பொன்னனையாளின் பேரன்பு
பெண்கள் என்றாலே பேரன்பு கொண்டவர்கள்தான். குடும்பத்தினர் மேல் எப்போதும் அளவற்ற அன்பைப் பொழிபவர்கள். இனியவர்கள், இன்னாதவர்கள் பாகுபாடு கருதாமல் தமக்குத் தொடர்புடைய அனைவரும் நலமுடன் இருக்கவே எண்ணுவார்கள். அதிலும் இறைபக்தி என்று வந்துவிட்டால் அவர்களின் பேரன்பு இன்னும் விகசித்து ஒளிவிடும். இப்படி இறைவனின் மேல் பேரன்பு கொண்ட பொன்னனையாள் என்பவளுக்காய் இறைவன் நிகழ்த்திய ரசவாத வித்தையைப் பார்ப்போம்.
மதுரைக்குக் கிழக்கே வைகையாற்றின் கரையில் அமைந்திருக்கிறது திருப்பூவனம் என்னும் சிற்றூர். சில நூற்றாண்டுகளுக்கு முன் அவ்வூரின் தளிச்சேரியில் பொன்னனையாள் என்னும் பொதுமகள் வசித்து வந்தாள். நாட்டிய சாத்திரம் அனைத்தும் கற்றுச் சிறந்தவள். சிவனின் மேல் பக்தி கொண்டு பாடல்கள் இயற்றுவதும், அவற்றைப் பக்திப் பரவசத்துடன் பாடுவதும், வீணை வாசிப்பதும், தான் இயற்றிய பாடல்களுக்குப் பதம் பிடித்து நாட்டியமாக ஆடுவதுமே அவளுக்குப் பிடித்த செயலாக இருந்தது.