1121. காத்தியலுக்கு
வடிக்கிறது - கார்த்திகை மாதம் சோமவாரங்களில் குன்றக்குடியில் பாட சாலையிலும், வீடுகளில் மற்றும் பூசை வீடுகளில் முருகனுக்காகக் கார்த்திகைப் பூசை செய்து சோறு வடித்து பள்ளயம் போட்டு ஊரோடு அன்னதானம் செய்வது.
1122. எக்கிப்புடும் - கூட்டம் எக்கிப்புடும் என்று சொல்வார்கள். அதிகக் கூட்டமாக இருப்பது. நெருக்கடி மிகுந்த இடம். விசேஷம், திருவிழா போன்றவற்றில் ஆள் பேர் அதிகம் சேர்வது.
1123. கெந்துனாப்புல - காலில், பாதத்தில், பாதத்தின் அடிப்புறம் அடிபட்டிருந்தால் அல்லது முள் போன்றவை குத்தி இருந்தால் கெந்துனாற்போல் நடப்பது. காலை சரியாக ஊன்றாமல் நடப்பது. உடற்குறைபாடு உடையவர்கள் நடந்து வருவது.
1124. கோவில் நாடி - கோவிலை நோக்கி. சாமி கும்பிடச் செல்வதைக் குறிப்பது.
1125. கருதலையோ - ( தம்மை ) நினைக்கவில்லையோ. எண்ணவில்லையோ, ஒரு விஷயத்தைப் பொருட்டாகக் கருதவில்லையோ என்ற பொருளில் வருவது.
1126. வாஞ்சால - பாசம், பரிவு, அன்பு, வாஞ்சாலை, அதீத பாசம். உடல், மனம் சம்பந்தப்பட்ட உறவில் வரும் பாசம் , உறவினர் மேல் கொள்ளும் அன்பு.
1127. தெகட்டுதல் - திகட்டிப் போதல். ஒரு விஷயம் அதீதமாகக் கொடுக்கப்பட்டால் ஏற்படும் உணர்வு. அதீதம். இனிப்பு திகட்டும். அதேபோல் இனிமையான விஷயங்களும் அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பது போல் திகட்டும்.