சிவப்புப் பட்டுக் கயிறு:-
*************************
பட்டியக்கல்லில் இருந்து கீழ் வாசலுக்குள் தண்ணீர் வடிந்து கொண்டிருந்தது. காசாணி அண்டாவில் தண்ணீர் நிரம்பி வழிந்தபடி இருந்தது. இதுதான் இன்னும் சிலநாட்களுக்குக் குடிக்கவும் சமைக்கவும். நல்லவேளை தண்ணீர் தூக்க குடி தண்ணி ஊரணிக்கு பித்தளைக்குடமும் புளியுமாகப் போகவேண்டாம்.அங்கே செம்மண்ணில் தேய்த்து அதிலேயே கழுவி அப்புறம் கொஞ்சம் ஊரணிக்கு உள்ளே போய் தெளிந்த தண்ணீர் மோந்துகிட்டு வரணும். இப்ப கொஞ்ச நாளைக்கு அந்த அவஸ்தையில்லை என்ற நினைப்பே அவளுக்கு போதுமானதாய் இருந்தது.
வெய்யில் நாளில் வரும் மழை குளுமையை மட்டுமல்ல., கொஞ்சம் வெக்கையையும்தான் கிளப்பிக் கொண்டு வருகிறது. ஐயா பட்டாலையில் குறிச்சியில் உக்கார்ந்து சுருட்டைப் புகைத்தபடி பார்த்துக் கொண்டிருந்தார்கள். யார் யாரோ பீடி ., சிகரெட் குடிக்கும் போதெல்லாம் வரும் கோபம் ஐயாவின் சுருட்டைப் பார்த்தால் வருவதில்லை. பிறந்ததில் இருந்து அவர்களை சுருட்டும் கையுமாகப் பார்த்துவிட்டதாலோ என்னவோ. அல்லது சிறுபிள்ளையில் படித்த வெளிநாட்டுக் காமிக்ஸ் கதைகளில் வரும் பணக்கார ஹீரோக்கள் -- ரிப்கெர்பி-- ஸ்டைலாக சுருட்டு பிடிப்பதும் ஒரு காரணமாயிருக்கலாம்.