலவிட்டதும் அவரைப் பேச்சற்று ஆக்கி இருந்தது.

”ஆண்குழந்தைகள் இப்படித்தான் எதையும் வெளியே சொல்லாமல் சுமக்கிறேன் என்று கஷ்டப்படுவார்கள். உன்னை நன்கு தெரிந்த எனக்கு நீ ஏன் இதெல்லாம் செய்திருப்பாய் என்று தெரியாதா . முன்னே ஹவுசிங் போர்டு எடுக்க வந்தபோதும் சரி, பின்னர் ஹைவேஸ் எடுக்க வந்தபோதும் சரி துணிந்து நின்று விற்றிருந்தால் இந்தச் சிக்கல்கள் எல்லாம் ஏற்பட்டிருக்காது ஆனால் நான் வருந்துவேன் என்றுதான் நீ இதையெல்லாம் செய்யவில்லை. உன் தோளில் அனைத்தும் தாங்கி சுமந்து பளு தாள முடியாமல் கையாடல் செய்துவிட்டாய் இருந்தாலும் தவறு தவறுதான். நேரம் மட்டுமல்ல என் மேல் கொண்ட பாசமும் உன்னைச் சாய்த்தது என்பதால் அதை மன்னிக்கிறேன், மறக்கிறேன்.”

தன் தாய் தைரியமாக கம்பீரமாக நின்று தன்னுடைய பெருமிதங்களில் இருந்து வெளிவந்து நிலத்தையும் வீட்டையும் ஒரு சொல் சொல்லாமல் விற்று மகனைக் காப்பாற்றி வெளிக் கொண்டு வந்ததையும் எண்ணமிட அவர் மனதில் தாயாரின் பிம்பம் விசுவரூபமெடுத்துக் கொண்டே போனது. அதே போல் அவர் மேலான பாசமும்.

மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்கிறார்கள். அதேபோல இப்படி ஒரு தைரியசாலி மனைவி அமைய அவர் கொடுத்துத்தான் வைத்திருக்கிறார். மனைவி மேல் மனதுக்குள் இன்னும் அதிகம் காதல் பொங்கியது.

அதிலும் அருமாந்த மகனும் ஆசை மகளும் மன்னித்துவிட்டார்களே அதைவிட வேறென்ன வரம் வேண்டும். பிள்ளைகள் முன் குற்றம் செய்த குறுகுறுப்பு இருந்தாலும் ஒரு கட்டத்தில் தாய்க்காகச் செய்ததைப் புரிந்து கொள்வார்கள் என்ற நம்பிக்கை இருந்தது அவருக்கு.  வாழ்க்கையில் .அந்த நிறுவனத்தாரே அவரின் திறமையில் கொண்ட நம்பிக்கையால் திரும்ப வேலைக்கு வரும்படி அழைத்திருந்தார்கள்.

இந்த மகிழ்ச்சித் தருணத்தில் தனத்தின் அண்ணன் மகன் படித்துவிட்டு ஐ ஏ எஸ் அதிகாரியாக ஜம்முவுக்கு போஸ்டிங் கிடைத்திருப்பதாக சாரதாம்மிணி மகனிடம் சொல்லிக் கொண்டிருந்தார். அவன் தைரியசாலி என்றும் போஸ்டிங் போட்டவுடன் ஒத்துக் கொண்டுவிட்டதாகவும் அவனுக்கும் பெண் பார்த்து வருவதாகவும் நல்ல குடும்பம் ஆனால் எளிமையானவர்கள் என்பதால் ராதாராணியைக் கொடுக்கலாமா எனவும் தயக்கத்தோடு மகனிடம் கேட்டுக் கொண்டிருந்தார் சாரதாம்மிணி.

அதைக் கேட்டபடி அமர்ந்திருந்த ராதாராணி மனசுக்குள்ளும் தான் ஜம்மு மக்களை மீண்டும் ஒரு முறை சந்தித்து அவர்களுக்கு சேவை செய்யலாமே என்ற எண்ணம் எழுந்தது. திகிலும் த்ரில்லும் இருந்தாலும் உண்மைக்காக, மக்கள் நலனுக்காக என்னும்போது திரும்பச் செல்லவே விரும்பினாள்.

நல்லதொரு சுபயோக சுபமுகூர்த்த நாளில் இருகுடும்பத்தாரும் சந்தித்துப் பேசி திருமணம் செய்வதாக முடிவெடுத்தார்கள். தனம்தான் இருபக்கமும் பேசிக் கொண்டிருந்தாள். தனம் அண்ணன் வீட்டாரும் இவர்கள் பரம்பரைப் பணக்காரர்கள் ஆயிற்றே என்ற தயக்கத்தோடே பேசினார்கள். சாரதாம்மிணி அடித்துச் சொல்லிவிட்டார் எந்தத் தயக்கமும் வேண்டாம் எல்லாரும் ஒரு கட்டத்தில் ஒன்றுதான். இதில் பேதம் ஏதுமில்லை என்று. அவர்களுக்கும் ரொம்ப சந்தோஷம்.

மாப்பிள்ளை ராஜேந்திரனும் ராதாராணியும் ஒரு ஹோட்டலில் சந்தித்து மனம் விட்டுப் பேசினார்கள். இருவருக்கும் பரஸ்பர சம்மதத்தின் பேரில் ஆறுமாதம் கழித்துத் திருமணம் செய்வதாய் நிச்சயமானது.

பெல்லட் எவ்வளவு கொடுமையான விஷயம் என்றும் ஒரே நேரத்தில் ஐநூறு அறுநூறு சிறகுண்டுகள் பாய்ந்து வலி எடுக்கும் என அவளுக்கு நிகழ்ந்ததை ராஜேந்திரனிடம் அவ்வப்போதான சந்திப்பில் கூறி இருந்தாள். அத்ுடன் தன் குடும்பத்தில் நிகழ்ந்த ஒவ்வொன்றும் நியாயத்தின் பாற்பட்ட அநியாயம் என்றால் என்னவென்றே தெரியாத ஒவ்வொருவரையும் ஐநூறு அறுநூறு சிறு குண்டுகள் கொண்ட பெல்லட் குண்டு போல தாக்கிய அதிர்ச்சியையும் நினைத்துப் பார்ப்பாள்.

தந்தை அதே கம்பெனியில் அதே பொறுப்பைக் கொடுத்தபோதும் தானே கேட்டு கொஞ்சம் சாதாரணப் பொறுப்பு வகித்தார்.  அந்தத் தந்தையைப் புரிந்து கொண்ட அவரின் தாய் தன் பரம்பரைப் பெருமைகளை விட்டுக் கொடுத்து எல்லாவற்றையும் விற்று சாதாரணமாக ஒரு ப்ளாட்டில் வசிக்கும் அழகு, அதே போல் கணவனின் மனமறிந்து குணமறிந்து ஒன்றும் சொல்லாமல் குடும்பம் நடத்தி வரும் தாய் எல்லாரும் ரோல் மாடலாகத் தோன்றினார்கள் அவளுக்கு.

ஒவ்வொருவரையும் ஒவ்வொரு தருணத்தில் சிந்தித்தபடி அமர்ந்திருப்பாள்.  தோழி ரேகாவையும் ஜம்முவில் தான் சந்தித்த மக்களையும் பற்றி நினைத்திருப்பாள். இன்னும் என்னென்ன செய்யலாம் என மனதில் எண்ணங்கள் ஓடிக்கொண்டே இருக்கும்.

அதிக ஆரவாரமில்லாமல் பக்கத்தில் இருந்த எளிய மண்டபத்தில் அவர்கள் திருமணம் முடிந்தது. இருவரும் தேன்நிலவுக்கே ஜம்மு செல்ல விரும்பினார்கள். ’உங்கள் நல்ல குணங்கள் என்னையும் வந்து காக்கட்டும்’ என்று தந்தை தாயின் காலிலும் ஆத்தாவின் காலிலும் விழுந்து வணங்கி எழுந்தாள் ராதாராணி.

ஹிம்சாகர் எக்ஸ்பிரஸ் ஜம்மு தாவி ரயில்வே ஸ்டேஷனை அடைந்தது. மீண்டும் புத்தம் புது பூமி, நித்தம் ஒரு வானம். தங்க மலர்கள் கொண்ட ஜம்முவைப் பார்த்ததும் ராதாராணியின் உள்ளம் குதூகலித்தது. ”நம்ம குவார்ட்டர்ஸ் எங்க இருக்கு”என வினவினாள். ”பைரவ்நாத் கோயிலுக்குச் செல்லும் வழியில் இருக்கும்” என சொன்னான் ராஜேந்திரன். 

ராதாராணியின் துணிச்சலுக்கேற்ற ஜோடிதான் ராஜேந்திரனும். ரயில்வே ஸ்டேஷன் வந்ததும் லக்கேஜ்களை ஆட்கள்வைத்து இறக்கி ட்ராலியில் தள்ளிக் கொண்டிருந்தன் ராஜேந்திரன் . ரயிலின் படிக்கட்டில் நின்றபடி ஹிந்தி சீரியல்களில் சொல்வது போல “அதிகாரி சார் கொஞ்சம் உங்க கையைக் கொடுங்க. ” எனக் குறும்பாக ராதா ராணி சொல்ல அவள் ையை மென்மையாகப்பற்றியாஜந்திரைப் பார்த்அங்கே பூத்துக் குலுங்கிய ரோடோடென்ரான் மலர்கள் மணம் வீசிச் சிரித்தன. 

4 கருத்துகள்:

  1. முழுவதும் ஒரே மூச்சில் படித்து முடித்து விட்டேன். சுவாரஸ்யமாகவும் விறுவிறுப்பாகவும் உள்ளது. பகிர்வுக்கு நன்றிகள்.

    (ஒருசில இடங்களில் மட்டும் எழுத்துக்கள் படிக்க முடியாமல் உடைந்துபோய் உள்ளன. இருப்பினும் புரிந்துகொள்ள முடிவதாக உள்ளன.)

    பதிலளிநீக்கு
  2. விறுவிறுப்பான நகர்வு. பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  3. அருமையான சட சடவென நகர்ந்த கதை....சில இடங்களில் எழுத்துகள் சரியாகத் தெரியவில்லை....என்றாலும் கொஞ்சம் ஊகித்து வாசித்துவிட்டொம்...வாழ்த்துகள் ககோ/தேனு...

    பதிலளிநீக்கு
  4. Thanks VGK sir

    Thans Jambu sir

    Thanks Tusli sago

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...