இரவின் சில்வண்டுப் பூச்சிகள்
கத்திக்கொண்டிருக்கின்றன. சில்லென்று மலையமாருதம் வீசுகிறது. எங்கெங்கோ கானக மிருகங்கள்
உறுமும் சத்தம். விருட்சங்களின் கொடிகள் கால்களில் சிக்குகின்றன. அரவமா, ஆலமா என்று
தெரியாத இருட்டு. மேடும் பள்ளமுமான பாதை, சதுப்பாய் நீர் தேங்கியிருக்கும் குட்டை.
ஆனால் எதற்கும் கலங்காமல் ஒரு சிறுவன் கையில் வில் அம்பு ஏந்தித் தன்னந்தனியனாய் அந்தக்
கானகத்துக்குள் கொடிகளை விலக்கிக் கொண்டு முன்னேறிச் செல்கிறான்.
வனராஜன் போல் கம்பீரமாகச் செல்லும் அவனுக்கு எந்த பயமுமில்லை.
நாடாளும் தகுதி படைத்த இளவரசன் அவன். அவன் ஏன் கானகத்துள் செல்கிறான். எதைத் தேடிச்
செல்கிறான் ? எல்லாம் அவன் தாய் பந்தளநாட்டு ராணிக்காகத்தான். அவளுக்கு ஏற்பட்ட தலைவலியை
நீக்க புலிப்பால் கொணர புலியைத் தேடி அவன் காட்டுக்குள் செல்கிறான்.