அம்மனின் முன் ஒரு சூலம் பார்த்திருப்பீர்கள். ஐந்து சூலங்கள் சந்நிதி முன் எலுமிச்சையோடு அலங்கரிக்க ஐந்து அம்மன்களை ஒரே சந்நிதியில் ஒரே கருவறை பீடத்தில் பார்த்திருக்கிறீர்கள். இல்லை என்றால் காரைக்குடிக்கு வாருங்கள். கண் குளிரப் பார்த்து மகிழலாம். காரைக்குடியில் அருளாட்சி செய்துவரும் அம்மன் கோவில்களில் ஒன்று முத்தாளம்மன் கோவில்.
இக்கோவில் காரைக்குடியின் மத்தியில் நகரச் சிவன் கோவிலுக்கு அருகில் முத்து ஊரணியின் கரையில் அமைந்துள்ளது .மிகச் சக்தி வாய்ந்த கோவில் இது.
செவ்வாய்ப் பொங்கல் எனப்படும் வைகாசிப் பொங்கல் திருவிழா மிகச் சிறப்பாக நடைபெறும். அன்று புற்றுமண் மாற்றும் நிகழ்வில் அம்மனுக்குச் சிறப்பு அலங்காரம் நடைபெறும்.
நாங்கள் சிறு பிள்ளைகளாய் இருந்தபோது இந்தத் திருவிழாவின் போதுதான் அம்மன் உருவத்தைப் பார்ப்போம். மற்றைய சமயங்களில் அக்கோயிலின் எல்லாச் சந்நிதிகளிலும் இப்போது இருப்பது போல் மேற்கூரை இல்லாமல்தான் இருக்கும். இப்போது கருவறை மட்டும் நடுவில் திறந்த வெளியாய் இருக்கிறது. சுற்றிலும் வேல் கொண்ட கம்பித் தடுப்புகள்.
முத்தாரம்மன் என்றும் சொல்கிறார்கள். நாங்கள் முத்தாளம்மன் என்றே கூறிப் பழக்கப்பட்டு விட்டோம். முத்து ஆரம் போல் ஐந்து அம்மன்கள் நெருக்கமாய் அமர்ந்த திருவுருவம் முத்தாளம்மா.
இக்கோயில் பத்மசாலியர், சேணியர் என்னும் சமூகத்தினரால் ( வேளாளர்கள் என்றும் சொல்வார்கள் ) நிர்வகிக்கப்படுகிறது.